ஸ்ரீநாதமுனிகள் காலத்தில் ஆகமங்களுக்கும், வேதாந்தத்திற்கும் இணைப்பான கருத்தியல் அடிப்படைகளை ஆய்வதே பெரும் பணியாக இருந்திருக்கிறது. யோகம் என்பதுதான், உணர்ச்சிகள் வழியிலும் போகாமல், வெறும் வேதாந்த விவாதங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் அக உலகின் அத்தாட்சியாக ஏதாவது அனுபவங்களை அடைய நினைப்போரின் புகலிடமாக இருந்திருக்கிறது. ஸ்ரீநாதமுனிகளும் 'யோகரஹஸ்யம்' என்ற நூல் எழுதியிருந்ததாகவும், அது என்ன காரணத்தாலோ பின்னர் அரிதாகி மறைந்து போயிற்று என்று குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநாதமுனிகளுக்கே பெரும் கண்டுபிடிப்பாக அவர்தம் காலத்தில் இருந்தது ஆழ்வார்களுடைய பாடல்களான நாலாயிர திவ்ய பிரபந்தம். ஆகமமா, வேதாந்தமா, யோகமா என்று இருந்த ஒரு வேதாந்தி ஏன் தமிழ்ப் பாசுரங்களை, அதுவும் அகத்திணை இலக்கணத்தில் எழுதப்பட்ட கோவை இலக்கியம் போன்ற அந்தாதி நூல்களை மிக முக்கியமானவை என்று கருதினார், அதுவும் தம் வாழ்நாளின் முழுதையும் அர்ப்பணிக்கத் தகுந்ததான சீரிய பெருந்தனமாக ஏன் கொண்டாடினார் என்பதெல்லாம் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அம்சங்கள்.
பக்திக்கும், வேதாந்தத்திற்குமான பொது கருத்தியல் அணுகுமுறை ஸ்ரீநாதமுனிகளின் காலத்திற்கு முன்னரே ஆழ்வார்களின் காலத்திலேயே, சிறப்பாக நம்மாழ்வார் என்னும் ஸ்ரீசடகோபர் என்ற புலவராலேயே மிகத் திறமையாகக் கவிதைக் குறிப்புகளின் செறிவால் ஆன வடிவில் தரப்பட்டுவிட்டது. வேதாந்திகளும், ஆகமங்களில் கரைகண்ட சான்றோர்களும், யோக நெறி பயிலும் முனிவரர்களும் பன்னெடுங்காலம் கண்டெடுக்கப் பாடுபட்ட மீப்பொது கருத்தியல், வேதாந்தத்திற்கும், பக்திக்குமான கருத்திணக்கம் மிக அழகான பாசுரங்கள் வடிவில் நம்மாழ்வார் அளித்த இந்தக் கருத்தியல் கொடைதான் பிற்காலத்தில் வேதாந்த ஸூத்ரங்களுக்கு விரிவுரை எழுதப்புகுந்த ஸ்ரீராமானுஜருக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கிறது என்பதை 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பவர் தமது 'ஆசார்ய ஹ்ருதயம்' என்ற நூலில் குறிப்பிடுகிறார். 'இவர் உரைகொள் இன்மொழி கொண்டு சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே', 'பாஷ்யக்காரர் இதுகொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவர்' (ஆசாரிய ஹ்ருதயம், முதல் பிரகரணம், சூர்ணை64, 65) வேதாந்த அறிவுநெறியின் அணுமுறைத் தெளிவும், பிரமாண நிஷ்கர்ஷமும் நம்மாழ்வாரால் மிக எளிமையான தமிழில் எடுத்துக்காட்டப்படுவது வியத்தற்குரிய ஒன்றாம்.
உதாரணமாக வேதாந்தம் கடவுள் என்ற கருதுகோளைப் பற்றிச் சுருதி, வேதம் என்ற சூழலுக்குள்ளேயே தேட்டம் நடைபெற வேண்டும், அறிவைக்கொண்டு, பிரத்யக்ஷம், அனுமானம் என்ற அளவைகளைக் கொண்டு அன்று என்று கூறுவதை நம்மாழ்வாரின் ஈரச்சொல் பேசுகிறது, 'உளன் சுடர் மிகு சுருதியுள்'. சாஸ்திர திருஷ்டி, ஞானக்கண், நேரடிக்காட்சி போன்று அடர்த்தியான மானஸ சாக்ஷாத்காரம் என்பதை நம்மாழ்வார் கூறுவது கடவுள் காட்சியைப்பற்றி, 'என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து'. விசிஷ்டாத்வைதம் மொத்த உலகையும் ஒரு பெரும் உடலாகப் பார்க்கிறது. அதனுள் உயிராய் விளங்குவது பரம்பொருள் என்று கூறுகிறது. சடகோபனின் செழுந்தமிழ் அதே கருத்தை, 'உடல் மிசை உயிரென கரந்தெங்கும் பரந்துளன்' என்று கூறுகிறது. இவ்வாறு ஆழ்ந்த சிந்தனை வேகங்களை ஏற்படுத்தும் குறிப்புகள் ஆழ்வார்களின் பாடல்களில், நம்மாழ்வாரின் பாசுரங்களில் நிறைந்து கிடப்பதை முதன்முன்னம் கண்டு வியந்து, அதனாலேயே தம் வாழ்வு அனைத்தையும் ஆழ்வார்களின் பாடல்களை மீட்டெடுப்பதிலேயே அர்ப்பணித்தவர் ஸ்ரீநாதமுனிகள். அந்தப் பாடல்களுக்கு அவர் கண்ட ஆழங்களின் விளக்கச் சுடர், அடுத்து வந்தோரால் நினைவில் ஏந்தப்பட்டு, ஸ்ரீராமானுஜர் காலத்தில் பெருவிளக்கம் கண்ட பீடுகெழு சான்று நூலாய்த் துலங்கியது. இதன் காரணமாகவே ஈன்ற முதல் தாய் சடகோபன் என்றும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் என்றும் அறிஞர் உலகம் போற்றியது.
நம்மாழ்வாரின் சாதனைதான் நமது வியப்புணர்ச்சியையெல்லாம் விஞ்சி நிற்பது. காரணம் அவரது காலத்தில் அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் வினோதமானவை. பாதி சாத்திரப் படிப்பும், பாதி நம்பிக்கையும், பாதி உணர்ச்சியும், பாதி எதிர்பார்ப்பும் என்று கருத்தியல் குழப்பங்களே உலவிய காலத்தில்தான் காரிமாறனின் கவனத்தில் தமிழும், வேதாந்தமும், ஆகமங்களும், பக்தியும், கோவிலும் ஒருசேரக் குவியப் பெற்று தமக்கான கண்டெடுப்பும், தெளிவும், தேற்றமும் பெறுகின்றன. பொருளதிகாரத்தின் விழுமிய உயிர்நிலையாம் அகத்திணை இலக்கணம் எனப்படும் தமிழ் என்பதை கண்டெடுத்ததில் ஆழ்வாரின் பங்கு என்பது குறித்து யோசிக்கும் பொழுது தமிழின் அகத்திணை இலக்கணத்தைப் பரம்பொருளை நோக்கி எழும் பக்தியின் வடிவில் புனரமைத்துக் காட்டிய வெற்றி செந்தமிழ் வேதியனாம் சடகோபனின் பங்களிப்பு என்பதை மிக விரிவாக நமக்கு நிரூபித்துக் காட்டுகிறது அழகியமணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய (13 ஆம் நூற்) 'ஆசாரிய ஹ்ருதயம்' நம்மாழ்வாரின் பெரும் சாதனை, வேதாந்தத்தையும், பக்தியையும் முரண்பாடின்றி கோத்ததுதான் என்றால் அவர் வழியொற்றி எழுந்த பக்தி மதம் எத்தகைய தத்துவ அடிப்படையில் அமைந்தது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்மாழ்வாரின் 'நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து', 'உளன் சுடர்மிகு சுருதியுள்' என்ற கூற்றுகளும், அவற்றை அடியொற்றி எழுந்த மற்ற ஆழ்வார்களின் கருத்துகளும். பெருக்கெடுக்கும் பக்தி உணர்ச்சியின் வேகமும் குறையாமல், அதேநேரத்தில் இயல்பாக வேதாந்த அறிவு நெறிக் கோட்பாடுகளில் எந்தப் பிறழ்வுமின்றி அமைந்திருக்கும் ஆழ்வார்களின் பரபக்தி, பரஞான, பரமபக்தி தசைகளைப் பற்றிப் பேசப் புகுந்த ஆசார்ய ஹ்ருதயம், 'கண்டேன் என்ற பத்தும் உட்கண்ணாலே' என்று விளக்குகிறது. அந்தப் பகுதிக்கு மிக அழகான விளக்க உரை எழுதும் ஸ்ரீமணவாள மாமுனிகள், நம்மாழ்வார் தொடங்கி இன்று வரையில் வேதாந்த நெறியைப் பிறழாது பல்கிப் பெருகும் பக்தி வேகத்திற்குக் கட்டளைக்கல்லாய் அமைந்த சொற்களிட்டு எழுதுகிறார், '(கண்டேன் என்று வரும் திருவாய்மொழியின்) இப்பத்துச் சந்தையாலும் சொன்ன ஸாக்ஷாத்காரம் நெஞ்சென்னும் உட்கண்ணென்கிற ஆந்த்ர சக்ஷுஸ்ஸான மநஸ்ஸாலே உண்டானது' 'அப்படி தர்சித்த அதுதான் மாநஸ அனுபவமாய், பாஹ்ய அனுபவ யோக்யம் அல்லாமையாலே..' (ஆசார்ய ஹ்ருதயம், நான்காம் பிரகரணம், 230-12, 232, ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர க்ரந்தமாலை, ஸ்ரீகாஞ்சீ பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராச்சாரியர் பதிப்பு, 1966) (ஆந்த்ரம்--உள், சக்ஷ¤ஸ் - கண், ஸாக்ஷாத்காரம் - காட்சி, பாஹ்ய அனுபவ யோக்யம் அல்லாமை -- புறக்காட்சியாக அடைய முடியாத தன்மை.
அகத்திணை இலக்கணத்தில் துறை போய ஒரு தமிழ்ப் புலவர், வேதாந்த, ஆகம, புராண, இதிகாசக் கல்விகளின் பலனாய்ப் பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனிடத்தில் மிகச் சிறு வயதிலேயே தம் உள்ளம் முற்றும் இழந்து காதலாகி, அந்த பக்தி நெகிழ்வில் ஆற்றாமை விஞ்சப் பாடிய பாடல்கள், பெரும் சம்ஸ்க்ருத வித்வான்களாய் இருந்த வேதாந்தப் பண்டிதர்களால் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்பட்டு, விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் என்ற மதத்திற்கே மூலப் பனுவலாக ஆகி நின்ற நிலை நினைக்கும் தோறும் வியப்பு மேலிடுகின்ற ஒன்றாம். வேதாந்தத்திற்கும் பக்திக்குமான, பொது கருத்தமைப்புக்கான இணைப்பு என்ன என்று தேடிக் கொண்டிருந்த வித்வான்களுக்கிடையில், அத்தகைய பொது கருத்தமைப்பு மிகச் சரியான முறையில் அமையப் பெற்றும், அதனோடும் நில்லாது பக்தியுள்ளம் கடல் புரையப் பொங்கி, புறம் பொசிந்த ஈரத் தமிழ்த் தெய்வக் காதல் பனுவலாய் நினைவில் நிறுத்தும் வகையில் அந்தாதித் தொடையிலும் அமைந்து வரும் பொழுது, தவித்த வாய்க்குப் தண்ணமுதாய் அமைந்திருக்கும்.
சங்க காலத்துப் புலவர்க்கும் வேதாந்தம் எனப்படும் உபநிஷதங்களின் தத்துவ ஆய்வுகளின் நுட்பங்களும், அவை எழுப்பும் அறிவு நெறி சார்ந்த அணுகுமுறையின் கோட்பாடுகளும் நன்கு தெரிந்திருந்தாலும் சிந்தையும், சொல்லும் செல்லா நிலைமைத்தாகிய அந்நிலைக்கு நற்பயிற்சியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் யாங்ஙனம் என்பது பற்றிச் சிந்தித்தனர். அறத்தின் வழிப்படும் வாழ்வும், பொருளீட்டும் நெறிப்படும் முயற்சியும், நல்ல இன்பத்தை மனிதன் நயந்து துய்த்தலில்தான் முழுமை பெறுகிறது என்று கருதினர். நல்ல இன்பம் என்பதை அவர்கள் மிக அக்கறையான கருத்தாகவே அணுகினார்கள். எது இலக்கியக் காதல்? எது இலட்சியக் காதலோ அதுவே இலக்கியக் காதல். நற்குணங்கள், நல்வாய்ப்புகள் இவற்றில் ஒத்த தலைவனும், தலைவியும், பால்வரை தெய்வத்தின் காரணமாக, யதேச்சையாக, தம்முள் ஒருவரை ஒருவர் எதிர்பட்டு, இன்னதென்று விளக்கலாகா காரணத்தால் காதல் வயப்படுதல். இதில் இலட்சியத் தன்மையாவது குணநலன்கள் நிறைந்து, ஒத்த தலைவனும் தலைவியும் இயற்கையில் எதிர்ப்பட்டுத் தம்முள் ஒருவரை ஒருவர் கண்டடைதல் என்பது ஏதோ அன்றாடம் நடந்துவிடும் ஒன்றன்று. சங்கப் புலவர்கள் கவிதையில் இந்த இலட்சியக் காதலுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர். களவியல், பின்பு கற்பாகிய மணவினையின் மூலம் ஊரறிய இல்லறமாக மலர்தல், நன்மக்கட் பேறு என்பதில் கனிந்த பயன் அடைதல். தலைவனுக்கும், தலைவிக்கும் இடையில் ஏற்படும் அகநிலை சார்ந்த உணர்ச்சிகளும், அதன்வழீஇய ஒழுக்கங்களும் அன்பு நிலை தவறாத ஐந்து விதங்களில் அமையக் கூடும். நெருக்கம், பிரிதல், நெருக்கத்திற்காகக் காத்து இருத்தல், பிரிவில் இரங்கி காத்திருத்தல், சேர்ந்த நிலையில் ஊடலுக்கான பல காரணங்களைக் கல்பித்துக் கொள்ளுதல், அவை தணிந்து பின் கூடுதல் ஆகிய இந்த அக ஒழுக்கங்களை அன்பின் ஐந்திணை குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற நிலப் பெயர் குறியீட்டால் வழங்கினர். எந்த வித அன்பின் கேடும் கூற இயலாத இலட்சியக் காதல் வாழ்வு என்பதால் இதை அன்பின் நிலை வழாஅத ஐந்திணை என்று குறிப்பிட்டனர். இந்த இலட்சியக் காதல் சித்திரத்தையே, இதற்கான இலக்கணத்தையே சங்கப் புலவர்கள் தமிழின் சிறப்பாகக் கருதினர். அகத்திணை என்பதைத் தமிழ் என்று குறிக்கும் வழக்கமும் சங்கத்தைத் தொடர்ந்த காலத்திலும் நிலவியது. 'இல்லது, இனியது, நல்லது' என்று அகத்திணையை மீட்டுருவாக்கம் செய்த இறையனார் களவியல் காலத்தும் தமிழ் என்பது அகத்திணை இலக்கணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. பொதுவாகத் தமிழின் பொருளதிகாரமே, அதிலும் அகத்திணையியல், புறத்திணையியல் என்பதே பெரும் குறியீட்டு நுட்பங்கள் செறிந்த இயலாகத்தான் இருந்திருக்கிறது. ஆண்பெண் கூட்டுவாழ்வின் பிரபலமான வகைப்பாடுகளை பெருந்திணையின்பாலும், கைக்கிளையின்பாலும் ஒதுக்கிவிட்டு ஓர் இலட்சிய ஆணும் ஓர் இலக்கியப் பெண்ணும் தம்முள் செம்புலப் பெயல் நீர் போன்ற காதல் என்பதையே சங்கப்புலவர்களின் கற்பனை அரங்கேற்றியது. அன்பின் தவிசில் போதலரும் ஓர் ஐயிதழ்ப் புங்கவமாய்க் காதல் என்ற உயிர் இலட்சியத்தை அதன் நுண் அதிர்வுகள் பொடியாமல் மலர ஏந்தும் மாட்சியே சங்கப் புலவர் காட்டிய திணை, நிலமும், நெறியும், ஒழுக்கமும், பண்பும், மனப்பாங்கும் கலந்த எழிலுருவாய் நிற்கின்றன. இந்த இலக்கிய உலகின் இலட்சிய ஆவேசத்தை முழுதும் அங்குரித்துப் பிறந்தவர்கள் ஆழ்வார்கள்.
சங்கப் புலவரின் சாதனையான இலட்சியக் காதலைக் கடவுள்பால் கொண்ட காதலுக்கான பக்திமொழியாகவும், பக்திக்கான காதல் இலக்கணமாகவும் கையாண்டு வெற்றி கண்டவர் நம்மாழ்வாரும், அவரடியொற்றி வந்த பெருமக்களும்.. ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களைத் திராவிட வேதம் என்கிறது திருமாலின் வரவாறு. அதற்கு எழுந்த வியாக்கியானங்களையும், அதன் கருத்துகளைத் திரட்டித் தந்த சூர்ணைகளையும், அவற்றினை விளக்க வந்த விரிவுரைகளையும் திராவிட வேதாந்தம் என்றும் கூறுகிறது. இது ஏதோ தோற்றரவாக அமைத்த பெயராக்கம் அன்று. வேதாந்தத்தில், சுருதியில் என்ன அளவையியல் ரீதியிலான கடைப்பிடிகள் கொள்ளப்பட்டனவோ அதே கடைப்பிடிகளைச் சிறிதும் தளர்த்தாமல் பக்தி நெகிழ்வின் பயிலரங்காய் அமைந்த பன்னிருவர் பனுவலுக்கும் எடுத்துப்பிடித்த ஏற்றம்தான் இணையான வேதாந்தமாய்த் தோற்றம் கொண்டது. வடமொழி வேதாந்தம், திராவிட வேதாந்தம் என்னும் இரண்டையும் வைத்துப் பார்க்கும் பார்வைதான் முழுமையுடையது என்ற காரணத்தாலேயே தன் தர்சனத்தை 'உபய வேதாந்தம்' (இரட்டை வேதாந்தம்) என்று உரத்துக் கூறிக் குலவியது காரிமாறனைக் குலமுன்னவனாய்க் கொண்டெழுந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் (திருமாலின் வரவாறு). திருவாய்மொழியின் உட்கருத்தை விளக்க எழுந்த உரை மரபு கூறுகிறது, 'வேதநம் என்றும், உபாஸநம் என்றும் உபநிஷத்துக்களில் சொல்லுகிற பக்தியை இவற்றில் காமமாகச் சொல்லுகிறது'. (பகவத் விஷயம், ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் பதிப்பு, ஸ்ரீரங்கம், 1975, முதல் ச்ரியப் பதி, பக் 149). உரையின் இந்த இடத்தை விளக்க வந்த அரும்பத உரை பக்தியைக் காமமாக உருவகித்துச் சொன்னதற்கு பயன், 'உத்தம ஸ்த்ரீக்கு உத்தம நாயக விஷய அனுராகம் போலே, தமக்கு பகவத் ப்ராவண்ய அதிசய ஸூசனார்த்தமாக' என்று கூறுகிறது. அதாவது, 'மிகச் சிறந்த தலைவிக்கு மிகச் சிறந்த தலைவனிடத்தில் இடையறாது பொங்கும் காதல் போன்றது தமக்குப் பரம்பொருளிடத்தில் உண்டான ஈடுபாடும், இடையறாது பொங்கும் பக்தியும் என்பதைக் குறியீட்டின் மூலம் காட்டுவதற்காகத் திருவாய்மொழியில் அகத்திணை இலக்கணம் எவ்வாறெல்லாம் கையாளப்பட்டிருக்கிறது என்று மிக விரிவாக நிறுவுகிறது திருமாலின் வரவாறு.
எப்படி பக்திக்கு அகத்திணையைக் கையாண்டார்கள் என்பதை எடுத்துக்காட்ட ஆசார்ய ஹ்ருதயத்தின் ஒரு சூர்ணையை விளக்கிக் காட்டினால் நன்கு புரியும். திருவாய்மொழியில் தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம் என்று வரும். இந்தத் தோழி, தாய், மகள் இவர்கள் யார்? ஆழ்வாரேதான் தோழியும், தாயும், மகளும். எப்படி? 'ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு' (118) என்கிறது ஆசார்ய ஹ்ருதயம். ஆழ்வார் பக்தியால் உள்ளம் கலங்காது ஞானத் தெளிவோடு பேசும் பொழுது தாமான தன்மையில் பேசுகிறார். பக்தி நெகிழ்வால் உள்ளம் உடைகுலைப்பட்டு ஆற்றாமை விஞ்சக் கலங்கும் போது பெண்ணான தன்மையில் பேசுகிறார் என்று கூறும் ஆசார்ய ஹ்ருதயம், யார் இந்தத் தோழி, தாய், மகள் என்று வரையறுத்துக் காட்டுகிறது. தோழி என்பவள் தலைவி, தலைவன் இருவரையும் சேர்த்து வைப்பவள் அன்றோ? தலைவி, தலைவனுக்கே உரியவள் என்று வாதாடி அறத்தொடு நிற்பவள் அல்லவா தோழி? மற்றவருக்குப் பேச்சுப்படில், அதை விலக்கித் தலைவிக்கும், தலைவனுக்கும் உண்டான தொடர்பை வலியுறுத்தி மணமுடித்தலாகிய கற்புக்குக் கொண்டு செல்பவள் அன்றோ? இந்த உயிர் பரம்பொருளுக்கே உரியது, வேறொருவருக்கு உரியதன்று என்ற தொடர்பைப் பற்றிய ஞானம் பிரக்ஞையில் இருக்கும் வரை இந்த உயிர் பரம்பொருளை மறவாது அதை நோக்கியே செல்லும் அல்லவா? இந்தத் தொடர்பு பற்றிய ஞானத்தை (ஸம்பந்த ஞானத்தை) பிரக்ஞையின் அவஸ்தையாகக் கூறுகிறது ஆசார்ய ஹ்ருதயம். ஏனெனில் முக்காலத்திலும் இருப்பது பிரக்ஞை. இந்த ஸம்பந்த ஞானமாகிய பிரக்ஞை அவஸ்தையைத் தோழி என்று எடுத்துக் காட்டுகிறது. இந்த ஜீவனுக்கும், பரம்பொருளுக்கும் உண்டான ஸம்பந்தத்தைப் பற்றிய வேதாந்த ஞானம் தோழி. வேதாந்தம் மேலும் என்ன சொல்கிறது? இந்த உயிர் பரம்பொருளின் உடல். உடலைக் காப்பாற்ற, பேண உயிர் முனைகிறதா அல்லது உடலே தானே முனைகிறதா? உடல் தானே முனைந்தால் அது நோய் அல்லவா? அது போலவே உயிர் தன்னை ரட்சித்துக் கொள்ளத் தான் முனைவது சரியன்று. தனக்கு உயிராய் இருக்கும் பரம்பொருள் தன்னைக் காக்க என்னேரமும் முனைந்த வண்ணம் இருக்கிறது என்று உணர்ந்து அதன் உடல் தான் என்ற உணர்த்தியில் அகலாவண்ணம் இருப்பதுதான் உயிருக்கு அழகு. இந்தத் தன்னுடைய மர்யாதையிலிருந்து உயிர் விலகும் பொழுதெல்லாம் அதைத் தெருட்டி, அதன் இயல்பை நினைவு படுத்திக் கடவா வண்ணம் நியமிக்கும் வேதாந்த ஞானத்திற்குத் தாய் என்று பெயர். ஏன்? தாய் என்ன செய்வதாகக் கூறுகிறது அகத்திணை இலக்கணம்? தலைவன் வந்து மணக்கும் வரை படிகடவாமல் ஆற்றியிருத்தலே இயல்புக்கும், குல மரியாதைக்கும் ஏற்றது என்று அடக்கி நியமிப்பவள் என்றல்லவோ கூறுகிறது? மகள் அல்லது தலைவி என்பவள் இயற்கைப் புணர்ச்சியில் தனிமையில் முதன்முன்னமே தலைவனுக்குத் தன்னை உரிமையாக்கிவிட்டவள். தன்னைப் பற்றியும், அவனைப் பற்றியும் நினைவு முதிர முதிர நாளுக்கு நாள் அவனை அடைந்தே தீருவது என்று எல்லா மரியாதைகளையும் கடந்தும் சென்று அவனைச் சேர்ந்துவிட வேண்டும் என்றபடியான பதற்றம் மிக்கவள். ஸம்பந்தத்தை உணர்த்தும் தோழியிடமும், நியமிக்கும் தாயிடமும் தன் பதற்றம் பொங்க ஆற்றாமையைக் காட்டுபவள். இவள் சேர்த்து வைத்தாலல்லது முடிந்து படுவாளோ என்று தோழியும் தாயும் அஞ்சும் அளவிற்கு அவனை அடைவதில் பதற்றம் மிக்கவள். இந்த உயிருக்கு, தான் பரம்பொருளின் உடல் என்பது தெரிந்தாலும், தனக்காக என்னேரமும் பரம்பொருள் காப்பதில் மும்முரமாக உள்ளது என்று தெரிந்தாலும், தன்னைக் கடைத்தேற்றத் தான் முனைவதெல்லாம் கடைசியில் தனக்கு அநர்த்தமாக முடியும், அவன் வந்து கடைத்தேற்ற எதிர்நோக்கி ஆற்றியிருத்தலே, மஹா விசுவாசத்தில் ஊன்றி நிற்றலே உயிராகிய தனக்கு அழகு என்பது புரிந்தாலும், தன்னையும் அவனையும் பற்றிய நினைவு எழ எழ, ப்ராப்யத்தைப் பற்றிய (அடைவதைப் பற்றிய) பதற்றமும், அவசரமும் பெருகும். இவ்வாறு அடைய வேண்டும் என்ற உயிரின் பதற்றமுற்ற நிலையே மகள் அல்லது தலைவி எனப்படுவது. இந்தத் தோழி, தாய், மகள் என்ற மூன்றும் ஸம்பந்தத்தைப் பற்றிய உணர்த்தி, உபாயத்தைப் பற்றிய துணிவு, அடைவதில் பதற்றம் என்னும் பிரக்ஞையின் அவஸ்தைகள் எனலாம். ஆசார்ய ஹ்ருதயம், 'ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி, துணிவு, பதற்றமாகிற ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்' (133) என்று சூர்ணையிடுகிறது. இவ்வாறு அடிப்படையிட்டு மிக விரிவாக இந்த இரட்டை வேதாந்தத்தின் திறவுகோலைத் தந்துள்ளது அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய ஆசார்ய ஹ்ருதயமும், அதற்குத் தெளிவே உருவாய் விளக்கம் தந்த ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளின் வியாக்யானமும்.
எனவே வேதாந்த நெறியின் எந்த ஒரு தத்துவ முடிவும் தழைத்தது தென்னாட்டில்தான், அது அத்வைதமாக இருக்கட்டும், விசிஷ்டாத்வைதமாக இருக்கட்டும், த்வைதமாக இருக்கட்டும், வேதாந்த விளக்கத்தின் ஒளியில் பக்தியின் உள்ளம் கனிந்த பெருக்கமும் தமிழ் நாட்டைச் சேர்ந்த புலவர்களாலும் வேதாந்திகளாலும்தான் இணைந்து வளர்க்கப்பட்டு பாரதத் திருநாடனைத்தும் பெருவாழ்வு நல்கும் விருட்சமாகத் தழைத்தோங்கியது. இந்துமதத்தின் இயல்பானதும் ஆழமானதுமான அடிப்படைகள் சங்க காலத்தின் வழிவந்த தண்டமிழ்ப் புலவர்களாலும், வேதாந்த நெறியைப் பேரறிவு துலங்க முன்னெடுத்துச் சென்ற தமிழ் நாட்டு வேதாந்திகளாலும் பொலிவு பெற்றவையாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment