Sunday, January 19, 2020

மஹாபாரதம் தமிழில் - மணலூர் ம வீ ரா

மஹாபாரதத்தில் வரும் தமிழ்ப் பெயர் மணலூர். வடமொழியும் தென்மொழியும் திகழ்ந்த நாவர்கள் வாழ்ந்த இடம். வித்தைக்கு விளைநிலம் எனத்தக்க மணலூரில் நம்காலத்துப் பகீரதர் ஒருவர் பிறந்தார். பெரியோரின் சரிதங்களையே ஊன்றிப் படித்தார். தாமும் வாழ்வில் செயற்கரிய செய்ய வேண்டும் என்று அவாவினார். 1905ஆம் ஆண்டுக்குமுன் ஓரிரு வருஷங்கள். கும்பகோணத்தில் நேடிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராய் இருந்த பொழுது திரு உ வே சாமிநாதய்யருடன் பேசும்பொழுதெல்லாம் ஐயர், 'ஸ்ரீவில்லிப்புத்தூரார் பாரதம் முழுமையுமே மொழிபெயர்க்காமல் போனாரே' என்று வருந்துவதை கவனித்திருக்கிறார். ஏன் அந்த மஹாபாரதம் தமிழில் வரவில்லை? நீண்ட தமிழ்ப் பாரம்பரியத்தில் ஏன் எந்தப் புலவரும், புரவலரும் அதற்கு முயலவில்லை? தமிழ் மக்கள் பாரதம் முழுமையும் வியாசரின் எழுத்து ஒன்றுவிடாமல் தமிழில் படிக்கமுடிந்தால் எத்துணை நன்றாக இருக்கும்! என்றெல்லாம் எண்ணிய நம் பகீரதர் யார் தெரியுமா? மணலூர் வீரவல்லி ராமானுஜாசாரியார். 1905ஆம் ஆண்டு முடிவெடுத்துவிட்டார். பாரத கங்கையை தமிழில் பாயச் செய்வதற்கு. முதலில் அவர் அபிப்பிராயம் கேட்டது உ வே சா அவர்களிடம், ஐயரிடமிருந்து உற்சாகமும் ஊக்குவித்தலும் 25ரூ பணமும் உடனே வந்து சேர்ந்தது. அபிப்பிராயம் கேட்டால் அங்குரார்ப்பணமே செய்துவைத்து விட்டார் ஐயர். 'இதனினும் மிக்க தமிழ்ப் பணி கிடையாது தொடங்குக' என்ற ஐயரின் அன்புக்குக் கட்டுப் பட்டார் ம வீ ரா.

ஆனால் அன்று தொடங்கி 1932ஆம் ஆண்டு மஹாபாரதம் தமிழ் மொழிபெயர்ப்பு பூர்த்தியான 27 ஆண்டுகள், அல்லது 324 மாதங்கள் அப்பப்பா என்ன இன்னல்கள் இடையூறுகள் எதிர்பாரா உதவிகள் எதிர்நோக்கா ஏமாற்றங்கள் ஊக்கச் சொல் பழிச்சொல் ஏளனச் சொல் உத்தரவாதம் திட்டு. அந்தக் கதையே ஒரு பெரும் பாரதம். அந்தக் காலத்திலேயே ரூ1 45 000 கடன் அதற்கு பெருகிக்கொண்டே போகும் வட்டி. கைப்பணம், சொத்து, இதர வருமானங்கள் எல்லாவற்றையும் விழுங்கியவாறு அமைதியாகக் கஷ்டத்தைச் சகித்துக்கொண்டு ஒரு சிறு அய்யங்கார் குடும்பம். இவருக்கு இருந்த ஒரே சொத்து சிறிதும் முகம் கோணாத இவர் மனைவி, வெறுக்காத மகன். பாரதம் முடியும் தருவாயில் சென்னையில் செலவு தாங்க முடியவில்லை என்ற காரணத்தால் தம் சொந்த ஊரான மணலூர் சென்றுவிட்ட தந்தையைத் தொடர்ந்து அவருக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில் தனது லாங்க்மன்ஸ் கீரீன்ஸ் வேலையை ராஜீனாமா செய்துவிட்டுச் சென்ற மகன். புத்தக வேலை தொடங்கி உற்றார் சுற்றார் பலரின் கனிவான வேண்டுகோள் பட்ட நஷ்டம் இதோடு போதும் என்று விட்டுவிடு என்பதுதான். அல்லாடும் மனத்துக்கு இதமாக வலங்கைமான் ஜோஸ்யர் கோவிந்தச் செட்டியிடம் ஆருடம் கேட்டார் ம வீ ரா. எழுதித் தந்த ஆரூடத்தை எவருக்கும் காட்டாமல் 22 வருடம் மறைத்து வைத்து மஹாபாரதம் முடிந்த அன்று 24-12-1931 வியாழன் மாலை ப்ரொபசர் ஸுந்தர்ராம ஐயர், அட்வகேட் எம் கே வைத்யநாத ஐயர் ஸ்ரீமான் குப்புசாமி ஐயர் ஆகியோர் முன்னிலையில் அரக்கி இட்டு மூடிய அந்த ஆருடக் கவரைப் பிரித்துக் காண்பித்தார் மணலூர் வீரவல்லி ராமானுஜாசாரியார். ஆரூடம் கூறியது: 'பாரதம் தமிழ்செய்யக் கேட்கிறது. வருஷம் மூணு செல்லு. இதில் கவலை அதிகம். முடிவாகிற முன்னிட்டு விஷ்ணு தரிசனம் கிடைத்து. அதிலிருந்து சிலது பாக்கி நின்றுவிடும்..' யாருக்குமே பொய்க்காத ஆரூடம் எழுதுபவர் என்று பெயர் வாங்கிய ஜோச்யருடைய ஆரூடத்தைப் பொய்யாக்கினார் அய்யங்கார். பாதியில் நின்றுவிடும் என்ற ஊழையும் உப்பக்கம் கண்டார் உலைவின்றி தாழாது உழைத்த ம வீ ரா.

