Wednesday, January 29, 2020

மனத்தில் கள்ளம் 4

மனித மனத்தின் வக்கிரத்தனம் போல் புதிரானது எதுவுமில்லை. ஒரு பெரிய ஓவியக் கண்காட்சி. பெரும் ஓவியங்கள், பல வண்ணங்களில் திகழ்கின்றன. பொதுமக்கள் அனைத்தையும் பிரமிப்புடன் பார்த்து மலைத்துப் போய் மகிழ்கின்றனர். ஓரிடத்தில் வண்ணக் கீற்றுகள் முயங்கும் சித்திரம். அது என்ன என்று தெரியவில்லை. ஆனாலும் எதையோ அது சொல்ல வருவது போல் ஒரு யத்தனம் அதில் தொனிக்கிறது. இன்னொரு ஓவியத்தில் அப்படியே தத்ரூபம். ஆனாலும் அது இல்லை என்றபடி ஒரு வித்யாசம். மக்கள் தோய்ந்து பார்க்கும் அந்தக் கூடத்தில் ஒருவர் இழவு வீட்டில் எதையோ பறிகொடுத்தவர் போன்று வெறித்துப் பார்த்தபடியே இரண்டு ஓவியங்களுக்கு இடையில் இருக்கும் வெற்றுச் சுவரைப் பார்த்தபடி, அதுவும் ஏதோ உன்னிப்பாகக் கவனிப்பவர் போல் முறைத்துப் போகிறார். சட்டென்று பார்த்தால் இவர்தான் அந்தக் கட்டடத்தைக் கட்டிய மேஸ்திரியோ என்று சந்தெகம் வருகிறது. அவர் ஏன் அந்த ஓவியங்களுக்கிடையில் வந்தார், ஏன் இப்படி எதையுமே காணாமல் உள இயல் நோய் பிடித்தவர் போல் சம்பந்தமே இல்லாமல் வெற்றுச் சுவரைப் பார்க்கிறார், ஏன் இவர் அநுபவிக்க அந்த ஓவியங்களில் அம்சங்கள் எதுவும் இல்லையா என்று பார்ப்பவர் எண்ணினாலும் அவருக்கும் மகிழ்ச்சி என்பதற்கும் சம்பந்தம் இல்லையோ என்றுதான் படுகிறது.

ஏதோ நல்ல வேளை இருந்தால் யாராவது அவரைப் பார்த்து, ‘என்னங்க.. நீங்க இங்க வந்திருக்கீங்க...’ என்று ஒரு வேளை சொல்லக் கூடுமெனில், அப்பாடா அவருக்கு அப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதி. ‘இல்லை ஏதோ ஓவியம் கண்காட்சின்னு சொன்னாங்க... அதான்’. அதற்கு மேல் யாரும் பேசாமல் இருந்தால் நல்லது. தவறிப் போய் அவரிடம், ‘என்ன... பல ஓவியங்களைக் கண்டு களித்தீர்களா...’ என்று ஏதோ பேச்சுக்காகக் கேட்டு விட்டாலும் போச்சு... சனிதான்,..... ‘இல்லை... அதான் தேடிண்டு இருக்கேன். ஓவியம் எங்க என்று’ - இந்த டயலாக் சொல்வதற்கென்றே தாம் இவ்வளவு நாள் உயிர் சுமந்து அலைந்தது போன்ற கிளப்பல் எகத்தாளத்துடன் மொத்த ஹாலையும் அப்படியே 250 டிகிரி ஸ்கேன் ஒன்று செய்வார். அதாவஃது அவருடைய அந்த லைட் ஹௌஸ் ஒளிவட்டப் பார்வையில் அத்தனை ஓவியங்களும் அப்படியே பரிதாபமாக கீழே விழுந்து நொறுங்கி, ஏனடா முதலில் காட்சியில் ஏறினோம் என்று நொந்து கொள்வது போல் ஒரு ஜோடனை அநேகமாக அவர் மனத்திலாவது ஓடும். அந்த மில்லியன் டாலர் கணத்தைத் தனக்குத் தந்தமைக்காக அந்தக் கேள்வி கேட்ட நபருக்கு ஒரு கவனிப்பான பார்வையை நாட்டி அருள்வார்.

பார்க்கின்ற நமக்குத் தோன்றும். என்ன இது! இவருக்கு இத்தனை ஓவியங்களில் பார்க்க எதுவும் இல்லையா.. அதுவும் ஓவியம் எங்கே என்று தேடுகிறேன் என்கிறாரே.... அப்படி என்றால் இவையெல்லாம்.... நீங்கள் கொஞ்சம் உஷாரான ஆள் என்றால் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு புதிரான மனநிலையை உங்களிடம், பார்ப்பவர்களிடம் தோற்றுவிப்பது ஒன்றுதான் அவருடைய செயல்களின் பொருளே ஆகும். அதாவது ஓவியங்களைக் கண்டு பாராட்டி, வியந்து பலர் சென்றிருப்பார்கள். சாதாரண மக்களும் வியப்பார்கள். தாமும் எதையாவது கண்டு வியந்து விட்டால் பின்னர் தன்னை எப்படித்தான் பிறர் வித்யாசமாகத் தனிப்பட கவனிப்பார்கள்? அதற்காக இப்படி ஒரு உல்டாவைத் தூக்கிப் போடுவார். பார்க்கப் போனால் அவருக்கு ஓவியத்தைப் பற்றியே சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்ததை விட ஒன்றும் பெரிதாக எதுவும் தெரியாமல் இருக்கும். ஆனால் இப்படி உல்டாவாக அவர் அடித்து விட்டதும் அவரை எல்லாரும் பெரிய வித்வரிஷ்டர் நிலைக்குக் கொண்டு போய் விடுவார்கள். ‘அவரே சொல்லிட்டார்னா அப்பறம் என்ன’ ‘அவர் சொல்லணும்.... என்னன்னு’ இப்படியே பில்டப் கொடுத்துப் பழகிய வழக்கங்கள் ஆரம்பித்து விட்டால் அப்பறம் ஒ ரு சின்ன சைஸுக்காவது ஒளிவட்டம் ஒன்று அவர் கூடவே ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும். அதற்கு அப்புறம் அவருக்கு ஜாலி. அவர் எதையும் பற்றி எதையுமே தெரிந்து கொள்ள வேண்டாம். எல்லாம் தெரிந்தால் போல் அஸ்துகொட்டத்தான் அவர் கையில் வழி இருக்கிறதே... அப்படியே சொல்லியும் சொல்லாமல் பட்டும் படாமல்....சமயம் பார்த்து கருப்பு இங்க் அடிப்பது எப்படி என்று மட்டும் தெரிந்தால் போதும். பெரிதாக ஒன்றும் தெரியாதவர் மேதையாக ஆகிவிடுவார்; அதுவும் மற்றவர்கள் எல்லாம் அவர் ஏதாவது குத்தம் கொனஷ்டையாகவேனும் ஏதாவது சொல்ல மாட்டாரா என்று ஏங்கும் ஒருவராக.....

ஓவியம், சிற்பம் போன்ற கலைத் துறைகளில்தான் இப்படி என்று இல்லை. எழுத்துத் துறையிலும் இது போன்ற வெறும் கையில் முழம் போடும் அட்டகாசங்கள் வளைய வருவதுண்டு. பலரும் பல விதங்களிலும் மிக முயன்று பல விஷயங்களைத் தேடி எடுத்து அருமையான முயற்சிகளாக எழுதுவார்கள், கட்டுரைகளாக, புதினங்களாக, சிறுகதைகளாக, பெரும் ஆய்வுகளாக. ஆனால் கருப்பு இங்கி தெளிக்கும் கலையை மட்டும் கற்ற வெறுங்கை முழ மேதையார் அங்கும் வருவார். எழுதியவர் எங்கோ ஒரு க் அல்லது ச் என்பதை விட்டிருப்பார். அல்லது ஒரு தகவல் பிழையாக இருக்கும். அல்லது ஒரு பெயரைத் தவறாகச் சுட்டியிருப்பார். அவ்வளவுதான் இந்த ஒட்டுண்ணி ஆசாமிக்குப் பெரிய லாட்டரியே அடிச்சது போன்ற குஷி பிறந்துவிடும். அதை மட்டும் தனியாக எடுத்து - இது தவறு - என்று காட்டிவிட்டு அவர் அடையும் இன்பத்திற்கு எல்லையே இருக்காது.

அதாவது நேரடியாக உயிர்வாழும் ஜீவன்கள் இயற்கையில் என்றால், அந்த ஜீவன்களில் சார்ந்து அவை தவற விடும் நேரம் பார்த்து அவற்றின் உயிர்சாரத்தை உறிஞ்சி வாழும் ஜந்துக்களும் உண்டுதானே! அது உயிரியலாய் இருந்தால் என்ன, அல்லது கலைகள், எழுத்து துறைகளாய் இருந்தால் என்ன? ஒரு தவறாவது சிக்காதா என்பதுவே நோக்கமாக ஆனால் வாழ்க்கை இழந்து போகுமே என்பது உயிர்வாழும் ஜீவன்களின் கவலையாய் இருக்கலாம், ஆனால் உயிர்ச்சாரத்தின் உண்ணிகளாய் வாழும் ஜந்துக்களுக்கு அது கவலை இல்லையே! ஆனால், தவறுகளைச் சுட்டிக் காட்டி அதனால் செம்மை கூட வேண்டும் என்று அனைவருக்கும் இருக்கும் அக்கறை என்பது வேறு. அது வாழ்க்கை இயல்போடு கலந்தது. அதையும் இதையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. 

***

No comments:

Post a Comment