Tuesday, January 14, 2020

மொட்டை மாடி

கல்லூரிக் காலங்களில், என் கற்றல் பொழுதுகளை இந்த மொட்டை மாடியில்தான் கழித்திருக்கிறேன். பின்னர் நண்பர்களுடன் பல அரட்டைப் பொழுதுகளையும், சூடான விவாத காலங்களையும் சாட்சியாய் நின்று ரசித்தது இந்த மொட்டை மாடிதான். வெகு மும்முரமாகப் போகும் ந்யூக்கிளியர் ஃபிஸிக்ஸ் படிப்பில் நோட் புக்கின் பின் பக்கத்தில் சம்பந்தா சம்பந்தம் இன்றி அந்த கடும் விஞ்ஞான கணங்களில் பெருகும் கவிதை வரிகளைப் பதிந்ததும் இந்த மொட்டை மாடியில்தான். ஸ்ரீஆதிசங்கரரின் சதுஸ்சூத்ரீ பாஷயம், உபதேச ஸாஹஸ்ரீ, பஞ்சதசி இவையெல்லாம் சூரியனார் உவாத்தியத்தில் ஓர் ஒண்டு நிழலில் படித்து முடித்ததும் இந்த மொட்டை மாடியில்தான். சமயத்தில் காலம் எப்படிப் பயணிக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதற்காக இரவு 8 மணி தொடங்கி அப்படியே உட்கார்ந்த நிலையில் காலை 6 மணி வரை விழித்திருந்து பார்த்துக் கொண்டிருந்ததும் இந்த மொட்டை மாடியில்தான்.

அதாவது நிலத்தின் அன்றாடக் கவலைகளில் புதையாத மனத்தேர் ஓரடி நிலத்தை விட்டு மேலே பறந்து கொண்டிருக்கும் தேவயானம் இந்த மொட்டை மாடி. இதற்கும் கூரை உண்டு. பிரபஞ்சத்திற்கு என்ன கூரையோ அதுதான் இதற்கும் மேற்கூரை. அதை விண் என்று உங்கள் லோக பாஷையில் நீஙகள் சொன்னால் என்னிடம் அதற்கு ஜவாப் இல்லை. மண்ணில் ஒரு காலும், விண்ணில் ஒரு காலும் வைத்துக்கொண்டு கூத்தாடும் பிழைப்பும் இல்லை இது. அதான் சொன்னேனே! நிலத்தை விட்டு என்றும் ஓரடி மேலேயே சஞ்சரிக்கும் ஒரு வித பச்சையான அமானுஷ்யம். சமயத்தில் வானம் தன் கொசுவத்தை நீவிக்கொண்டே கதை சொல்லும். மண்ணும் அவ்வப்பொழுது தன் ஒலி வீடுகளை அனுப்பும். எதையும் சட்டை செய்வதோ, தட்டி விட்டுவிட்டு உச்சி வானின் ஓலை எழுத்துகளில் ஒளிந்த செய்திகளைப் படித்துக் கொண்டிருப்பதோ அந்த அந்த நேரத்து மனோ தர்மம். இந்த மொட்டை மாடியைப் பாடியதால்தான் திருலோக சீதாராம் கவிதைகளை எனக்குப் பிடித்துப் போயிற்று.

மச்சு வீடுதான்.
மாடியில் கூரை இல்லை.
எனினும் இருள்வான் உண்டே!
உச்சியில் கொடுங்கை
உளுத்துக்கொட்டும்
உள்ளத் தினவின் ஒளித்துகள்;
அவற்றை ஒத்தி எடுத்து
ஒன்றாய்த் திரட்டி
ஒற்றைத் தெருவின் மூலையில்
நின்று கத்தினால்
தணியாக் காமமும் கள்ளும்
கள்ள விலைக்குக் கவிதை கொசுரும்
வாங்கிடும் புண்ணியவான்கள்
யாரும் வரலாமன்றோ!

என்று 1970ல் அவர் பாடிக் கேட்ட ஞாபகம் நாமக்கல்லில். பத்து வயதுச் சிறுவனாக, பாரதி பற்றிய சொற்பொழிவு என்னுடையது அவர் தலைமையில், இன்னும் பல பேச்சாளர்களுடன். இப்பொழுது நினைத்தால்தான் பிரமிப்பாக இருக்கிறது, அவரோடு நான் உட்கார்ந்திருந்தேனா என்று. ஆனால் அன்றோ என்னோடு அவர் உட்கார்ந்திருக்கிறார் என்று நினைப்பு. அதனாலேயே எனக்கு அஹங்காரத்தைக் கண்டால் பிடிக்கும். அது நம்மீது அமர்ந்து கொண்டு சவாரி செய்தால்தான் தொல்லை. நாம் அதன் மீது அமரத் தெரிந்து கொண்டு விட்டால் சர்வ உலகங்களையும் சுற்றலாம். என்ன அவ்வப்பொழுது தன்னைக் கண்டு தானே மிரளும். அப்பொழுது மட்டும் கொஞ்சம் சுதாரிக்க வேண்டும். மற்றபடி நல்லதொரு விமானம்தான். ஏனெனில் அது ஒன்றுதான் நம்மிடம் இருக்கிறது. இருப்பதை அனுசரித்து ஓட்டிப் பழகுவது உத்தமம் என்று ஒரு சமயம் மொட்டை மாடிக்கு, தான் போகிற வழியில் வந்து அமர்ந்த ஆஸ்திரேலிய தேசத்திலிருந்து புத்த பிக்ஷுவாக ஆகிப்போன ஒரு பறவை இளைப்பாறும் கணத்தில் எனக்குச் சொன்ன ரகசியம்.

பாருங்கள் மொட்டை மாடிக்கு வந்து உட்கார்ந்த பின்னர்தான் ரகசியங்களைச் சொல்கிறேன் பாருங்கள். இன்னும் எவ்வளவோ ரகசியங்கள் இருக்கின்றன. கோடி மரத்து அணில் பிள்ளை சொன்ன ரகசியம் உங்களுக்குத் தெரியாதல்லவா? பொறுங்கள் அப்புறம் சொல்கிறேன். மொட்டை மாடி என்றதும் கவிதைதான் ஆவிவந்தது. இதில் என்ன தொந்தரவு என்றால் அந்தப் பனைமரத்துக் காக்காய்க்குக் கவிதை என்றால் உயிர். ஏதாவது கவிதை சொல்லேன் என்று சொல்லும். சரி என்று சொன்னால் ஒரு மாதத்திற்கு அந்தக் கவிதையையே கா கா என்று சொல்லிப் பிராணனை வாங்கும். அதான் யோசிக்க வேண்டியிருக்கிறது. பார்ப்போம்.

***

No comments:

Post a Comment