Friday, January 24, 2020

மனத்தில் கள்ளம் 1

இந்தக் கருத்து நெடுநாளாக என் மனத்தில் நெருடிக்கொண்டிருப்பது. சிறு வயது முதற்கொண்டே இந்த ’உள்ளத்தின் கள்ளத்தனம்’ என்பது மிகவும் நழுவும் தன்மை கொண்டதுவாய் இருக்கின்ற ஒன்று.

புறச் சூழல்களின் கட்டாயத்தின் பேரில் ஒருவர் தாமே விரும்பாது சில்வற்றை மறைப்பதோ, தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக்கொள்வதோ இந்த விதக் கள்ளத்தனத்தின்பால் வகைபடுவதில்லை. அது துணிச்சலின்மையாகவோ அல்லது சமயத்தில் சமயோசிதமான முடிவாகக் கூடவோ இருக்கலாம்.

ஆனால் எந்தப் புறச் சூழல்களும் தூண்டாமல், தான் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்ற நிலையில், தம் மனசாட்சிக்கு நன்கு தெரிந்திருந்தும் துணிந்து எடுக்கப்படும் முடிவோ, செயலோ ‘நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும்?’ என்ற ஒற்றைக் கேள்வியின் பலத்தில் வெளிப்படும் போது நம்முள் அமைதியான கோபமாகத்தான் உணர முடியும்.

நாம் படும் கோபத்தைக் கண்டு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் அந்த அப்பாவித்தனம் போன்ற கல்மஷம், அதுதான் நான் சொல்லவரும் ‘உள்ளத்தின் கள்ளம்’ என்பது.

கல்லூரி நாட்களில் ஒரு பெரியவரிடம் சில விஷயங்கள் ஆன்மிகம் சம்பந்தமாகப் பேசிய பொழுது, அதில் அரிச்சுவடியையும் அறியாத அவர், நான் சொல்வதையெல்லாம் கேட்டு, ‘அப்படியா? அப்படியா?’ என்று வியந்தபடித் தெரிந்துகொண்டவர், யாரோ அவரது நண்பர் ஒருவர் எதிரே வரவும், அந்த நண்பர் நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதில் சிறிதும் அக்கறை அற்றவராகத் தாம் வந்த வேலையைப் பற்றிய விவரம் கேட்டுக்கொண்டு போகின்றவரைக் கூப்பிட்டு ‘பையன் ஏதோ சந்தேகம் கேட்டுக்கொண்டிருக்கிறான். அதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்’ என்று சம்பந்தமில்லாமல் வழிந்து பூசி மெழுகிய போது இந்தக் கள்ளத்தனத்தை நேருக்கு நேர் சந்தித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

எனக்கு வர வேண்டியது ஏதோ கொள்ளை போய்விட்டது என்பதன்று. ஆனால் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது உண்மையெனில், உள்ளத்தில் கள்ள உள்ளமும் உறங்காதுதான் போலும் !

ஏதோ பஞ்ச மாபாதகத்தைப் பற்றி நான் விவரிக்கவில்லை என்பது எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். ஆனால் 'the vexing attitude of the people' என்ற வகையில் இது சேரும்.

அந்தப் பெரியவர் என்று இல்லை. ஆண்கள், பெண்கள், வயதானோர், சிறியோர், வசதியானவர், வாழ்க்கையில் கஷ்டப் படுகின்றவர்கள் என்று எல்லாத் திசையிலும் இப்படி முட்டுச் சந்துகளான மனக் கல்லிகள் உண்டு. அது முட்டுச் சந்து என்று உணர்ந்த பின்னர் நாம் திரும்பி வரும் போதுதான் அதன் நாற்றம் கூடுதலாக வாட்டும்.

Why not one have a clean mind? -- வாயோ, மனமோ சலித்துக்கொள்ளும் குரல் வடிவதற்கு அடுத்தகட்ட நிகழ்வு மிகவும் தேவைப்படும்.

ஒரு பேர்வழி, என்னிடம் ஏதோ ஒரு விஷயம் கேட்டு இப்படித்தான் என்று நிச்சயம் செய்துகொண்டு, பிறகு சில நாள் கழித்து என்னையே பார்க்கும் பொழுது அதை எங்கோ தான் தெரிந்துகொண்டது போல் கூற, ‘யோவ்! நான் சொன்னதுதானே இது! எங்கிட்டயே வந்து உட்றியே!’ என்றதும் ‘ஹி ஹி.. இல்ல ஆமா நீங்க சொன்னதுதான்..’ என்று அசடு வழிந்தவர் தடார் என்று ஒரு போடு போட்டார் பார்க்கணுமே, ‘அதெல்லாம் ஞான பாகம் எல்லாருக்கும் பொது. யாரும் உரிமை கொண்டாட முடியாது.’

எலும்புக் கூடு சிரிச்சா மாதிரியான அவர் அழகைக் கண்டு அலுப்பா, கோபமா, வெறுப்பா பேசாமல் நின்றேன். அவரும் விடவில்லை. நான் அமைதியாக இருந்ததைத் தன் கருத்தை ஏற்றதாகக் கருதிக்கொண்டு மேலும் ஏதோ விஷயம் கறக்கக் கரடி வித்தை காட்டிப் பார்த்தார். உள்ளத்தில் கள்ள உள்ளம்... என்ன செய்வது!

இன்னும் சில பேர்வழிகள், நம்மிடம் வந்து சம்பந்தம் இல்லாத யாரைப் பற்றியோ ரொம்ப முடையாக மணிக்கணக்கில் அக்கப்போர் வாசிப்பார்கள். அவரைப் போ என்பது நாகரிகம் இல்லை என்பதால் பொறுத்துக்கொண்டிருந்தால் நம் வாயை விடாமல் பிடுங்குவார்.

‘இல்ல தப்பு இல்ல அது...! என்ன சொல்றீங்க?... இல்ல நான் சொல்றது என்ன?.... நீங்க என்ன நினைக்கிறீங்க?... எனக்கு மனசே கேக்கல... என்ன.. என்று விடாமல் இப்படி நச்சரிக்கும் போது ‘சரி மனுஷன் ஏதாவது சொன்னால் ஒழிய விடமாட்டார் போல என்று ‘ஆமாம் தப்புதான்... அப்படிச் செஞ்சிருக்க கூடாது... ‘ என்று ஏதாவது பாதி நினைவில் சொல்லிவிட்டால் போதும் அதை முடித்துக்கொள்வார். நேரே போய் அவர் யாரைப் பற்றி அளந்துகொண்டிருந்தாரோ அவரிடம் ‘உங்களைப் பற்றி இன்னார் இப்படிச் சொன்னார். எனக்குத் தாங்கல.. நான் வந்துட்டேன்...’ என்று மூட்டிவிடுவார்.

அந்தப் பேர்வழி சுதாரிப்பான ஆளாய் இல்லையென்றால் போச்சு அப்புறம் சில மாதங்களாவது நம்மைப் பார்த்தும் பார்க்காததுபோல், பார்த்தாலும் கொலை வெறியோடு, பேசினாலும் அடுப்புத் தணலைக் கொட்டி இப்படித்தான் அவஸ்தை தொடரும். எதாவது சான்ஸா கொட்டித் தீர்த்தால் விஷயம் விளங்கும்... இல்லையெனில் மூடுபனி விஷம்தான்.

சிலர் நாம் எங்காவது போய்விட்டு வந்தால் அதைப் பற்றி விலாவாரியாக விசாரிக்காமல் விடமாட்டார்கள். சின்ன சின்ன டீடெயிலும் சொல்ல வேண்டும். நச்சரிப்பு தாங்காது. சொன்னாலொழிய இடம் காலியாகாது. ஆனால் அவர்கள் மிக முக்கியமான விஷயத்திற்குப் போய் வந்திருப்பார்கள். அதைப் பற்றி அவர்கள் முழுவிவரமும் நமக்குச் சொல்ல வேண்டும். அதை வைத்துத்தான் மேற்கொண்டு நாம் நகர முடியும். அப்படி ஒரு நிலையிலும், அவர்களிடமிருந்து சின்ன பிட் விஷய்ம் கூட வாங்குவது சிரமமாக இருக்கும். பத்து கேள்வி கேட்டால் ..ம் போனேன்.... என்று சொல்லிவிட்டு அதற்கே உள்சுருங்கி ரெஸ்ட் எடுத்துக்கொண்டு விடுவார்கள். நாம் தவிக்கிறோம் என்று தெரியும் அவர்களுக்கு நன்றாக. அவர்களுடைய வெற்றுப் பார்வை அதை நன்றாக உற்று நோக்கிக் கணக்கெடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தில் அவர்கள் முக்கியமானவர்களாய்த் தாங்கள் ஆகி நிற்கும் மகத்துவத்தை மனத்தளவில் கொண்டாடுவார்கள்.

உள்ளத்தில் கள்ள உள்ளம்.....

No comments:

Post a Comment