Saturday, January 25, 2020

பிரின்ஸிபால் சாரநாதனின் எழுத்துகள்

‘மிக அபூர்வமான’ என்று இந்த நூலைச் சொல்ல வேண்டும். ஆம். அபூர்வம் என்றால் முன்னர் இல்லாதது என்று பொருள். நிச்சயம் இந்த நூல் அச்சுலகில் முன்னரே இல்லாதது. 1949ல் நினைவு மலராக வந்தது அப்படியே நின்று போயிருக்கிறது. ஏன் யாரும் இதை நூலாகக் கொண்டு வரவில்லை? தெரியவில்லை. நேஷனல் கல்லூரி பழைய மாணவர்கள் எல்லாம் சேர்ந்து இதைக் கொண்டு வருவது என்ன அவ்வளவு கஷ்டமா? யாராவது என்னிடம் வந்து நான் நேஷனல் ஓல்ட் ஸ்டுடண்ட் சார் என்று சொன்னால் நான் இதைத்தான் முதலில் கேட்பேன். ஒரு வேளை வந்து நான் தான் கவனிக்கத் தவறிவிட்டேனோ அதுவும் புரியவில்லை. மர்மம் வேண்டாம். விஷயத்திற்கு வருகிறேன்.

ப்ரின்ஸிபால் சாரநாதன் -- இந்தப் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள். இது ஒரு மந்திரப் பெயர். தமிழ்நாடு பெற்ற தவப்பயன்களில் ஒன்று இந்தப் பெயர். இந்தியாவின், தமிழ் நாட்டின் கல்வி ஊக்கங்களில் ஒரிஜினல் அக் மார்க் ஊக்கம் என்று சொன்னால் இந்த ப்ரின்ஸிபால் சாரநாதன் என்ற திருப்பெயர் எனலாம். என்னுடைய குழந்தைப் பருவ நினைவு ஒன்று மிக அழுத்தமாக ஞாபகத் திசுக்களில் பதிவாகியிருக்கிறது. தெருவில் செல்லும் ஒரு வயதானவருடன் என் தந்தை பேசிக்கொண்டிருக்கிறார்.

தெருவில் செல்லும் பெரியவர் -- என்ன வேணு! எப்படி இருக்க?

தந்தை - வாங்கோ வாங்கோ சௌக்கியமா?

பெரியவர் - ஏதோ போகுதுப்பா! என்ன கல்லூரி அது! நேஷனல் காலேஜ்னா சும்மாவா? ப்ரின்ஸிபால் சாரநாதனோட உயிரே அது கலந்து இருக்கேப்பா! என்ன தியாகம்! என்ன மனுஷன் அவர்! சும்மா ஆங்கில இலக்கிய வகுப்பு எடுத்தார்னா தன்னை மறந்து மணிக்கணக்கா போகும். பையங்க நேரம் போறதே தெரியாம கேட்பாங்க. அடுத்த வகுப்புக்கான வாத்யாரும் அமைதியா வந்து உள்ள உட்கார்ந்து கேட்டுண்ட்ருப்பார். மணி அடிச்சது எதுவும் அவருக்குத் தெரியாது. திடீர்னு நிறுத்தி ஏன் அவன் இன்னும் பெல் அடிக்கலை? ஏன் அடுத்த வகுப்புக்கான டீச்சர் இன்னும் வரலை? என்று கேட்டதும்தான் அவருக்கே உண்மை தெரியவரும். 26 வருஷ வாழ்க்கைத் தியாகம். 1921லிருந்து 1947 வரை. அதுவே நேஷனல் காலேஜ் திருச்சி உருவான காலம்.

பிறகு என் தந்தை என்னிடம் கூறிய நினைவு. தாம் சாரநாதனின் அத்யந்த மாணவர்களில் ஒருவராக இருந்ததாகவும், அவருடன் தான் பேசிப் பழகிய நாட்களும் பற்றி. 1949ல் அவரைப் பற்றிய மெமோரியல் வால்யூம் போட்டார்கள். அதில் அவருடன் படித்த சக மாணவ்ர்களின் நினைவுகள் முதல் பகுதி, பின்னர் அவருடைய வாழ்க்கை நினைவுக் குறிப்புகள், அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய அரிய இலக்கியச் செல்வங்கள் தொகுப்பு. துல்லியமான வீணையின் சுநாதம் போன்று அவரது எழுத்துகளின் அடிநாதம் அமைந்திருக்கிறது. ஆங்கிலம் அற்புதமான நடை. இந்தியனாங்கில இலக்கிய வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஆதிகாலத்தில், தொடக்க நாட்களில் அதாவது தற்கால இலக்கியம் தொடக்கம் என்று கூசாமல் நவீன இலக்கிய வாதிகள் கூறும் மணிக்கொடிக் காலக் கட்டத்திற்கு முன்னமேயே நவீன இலக்கியம் எழுதிய இலக்கிய வாதி ஒருவனை மறந்து, மறைத்து, கவனத்திற்குக் கொண்டு வராமலேயே கூட இங்கு இலக்கிய வரலாறுகளும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளும், அந்த ஆய்விற்கான அத்தாட்சிப் பட்டங்களும் தடபுடலாக நடக்கும் என்பதை நகையாடியபடி அந்த ப்ரின்ஸிபால் சாரநாதன் மெமோரியல் வால்யூம் 1949 நம்மால் சிறிதும் கண்டுகொள்ளப் படாமல் இருக்கிறது. நுணுக்கமாக அச்சடித்த பெரிய தாளில் சுமார் 530 பக்கங்களுக்கு அந்தப் பெருமகனின் படைப்புகள் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக விரிகிறது. Collected Writings of Principal Saranathan என்று.

Lyrics, Poems of Earth and Sky, Krishna - A Lyrical Pastoral, The Spirit of India, Political Sonnets, Occasional Pieces, First Sheaves -- இதெல்லாம் ஆங்கிலக் கவிதை நூல்களின் தொகுப்புகள்.

பிறகு Prose என்னும் பகுதியில் The Sword of Knowledge, Literary Criticism - The Poetry of Francis Thompson, Style in Poetry - I Introduction, II Inward Music, III Coleridge - Pure Romance IV Poetry and Life Coloured Romance;

A Thought on Shakespeare, William Blake and His Poetry; Modern Poetry 1918 - 1940, The Stream of Consciousness, Satire in Greek Drama

Autobiographical writings

தமிழில்

வாழ்க்கைச் சிற்பம் -- மூலக்கற்பனை, நெசவு, வர்ணம், சிற்ப ஒருமிப்பு

நம் நாகரிகப் போக்கு, ஆதி கவியின் சிறப்பு, இந்தியத்தாய் I to V, கல்வி பற்றிய எழுத்துகள், சில பேரறிஞர்கள், சுய சரிதம், சமூக முற்போக்கு, கதம்பம்.

பாரதியைப் பற்றிய ஆரம்ப கால விமர்சகர்கள் என்னும் தகவலை மாற்றி எழுத வேண்டும் இவரை வெளிக்கொணர்ந்தால்.

The Principal Saranathan Memorial Volume, Published by The National College, Tiruchirapalli, 1949.

பிரின்ஸிபால் சாரநாதன் என்னும் உன்னதமான கலைஞனை நாம் மறந்தாலும் காலம் ஒரு நாளும் மறக்காது. நேஷனல் கல்லூரியின் சிற்பி, திருச்சியின் ஆங்கில இலக்கிய மேதை, திரு சாரநாதனின் கவிதைகள், ஆங்கிலமோ, தமிழோ தனிச்சுடர் கொண்டு எழும் தூய மொழிக் கங்குகள்.
துல்லிய ரஸவோட்டமும், தீக்கொளுத்தும் மடக்குகளும் கொண்டு மிளிரும் மொழிநடை படிப்பதற்கே ஒரு தனி அனுபவம்.

சிவன் என்னும் தலைப்பில் அவர் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒரு புது பார்வையை, ஆன்ற மரபின் உள் கருத்தைப் புதிய வட்டில் அடித்துத் தரும் பொழுது பிரமிப்பே விஞ்சுகிறது. சிவனுடைய ஜடாமகுடங்கள் யாவை? சிவனுடைய நெற்றிக் கண் ஆவது யாது? பெருமானுடைய குனித்த புருவங்கள் யாவை? சிந்தனை என்னும் கண்ணை ஏந்திப் பிணைக்கும் பிஞ்சுக் குழவி நம்பிக்கையின் துணிச்சலான கரங்கள் அந்தப் புருவங்கள் ?

”His fiery eye is Thought; His brow
Is bound with little arms
Of child-like faiths so brave. Ah, how
His Serpents wind alarms !
O Siva, Lord of the Flaming Eye,
Symbol of Thought’s Storm-Sky
And constellation of mystery !
My Soul would Thy banner fly !’

சிவனாரின் ஜடாமகுடத்தில் அணிபெறும் பிறை நிலவம்! புன்மைகளைக் கடிந்து பொன்யுகத்தை ஆக்கும் எண்ணங்கள் அந்தக் கற்றை முடிக் கட்டு. அதன் நெளிவு புதுவிடியலின் புன்சிரிப்பு !

Upon his head the shy moon gleams
Athwart his matted hair;
In restless fires close-woven, teems
That ashy-tinted lair
Of deep thoughts ravaging a world
Grown grey and mounded high,
Of power and peace then dawning, curled
In Smile of his forehead eye!
Ah that wild forehead flaming far
On many a city’s dome
And sin complete, enkindling war
In field, and sky, and home !

அவருடைய தமிழ் எழுத்துக்களோ நவீன யுகத்தின் விடிவெள்ளியாய் யாரும் காணாமலே இருப்பவை. மகாகவி சுப்பிரமணிய பாரதியை அவர் போற்றியிருக்கும் விதம்:

“கவிஞன், தேசாபிமானி, சித்தன், உலகிற்கெல்லாம் நண்பன் என்று நான்கு விதமாக, சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கைப் பயனை மதிப்பிடலாம். தமிழ் நாட்டுக் கவிஞர்களுக்குள் உணர்விலும், நெஞ்சமுருகிச் சொரியும் இன்பக் கவிதையிலும், அனாதி தத்துவ நிர்ணயத்திலும், நவீன சிந்தனையிலும், அவருக்குச் சமானமானவர் யாரும் இல்லை. தேசாபிமானிகளுக்குள்ளே, சுத்தமானதும், புஷ்டியானதுமான ஹிந்து தத்துவத்தைப் போதிப்பதிலும், அகில இந்தியாவின் ஆன்மாவை உருவகப்படுத்துவதிலும் அவருக்கு நிகரானவர் யாரும் இருந்ததில்லை. பாரத நாட்டின் சித்த கோடிகளில் வல்லமை தங்கிய அருட்செல்வம் பெற்றவர் என்றும் பாரதியாரைக் கூறலாம். கடைசியாக, உலகிற்கெல்லாம் நண்பன், வருங்கால அமைப்பிற்கு வழிகாட்டும் தீர்க்கதரிசி என்று சந்தேகமில்லாமல் அவரைப் புகழலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் நாட்டுத் திலகம் ஒருவரை அவர் காலத்திற்குப் பின்னாவது நாம் அறிய முயலுவது போற்றத்தக்கது.”

இதில் அவர் கூறியிருக்கும் கடைசி வரியையே நாம் பிரின்ஸிபால் சாரநாதன் விஷயத்திலும் சொல்லுதல் பொருத்தமுடைமையாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் நாட்டுத் திலகம் ஒருவரை அவர் காலத்திற்குப் பின்னாவது நாம் அறிய முயலுவது போற்றத்தக்கது. அதுவும் திருச்சிக்காரர்களுக்குக் கடப்பாடு கூடுகிறது.

நாம் மறக்கக் கூடாத ஓர் இலக்கிய மாமேதையின் வரிகள் இருப்பதோ
PRINCIPAL SARANATHAN MEMORIAL VOLUME [1949] (reprint) SARANATHAN COLLEGE OF ENGINEERING PANJAPPUR, Tiruchirappalli - 12.

ப்ரான்ஸிஸ் தாம்ஸனின் கவிதை மிக ஆழ்ந்த ஒன்று உலக கவிதைகளிலேயே. அதற்கு திருலோக சீதாராம் அவர்களின் தமிழாக்கம் ஒன்று 1940 1941 ல் வந்தது. மிகப் பொலிவான தமிழாக்கம். அதன் சிறப்பு என்னவென்றால் நேஷனல் காலேஜ் திருச்சியில் பிரின்ஸிபாலாக கல்லூரியையே வளர்த்தெடுத்த கல்வி முனிவன் திரு சாரநாதன் அவர்களிடம் போய் இந்தக் கவிதையின் தமிழாக்கத்தைக் காட்டியிருக்கிறார் நம் கவிஞர் திருலோகம். (இத்தனைக்கும் எட்டாவது தாண்டவில்லை ) நீலகண்ட சாஸ்திரி முதலானோரின் பாட்ச்சில் ஒன்றாகப் படித்துத் தேறி ஆங்கிலத்தில் பிரிட்டிஷாரே கண்டு வியக்கும் புலமை பெற்ற சாரநாதனிடம் எட்டாங்கிளாஸ் படித்துவிட்டு கிராம ஊழியனில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் ஓர் இளைஞர் மிகக் கடினமான ஆங்கிலக் கவிதையைத் தமிழ்க் கவிதையாக்கிக் கொண்டுபோய்க் காட்டுவது என்றால் என்ன துணிச்சல்! 'பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டார் பிரின்ஸிபால். 

சில நாள் கழித்து அபிப்ராயம் அறியச் சென்றிருக்கிறார் சீதாராம். அலுவலகத்தில் போய்க் கேட்டால் வகுப்பறைக்குப் பாடம் எடுக்கப் போயிருக்கிறார் என்று தெரிந்தது. 'சரி வகுப்பறையின் மருங்கே எங்கானும் போய் நிற்போம். நம் காதிலும் கல்லூரிப் பாடம் விழட்டுமே' என்று போனால் மிகுந்த ஆச்சரியமும் நெகிழ்வும் காத்திருந்தது கவிஞருக்கு! வகுப்பில் ப்ரான்ஸிஸ் தாம்ஸந்தான் பாடம். விரட்டிவரும் விண்ணின் வேட்டை நாய் கவிதைதான் பாடம். சாரநாதன் தன்னுடைய உச்சத்தில் மிதந்தபடி பொழிகிறார். ஆங்கிலத்தில் அன்று!. கவிஞரின் தமிழாக்கத்தை. கண்ணி கண்ணியாக சுவைத்துச் சுவைத்து, ஓர் ஆங்கிலப் பேராசிரியர், ஆங்கில மேதை என்று அயல்நாட்டார், இந்திய அறிஞர்கள் அனைவருமே கொண்டாடிய ஒரு கல்லூரி பிரின்ஸிபால் ஆங்கில வகுப்பில் ஆங்கிலக் கவிதையைத் தமிழாக்கத்தை வைத்துக்கொண்டு பாடம் நடத்துகிறார்! எப்படி இருந்திருக்கிறது கதை. இந்த அதீத சாமர்த்தியம் எல்லாம் எங்கள் திருச்சிக்கே உண்டான ஸ்வபாவம். கேட்ட கவிஞர் அப்படியே சிலையாகி நின்றுவிட்டார். அந்த மூடிலேயே கவிஞர் லாங்பெலோவின் Arrow and the Song என்பதை மொழிபெயர்த்தார். அதுதான் 'வில் வளைத்து நாணேற்றி விட்ட சரமொன்று' என்று ஆரம்பிக்கும்.


”வில் வளைத்து நாணேற்றி
விட்டசரம் ஒன்று
விண்வழியே சென்றெங்கோ
வீழ்ந்துமறைந் திடவும்
நில்லென்று தடுத்தெதிரே
நின்றகுறி எதுவோ
நிலையறியாக் கட்புலனோ
நினைக்க வசம் ஆகும்?

அன்றொருநாள் நெஞ்சத்தில்
ஆர்த்தெழுந்த கவிதை
ஆகாய வீதியிலே
அலைபரவும் காலை
நின்றெதிரே தேக்கியதோர்
நெஞ்செதுவென் றறியேன்
நிலைகாணச் செலுமதனை
நிறுத்தியுடன் செலவோ?

பன்னெடுநாள் சென்றதன்பின்
பச்சைமரம் ஒன்றில்
பாய்ந்திருந்த என் சரத்தைப்
பார்த்து வியந்திட்டேன்
தன்னுளத்தில் என் கவிதை
தேக்கியவன் முழுதும்
தனியிருந்து பாடிடவும்
தலையசைத்து நின்றேன்.”

*
I shot an arrow into the air,
It fell to earth, I knew not where;
For, so swiftly it flew, the sight
Could not follow it in its flight.

I breathed a song into the air,
It fell to earth, I knew not where;
For who has sight so keen and strong,
That it can follow the flight of song?

Long, long afterward, in an oak
I found the arrow, still unbroke;
And the song, from beginning to end,
I found again in the heart of a friend.
(Longfellow)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment