பிரமாணம் என்பது Ways and Methods of Knowing அதாவது Epistemology என்னும் பொருளுடையது. ஒரு மதத்திற்கோ, ஒரு சித்தாந்தத்திற்கோ சான்று நூல்கள் யாவை என்பதும் பிரமாணம் என்பதற்குப் பொருளாக ஆகும். பிரமேயம் என்பது அறிவதற்கான சான்று நூல்களைக் கொண்டு, கற்று, நன்கு சிந்தித்து, ஐயம் திரிபற ஒருவர் பெறும் நிச்சயமான திட அறிவு. அந்த அறிவின் பயனாக அவர் கொள்ளும் தீர்மானமான உறுதிப்பாடு என்பதைக் குறிப்பது பிரமேயம் என்பது.
’ச்ருதி ஸ்ம்ருதிர் புராணாநாம் ஆலயம்’ என்று ஸ்ரீஆதிசங்கரரைப் பற்றிய சுலோகம் கூறுகிறது. 'வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே' என்று பிள்ளை லோகாசாரியர் கூறுகிறார். விரிவாகச் சொல்லுமிடத்து சதுர்தச வித்யாஸ்தானங்கள் என்று கூறுவர் பெரியோர். சைவ சித்தாந்தம் பொது ப்ரமாணம் என்று வேதங்களையும், சிறப்பு ப்ரமாணம் என்று சைவ ஆகமங்களையும் கூறுகின்றன. சாக்தம் வேதங்களுடன் சேர்த்து பல தந்த்ரங்களையும் பிரமாண நூல்களாகக் கொள்கின்றன.
ஸ்ரீீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் கூறப்படும் ஆழ்ந்த கருத்தொன்று, பிரமாண ரக்ஷணம், பிரமேய ரக்ஷணம் என்பதாகும். பிரமாணம், பிரமேயம் என்னும் இவற்றைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்பர் பெரியோர். ரக்ஷணம் ரக்ஷணம் என்றால் பாதுகாத்து, வளர்த்து, போற்றிப் பேணுதல். பிரமேய ரக்ஷணம் என்பது கோயிலைப் பாதுகாப்பது. பிரமாண ரக்ஷணம் என்பது சம்ப்ரதாய நூல்களை, மத க்ரந்தங்களைப் போற்றிப் பாதுகாப்பது ஆகும். பிரமாணத்தை எப்படி ரக்ஷிப்பது? உருவெண்ணி, ஓதி, உற்றவர்க்கு ஓதிவைத்து, வாசித்தும், எழுதியும், தெரித்தும் நூல்களை மறைந்து போக விடாமல் காப்பாற்றுதல். பெரிய ஜீயர் காலத்தில் இரவில் பந்தமேற்றி அவரே கைநோகப் படிகள் எடுத்து ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய நூல்களைக் காப்பாற்றினார் என்று படிக்கிறோம். இன்று அச்சு, மின் நூல்படி, கைமின் படிப்பி, ஒலிமின் படிப்பி என்று பல சௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. இவையெல்லாம் நூல் வடிவத்தை மாத்திரம் நன்கு காப்பாற்றப் போதிய வசதிகள். ஆனால் பிரமாணம் என்பது நூலின் வடிவத்தை முக்கியமாகக் குறிப்பது அன்று. நூலினுடைய உண்மையான பொருள் என்ன என்பதுதான் பிரமாணம் என்பதால் குறிக்கப்படுவது. நூலின் அர்த்த ஸ்வரூபமே உண்மையில் பிரமாணம் என்பதற்கு நேர் பொருளாகும். அதை எப்படிக் காப்பாற்றுவது? பிரமாண ரக்ஷணம் என்பது நூல்களின் வடிவம், பொருள் ஆகிய இரண்டையும் பல விதங்களிலும் நன்கு பேணிக் காப்பாற்றுதல் என்பதாகும்.
