புராணம் என்ற வார்த்தை தொன்மை, பழமை, முற்காலம், ஆதிகாலம் என்றெல்லாம் அர்த்தம் தருகிறது. பொதுவாக பழங்காலச் சரிதங்கள், கதைகள், வழிவழியாக வரும் ஆக்கியானங்கள் என்பதைப் புராணம் என்ற சொல் குறிக்கிறதாகச் சொல்லலாம். நிருக்தம் புராணம் என்பதை புரா+நவம் என்று காட்டுகிறது. அதாவது காலத்துக்குக் காலம் சொல்லாடலால் புதுப்பிக்கப்பட்டு வரும் பழங்காலச் சங்கதிகளுக்குப் புராணம் என்று பொருள் என்றும் இருக்கலாம். புராணம் என்பது ஐந்து இலக்கணங்கள் உடையது என்று ஒரு சொலவு இருக்கிறது. புராணம் பஞ்ச லக்ஷணம். உற்பத்தி, பிரளயம், வம்சங்களின் கதை, மன்வந்தரங்களின் கதைகள், வம்சங்களைப் பற்றிய தொடர்ச்சியான செய்திகள் என்பன அந்த ஐந்து இலக்கணங்கள். பத்து இலக்கணங்கள் என்ற கணக்கும் உண்டு, இன்னும் விரிவான தலைப்புகளில் பழம் வரலாறுகள், கதைகள், கலைகளைப் பற்றிய விஷயங்கள், சமய அனுஷ்டானங்கள், சிற்பக் கலை நுணுக்கங்கள், பல தீர்த்த நிலைகளின் செய்திகள், அவதார புருஷர்களின் கதைகள், தத்துவ உபதேசங்கள் என்று விரிவான ஒரு கல்விக் கழகமாகவே புராணம் என்பது அந்தக் காலத்தில் இயங்கி வந்துள்ளது.
புராணங்களை முற்றிலும் தள்ளுபடி பண்ணும் பார்வை கொண்டவர்களும் அந்தக் காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றனர். பொது ஜனங்களுக்குப் பண்பாடு ரீதியான அடக்கம் கீழ்ப்படிதல் முதலியன ஏற்படுத்தும் கேந்திரம்தான் புராணம் என்று சிலரும் கருதி வந்துள்ளனர். சமீப காலத்தில் வந்துள்ள சுவாமி தயாநந்தர் ஆரிய சமாஜத்தை நிறுவியவர், புராணங்களின் மீது கடும் விமரிசனப் பார்வையை உடையவராய் இருந்தார். இவர்கள் சொல்வதற்கெல்லாம் காரணங்கள் இருப்பினும், அவ்வளவு லேசில் புராணங்களில் வந்து சேர்ந்துள்ள பழம் செய்திகளைக் கருதாமலேயே விட்டு விடுதலும் அறிவுடைமை ஆகாது. காரணம் பெரும் வித்வான்களுக்கும் உதவியான குறிப்புகளும், விளக்கங்களும் இலக்கிய வடிவம் கலந்த சொற் சித்திரங்களில் தரப்படுகின்றன. எனவே புராணங்களில் பரிச்சயம் என்பது ஒருவருக்கு முழுமையான சித்திரத்தைப் பெற உதவியாய் இருக்கிறது. மேலும் வேதங்களின் அர்த்தங்கள் சிலவற்றை நன்கு விளங்கிக்கொள்ள புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் விளக்க உதவி நூல்கள் என்றும் கருதப்பட்டன. புராணங்களில், பாகவத புராணம் என்பது பெரும்பாலும் தன்னளவிலேயே முழுமையான பெரும் வேதாந்த சாத்திரமாகவே சில துறை சார்ந்த வித்வான்களால் கருதப்படுகிறது. இன்றும் அதைப் படித்தால் அதனுடைய கவிதை எழிலும், ஆன்மிக நலமும், அரும் வேதாந்த பொருள் நிறைந்த சொல்லாடல்களும் நம்மை வியக்க வைக்கிறது. மொத்தத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களிலிருந்து, அரசாட்சி, பொருளாதாரம், சிற்பம், கட்டடக்கலைகள், நாட்டியம், இசை, மந்திர தந்திரங்கள், வழிவழியான வாழ்வியல் போதனைகள், பல தேசங்கள், கிராமங்கள், நதிகள், காடுகள் ஆகியவற்றைப் பற்றிய மக்களின் வழக்காறுச் செய்திகள் என்பன எல்லாம் சேர்ந்து புராண படனம் என்பதையே அந்தக் காலம் தொட்டே பெரும் பொது மக்களின் கல்வி நிலையம் என்று ஆக்கி வைத்திருக்கிறது.
பெரும்பாலும் புராணங்கள் பொதுவில் தெருக்களில், பொது திடல்களில் கோவில்களில்தான் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய புராணங்கள் பெரும் புராணங்கள் பதினெட்டும், உபபுராணங்கள் பதினெட்டும் என்ற கணக்கில் வந்துள்ளன. பதினெண் புராணங்களிலும் சேர்ந்து மொத்தம் சுமார் நான்கு லக்ஷம் கிரந்தக் கணக்கு இருப்பதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்லுகிறது. ஒரு கிரந்தம் என்பது உயிர் உயிர்மெய் எழுத்துகள் 32 கொண்ட கணக்கின் அலகு. நான்கு லக்ஷம் கிரந்தங்கள் என்றால் நான்கு லக்ஷத்தை 32 ஆல் பெருக்கிய அளவு எழுத்துக் கணக்கு என்று ஆகிறது. இதையெல்லாம் இன்றைய கணினி யுகத்தில் துல்லியமாகக் கணக்கிட்டிருக்கிறார்களா தெரியாது. ஒரு வேளை செய்திருக்கலாம்.
இத்தகைய பெரும் நூல் தொகுதிகளைக் கூடிய வரையில் பரிச்சயம் செய்து கொண்டு, இதிகாசங்களையும் நன்கு கற்றவர்களாய், மக்களிடையில் இவற்றை இசைப் பாடல், வாத்தியங்களுடன் கலந்து கதை காலக்ஷேபங்களாய் நிகழ்த்தியவர்களுக்குப் பெயர் பௌராணிகர்கள். புராணங்களைச் சார்ந்து தங்கள் கதைப் பொழிவுகளைச் செய்தவர்கள் என்று பொருள். இப்படிப் பட்டவர்களே மக்களுக்கும் சாத்திரங்களுக்கும் கோவில்களுக்கும் மத நிறுவன அமைப்புகளுக்கும் சமுதாயங்களுக்கு மத்தியில் வேலை என்று அமர்த்தப்படாத வழிவழியான பண்பாட்டுப் போதகர்களாய் இருந்திருக்கிறார்கள். புராணங்களைக் கொண்டு இவர்கள் சொல்வதோடு சேர்த்து அங்கங்கே பல பக்தர்கள் நிலவும் மொழிகளில் யாத்த பாடல்களையும், கீர்த்தனைகளையும் இசையுடன் அமைத்து நாட்டின் பல பகுதிகளிலும், பட்டி தொட்டிகளிலும். கோவில் இருக்கும் இடங்களிலெல்லாம் சென்று தங்கள் கதை நிகழ்த்துகளை ஒரு வாரம் பத்து நாள், ஒரு மாதம் என்று தொடர்ந்து நடத்தி வந்ததன் மூலம் பாரதம் என்ற பண்பாட்டு மெய்மையை அக்காலம் முதற்கொண்டே மக்களின் உணர்வில் நிறுவி வந்துள்ளனர். இன்றைய கல்வி விஞ்ஞானப் பெருக்கம் என்பதை வைத்துப் பார்க்கும் பொழுது நம்பிக்கைகள்தாமே பெருகின என்று தோன்றினாலும், அன்றைய நிலையில் பௌராணிகர்களால் விளைந்த பண்பாட்டு ஒற்றுமையையும், தத்துவச் சிந்தனைகளின் பரவலாக்கத்தையும் நாம் உணரவேண்டும். தத்துவ சேவை, பண்பாட்டு போதனை என்ற விதத்தில் மக்களின் மன வாழ்க்கையையும் கட்டிக் காப்பதில் இவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. அங்கங்கே இருந்த செல்வந்தர்களின் உதவிகளும், மக்களிடையே தட்டு எடுத்து வசூலிக்கப்பட்ட பணமுமே இவர்களுக்குச் சன்மானமாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு நிறுவனம் ஆக்கப்படாத ஒரு பிரிவினர் தொடர்ந்து இவ்வண்ணம் பொதுஜனக் கல்வி என்னும் தளத்தில் இயங்கி வந்திருப்பதை நன்கு ஆவணப் படுத்த வேண்டும். ஏற்கனவே சில முயற்சிகள் நடைபெற்றிருப்பினும், இன்றைய பல்லூடக வசதிகள் இன்னும் இத்தகைய ஆவண முயற்சியைச் சிறப்பாக ஆக்கக் கூடும்.
எனக்கு நினைவு தெரிந்த வரையில் பல பௌராணிகர்களைக் கேட்ட நினைவு. சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், மஞ்சக்குடி ராஜகோபால சாத்திரிகள் என்று நினைவு, எம்பார் விஜயராகவாசாரியார், நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் (இவருடையது மிகவும் சிறப்பான இயல் இசை நாடகப் பாங்கு மிளிரும் பொழிவுகள்),இன்னும் சிலர். நம் காலத்தில் மிகச் சிறப்பாக பௌராணிக சேவையைச் செய்யும் பெரியவர் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்கள். சமீப காலத்தில் இலக்கிய சொற்பொழிவுகளாய் ஆக்கியவர்கள் வாரியார், புலவர் கீரன், புலவர் ராதாகிருஷ்ணன் இன்னும் பலர். பழங்காலத்தில் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்கள் குறித்து உ வே சா அவர்களின் என் சரித்திரம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றிய சரித்திரம் ஆகிய நூல்களில் சில குறிப்புகள் உண்டு,
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment