Thursday, January 30, 2020

குயில் பாட்டில் பழைய நெருப்பு

குயில் பாட்டில் ஓரிடம் -

......படைப்புக் கடவுளே! நான்முகனே,
பண்டை யுலகு படைத்தனை நீ யென்கின்றார்;
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்,
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்,
காற்றை முன்னே யூதினாய், காணரிய வானவெளி
தோற்றுவித்தாய், நின்றன் தொழில்வலிமை யாரறிவார்
............

இதில் நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய் - என்று சொல்லியபின், ‘நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்’ என்று வருகிறது. இது என்ன அர்த்தம்? அது எப்படி நீரை நெருப்பில் குளிர்விக்க முடியும்? அதுவும் பழைய நெருப்பில். பழைய நெருப்பு என்றால் அது சில் என்று போய்விடுமா என்ன?

’உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள்போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப்
பொல்லாப் பிரமா, புகுத்துவிட்டாய். அம்மாவோ!’

என்று தொடர்கிறது பகுதி. இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். வான வெளி, அண்டங்கள், கிரகங்கள் என்று இவற்றைத்தான் சொல்கிறார் பாரதி. ஆனாலும்

நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்,
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்,

என்று பாடினாரே ஏன்?

இதையே பாரதியின் வரிகள் எப்படி விளக்குகின்றன என்பதையும் காட்டுகின்றேன்.
வசனக் கவிதையில், இரண்டாங் கிளை: புகழ் என்னும் பகுதியில் ‘ஞாயிறு’ என்னும் தலைப்பில்
எழுதுகிறார்:

“ஞாயிறு வித்தை காட்டுகிறான்;
கடல்நீரைக் காற்றாகி மேலே கொண்டு போகிறான்;
அதனை மீளவும் நீராக்கும் படி காற்றை ஏவுகின்றான்.
மழை இனிமையுறப் பெய்கின்றது.
மழை பாடுகின்றது.
அது பலகோடி தந்திகள் உடையதோர் இசைக்கருவி.
வானத்திலிருந்து அமுத வயிரக் கோல்கள் விழுகின்றன.
பூமிப் பெண் விடாய் தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள்.
வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் விளைகின்றன.
அனைத்தும் ஒன்றாதலால்.
வெப்பம் தவம், தண்மை யோகம்
வெப்பம் ஆண், தண்மை பெண்.
வெப்பம் வலியது, தண்மை இனிது.
ஆணிலும் பெண் சிறந்ததன்றோ?
நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம்.
அது வாழ்க.”

அதேபோல் ‘சக்தி’ என்னும் பகுதியிலும் எழுதுகிறார்:

”சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்.
சக்தி பொஉகையிலே ஞாயிறு ஒரு மலர்.
......
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது,
.............
கொதிப்புத் தருவது, ஆற்றுவது ”

இது போல் பாரதியே ஓரிடத்தில் தாம் சொன்னதற்கு விளக்கம் தரும் வகையில் மற்றோர் இடத்தில் எழுதி வைத்திருப்பது அவருடைய சிறப்பு. அதாவது பாரதிக்குப் பாரதியே நல்ல விளக்கமாகவும் அமைகிறார்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment