ஆய்க்குலத்தில் திரியவரும்
அமரர்க்கரிய திருவடிகள்;
ஓய்வறியா பிறவிச்சுழல்
உள்ளடங்கும் திருவடிகள்;
தாயாகித் தாங்கவரும்
திருமாலின் திருவடிகள்
போயறியா மாயைதான்
பொன்றவரும் பொன்னடிகள்;
ஆயர்குலச் சீயம்
அண்டர்குல நேயம்
வேய்ங்குழலின் விரகம்
பாய்ந்துவரும் குழகம்
ஐயா நீ யாரோ?
அறிவரேதாம் அறிவாரோ?
மையாயிவ் வுலக இருள்
பொய்யாய் உனைக் காட்ட
உய்யும்வழி அறியேன்
உன்மத்தமாய் ஆனேன்
கையில் உனை அள்ளிக்
கொஞ்சவும் யான் நயந்தேன்;
பையரவில் துயில்வோய்
பார்மீதும் நடை பயில்வாய்
ஐயா உனைக் கெஞ்சிக்
கேட்பேன் ஓருதவி
நீ யாரோ? நீ யாரோ?
யாரேதாம் அறிவாரோ?
உனை அள்ளிக் கொஞ்சத்
தடையாகி நின்ற
அறிவெதுவும் வேண்டாம்
எனக்கே அறியாமை போதும்
உள்ளொளி பூத்தப்
பூவினை ஊதும்
புரிவண்டார்க்கும்
பொன்மயல் பிறந்தது
கண்ணா கண்மலராய்!
எண்ணொளி இங்கிதம்
விண்ணொலி மீட்டிக்
கண்ணில் கனிந்தது
மண்ணில் விளைந்தது
உண்மை புலர்ந்தது
உத்தமனே! உன்
உளங்கனிவாய்!
புள்ளொலி சிலம்பிட
உள்ளருள் விம்மிட
நள்ளிருள் ஒளிவிட
விள்ளுமுன் வியன்குழல்
கள்ளமொழித்தது
குள்ளக் குளிர்ந்திடு
தெள்ளிய சிங்கா
கள்ளழகா!
தள்ளுவன் உன்னைத்
தாவியணைப்பன்
ஆவியுள் குளிரும் நெருப்பாகிப்
பாவியென்னிதயப்
பராய்த் தவிசேறிப்
பாம்பணை யென்றே
யோகு புணர்ந்தாய்!
ஆமபரிசுணர்ந்தேன்
ஓம்பறைந்தேன்
நாமெனும் உறவில்
நான் மறைந்தேன்
வாம்பரி இவர்ந்து
வந்தவென் வரதா!
நோமுளத் துரிசு
இரிந்திட வரம்தா!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Wonderful to read. Hatsoff to you.
ReplyDelete