திரு பி எல் சாமி அவர்கள் எழுதிய ‘சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்’ என்னும் நூல்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் வெளியிட்ட இந்த நூல் வந்த் ஆண்டு -- 1967. கிட்டத்தட்ட 210 பக்கங்கள் கொண்ட சிறு நூல் ஆனால் பெரும் பயன் உடைய நூல் இது எனலாம். சங்க இலக்கியத்தில் செடி நூற் செய்திகள், குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை, காந்தள், பாம்புச் செடி, நரந்தம், முருக்கும் கவிரும், கொன்றை, பாதிரி, புன்னை, முசுண்டையும் அடும்பும், இலவும் கோங்கும், இலுப்பை, தாழை, குருகு, குரவு, குருந்து, நெல்லி, கருவிளம், கூவிளம் ஆகிய தலைப்புகளில் நூலை அமைத்திருக்கிறார். அத்தனைத் தலைப்புகளிலும் ஆசிரியர் சங்க இலக்கியத்தில் காணும் மலர்கள் பற்றிய உவமைச் செய்திகளை, மலர்களின் செடிநூல் உண்மைகளுடனும் பொருத்திக் காட்டுவது ஒருங்கே பல செய்திகளை நமக்கு உரைக்கின்றது. பழந்தமிழரின் இயற்கையைப் பற்றிய உணர்வு, கவிஞர்களின் இயற்கையைச் சார்ந்த அனுபவம், இயற்கை தாவர இயல் உண்மைகளைப் புலவர்கள் நயமாக உணர்ச்சி சார்ந்த அனுபவங்களைச் சொல்லப் பயன்படுத்திய விதம் என்று பல செய்திகள் புலனாம் வண்ணம் ஆசிரியர் எழுதுகிறார். இந்த நூலில் மேலும் ஒரு சிறப்பு, பூக்களுக்கும் செடிகளுக்கும் வண்ணப் படங்கள் இட்டுக் காட்டியிருப்பது. இன்றும் இயற்கையில் நாம் நேரடியாகக் காணும் போது அடையாளம் தெரியும் வகையில் அமைந்திருக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment