Friday, January 24, 2020

மனத்தில் கள்ளம் 3

’உங்கப்பாவுக்கு பிழைக்கத் தெரியவில்லை. பார் அவனவன் ஒன்றுமில்லாதவன் எல்லாம் எப்படி அடித்துப் பிடித்து பெரியாள் ஆகிவிட்டான்; கொடிகட்டிப் பறக்கிறான்.. அவரு எவ்வளவு பெரிய திறமைகளை வைத்துக்கொண்டு... ‘

இப்படிச் சொல்லி அங்கலாய்ப்பார் அடிக்கடி என் உறவினர்களில் ஒருவர். நானும் மகிழ்ந்து போவதுண்டு, ‘ஆஹா! நம் தந்தையைப் பற்றி எவ்வளவு கரிசனம் இவருக்கு!’ என்று.

ஏன் நீங்கள் அவரிடமே இதைப் பற்றிச் சொல்லியிருக்கலாமே.. என்றேன்.

ஐயய்யோ.. அவர் என்றால் எங்களுக்கெல்லாம் பயம்.. அவர் முன்னாடிப் பேசக் கூட மாட்டோம்.

இதைக் கேட்டதும் மகன் என்ற முறையில் நினைப்பு இனித்தது - ஓ அவ்வளவு தூரம் அவரிடம் இவர்களுக்கு மரியாதை உணர்வோ என்று.

ஆனால் உடனே உறவினர் சொன்னதும்தான் அந்த உறவினரைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வைத்தது.

‘சும்மா.. ஓர் அதட்டு போட்டார்னா நாங்கள் எல்லாம் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கி பதுங்கிடுவோம்...’

முதலில் இந்த சப்த நாடிகள் என்ன என்ன என்று பார்க்க வேண்டும். அது போகட்டும்.

இப்பொழுது வெளியாயிற்றா அந்த உறவினரின் மனம் -

அதாவது ஒருவரின் திறமை, விழுமியங்கள், இலட்சியங்கள் இதெல்லாம் வைத்து அவரிடம் பயபக்தியாக நடந்து கொள்வது என்ற வகையறாவில் இருந்து என் தந்தையைத் தன் பேச்சால் கடத்திக்கொண்டு போய், ‘தம் உரத்த குரலால் அதட்டுவதால் மற்றவரிடம் பயத்தை ஏற்படுத்தும் ஒருவர்’ என்ற வகையில் நைஸாகச் சேர்த்துவிட்டார்.

அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேனா... அவரைப் பார்க்கவில்லை.. அவர் மனத்தில் இதற்கான உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.. கண் அவர் மீதே இருந்தது போலும்..

‘நான் ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லை... அவர் ரொம்பப் பெரியவர்.. நாங்க எல்லாம் சின்னவங்க... அவரிடம் பேசக் கூட பயம்... அதான் சொல்லவந்தேன்... ‘

உங்களைக் கூட ஏதோ ஒரு சமயம் கண்டித்து... உங்களுக்கு ஏதோ பிரச்சனை.. அப்பொழுது.... அப்படி ஏதோ நினைவு எனக்கு... - என்று இழுத்தேன்.

‘அது ஒண்ணும் இல்லப்பா... அதாவது நான் கொஞ்சம் படிப்புல வீக்கு.. கொஞ்சம் என்ன எனக்கும் படிப்புக்கும் ஒத்தே வராது.. எங்கப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.. நான் கேட்கிறதா இல்ல.. எனக்கு அப்படீ ஊர் சுத்திண்டு ஜாலியா... அப்ப எங்கப்பா என்ன பண்ணார்.... உங்க அப்பாகிட்ட இது மாதிரி பையன் சுத்திண்ட்ருக்கான்.. என்ன பண்றதுன்னே தெரியல்ல.... அவன் உருப்பட்றதுக்கு நீங்கதான் ஏதாவது செய்யணும்னு அழுதுருக்கார்... அழுதிருக்கார்னா.. சும்மா நான் சொல்லலை... லிட்ரலி க்ரைடு... ஏன்னா நானே கண்ணால பார்த்தேன். எனக்கே ஒரு நிமிஷம் எங்கயாவது ஓடிப்போயிட மாட்டோமான்னு தோணித்து... அப்பத்தான் உங்கப்பா ‘பையனை ஸ்ரீரங்கத்துக்கு அனுப்புங்கோ. அது எப்படி உருப்படாம போவான்னு நான் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். அப்புறம் என்ன... என்னைக் கொண்டு போய் உங்கப்பாகிட்ட விட்டு... உங்கப்பா என்னடான்னா போட்டு என்னை ட்ரில் வாங்க ஆரம்பிச்சுட்டார். ’அதெல்லாம் பையன் கெட்டிக்காரன். ப்ராமிஸிங் பாய். ஜமாய்ச்சுடுவான்’ என்று உற்சாகமா வேறு இருக்கார். எனக்கோ படிப்பு சுட்டுப் போட்டாக் கூட வராது.

(இந்தச் சுட்டுப் போடுதல் என்றால் என்ன என்றும் பார்க்க வேண்டும்)

.... பார்த்தேன் ஒரு நாள். உங்கம்மாகிட்ட சொல்லிட்டு ‘அவரைச் சிரமப்பட சொல்லாதீங்கோ. எனக்கு சுத்தமா படிப்புல ஆர்வமே இல்ல. என் தலையெழுத்து இவ்வளவுதான். அவர்கிட்ட பேசறதுக்கு எனக்குத் திராணியில்ல. தயவு செஞ்சு சொல்லிடுங்கோ’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டேன்.

எங்கப்பா அதிலேருந்து சாகறவரைக்கும் என்கிட்ட சரியாப் பேசறதுல்ல. ஆனால் உங்கப்பா எப்ப பார்த்தாலும் கூப்பிட்டு வைத்துக்கொண்டு உற்சாகமா நான் ஏதோ படிக்கறதுக்கே பொறந்தவன் மாதிரி ஊக்கப் படுத்துவார். அதுலேந்து உங்கப்பா தலை தெரிஞ்சா போதும்.. நான் நழுவிடுவேன்....

புரியவில்லை. மக்கள் ஏன் எப்படி யாரை எதனால் எவ்வண்ணம் பயப்படுகிறார்கள் என்று.

ஒரு நாள் அவருடைய சின்ன தாத்தா ஒருவரைப் பற்றிய பேச்சு வந்தது. அந்த உறவினர் அதி உற்சாகமாகப் பேசினார் --

அவர் எல்லாம் பெரிய மகான். பெரிய வித்வத். ஆனால் கொஞ்சம் கூட வெளியில தெரியாது. எதுவும் வேண்டாம்னு சிம்பிளா இருந்தவர். எதற்கும் ஆசைப் படாதவர். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு....

அப்பொழுதுதான் எனக்கு ஒன்று தோன்றியது -- அந்த உறவினரை நோண்டினேன். --

ஏன் அவர், அந்த மகான்னு சொல்றீங்களே.. அவர் பிழைக்கத் தெரியாதவர் இல்லியா... அவரும் அடிச்சுப் பிடுச்சு பெரிய ஆளா வந்துருக்கலாமே... எவ்வளவோ திறமைகள் இருக்குன்னு சொல்றீங்க...

அதூஊ உ உ...

அவர் விஷயத்துலன்னா அது ஆசையே இல்லாத பெரிய மகான்.. சிம்பிள் வாழ்க்கை.. வெளியில் காட்டிக்கொள்ளாத பெருங்குணம்... அப்ப அது அடிச்சுப் பிடிச்சுப் பிழைக்கத் தெரியாமையாக ஆகாது.... இல்லையா....

உஹ்ய்ஹிஹிஹிஹி... நீ அப்படியே உங்கப்பா மாதிரியே பேசற.... சரி நான் கிளம்பறேன்... என்று அவசரமாகப் போய்விட்டார் பாவம்.

தெரிந்துதான் பேசுகிறார்களா.. தெரியாமல் பேசுகிறார்களா.. என்றே நமக்குத்தான் தெரியமாட்டேன் என்கிறது. 


***

No comments:

Post a Comment