தமிழ் வாத்யார் எஸ் ஜி அவர்களைப் பற்றி ஒரு ஞாபகம். பத்தாம் வகுப்பு. அவ்வப்பொழுது வகுப்பில் சின்ன பரிட்சைகள் நடக்கும். முதல் நாள் சொல்லிவிடுவார். அப்பொழுதைக்குச் சமீபத்திய போர்ஷன்ஸ் பரிட்சையில் கேள்விக்குரிய பகுதிகள். பரிட்சை நடந்தது. அதில் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவைப் பகுதி ‘நாராயணா என்னா நாவென்ன நாவே, கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே’. அதற்கு விளக்கம் எழுத வேண்டும். அப்பொழுதெல்லாம் கோனார் நோட்ஸ் மாணவர்களுக்குப் பெரும் உதவி. அகத்தியர் நோட்ஸும் உண்டு.
பரிட்சைக்கு மறுநாள் வகுப்பில் கட்டு விடைத்தாளுடன் நுழைந்தார். என்னதான் சின்ன பரிட்சை என்றாலும் பரிட்சை ரிஸல்ட் என்றதுமே மாணவர்களுக்குக் கொஞ்சம் வயிற்றில் கலக்கத்தான் செய்யும் என்பது பிரம்மாவின் எழுதப்படாத விதி. ஒவ்வொருவரையாகப் பெயர் படித்து மார்க்கைச் சொல்லி விடைத்தாள் தருகிறார். அடேயப்பா அள்ளு என்றெல்லாம் மார்க்குகள் வந்தவண்ணம், இளநகையோடு அரைட்ரௌஸர் வீரர்கள் வெற்றி நடை போட்ட படியும், குறைந்த மார்க் விருட்டென்று சீட்டிற்கு வர யத்தனித்து வழியில் ஒரு பையன் கொடு பார்க்கலாம் என்றவனை எரிந்துவிழுந்து, அந்தப் பதட்டத்தில் கீழே வைத்த ஒருவன் பை தடுக்கி விழுந்து வந்து சேர்வதற்குள் அவுட்டரில் போட்ட வண்டி ஒரு வழியாக ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த கதையாக அரைவல். அதிக மார்க் வாங்கிய பேர்வழி ஏதோ கம்பநாட்டாழ்வாருடைய தூரத்துச் சொந்தம் மாதிரி போடாத டிக்டேஷனுக்கு நோட் புக்கை எடுத்துப் பிரித்துக் கவனமாக எதையோ எழுத வேண்டியது. ‘டேய் அவன் நன்னா படிப்பாண்ட்டா...’ இந்தக் குற்றொலிக் குழிப்புகள் சகஜம். என்ன நீங்க பெரிய விழா எடுத்து படாடோப விருதுகள் கொடுங்க... அந்தக் கணத்துல வகுப்பறையில் கிடைக்கும் இந்தமாதிரியான ’பெப்’புக்கு ஈடு இணையே இல்லை.
இப்படியாகத்தானே.... கிட்டத்தட்ட எல்லாருடைய விடைத்தாள்களும் அநேகமாகக் கொடுக்கப்பட்டு முடியும் தருவாய். என்னுடையது வரவில்லை. சக அமர்வுத் தோழர்கள் எல்லாம் என் பக்கம் பார்வையைத் திருப்புவதும், உன்னோடது வரலை? என்று பரத நாட்டிய அபிநயம் பிடிப்பதும்.... எனக்கு அடிவயித்துல கொஞ்சமா... ஆமாம். கடைசி வரை வரவில்லை என்றால் மிகக் கேவலமான மார்க். கொஞ்சம் ’சாற்றுக்கவி’யெல்லாம் பாடித்தான் தருவார் என்று அர்த்தம். ஐயய்யோ.. நன்னாத்தானே எழுதியிருந்தோம்... என்ன தப்பு பண்ணினோம்... அடச்ச நமக்குன்னு ஏன் இந்த நிலை... அவமானம்.....
எல்லாம் முடிந்தது. ‘சார்.. இவனுது வரலை...’ என்று கூவினார்கள். எஸ் ஜி ‘ஸ்ஸ்.. உட்காருங்க...’ என்று சொல்லிவிட்டு, ‘ஏய் எல்லாரும் அப்படியே கோனார் நோட்ஸுல சொன்னதை வாந்தி எடுத்து வச்சுருகீங்க... அதைக் கூட ஒழுங்கா எழுதாம சில பேரு. ஒரு சொந்த யோஜனை, எண்ணம் ஒண்ணுமே கிடையாதா... கடனெழவுக்கேஎன்னு படிக்கறதா... இல்ல கேக்கறேன்... திருத்தறத்துக்குள்ளே மனுஷனுக்கு... ஆனால் இந்த ஒரு விடைத்தாள் மாத்திரம்... யாருய்யா இது? என்று பேரைச் சொல்லிக் கேட்கவும் தயங்கியபடியே எழுந்து நின்றேன். ;மிக நல்லது’ பாருங்கய்யா... பொதுவாகவே பதில்கள், மொழிநடை வித்யாசமாக இருக்கிறது. அதுவும் சிலப்பதிகாரம் ‘கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே’ பகுதிக்கு இந்த விடையைப் பாருங்கள்.
‘நித்ய விபூதியில் இருக்கும் நித்ய சூரிகள் எல்லாம் யாரை விடாமல் இமைக்காமல் நோக்குகின்றார்கள் என்று வேதம் சொல்லுகிறதோ அந்த நாராயணனை கண் இமைத்துக் காண்பார் - கண் இமைக்கும் நேரப் பொழுதேனும் காண்பாருடைய கண்கள் தாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கின்றன! ஒருகணம் அவனைக் கண்டாலும் முடிவற்ற காலம் செய்த பாபங்கள் எல்லாம் அழிந்து உயர்வற உயர்நலம் ஏற்படுகின்றது என்பதற்கேற்ப கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே! என்று ஆய்ச்சியர் பாடினர்’
பார்த்தியாய்யா... எல்லாம் என்ன எழுதியிருக்கீங்க... பார்க்கவே வேண்டாம். எங்க கோனார் நோட்ஸ்ல என்ன இருக்கோ... காணாத கண் என்ன கண், கண்ணிமைத்துக் காண்பாருடைய கண் எவ்வளவு இழிந்த கண். அதேதான்.
ஏன்யா.. நீ என்ன புத்தகங்கள் நிறைய படிப்பியா...
ஆமாம் சார். கதாகாலக்ஷேபங்கள், உபந்யாஸங்கள் இதெல்லாம் விடாம போயிடுவேன் சார்.
யாருடைய உபந்யாஸம் எல்லாம் கேட்டிருக்கிறாய்
அண்ணங்கராசாரியார், வேளுக்குடி வரதாசாரியார், எம்பார், மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள்...
உட்காரு. இந்தா மிக நன்று. அதிக பட்சமான மார்க் இந்த விடைத்தாளுக்குத்தான் தந்திருக்கிறேன்.
அப்புறம் அந்த வகுப்பிற்குரிய பாடங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் யார் கவனித்தார்கள்? பெரும் கலக்கம், அடுத்த கணம் பெரும் பாராட்டு இந்த கிரேடியண்ட்ல பாஸ் ஆகிற கரண்ட் மூளையில் ஓடும்பொழுது... எந்தப் பரிசும் ஈடாகாது.
இடது கையால் ஷர்ட் காலர் முனைகளை ஒருங்குறப் பிடித்து வலப்பக்கம் தலையைச் சிறிது திருப்பியவாறு ஏர்ஃபோர்ஸ் ஸ்டைலில் தமிழ் முழங்கும் எஸ் ஜி,! இன்றும் அந்தப் பத்தாம் வகுப்பில் யாரும் இல்லாத நேரம் பார்த்துப் போய் உட்கார்ந்து விட்டு வரவேண்டும் என்று தோன்றுகிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
அன்றே தமிழ் வாழ்த்து பெற்று விட்டது
ReplyDeleteஅருமையான நினைவாஞ்சலி
ReplyDeleteஅவர் கூப்பிடும் "ஏன் யா" ஒரு தனி ரகம் 👌
ReplyDelete