ஸ்ரீகம்பராமாயணம், உத்தரகாண்டத்தில் இந்திரன் துதி என்று வருகிறது. அதில் பொதிந்திருக்கும் தத்துவக் கருத்துகளைக் கவனம் கொள்ளுதல் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
இந்திரன் துதிக்கத் தொடங்கு முன்னர் திருமாலின் யோக நித்திரை நிலை விவரிக்கப் படுகிறது.
”ஆழியும் சங்கும் சாபமும்
வாளும் அடல்பெருந்தண்டும் இவ்வைந்தும்
சூழவும் வந்து நின்றுமெய் காப்ப
சுவணனும் சுற்றுவந்து உலாவ
பாழியா அனந்தன் யோகத்தில் அவன் தன்
பணங்கள் ஆயிரங்கொடு கவிப்ப
ஊழி ஆயிரங்கள் ஒருகணம் ஆக
யோக நித்திரை உகந்தானை
இன்னதன் மையனாய் இந்திரை கொழுநன்
யோகநித்திரை செயும்காலை
முன்னை வானவர்கள் தானவர் முனிவர்
முதலினோர் மூண்டு எழு பயத்தால்
என்னது ஆகுங்கொல் இவன்திரு வுள்ளம்
என நினைந்து யாவரும் நிற்க
அன்னவன் குணந்தான் அறிந்தன எல்லாம்
அமரர்கோன் அறையலுற்றனனால்”
இந்திரன் துதி தொடர்கிறது -
’உலகினை எல்லாம் படைத்து அளித்து அழித்தும்
உண்டு உமிழ்ந்து அளந்து இடந்து ஆண்டும்
நிலையுடை வானாய் வாயுவாய் கனலாய்
நீரொடு நிலனுமாய் எண்ணில்
தொலைவுஇலா உயிராய் சுடர்களாய்த் தோன்றாச்
சுருதியாய் சிவன் அயன் ஆகி
அலகு இலா விளையாட்டு ஆடுவாய் அகண்டம்
ஆயினாய், யார்உனை அறிவார்? ’
தோன்றாச் சுருதியாய் - இந்தப் பதப் பிரயோகம் மிகவும் கருத்துடையது. இவ்வளவும் சொல்லிவிட்டு ‘தோன்றாச் சுருதியாய்’ என்று போட்டிருப்பதன் நயம் அறிந்து இன்புறத் தக்கது. வேதம் பரம்பொருளை த்ருச்யம் அன்று என்று முடிவு கட்டுகிறது. நம்மையோ ‘அந்த ஆத்மாவையே ஒருவன் காண வேண்டும்.’ என்று ஊக்குவிக்கிறது. நாம் பொருட்களைக் காண்பது போல் காணமுடியாது பரம்பொருளை.
‘பிறிவு இலா உயிரும் உடலும் வாசகத்துப்
பேர்கலாப் பொருளும் ஆங்கு எனவும்
வெறியுலா மலரும் எள்ளும் எண்ணெயும் போல்
விரிந்த அப் பொருள்களின் மேவிக்
கறுவிமேல் முயலும் காரியம் ஆகிக்
கண்ணுமாய்க் கருத்தது ஆகி
அறிவும் ஆய் அறியப் படுவதாய்
அறிவான் ஆயினாய் ஆர்உனை அறிவார்? ’
‘உறப்பெரிது உணரின் உருவமாய் அருவாய்
உளவுமாய் இல்லையும் ஆகி
பிறப்பு இலி ஆகி, பிறத்தி நீ! ஆண் பெண்
அலி எனப் பேசவும் படாதாய்!
மறப்பகை ஒன்றும் இன்றியே என்றும்
வலிகொள் பஞ்சாயுதம் எடுத்தி;
அறச்சிலுகு உடைத்து நின்திறம் உரைக்கின்
அச்சுதா! யார் உனை அறிவார்? ’
ஆண் பெண் அலி எனப் பேசவும் படாதாய் -
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன் (ஆழ்வார்)
’கனல்துறை நிற்றி அந்தணர்க்கு; உள்ளம்
கசிந்து கண்ணீர்சொரி பத்தர்
இனத்தொடு நிற்றி ஏவல் செய்து; ஒழிந்தோர்
யாவர்க்கும் ஆசையின் நிற்றி;
மனத்திடை நிற்றி, யோகியருக்கு;
மாசுஅறு தூய ஞானிகட்கும்
அனைத்தினும் நிற்றி, ஒருவழிப்படாத
அநந்தனே! யார்உனை அறிவார்?
ஒருமுதல்ஆகி, கவடுமூன்றுஆகி
உயர்பெருஞ் சாகைகள் பலஆம்
தருஎன நின்றாய், தலைபுலை தெரியாச்
சமய நூல் யாவையும் தந்தாய்;
அருவினை ஆகி அருவினைப் பயனாய்
அருவினை அனுபவிப் பவனாய்
அருவினை ஆக்கி, அருவினை அறுக்கும்
அற்புதா! யார்உனை அறிவார்? '
உள்ளம் கசிந்து கண்ணீர் சொரி பக்தர் குழாங்களோடு ஏவல் செய்து நிற்கிறது அந்த பரம்பொருள் ! - என்ன கருத்து!
‘பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன்’ - நம்மாழ்வார்.
பாடியது யாரோ? ஆனால் எவ்வளவு தோய்ந்த கருத்துகள் !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment