Saturday, January 25, 2020

Hindu Polity

பண்டைய பாரதத்தின் வரலாறு என்பதைப் பலரும் சிந்தித்துப் பார்த்திருக்கலாம். ஆனால் பண்டைய பாரதத்தின் அரசியல் சட்ட ரீதியான வரலாறு என்பதை எத்தனை அறிஞர்கள் அன்று சிந்தித்திருக்கக் கூடும்! ஏனெனில் அரசியல் சட்டம் என்பதே நவீனம், மேற்கு கிழக்குக்குத் தந்த கொடை என்றெல்லாம்தானே நினைத்திருக்கத் தோன்றும். பண்டைய காலத்தில் சட்டம் என்பது என்ன தெய்விக நூல்களில் ரிஷிகளால் சொல்லப்பட்டு என்றும் மாறாத சநாதன தர்மங்களாகத்தானே இருந்திருக்கும். நடுவில் சில மாற்றங்கள் மீண்டும் அதே மாறா நியதி. அவ்வளவுதானே - என்று நினைத்தவர்கள் மத்தியில் பண்டைய பாரதத்தின் அரசியல் சட்டம் என்பதையும், அது எப்படிக் காலத்துக் காலம் மாறியது என்பதையும் ஆழ்ந்த ஆய்வுகளின் பலனாக அறிவுலகம் மெச்ச நிறுவியவர் டாக்டர் காசி ப்ரசாத் ஜெயஸ்வால். 1881ல் மிர்ஸாப்பூரில் பிறந்தவர். 1937ல் அவரது மறைவு.

சிறு வயதில் அவரது தந்தை சாஹு மஹாதேவ ப்ரசாத் அவரை லண்டன் மிஷன் ஹைஸ்கூலில் படிக்க விட்டாலும், சம்ஸ்க்ருதக் கல்வியை வீட்டிலேயே ஹண்டியாபாபா என்னும் சாதுவிடம் கற்க வைத்தார். வாழ்வின் கடைசி வரை சாதுவிடம் கற்ற வடமொழிக் கல்வியை நினைத்து மிகவும் நன்றி பாராட்டினார் ஜெயஸ்வால். காரணம் மூல நூல்களின் உள்ளே நெடுகப் போகும் சௌகரியம் அவருக்கு இந்தக் கல்வியால் மட்டுமே கிடைத்தது. 1906ல் 25 வயதில் இரு குழந்தைகளுக்குத் தந்தையான நிலையிலும் ஜெயஸ்வால் இங்கிலாந்திற்குப் பயணமானார் மேல்படிப்பிற்கு. அங்கு சியாம்ஜி கிருஷ்ண வர்மா, சாவர்கர் போன்ற இந்திய தேசிய புரட்சியாளர்களின் நட்பு கிடைத்தது. மேலும் சிங்கள அறிஞர் பெருமகனாரான டான் மார்ட்டினோ டி சில்வா விக்ரமசிங்கே என்பவரின் நட்பால் ஜெயஸ்வாலுக்கு பண்டைய நாணயங்களை ஆயும் பயிற்சியும், தொல்பொருள் ஆய்வில் திறமையும் ஏற்பட்டன. ஹண்டியாபாபாவிற்குப் பிறகு தனக்குப் பெரும் ஊக்கம் விக்ரம்சிங்கே என்று நினைத்தார் ஜெயஸ்வால். லண்டனில் பெரும் மொழியியல் வல்லுநரான ஜ்யார்ஜ் ஏ க்ரியர்ஸன், வரலாற்று ஆசிரியர் வி ஏ ஸ்மித் போன்றவர்களின் தொடர்பும் கிட்டியது. பண்டைய இந்தியாவின் அரசியல் சட்ட ரீதியான வரலாறு எழுத வி ஏ ஸ்மித் பெரும் தூண்டூக்கமாக இருந்தார்.

1933ல் History of India 150 AD to 350 AD என்ற நூலை எழுதி இந்திய வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்பட்ட காலப் பகுதி உண்மையில் தெளிவுகள் உள்ள ஆவணப்படுத்தப்பட்ட பகுதியே என்று ஆக்கினார். 1934ல் ஒன்பதாம் நூற்றாண்டு பௌத்த காலவிவரண நூலான ஆர்ய மஞ்சுஸ்ரீ மூலகல்பம் என்ற பிரதியை அடிப்படையாகக் கொண்டு அதை விளக்கி An Imperial History of India என்ற நூலை எழுதினார். 1936ல் நேபாலிய வரலாறு 600கிமு தொடங்கி 800 கிபி வரை என்ற நூல். ஜயசந்த்ர வித்யாலங்கார், மஹாபண்டித ராஹுல சாங்க்ருத்யாயன ஆகிய இருவரின் தொடர்பும் அவருக்குப் பெரும் உதவிகளாக இருந்தன. சாங்க்ருத்யாயனரின் தொடர்பால் திபெத்திய நூல்களின் மூலம் தர்மகீர்த்தியைப் பற்றிய முழுமையான தகவல் அவருக்குக் கிடைத்தது.

Hindu Polity, A Constitutional History of India in Hindu Times (Parts I and II), IInd Ed, The Bangalore Printing and Publishing Co Ltd, Bangalore City 1943

1924ல் இந்த நூல் வெளிவந்த போது அநேகமாக அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டதாகக் கூறுகிறார் திரு ஜெயஸ்வால் அவர்கள். நான்கு பகுதிகளாகத் திட்டம் போட்டு நூல் அமைந்திருக்கிறது.

Scheme of the Work
I Introductory: Scope and Sources
II Vedic Assemblies
III Hindu Republics:
IV Hindu Monarchy and Imperialism

அர்த்த சாஸ்த்ரம் என்னும் நூல் கௌடில்யர் எழுதியது. அப்படியென்றால் பொருள் நூலா? எகனாமிக்ஸா? அந்த நூல் நுவலும் பொருளோ அரசியல், ஊரை ஆளும் முறைமை, நாட்டின் நிர்வாகம். திரு ஜெயஸ்வால் சரியாக கௌடில்யர் எந்த அர்த்தத்தில் தமது ’அர்த்த’ என்னும் சொல்லைக் கையாளுகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

Kautilya defines Artha - Sastra - "Artha is human population, that is to say, territory with human population. The Code of Artha (Common-wealth) is a code dealing with the means(art, upaya) of acquisition and growth of that territory.

(மநுஷ்யாணாம் வ்ருத்தி: அர்த்த: மநுஷ்யவதோ பூமி: இதி அர்த்த:, தஸ்யா: ப்ருதிவ்யா லாபபாலன உபாய: சாஸ்த்ரம் அர்த்த சாஸ்த்ரம் இதி)

திரு ஜெயஸ்வாலின் நூல் பண்டைய பாரத அரசாங்க இயலைப் பற்றிய மூல எடுத்துக்காட்டுகள் நிறைந்த பேழை என்று சொல்லத்தகும். முடிவுரையாகக் கூறும்போது திரு ஜெயஸ்வால் கூறுவது -

This is a brief survey, in fact too brief a survey, of a polity which had a free career of at least thirty centuries of history - a career longer than that of all the politics known to history. Babylon probably lived a few centuries longer, but unfortunately Babylon is no more. Against this we have India still existing, and in this respect China - another civil polity - is her only parallel.

The test of a polity is its capacity to live and develop, and its contribution to the culture and happiness of humanity. Hindu polity judged by this test will come out very successfully.

அரசியல் சட்ட அமைப்பின் உள்ளடக்க வடிவ முன்னேற்றம் (constitutional progress) என்பது ஹிந்து அடைந்ததைப் போல வேறு எங்கும் பழைய அரச அமைப்புகளால் அடையப்படவில்லை. அத்துணை பழமை வாய்ந்ததாய் இருந்தும் இன்றும் ஹிந்து உயிர்த் துடிப்புடன் தொடர்கின்றாரே அன்றி காலத்தில் உறைந்த உடற்கல்லாய் (fossil) ஆகிவிடவில்லை. Duncker என்னும் சரித்திர ஆசிரியர் கூறியதற்கேற்ப ஹிந்துவின் தாங்கி நிலைக்கும் ஆற்றல் வளையுமே அன்றி ஒடியாது. ஹிந்துவின் அரசியல் சட்ட அமைப்பின் முன்னேற்ற வரலாற்றின் பொற்காலம் எதிர்காலத்தில் வரவிருக்கிறதே அன்றி வந்து கடந்த காலத்தில் கழிந்து போனதாய் ஆகிவிடவில்லை. -- இவ்வாறு அழகுற சொல்லிச் செல்லும் ஆசிரியர் -

Constitutional or social development is not a monopoly of any particular race.

என்று தமது அரிய நூலை நிறைவு செய்கிறார் டாக்டர் திரு காசி ப்ரஸாத் ஜெயஸ்வால் அவர்கள்.
இந்தத் துறையில் இத்தகைய சான்று வளம் செறிந்த நூல்கள் மிகவும் குறைவு. எனக்கு நினைவுக்கு வரும் இன்னொரு நூல் India in the Vedic Times by Bhargava.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment