Thursday, January 30, 2020

யதிராஜ விம்சதி - முதல் பகுதி (1 - 10)

யதிராஜ விம்சதி - ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள்
(இதற்கு அரிய உரை எழுதி உதவியவர் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் அவர்கள்)

யதி என்ற சொல் துறவியைக் குறிக்கும். இந்திரியங்களின் விஷயங்களில் நிராசையும், அலட்சியமும் கொண்டவர்கள் யதிகள். காமக்ரோத வியுக்தாநாம் யதீநாம் யத சேதஸாம் - என்பது கீதை. யதிகளுக்கெல்லாம் ராஜர் என்பவர், துறவு என்னும் பற்றின்மை என்பதில் மற்றவர்கள் எல்லாம் யாரைப் பார்த்து, யாரைப் பற்றி நினைப்பதாலேயே தமக்கும் துறவு மனப்பான்மை வரப்பெறுகிறார்களோ அத்தகையோர் யதிராஜர் எனலாம். யதிராஜர் என்பது ஸ்ரீராமாநுஜருக்கு அமைந்த காரணப் பெயர். ஸ்ரீராமாநுஜர் காலத்திற்குப் பிறகு பல ஆசாரியர்கள் வந்தாலும், ஸ்ரீராமாநுஜரே மீண்டும் அவதரித்தாரோ என்று வைணவர்கள் வியந்து போற்றும் வண்ணம் தோன்றிய ஆசாரியர் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள். இவரது முழுப்பெயர் ஸ்ரீஅழகியமணவாள மஹாமுனிகள் என்பது. இவருக்கு ஆசாரியராக அமைந்து, இவரை ஸ்ரீராமாநுஜரின் அளக்கலாகா ஒண்பெருமையை உணரப் பண்ணியவர் திருவாய்மொழிப் பிள்ளை அவர்கள். திருவாய்மொழியில் மிகுந்த ஈடுபாடு காரணமாக, அந்த நம்மாழ்வாரின் அருளிச்செயலின் பெயரை இட்டே அவருக்கு திருவாய்மொழிப்பிள்ளை என்று பெயர் ஏற்பட்டது. தம் ஆசாரியரிடமிருந்து தாம் பெற்ற ஸ்ரீராமாநுஜ பக்தியை தம்முள் புறவெள்ளமிட, படிக்கும் நம் கண்கள் எல்லாம் குளமாக, நாம் நம்மைப்பற்றி நினைக்க வேண்டிய துர்நிலையைத் தம்மிடம் இருப்பது போன்று அநுகாரம் செய்து பரிதபித்துப் பாசுரம் இடுகிறார் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள். விம்சதி என்பது இருபது என்னும் எண் பெயர். யதிராஜ விம்சதி என்பது 20 சுலோகங்களால் ஸ்ரீராமாநுஜரைக் குறித்து ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் வடமொழியில் பாடியருளிய பிரபந்தம்.

ஸ்ரீராமாநுஜரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள இதைவிடப் பொருத்தமான வார்த்தைகள் என் விஷயத்தில் இல்லை எனலாம். மூல சுலோகத்தையும், கூடவே என் மொழிபெயர்ப்புடன் கூடிய விளக்கத்தையும் தருகிறேன்.

*
முதல் சுலோகம்:

ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா
ப்ரேமாவிலாசய பராங்குச பாதபக்தம் |
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரீதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா ||

’அடிமை செய்வார் திருமாலுக்கு’ என்று நம்மாழ்வார் கூறியபடியே திருமகள் கேள்வன் பதமலர் இணைகளில் ஆழ்ந்ததும் நித்யமானதுமான தொண்டையே தமது புறம்பொசிந்த பக்தியின் வேட்கையாய்க் கொண்ட நம்மாழ்வாரின் பாதங்களில் அவரத்தனை பக்தி கொண்டவர் ஸ்ரீராமாநுஜன் என்னும் யதிராஜர். அந்த ஸ்ரீராமாநுஜரோ தமது திருவடிகளை அடைந்த அடியார்களிடத்தில் பகவத் பக்திக்கும், கைங்கரியத்துக்கும் இடையூறாக இருக்கும் காமம் முதலிய குற்றங்களைத் தமது கடைக்கண் நோக்கினாலேயே அழித்துவிடும் அருளாளர். அத்தகைய யதிபதியானவரை எனது அனைத்துப் பொறுப்புகளையும் அவரிடம் தந்துவிடுவதைக் குறிக்கும்வகையில் என் தலையினால் வணங்குகிறேன்.

*
இரண்டாவது சுலோகம்:

ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குச பதாம்புஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிந்ஹ சரணம் யதிராஜமீடே ||

*
‘பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமாநுசன்’ என்பதற்கேற்ப திருவரங்கநாதனது சரண பத்மங்களில் நித்ய வாசம் செய்யும் அரச அன்னம் போன்றவரும், பகவானாலும் முடியாது கைகழிந்த சம்சாரிகளைத் தமது செஞ்சொல் கவிகளால் தலைவணக்கி வைணவ கோஷ்டியில் சேர்க்கின்ற மாபெரும் கைங்கரியச் செல்வம் நிறைந்த பராங்குசரின் பாதாரவிந்தங்களில் திருவாய்மொழியெனும் மதுவைத் துய்க்கும் அறுகாலச் சிறைவண்டானவரும் ஸ்ரீராமாநுஜரே ஆவார். தமது அருட்பொழிவால் பெருந்திரளாக ஸ்ரீவைஷ்ணவர்களைப் பொலியச் செய்வதால் பெரியாழ்வாரின் முக மலர்த்திக்கும், திவ்ய தேசங்களை என்றைக்கும் மாறாமல் திருத்தி வைப்பதால் திருமங்கையாழ்வாரின் முகமலர்த்திக்கும் ஸ்ரீராமாநுஜர் இலக்காகிறார். ஸ்ரீவத்ஸசின்ஹர் எனப்படும் கூரத்தாழ்வானுக்கு அனைத்துமான புகலிடம் ஆனவரும் ஸ்ரீராமாநுஜரே. அத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீராமாநுஜரை என் திருப்திக்காக ஏற்றித் தொழுகிறேன்.

*
மூன்றாவது சுலோகம்:

வாசாயதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதாரவிந்த யுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாத குருகேச முகாத்ய பும்ஸாம்
பாதாநுசிந்தந பரஸ்ஸததம் பவேயம் ||

*

யதீந்திரரே! வாக்கு, உடல், மனம் ஆகிய திரிகரணங்களாலும் பகவானை வணங்க வேண்டும் என்ற நியதியிலும் உன்னதமாக, அந்தப் பகவத் தத்துவத்தை உள்ளபடிக் காட்டிக் கொடுத்த ஆசாரியர் விஷயத்தில் திரிவித கரணங்களாலும் வணங்குபவர்களாய் உங்களுடைய பாதாரவிந்தங்களை அநவரதம் பஜிக்கின்றனர் கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான் பிள்ளான் போன்ற பூர்வாசாரியர்கள். எனக்கோ அந்த உத்தமர்களின் பாதாரவிந்தங்களில் அத்தகைய திருவடி தொழுதல் இடைவிடாமல் ஏற்பட அருள்வீராக!

*
நான்காவது சுலோகம்:

நித்யம் யதீந்த்ர தவ திவ்ய வபு: ஸ்ம்ருதௌ மே
ஸக்தம் மநோபவது வாக் குணகீர்த்தநேஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்யகரணே துகரத்வயஸ்ய
வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச ||

*
உலக விஷயங்களில் மண்டிக் கிடந்த என் மனமானது, ‘உன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலேன்’ என்னும்படியாக தியாநத்துக்கு சுபாச்ரயமான தேவரீருடைய திவ்யமங்கள விக்ரஹத்திலேயே தோய்ந்து அமிழ வேண்டும். உலகின் அல்ப சாரங்களைப் பற்றியே பேசிப் போந்த என் வாக்கானது தேவரீருடைய கல்யாண குணங்களையே வாய்வெருவி நிற்க வேண்டும். உலக சுகங்களுக்காக எவ்வித இழிந்த சேவையையும் செய்யத் துணிந்த என் இரு கைகள் தேவரீருடைய திருப்பாதங்களுக்கே ஆன கைங்கரியங்கள் அனைத்தும் செய்வதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். பண்டை வாழ்க்கையைத் தவிர்ந்தாலன்றி, போன செயல்களிலிருந்தும் முகம் மாறினாலன்றி, தேவரீரிடத்தில் ஈடுபாடானது நிலைநிற்க மாட்டாதாகையாலே பண்டை வழிகளின் வாசனைகளையும் தேவரீரே பாற்றியருள வேண்டும்.

*
ஐந்தாவது சுலோகம்

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த
நிஷடாம் மமாத்ரவிதராத்ய யதீந்த்ரநாத |
சிஷ்டாக்ரகண்யஜந ஸேவ்யபவத்பதாப்ஜே
ஹ்ருஷ்டாஸ்துநித்யம் அநுபூய மமாஸ்யபுத்தி: ||

*
திருவெட்டெழுத்து என்னும் மந்திரராஜம் என்பதினுடைய மூன்று அறுதியிட்ட அர்த்தங்களான பாகவதரிடத்தில் சேஷத்வம், பாகவதர்களையே சரண் ஆகக் கொள்ளுதல் என்னும் பாகவத சரணத்வம், அடியார்களுக்கே உகந்தவனாக இருக்குமதான பாகவத போக்யத்வம் என்னும் மூன்றும், ‘நின் திருவெட்டெழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கடிமை’ என்னுமாப்போலே எனக்கு இங்கேயே விரைவில் தந்தருள வேண்டும். இந்தப் பரமார்த்தத்தைத் தம் வாழ்விலே எப்பொழுதும் அநுஷ்டித்த சிஷ்டர்களில் முதன்மை பெற்றவர்களான கூரத்தாழ்வான் போன்றவர்களால் சேவிக்கப்பட்ட தேவரீருடைய திருவடித்தாமரைகளில், ‘உனதடிப் போதில் ஒண்சீராம் தெளிதேன் உண்டமர்ந்திட வேண்டி நின்பால் அதுவே போந்தது என் நெஞ்சென்னும் பொன்வண்டு’ என்பதைப் போல் என் புத்தியானது என்றும் பொருந்தி இன்புற்றிட வேண்டும்.

*
ஆறாவது சுலோகம்

அல்பாபிமேந பவதீய பதாப்ஜ பக்தி:
சப்தாதிபோக ருசிரந்வஹமேததேஹா |
மத்பாபமேவ ஹிநிதாநமமுஷ்யநாந்யத்
தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ ||

*
ஞானம் குணம் முதலிய ஆசிரியத் தன்மைகளால் நிறைந்த யதிராஜரே! தங்கள் திருவடித் தாமரைகளில் பக்தியானது எனக்கு லவலேசமும் இல்லை என்று தெரிகிறது. ஆனால் சப்தாதி உலக விஷயங்களில் ருசியானது நாளுக்கு நாள் மேன்மேலென வளர்ந்து கொண்டே போகின்றது. இந்த முரண்பாடான நிலைமைக்குக் காரணம் என்ன என்று யோசித்தால் நிச்சயம் தங்கள் அருளின்மையோ அல்லது தங்களால் இதை என்னிடம் நிவர்த்திக்க முடியாது என்பது ஒன்றும் இல்லை. நிச்சயம் இது என்னுடைய பாபத்தினால் என்னுடைய முன்வினைப் பயன்களின் விளைவேயாகும். இதிலிருந்து நான் விடுபட்டு, தங்கள் திருவடிகளில் பக்தி கொள்ள வேண்டும் எனில் நிச்சயம் அது தங்களுடைய தயையினால் மாத்திரமே சாத்தியம் ஆகும், தயை அலையெறியும் கடலாக இருப்பவரே !

*
ஏழாவது சுலோகம்

வ்ருத்த்யா பசுர் நரவபுஸ்த்வஹம் ஈத்ருசோபி
ச்ருத்யாதிஸித்த நிகிலாத்ம குணாச்ரயோயம் |
இத்யாதரேண க்ருதிநோபி மித: ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபரோத்ர யதீந்த்ரவர்த்தே ||

*
வாழ்க்கையின் நடவடிக்கைகளில் பார்த்தால் ஒரு விலங்குக்கு ஒப்பாகவும், உருவத்தைப் பார்த்தால் மனிதரைப் போன்றும் வளையவரும் இப்படிப்பட்ட என்னுடைய வஞ்சக நடத்தையோ என்றால் பெரும் ஞானம் குணம் ஆகியவற்றால் நிறைந்தோரும் கூட என்னைப் பார்த்து, ‘இவரைப் போல சாத்திரங்களில் சொல்லியுள்ள ஆத்ம குணங்களால் நிறைந்தவர் உண்டுகொல்!’ என்று தமக்குள்ளே மாறி மாறிப் புகழும் அளவிற்கு, இப்பொழுதும், தேவரீரை ஸ்துதி செய்யும் இந்த நேரத்திலும் கூட, வஞ்சித்துத் திரிகின்றேன் யதீந்திரரே !


*
எட்டாவது சுலோகம்

துக்காவஹோஹம் அநிசம் தவ துஷ்ட சேஷ்ட:
சப்தாதிபோக நிரதச் சரணாகதாக்ய: |
த்வத்பாதபக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே
மித்யாசராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க: ||

*

கெடுதியான நடவடிக்கைகள் கொண்டவனாய், சப்தாதி உலக விஷயங்களிலேயே தோய்ந்தவனாய், ஆனால் பெயருக்கு மாத்திரம் தங்கள் திருவடிகளில் சரணம் அடைந்தவன் என்று சொல்லும்படியாக நானோ தேவரீருக்கு எப்பொழுதும், (கைவிடுவதா, காப்பதா என்று நிச்சயிக்கப் போகாதவாறு), துக்கத்தைத் தருபவனாகவே இருந்து வருகிறேன். (ஆனால் அத்தோடு போயிற்றா!) தேவரீருடைய திருவடிகளில் சிறிதும் செயற்கையற்ற இயற்கையான பக்தி பூண்ட உத்தம சிஷ்டர்களுக்கு மத்தியில், தங்கள் திருவடிகளில் பக்தியே உருவானவர் அன்றோ இவர் என்று அவர்களே கருதும் அளவிற்கு ஏமாற்றித் திரியும் பொய்நடை மிக்க மூர்க்கனாய் அன்றோ நான் இருப்பது, யதிராஜா !

*
ஒன்பதாவது சுலோகம்

நித்யம் த்வஹம் பரிபவாமி குருஞ்ச மந்த்ரம்
தத்தேவதாமபிநகிஞ்சித் அஹோ பிபேமி |
இத்தம் சடோப்ய சடவத் பவதீய ஸங்கே
ஹ்ருஷ்டச்சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க: ||

*

யதிராஜரே! தினமும் நான் திருவெட்டெழுத்தை உபதேசித்த குருவையும், அந்த பெரிய திருமந்திரத்தையும், அந்த மந்த்ரத்தின் தெய்வமான எம்பெருமானையும் அவமரியாதை செய்துகொண்டே சிறிதும் பயமற்றவனாய் இருக்கின்றேன். அந்தோ! இப்படிப் பட்ட துர்நடத்தை உடையவனாக இருந்தும் தேவரீருடைய அடியார்களின் திரளில் ‘குரு, மந்த்ரம், தெய்வம்’ ஆகியவற்றில் இவனைப் போல பக்தியுடையார் எவருமிலர்’ என்று பிறர் கருதுமளவிற்கு சந்தோஷம் புறவெள்ளமிட சஞ்சரிக்கின்றேன் அன்றோ! அதனால் மூர்க்கனாய் அன்றோ இருக்கின்றேன் நான்.!

*
பத்தாவது சுலோகம்

ஹாஹந்தஹந்த மநஸா க்ரியயாச வாசா
யோஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத் வதேவம்
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க: ||

*

ஐயோ கஷ்டம் கஷ்டம் கஷ்டம்! பகவான், பாகவதர், ஆசாரியன் ஆகியோர் விஷயத்தில் மனத்தால், வாக்கால், உடலால் கைங்கரியங்கள் செய்து உய்வடைவதற்காக ஏற்பட்ட மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் நானோ அதற்கு எதிரிடையாக அபசாரங்களே எப்பொழுதும் மூவர் திறத்தும் செய்து போருகிறேனே! ஆத்ம ஸ்வரூபத்துக்குச் சேர கைங்கரியம் என்னும் பெரும் பேறு அடைந்து இந்த ஜீவர்கள் உய்ய வேண்டும் என்று அநவரதம் அதற்கு ஆவனவெல்லாம் அரும்பாடுபட்டுச் செய்து போரும் தேவரீருக்கு மிகவும் அநிஷ்டமாக அன்றோ என் மனமும், சொல்லும், செயலும் வர்த்திக்கிறது! ஆனாலும் யதிராஜரே! தேவரீருமே கூட என் விஷயத்தில் பார்த்து, ‘பகவத் பாகவத் ஆசார்ய விஷயங்களில் இவனத்தனை பிரேமம் உடையாரோ, கைங்கரிய ருசியுடையாரோ இல்லை அன்றோ!’ என்று உகந்து நினைக்கும் வண்ணம் வஞ்சித்துமன்றோ நடந்து கொள்கிறேன்! என்ன மூர்க்கத்தனம்! ஐயோ!

*

(ஸ்ரீரங்கம் மோகனரங்கன்)

No comments:

Post a Comment