Tuesday, January 14, 2020

உளனெனில் - ரிக்வேதம்

’உளனெனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்; உளனலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்; உளன் என இலன் என இவைகுணம் உடைமையில் உளன் இருதகைமையொடு ஒழிவிலன் பரந்தே.’

என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

உளன் எனில், உளனலன் எனில் - இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் எதனால் விழுகின்றன? உளன் என்று சொல்லும் பொழுது எனில் என்பது எப்படி வரும்? அதற்கும் மேல் உளனலன் எனில் என்று மாற்றுக் கருத்து எதற்காகப் பாசுரம் இடப்படுகிறது? இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் ரிக்வேதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே வேத ரஹஸ்யம் என்பது யாது என்று அறிய வேண்டும். வேதம் மனிதருக்குப் பேசுகிறது. ஆனால் மனித விஷயங்களைப் பேசவில்லை. மனிதர்கள் மனித விஷயங்களைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் வேத விஷயங்களைப் புரிந்து கொள்வதில்லை.

பொருள்கள் இருக்கின்றன. கனமான பந்து இருக்கிறது. கல் இருக்கிறது. அந்தப் பந்தையும், கல்லையும் ஒரே நேரத்தில் மேலிருந்து கீழ்நோக்கி விடுகிறோம். கீழே போய் விழுகின்றன. புவியீர்ப்பு விதி இருக்கிறது. அதனால் விழுகின்றன என்கிறோம். கல் தெரிகிறது. பந்து தெரிகிறது. புவியீர்ப்பு விதி எங்கு இருக்கிறது? நாம் புரிந்து கொள்வதில் இருக்கிறது என்று சொன்னால் அப்படியென்றால் வெளி உலகில் நம் அறிவைத் தாண்டி அந்த விதி இல்லையா? இல்லையென்றால் பின் எப்படி அந்தப் பொருட்கள் மேல் இயங்கி அப்படி விழச் செய்தது? ஐயோ பொருட்களையும், விதிகளையும் குழப்பிக் கொள்ளாதீர்கள் என்கிறீர்களா? அப்படியென்றால் ஏன் இரண்டையுமே இருக்கிறது என்ற பதத்தால் சொன்னீர்கள்? எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நம்முடைய புழக்க உலகிலேயே பொருட்களை ஆட்டும் விதிகளைக் கூட நாம் குழப்பமின்றி விளக்க முடிவதில்லை. விஞ்ஞானிகளோ விதிகளுக்கும், கணித இயல் சமன்பாடுகளுக்கும் உரிய நிஜத்தோடு அவற்றைச் சேர்த்துப் புரிந்து கொள்கிறார்கள். அப்படிப் புரிந்து கொள்ளும் மொழியைக் கற்றவர்கள்தாம் விஞ்ஞான உலகில் பிரவேசித்து மெய்மையை அறிகிறார்கள். கிளம்பின இடத்தில் நின்று கொண்டே எங்கே என் கண்ணுக்குக் காட்டு என்று அடம் பிடிப்போர் கண்ணுக்குத் தெரியும் பொருட்களே கதி என்று இருக்கின்றனர். இந்தத் தெளிவாக்கத்தைத்தான் நம்மாழ்வாரும் சரி ரிக்வேதமும் சரி ஒரே த்வனியுடன் பேசுகின்றனர்.

ப்ரஸுஸ்தோமம் பரத வாஜயந்த இந்த்ராய ஸத்யம் யதி ஸத்யமஸ்தி |
நேந்த்ரோ அஸ்தீதி நேம உ த்வ ஆஹ க ஈம் ததர்ச கமபி ஷ்டவாம ||

யதி ஸத்யமஸ்தி இதி - உளனெனில்;
உளனலன் எனில் - நேந்த்ரோ அஸ்தீதி

ஏன் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறது வேதம்? கண்ணிற்குக் காட்ட விழையும் பேச்சை இங்கே குறிப்புணர்த்துகிறது ரிக். எவ்வாறு? க ஈம் ஏநம் இந்த்ர ததர்ச? யார் இந்த இந்திரனைக் கண்டிருக்கிறார்கள்? இந்திரனை எங்கு காண்பது என்பதை அடுத்த ரிக் கூறவருகிறது.

அதேபோல் நம்மாழ்வாரும் அவன் எங்கு உளன்; அதுவும் சுடர்மிக எங்கே உளன் என்று கூறுகிறார்.

உளன் சுடர்மிகு சுருதியுள்

ரிக்வேதம் கூறுகிறது:

அயமஸ்மி ஜரித: பஸ்ய மேஹ விச்வா ஜாதாநி அப்யஸ்மி மஹ்நா |
ருதஸ்ய மா ப்ரதிசோ வர்த்தயந்தி

சாஸ்திர திருஷ்டி கொண்டு என்னைப் பார்! ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் என்பதைப் பார்! ருதம் ஆகிய சுருதி என்னை எத்திக்கிலும் அங்கிங்கெனாதபடி பொலியச் செய்வதைப் பார்!

என்று பரமாத்மா உணர்த்துவதாக வேதம் நமக்கு உணர்த்துகிறது.

ரிக்வேதம் உணர்த்தும் கிரமமும், கருத்தும், நம்மாழ்வார் உணர்த்தும் கிரமமும், கருத்தும் ஒன்றுபோல் அமைந்து நமக்குக் காட்டும் பொருள் யாதோ?

ஈச்வரமுனிகள் பாடிய வரி - அருமறைகள் அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.

***

No comments:

Post a Comment