அந்த மஹாபாரதம் 1948க்குப் பின் கிடைப்பது அரிதாகிப் போனது. இப்பொழுதோ அப்படி ஒன்று வந்தது என்பதைப் பற்றியே சொல்வாரும் இலர். பதிப்புலகின், மொழிபெயர்ப்பு சகாப்தத்தின் பெரும் சாதனையை மூடிய படியே காலமும் தமிழ் மக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஓடியது. ஆனாலும் பகீரத அடிவாழை ஓய்ந்துவிடுமா என்ன? 1950களில் M V ராமானுஜாசாரியாரிடம்(ம வீ ரா) பதிப்புரிமை பெற்ற சிவராமகிருஷ்ணய்யரின் பேரன் S வெங்கட்ரமணன் எங்கிருந்தோ ஓர் ஆவேசம் கொண்டார். அரைநூற்றாண்டுக்கும் மேல் அரிதாகிப் போன மஹாபாரதத்தை தமிழுலகிற்கு மறுபதிப்பாக்கித் தந்தே தீருவது என்று பகீரத பிரயத்தினம் மேற்கொண்டார். ஒன்பது வால்யூம்களில் தந்தும் முடித்துவிட்டார்.

ஆச்சரியம் என்னவெனில் 1906ல் ஆரம்பித்து 1932ல் முடிந்த இந்த மாபெரும் தமிழாக்கச் சாதனை படிக்க இயல்பாகவும், எளிமையாகவும் இருக்கிறது. இந்தக் கருத்தை அன்று அடுத்து அடுத்து வந்த சஞ்சிகைகளை எதிர்கொண்ட அனைத்துச் சான்றோர்களும் சான்று பகர்கின்றனர். மஹாமஹோ உ வே சா, ஸ்ரீ வை மு சடகோப ராமானுஜாசாரியார், சுதேசமித்திரன் பத்திரிக்கை, செந்தமிழ் பத்திரிக்கை, யதார்த்தவசனி என்றபடிப் பல பத்திரிக்கைகளும், பெரியோர்களும், சமுதாயப் பிரமுகர்களும் ஒரு கருத்தை அநேகமாகத் தன்னிச்சையாகத் தெரிவித்திருக்கின்றனர். அது என்னவெனில் - மொழிபெயர்ப்பு அழகான தமிழ் வசன நடையில் பண்டிதர், பாமரர் வித்யாசமின்றி அனைவரும் படித்து ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றது. அதே சமயம் ஆழ்ந்து அகன்ற வடமொழிப் புலமை மிக்க பெரும் வித்வான்களால் பல பாடங்களை, தாக்ஷிணாத்ய பாடம், பாம்பே பாடம், காஷ்மீர பாடம் என்றபடி பல மூலப்பிரதிகளை ஆய்ந்து, மஹாபாரதத்திற்கான அனைத்து உரைகளையும் உதவிகொண்டு மூலத்திற்கு அப்படி இப்படி நகராமல் மொழிபெயர்ப்பு செல்கிறது. வியாசரே மீண்டும் சுலபமான தமிழில் தாமே மீண்டும் எழுதிவிட்டாரோ என்று ஐயுறும் வண்ணம் இந்தச் சாதனை அமைந்திருக்கிறது.

கைக்கொள்ளப்பட்ட மூல பாடம் தாக்ஷிணாத்ய பாடம் என்னும் தமிழ்நாட்டுப் பாடமே ஆகும். இதற்கு Southern Recension என்று ஆங்கிலத்தில் பெயர். இதற்குக் குறிப்பாக அன்றைய நாளில் கும்பகோணம் பாடம் என்று வழக்கம். ஸ்ரீ ம வீ ரா அவர்களும் அப்படித்தான் தாம் மூலமாக எடுத்துக்கொண்ட இந்தப் பாடத்தைக் குறிக்கின்றார். பெரும் வித்வான்கள் ஸ்ரீ T.R. க்ருஷ்ணாசாரியர், ஸ்ரீ T.R. வியாஸாசாரியர் ஆகிய இரட்டையர் (மத்வ விலாஸ் புக் டெபொ உரிமையாளர்கள், கும்பகோணம்) தாக்ஷிணாத்ய பாடத்தின் மூல பாட நிர்ணயத்தில் பெரும் நிபுணர்கள். இந்தக் கும்பகோணம் பாடத்திற்கு மற்றும் ஒரு சிறப்பு. பல உரைகளும், தொடர்ந்து 11 ஆம் நூற்றண்டிலிருந்து எடுத்தாண்ட குறிப்புகளும் சேர்ந்து இந்தப் பாடத்தை இந்தியாவில் வழங்கும் பாடத்திலேயே மிகவும் சான்றுத் தன்மையும், நெடிய வழக்காறும் உடைய பாடமாக ஆக்கியிருக்கிறது. சில விசேஷமான பகுதிகள் தமிழ்நாட்டுப் பாடம் என்னும் கும்பகோணம் பாடத்தில்தான் காணக் கிடைக்கும். பல சித்தாந்தத்து வித்வான்களும் இதில் தொடர்ந்து தம் உழைப்பையும், கவனத்தையும் தமிழ் நாடெங்கணும் தந்தமையால் இதில் இடைச்செருகல்கள் மிகவும் குறைவு. இந்தப் பாடத்தில் உள்ள விஷயங்களுக்கு நெடிய ஆட்சி வழக்கு உண்டு, உத்தர தேசப் பாடங்களை விட. வியாசருடைய பிரதி என்று ஒன்றை நாம் முடிவு செய்ய இயலும் என்றால் அதற்கு மிகவும் அண்மைத்தான பிரதி இந்தக் கும்பகோணம் பாடமேயாம். எனவேதான் மணலூர் வீரவல்லி ராமாநுஜாசாரியார் அந்தப் பாடத்தை மூல பாடமாகக் கைக்கொண்டார்.

ஸ்ரீ உ வே T V ஸ்ரீநிவாஸாசாரியார், மஹாமஹோ பைங்காடு கண்பதி சாஸ்திரிகள், மஹாவித்வான் கிருஷ்ண சாஸ்திரிகள் போன்ற பெரும் விதவான்களைக் கொண்டு மொழிபெயர்க்கச் செய்து, பின்னர் அந்தப் படிகளைத் தாமும் பல விதவான்களும் மாற்றி மாற்றிச் சரிபார்த்து மூலத்துடன் ஒப்பு நோக்கி, சந்தேகம் இருந்தால் சம்ஸ்க்ருதக் கழகங்களுக்குக் கடிதம் எழுதி விசாரித்து நிர்ணயம் செய்து, பின்னரே அச்சுக்கு விடும் நியதியைத் தவறாமல் ஸ்ரீ உ வே ம வீ ராமாநுஜாசாரியார் கைக்கொண்டதால் இன்று நம் கையில் உள்ளது அப்படியே அச்சு அசலாய் வியாசரின் எழுத்து. அங்கு மொழிபெயர்ப்பின் விபத்துகள் எதுவும் இல்லை. இதைவிடப் பெரும் சிறப்பு என்ன எனில், பண்டிதர், பொதுஜனம் என்ற வேறுபாடின்றி அனைவரும் படிக்கத்தக்க பிரதியை எழுத்து வகையாலும், மொழிநடையாலும் அவர் கைக்கொண்டு அதை பாலிஸியாக நடைமுறையில் செய்து வெகு அரிய, முன்னரும் இல்லாத, பின்னரும் ஏற்பட அருமைப்பட்ட ஒரு மொழியாக்கப் பிரதியை வியாச பாரதத்திற்குத் தமிழில் சாதித்திருக்கிறார். மணலூர் வீரருக்கு நம் நன்றியும், நமஸ்காரங்களும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment