Saturday, January 25, 2020

ஆராதனை அறியாமை ஒன்றுமே

ஆழ்வாரின் வாக்கிலே ஓரிடத்தில் வரும். ‘தானும் தன் பெருமை அறிவரியான்’ என்று. அவனுக்கும் ஓர் அறியாமையா? தன் பெருமை தனக்கும் தெரியாது என்றால் அவன் அறியாததும் ஒன்று இருக்கிறதா? இந்த ஐயம் ஒருவருக்கு எழுந்தது பூர்வாசாரியர்கள் காலத்தில். அதற்குப் பதில் சொன்னார் ஓர் ஆசார்யர் -- ‘ஐயா அறிவு என்பது உள்ளதை உள்ளபடி அறிவதுதானே. ஒரு பொருள் இல்லை என்றால் அது இல்லை என்று அறிவதுதானே அறிவுக்கு லட்சணம். அவனுடைய பெருமை யாவராலும் அறியப்படும் எல்லையிறந்தது என்றால் அதை அவ்வண்ணமே அறிவதால் அவன் அறிவுடைமைக்கு எந்தப் பங்கமும் இல்லை’ என்றார். பக்திக்கு என்று ஒரு தருக்கம் உண்டு.

’நாராய ணாயநம என்னும் நன்னெஞ்சர்
பாராளும் பாம் பணிந்தேத்து மாறறியேன்
காராளும் மேனிக் கருணாகர மூர்த்திக்(கு)
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே.’

அவன் தந்த வாழ்விது,
அவன் தந்த அறிவிது,
அவன் தந்த உயிரிது,
அவன் தந்த நான் இது
அவன் தந்து அவனுக்குத் தர
அறிவைத் தந்து
அவனுக்குத் தந்தேன்
என்பானையும் தந்து
அவனுக்குத் தர நான் யார்
என்ற வெட்கமும் தந்து
அவனுக்கு நாம் ஏதோ தந்ததாகக்
கணக்கில் எழுதும் பிரானுக்கு
நாம் தராமல் தானாகக் கசியும் கண்ணீரே
அர்க்க்யம் பாத்யம் ஆஸனமாகச் சமர்ப்பணம்.
அவிசாக எதைத் தர எவர் உள்ளார் இங்கு
அவனாகவே எதையோ கொண்டு
தலைக்கட்டிக் கொள்வதன்றி.
என்று வெட்கம் பிடுங்கித் தின்ன
நாணித் தலை கவிழ்ந்து நின்றால்

ஏய்! எங்கிட்ட கொடுக்காம
உள்ள மறைச்சு வச்சிருக்கியே
அந்த முடிச்சை எடு

என்று குசேலன் அவல் கணக்காய்
என் முடிச்சை அவன் அவிழ்த்தால்
ஐயோ! இருப்பது அறியாமை மட்டும்.
அதைப்போய் இப்படி
மேல் விழுந்து தின்னும்
இவன் என்ன பித்தனா பேயனா
அல்லது பெருமானா
உம் பேரென்ன என்று கேட்டால்
மால்.......
திருமால்
பொருத்தம்தான்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment