Saturday, January 18, 2020

சாத்திரங்கள் பற்றிய கல்வி

The Eternal Values for a Changing Society - என்று ஒரு நூல் சுவாமி ரங்கநாதாநந்தா எழுதியது. நூல் ஒரு புறம் இருக்கட்டும். அதன் தலைப்பு மிகவும் அர்த்தம் உடையது. மாறாத தத்துவங்கள் - சுருதி, வேதாந்தம் என்றால், Eternal Values மாறும் சமுதாய நெறிகள் - தர்ம சாத்திரங்கள், ஸ்ம்ருதிகள், மனிதர்களாக முடிவு செய்து ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்புகள். Changing Society. நாம் கூறும் மாறாதது, மாறுவது என்ற கருத்தோடு அமைந்த தலைப்பு. ஹிந்து மதத்தில் தெய்வம், தெய்வத்தின் சம்பந்தப்படாத வெறும் புற உலகம் என்று சொல்வதில்லை. காரணம் உள்ளும், புறமும் நிறைந்து, வியாபித்து இருப்பதுதான் தெய்வம். அனைத்தின் உள்ளும் இருப்பவர் அவரே; அனைத்தையும் கடந்தும் இருப்பவர் அவரே என்பதைக் குறிக்கத்தான் கடவுள் என்கிறோம்.

ஆனால் மாறுகின்ற தன்மையே நிறைந்து காணப்படும் இந்த உலகில், அனைத்துப் பொருட்களிலும் அவரே நிறைந்து உள்ளார் என்று எப்படிச் சொல்வது? அவரோ மாறுதல், மறைதல், தேய்தல், வளர்தல் போன்ற விகாரங்கள் எதுவும் இல்லாதவர். அப்படி இருக்கும் பொழுது பொருட்களின் உள்ளே அவர் இருந்தால் அவரும் மாறி, மறைந்து அனைத்து விகாரங்களுக்கும் ஆளாக மாட்டாரா? அவரும் பொருள்களில் ஒரு பொருளாக இருந்தால் நிச்சயம் இந்த விகாரங்களுக்கு உள்ளாவார். ஆனால் இவ்வாறு பொருள்களின் விகாரங்கள் எதற்கும் ஆட்படாததாயும், அனைத்துப் பொருட்களையும் தன்னுள் கொண்டதாயும், அனைத்துப் பொருட்களின் உள்ளே இருப்பதாயும் உள்ளவர் என்ற காரணத்தால்தான் அவரைப் பரம்பொருள் என்று கூறுகிறோம். இங்கு முக்கியமானது என்ன என்றால் பரம்பொருள் ஆகிய தெய்வம் என்பது ஹிந்து மதத்தின்படி எங்கோ உலகை விட்டுச் சம்பந்தமில்லாமல் ஒதுங்கி விண்ணுலகில் எங்கோ இருப்பது மட்டுமன்று. இந்த அனைத்து உலகினுள்ளும் உள்ளுயிராய் நிற்பது. ஒவ்வொரு பொருளினுள்ளும் உள்ளுயிராய் இருப்பது. உயிருக்கு உள்ளே உயிராய் நின்று நிலவுவது.

அப்படியென்றால், மாற்றங்கள் எதில் நடக்கிறது? பரம்பொருள் அனைத்தின் உள்ளே நின்று நிலவினாலும் அதனிடத்தில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. எப்படி இதைப் புரிந்துகொள்வது? நமது உடலிலுள் உயிர் இருக்கிறது. ஆத்மாவாக நாம் இருக்கிறோம். பிறக்கிறோம்; வளர்கிறோம்; மாறுகிறோம்; இவ்வாறு மாறுவது எல்லாம் யார்? உண்மையில் நாமா? நாம் மாறிப் போயிருந்தால் அன்று இருந்த நாம் இன்று இருந்து பேசுவோமா? நான் அப்படி இருந்தேன்; இப்படி மாறினேன் என்று இவ்வளவு மாற்றங்களுக்கு உள்ளே மாறாமல் ஒருவனாய் உள்ளே இருந்துகொண்டு பேசுகிறோமே, நினைத்துப் பார்க்கிறோமே அந்த ஜீவன் தான் நாம். அப்பொழுது நம் உடலை எடுத்துக் கொண்டாலே மாற்றங்கள் இந்த உடலுக்குத்தானே ஒழிய இந்த ஆத்மாவிற்கு அல்ல என்பது புரிகிறது. அது போல் உலகில் மாற்றங்கள் இயற்கைக்குத்தானே ஒழிய, உள்ளே நிலவும் பரம்பொருளுக்கு அல்ல என்பது புரிகிறதல்லவா? எனவேதான் ஹிந்து மதத்தின்படி தெய்வ சம்பந்தமில்லாத பொருளே உலகில் கிடையாது.

'அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி, அருளொடு நிறைந்தது எது?'

என்று ஸ்ரீதாயுமானவர் பாடுவதும் இதனாலேயே.

'திடவிசும்பு எரி வளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்'

என்பது நம்மாழ்வாரின் அருளிச்செயல். எனவே மாறாதது ஆன்மிகப் பொருள்கள்; மாறுவது இயற்கை என்பது ஹிந்து மதத்தின் ஆணிவேரான கருத்து.

இன்னொன்று மாறாதவை சுருதிகள். மாறுபவை அறநூல்கள். வேதாந்த தத்துவத்தை விளக்குவதில் துணை புரிபவை புராணங்கள். மாறாத உண்மைகளைக் கூறும் ச்ருதி வேதாந்தம் என்பதற்கு முரணாக ஸ்ம்ருதிகள், புராணங்கள், இதிகாசங்களில் ஏதேனும் சொல்லப்பட்டால் அது சான்றாகக் கருதப்பட மாட்டாது. வேதாந்தத்திற்கு முரணில்லாது இருந்தால்தான் எந்தத் துணை நூல் கருத்துகளும் சான்றாகக் கொள்ளப்படும். முரண்போல் தோன்றி உண்மையில் முரணாகாத அம்சங்கள் இருந்தால் அவைபற்றி நியாயம், வியாகரணம், மீமாம்ஸை ஆகிய துணைக் கல்விகளின் உதவிகொண்டு தர்க்கத்தினால் முடிவு செய்யப்படும். Reason and Debate are used as subservient to the main authority of Sruti. பரம்பொருளைப் பற்றி அறியும் விஷயத்தில் சாத்திரம் மட்டும்தான் எதையும் சாராத சுதந்திரமான சான்று நூல். மற்ற அறிவு ப்ரமாணங்களால் அடைய முடியாத ஒன்றைத்தான் சாத்திர ப்ரமாணமானது தெரிவிக்கும். இந்தச் சொல்லான 'ப்ரமாணம்' என்பது என்ன?ப்ரமாணம் -- என்றால் அறிவைப் பெறும் நெறி.

ஒரு பாத்திரம் இருக்கிறது. அது இருக்கிறது என்பதை எப்படி அறிகிறோம்? கண்ணால் பார்த்து அறிகிறோம். அப்பொழுது பாத்திரம் பற்றிய அறிவு நமக்கு எதன் மூலம் ஏற்பட்டது? கண்பார்வை என்பதால். அதாவது ப்ரத்யக்ஷம். அக்ஷம் என்றால் கண். கையால் தொட்டுப் பார்த்தாலும் பாத்திரம் என்று ஓரளவிற்குத் தெரிய வருமே. வண்ணங்கள் வேண்டுமானால் கண்களின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஆம். ப்ரத்யக்ஷம் என்பது கண்பார்வையை மட்டும் குறிப்பதில்லை. ஐம்புலன்களுக்கும் சேர்த்துத்தான் symbolic ஆன பெயர். ப்ரத்யக்ஷம் என்று சொன்னால் ஐம்புலன்கள் மூலம் என்று பொருள் கொள்ள வேண்டும். அந்தந்தப் பொருளைப் பொறுத்து எவ்வளவு புலன்கள் எனபது வேறுபடும். எந்த விஷயத்தில் ஐம்புலன்களால் பெறும் அறிவு பயன்படாதோ அந்த விஷயமான பரம்பொருள் விஷயத்தில் மட்டுமே சாத்திரம் என்பது ப்ரமாணம். இதுதான் ஹிந்து மதத்தின் அறிவு நெறிக் கோட்பாடு.

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று பெரிய புராணம் கூறியதும் உணர்க.

'என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து' என்பது சடகோபனின் தீர்ப்பு.

சான்று நூல்களில் விவாதங்கள் வந்தாலோ, உலகியலில் இதுவா அதுவா என்று ஐயம் எழுந்தாலோ என்றென்றும் அளவுகோல் அறிவு நெறியே என்று கூறுகிறது வேதாந்தம். எனவேதான் ஹிந்து மதத்தில் அறிவு நெறிப் பயிற்சி என்பது மிக மிக மிகவும் முக்கியம். எனவேதான் பண்டைய கல்வி முறையில் வேதாந்தம் கற்கும் முன் ஒருவர் இலக்கணமாகிய வ்யாகரணம் நன்கு கற்க வேண்டும். லாஜிக் என்னும் நியாய சாத்திரத்தை நன்கு கற்க வேண்டும். பிறகு ஒரு மூலப் பனுவலில் இருக்கும் வாக்கியங்களை எப்படி முரண்பாடின்றிப் பொருள் கொள்ளுவது, இரண்டு சான்று நூல்களுக்கு நடுவில் முரண்பாடு ஏற்பட்டால் எப்படி எந்த விதிமுறைகளைக் கைக்கொண்டு தீர்த்துக் கொள்வது என்பதை போதிக்கும் மீமாம்ஸா சாத்திரத்தை நன்கு கற்க வேண்டும். இந்த மூன்று சாத்திரங்களை நன்கு கற்ற பின்னரே ஒருவர் வேதாந்த சாத்திரத்தைக் கற்க முடியும். அறிவைப் புறக்கணித்துத் தன் அடிப்படையை எழுப்பவில்லை ஹிந்து மதம். அறிவு நெறிகளை முற்ற முழுக்கப் பயன் கொண்ட பின்னரே ஹிந்து மதம் என்பது தொடங்குகிறது. தான் கொள்ளும் சான்று நூல்களிடையே முரண்பாடுகள் தோன்றினால் அறிவின் துணையைக் கைக்கொள்வது என்பது மட்டுமின்றிப் பொதுவாகவே மதங்களிடையே ஏற்படும் பிணக்கங்களையும், இந்த மதக்கருத்து சரியானதா அன்றா? உலக வாழ்க்கையின் சம்பந்தப்பட்ட அம்சத்தில் ஒரு மதம் கூறும் கருத்து முக்கியமா? அன்றேல் அறிவினால் பெறும் கருத்து முக்கியமா? என்றபடியான சூழ்நிலைகளிலும் அறிவுதான் ஒரே பொது தீர்ப்பு என்கிறார் விவேகாநந்தர். அவ்வாறு அவர் சொல்லும் போது வேதாந்தத்திற்கு முரணாகவோ அன்றி வேதாந்தம் கருதாததைப் புதுமையானதாகவோ சொன்னார் என்பது கிடையாது. வேதாந்தத்தின் அறிவு நெறிக் கோட்பாட்டின் படியான கருத்தைத்தான் விவேகாநந்தர் உலக மதங்களிடையேயும் மனித சமுதாயத்தினரைக் கைக்கொள்ளுமாறு கூறுகிறார்.

வேதாந்தம் தன்னுடைய கருத்துகளை அப்படியே நம்பி, எந்தச் சிந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள் என்று சொன்னதாக எங்குமே காணமுடியாது. மாறாக, தான் கூறும் முடிவுகளை நேரே காண்பதுதான் ஒரே நிரூபணம் என்கிறது. எப்படிக் காண்பது? அந்தக் காட்சி என்பது எத்தகையது? இதுதான் ஹிந்து மதத்தின் மொத்த பயிற்சியின் நோக்கமே. தான் தன்னில் தன் உணர்வில் கண்கூடாக அடைவது என்ற அனுபூதி என்ற நிரூபணத்தைத்தான் அடிப்படையாய்க் கொண்டு எழுந்தது. அன்று மட்டும் அன்று. இன்றும் ஒரு நரேந்திரன் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று, 'நீங்கள் அடைந்தால் போதாது; நான் என்று அந்த அனுபவத்தை அடைவேனோ அன்றே எதையும் ஒப்புக்கொள்வேன்' என்று சொன்ன நம் காலம் வரை இந்த நிலமைதான். ஆனால் இந்த அனுபவம் என்பது என்ன? நம் வாழ்வின் அன்றாட அனுபவத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அனுபவிக்கும் நான் என்பது என்ன ஆகிறது? இந்தக் கேள்விகளையெல்லாம் மிக விரிவாக அக்கு வேறு ஆணி வேறாக அலசி வைத்து விடுகின்றன வேதாந்த விரிவுரைக்கு மேல் விரிவுரை நூல் பெருக்கமும், வேதாந்த விளக்க நூல்களின் பெருக்கமும்.

நம் முன்னோர்கள், அவர்கள் ரிஷிகளாகட்டும், வித்வான்கள் ஆகட்டும், அரசர்கள் ஆகட்டும், பெரும் வணிகர்கள் ஆகட்டும், சிற்பிகள் ஆகட்டும், மறவர்கள் ஆகட்டும், உழவர்கள் ஆகட்டும், தெருக்கூத்துக் காரர்கள் ஆகட்டும், பெரும் நாட்டிய நிபுணர்கள் ஆகட்டும், ஓவியம் வல்லார் ஆகட்டும், கோபுரம் கட்டிய பெரும் தொழில் வல்லுநர்கள் ஆகட்டும், கூலிவேலை செய்து உழைத்த மக்கள் ஆகட்டும் - அனைத்துத் தரப்பினரும் இந்த மிகச் சிறந்த வேதாந்த ஞானத்தைப் பலவிதங்களிலும், இந்த ஆன்மிக அனுபூதியை எந்த எந்த விதங்களில் எல்லாம் முடியுமோ அந்தந்த விதங்களில் எல்லாம் மக்கள் சமுதாயத்திற்கு, அனைத்து நிலைகளிலும் கொண்டு சென்ற வண்ணம் இருந்தனர். எப்படி? புராணங்களாக, காவியங்களாக, கதைப் பாடல்களாக, கூத்துகளாக, கோலாட்டங்களாக, நாடகங்களாக, பொழுது போகப் பாடப்படும் மக்கள் இசைகளாக, கோயில் உற்சவங்களாக, அரசியல் கோட்பாடுகளாக, வாழ்வின் போதனைகளாக, ஓவிய விற்பன்னங்களாக, வாழ்வியல் சடங்குகளாக, வழிவழிக் கதைகளாக -- அவர்களின் தன்னம்பிக்கை நிச்சயம் நமக்கெல்லாம் பெரும் முன்னுதாரணமாக நிற்பது. மிகச் சிறந்த நுட்பமான ஆன்மிக ஆழம் வாய்ந்த கருத்துகளை அவரவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பான வடிவங்களில் கொண்டு சென்றார்கள் என்பது உலகின் கல்வி உலகமே இது வரை நினைத்துப் பார்க்க முடியாத விந்தை.

***

No comments:

Post a Comment