பொதுவாகவே ஹிந்துமத நூல்களை, அது எந்த நெறி சார்ந்த நூல்களாயினும் அதன் கருத்துகளை இன்றைய நிலையில் நாம் விளங்கிக் கொள்வதும், சமுதாயத்தில் பிறரும் விளக்கம் பெற வேண்டிப் பலவகையிலும் உதவுவதும் சீரிய நற்பணி எனலாம். ஆனால் நவீன படிப்பு, நாகரிகம், மேலை நாடுகளில் வேலை, இங்கும் இரவு பகலாக ஐடி கம்பெனிக்களில் உழைப்பு என்று உள்ள பல இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு அவர்களின் அறிவுப்பசி தீரும்படியாக, அவர்களின் ஆர்வத்தைக் குலைக்காமல் சம்ப்ரதாய விஷயங்களைச் சொல்ல முனைதல் பெரும் பணியாகும். இன்றைய சமுதாயத்தின் பிரச்சனை என்னவென்றால் நாம் மீண்டும் பிரமாணங்களைப் புதிதாக அடிப்படையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் விளக்கம் காண வேண்டும். மீண்டும் நம் மொழியில் அவற்றை விசாரம் நடத்தியாக வேண்டும். இவ்வாறு செய்து நம் முன்னோர் காட்டும் தெளிவு என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நூல்களைப் புறவடிவில் காப்பது மிகவும் அவசியம். கூடவே நமது வீட்டு நூலகத்தில் பிரமாண கிரந்தங்கள் சேமிக்கப்படுமாறு பார்த்துக்கொள்ளுதல் இன்னும் அவசியம். 'என்ன சார்! அவரவர் புறாக்கூண்டு மாதிரி இடத்துலதான் குடும்பமே நடத்த முடியறது. நீங்க என்னடான்னா வீட்டு நூலகம் வரைக்கும் போய்விட்டீர்கள்' என்று முணுமுணுப்பது காதில் விழுகிறது. வாஸ்தவம்தான். அப்படித்தான் ஆகிப்போனது வாழ்வு. இதற்கு என்ன செய்யலாம்?
நம் காலத்தில் நல்ல வேளையாக மின்னூல் என்னும் வசதி ஏற்பட்டிருக்கிறது. நூல்களை மின் வடிவத்தில் சேமிக்க நல்ல வசதி. குறுந்தட்டுகளோ, கட்டைவிரல் மின்குளிகைகளோ அல்லது மின் வெளியில் தளத்தில் சேமித்தலோ நாம் செய்ய முடிகிறது. இதில் கூடுதல் சௌகரியம் ஒலி ஒளி பனுவல் சேமிப்புகள் என்று பல்லூடகச் சேமிப்பும் சாத்தியமாகிறது. பல நெறிகளைச் சார்ந்த பெரியோர்களின் உபந்யாஸங்களைப் படித்தல் மட்டுமின்றி ஒலி ஒளிக் கோப்புகளாகப் பயனடைய முடிகின்றது. நிச்சயம் பிரமாண வடிவங்கள் ஏதாவது ஒரு விதத்தில் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனால் அந்த பிரமாணங்கள் கூறும் செய்திகள் என்ன, அவை இந்தக் காலத்தில் எப்படி இளம் தலைமுறைகளுக்குப் புரிய வைக்கப்பட வேண்டும், எளிமையாகவும் அதே நேரத்தில் சான்றாண்மை கெட்டுப் போகாமலும் எப்படி வரும் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது என்பது பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. அதாவது ஹிந்துமதத்து மக்களைப் பிரமாணங்களை நோக்கி இட்டுச் செல்லுதல், பிரமாணங்களை மக்களை நோக்கி இட்டுச் செல்லுதல் என்பது பெரும் மலைப்பு தரும் பணிதான். இதில் வெற்றியடைதல் என்பது பிரமாண ரக்ஷணத்தில் முக்கியமான அம்சம்.
இன்றைய தலைமுறையில் சுயசிந்தனை, தன்னம்பிக்கை, தனிமனித ஊக்கம் என்பதெல்லாம் வளமான வாழ்க்கையைப் பெறுவதற்கான அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன. இந்த நிலையில் இளைய சமுதாயத்தினரிடையே கேள்விகள் எழத்தான் செய்யும். எங்கும் தகவல் பெருக்கம். அறிவின் பெருக்கம். அறிவு விழிப்பு. புதுப்புது இயற்கையின் உண்மைகள் வெளிவந்தவண்ணம் இருக்கும் காலக்கட்டம். தகவல் வினாடிக்கணக்கில் எங்கும் பரவும் தொடர்புத் தொழில்நுட்பம். இதில்தான் இளம் தலைமுறைகள் தங்கள் வாழ்வின் ஆதாரங்களைத் தேடியலைய வேண்டும். எனவே அவர்களைக் கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காக நொந்துகொள்வது நம் அறியாமையையும், இயலாமையையும் தான் காட்டுமே அன்றி யாருடைய நன்மைக்கும் வழி வகுக்காது. அதற்குப் பதிலாக வழிகாட்ட வேண்டிய தலைமுறைகள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளுதல் செய்ய வேண்டிய நற்பணியாகும்.
***
No comments:
Post a Comment