Thursday, January 16, 2020

மார்கழி திருப்பாவை அனுபவம் 1

மார்கழி ஆரம்பம். திருப்பாவையின் தொடக்கம். எந்தக் காலத்திலிருந்தோ கேட்டு, படித்து, அப்புறம் மிகவும் புரிந்தால் போல் நினைத்துக் கொண்டு, இவ்வளவும் ஆன மன ஓட்டங்கள் பொங்கும் சமயம். திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த இரண்டாயிரப்படியைப் படிக்கலாம் என்று திறந்தால் இப்படி இருக்கிறது.

யார் திருப்பாவையைப் படிக்க அதிகாரி? யாருக்குத் தகுதி இருக்கிறது? எம்பெருமானாரை ஒரு முறை திருப்பாவைக்கு அர்த்தம் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அவர் பதில் சொல்கிறார்: ” திருப்பல்லாண்டு கேட்கைக்கு ஆள் கிடைக்கலாம் ஒரு வேளை. ஆனால் திருப்பாவைக்கு ஆள் கிடையாது. ஏன்? எம்பெருமானைத் தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்று இருக்கும் யாருமே அவர்கள் எவ்வளவு பெரியவர்களோ, பிராட்டிமார்களேயாகவோ இருந்தாலும் அவர்களும் கேட்பதற்கு அதிகாரிகள் அல்லர். திருப்பாவையைக் கேட்பதற்கு ஸ்ரீஆண்டாளைப் போன்றே தன்மை உள்ளவர்கள்தாம் கேட்க அதிகாரம் உள்ளவர்கள். பல சொல்லி என்ன பயன்? தானே சொல்லித் தானே கேட்கும் இத்தனை’ என்று கூறினாராம்.

அது மட்டுமன்று. பர்வதம் ஒன்றிருக்கிறது. இன்னொரு பக்கம் ஸப் அடாமிக் பார்டிகிள் ஒன்ரு இருக்கிறது. அதற்கும் இதற்கும் எவ்வளவு வித்யாசம்! அவ்வளவு வித்யாசம் ரிஷிகளுக்கும், உலகியலில் தம்மை மறந்து இருக்கும் ஸம்ஸாரிகளுக்கும் இடையில். அவ்வளவு வித்யாசம் உண்டு ஆழ்வார்களுக்கும், ரிஷிகளுக்கும் இடையில். அதே வித்யாசம் உண்டு பெரியாழ்வாருக்கும், மற்ற ஆழ்வார்களுக்குமிடையில். அந்த வித்யாசம் உண்டு பெரியாழ்வாருக்கும், ஆண்டாளுக்கும் இடையில் என்றால் திருப்பாவைக்கு யார் அதிகாரி?

ஸ்ரீஆண்டாளுக்கு ஒரு பாரம்பரியச் சொத்து உண்டு. அது பத்து பேருடைய ஞானம். ஆழ்வார்கள் பகவானாலே ஞானத்தில் எழுப்பப் பட்டவர்கள். எவ்வளவோ காத்திருந்து பார்த்துவிட்டு இனி இந்த ஸம்ஸாரிகள் பகவத் விஷயத்தில் மனம் செலுத்த மாட்டார்கள் போலும். காத்திருப்பதால் என்ன பயன் என்று சோர்ந்து கைசோர்ந்தவன் போல் யோகு புரியும் பகவானை எழுப்பி, மக்களையும் தம்முடைய பாடல்களால் ஒன்று சேர்த்து, ஆர்வம் மூட்டி, ஆர்வம் கொண்டோரை ஒற்றுமையாக்கி, சோர்ந்து போன பகவானுக்கும் நம்பிக்கையை ஊட்டி, இவர்களைக் காக்க வேண்டியது உமக்கே பொறுப்பு என்ற உணர்த்தியையும் பகவான்பால் உண்டாக்கி எழுப்பியதால் இவளுடைய நிலை நம்மால் ஒருகாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்பது நன்கு புரிந்தது. நமக்கு அதிகாரம் இல்லை. நமக்குப் புரியாத ஒன்று என்பது நன்கு புரிந்ததோ இல்லையோ இப்பொழுதுதான் திருப்பாவையே நன்கு புரிகிறாற்போன்ற ஓர் உற்சாகம் கருக்கலாக கனக்கிறது. வெள்வரைப்பதன் முன்னர் திரள்வது விவேகம்.

*
திருநாராயணபுரத்து ஆயி என்னும் ஜநந்யாசாரியாருடைய அனுபவமே அலாதியானது. என்ன கவித்வம்! என்ன ரஸனை!

ஏரார்ந்த இளங்கண்ணி யசோதை - இதற்கு எழுதுகிறார் திருநாராயணபுரத்து ஆசிரியர். அதைக் கொஞ்சம் விவரித்து, விரித்துப் பார்த்தால் --

ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகள் பகவானை கண்ணிமைக்காமல் ‘ஸதாபசயந்தி’ என்று பார்ப்பதைப் போல பார்க்கிறாள் யசோதை. நிலைக் கதவைப் பிடுங்கிப் பொகட்டுப் பார்க்கின்ற கண்கள். கண்ணுக்கு எதுவும் மறைக்கக் கூடாதாம். நித்ய சூரிகள் ஏன் பார்க்கின்றனர்? தங்கள் போக மகிழ்ச்சிக்கு. ஆனால் இவள் பார்ப்பதோ இவனுக்கு என்ன வருகிறதோ என்று மங்களத்தை ஆசாஸிக்கும் பார்வை.

தகப்பனார் நந்தகோபன் வேலைப் புகரெழக் கடைந்து கூராக்கி நோக்கிக் கொண்டு போந்தார்.

இவளோ தன் முகத்திரண்டு அம்புகளாலே நோக்கிக் கொண்டு போகிறாள். ஆம் ‘அம்பன்ன கண்ணாள் அசோதை’ அல்லவா?

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

ஏன் கார்மேனி? கருத்து நீலமேக வண்ணன் அப்படியா? ஆயி கூறும் அற்புதக் கருத்து.: கார்மேகம் என்பது நிலத்தின் வறட்சி நீங்கும்படியாக வேண்டிய அளவு நின்று பெய்யும் படியாகத் தன்னுள் நிறைந்த நீரைக் கொண்டு அதனால் கார்மேகம் ஆகிறதோ, அதைப் போன்று தம்மைக் காண்பார் நெஞ்சாறல் எல்லாம் தீரும்படி, தாபம் எல்லாம் ஆறும்படி நின்று உருக்காட்டும் அத்தனை அழகும் திகழ்பவன் ஆகையாலே கார்மேனி.

செங்கண் - நம்பக்கல் தாயினும் ஆயின கருணையினால் குதறிச் சிவந்த கண்கள்; அஞ்ஜன கிரியில் இரண்டு தாமரைப் பொய்கை போல

கதிர்மதியம் போல் முகத்தான் -- ’சந்த்ரபாஸ்கர வர்ச்சஸம்’ ஆச்ரிதர்க்கு நிலவு போலே, அநாச்ரிதருக்கு வெய்யில் போலே; ஆச்ரிதருக்கு புனல் உருவு, அநாச்ரிதருக்கு அனலுருவு

***

திருப்பாவைக்கு நாலாயிரப்படி என்னும் வியாக்கியானமும் ஜநந்யாசாரியார் என்னும் திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்தது. மின்னல்களாகப் பல வார்த்தைகள் மிளிரும் அரிய உரை.

”ஒரு போகியாக உறங்கினவன் இனி அநந்தகாலம் ஒரு போகியாக உணர்ந்தே இருக்கும்படி சொல்லுகிறது”

’ஒரு போகியாக’ என்பது இடைவிடாமல் தொடர்ச்சி என்பதைக் குறிக்கிறது. இதுநாள் வரையில் இடைவிடாமல் தொடர்ச்சியாக அறியாமை என்னும் உறக்கத்தில் கிடந்த ஜீவன் இனி என்றும் முடிவேயில்லாமல் தன்னுடைய சைதன்யம் விழிக்கப் பெற்றவனாய் உணர்ந்தே இருக்கும்படியைச் சொல்லுகிறது இந்தத் திருப்பாவை என்னும் உன்னத நூல்.

இங்கு ஒரு கேள்வி எழும். உணர்ந்தாலும் அந்த உணர்வும் மீண்டும் முடிவுக்கு வராதா? ஒருகால் உண்டான உணர்த்திதானே? ஒரு காலத்தில் தோன்றின ஒன்று இன்னொரு காலத்தில் முடிவுக்கு வரும் என்பதுதானே லாஜிக். இங்கு நாலாயிரப்படி உரை காட்டும் விளக்கம் அருமை.

”உணர்ந்தது எம்பெருமானையாகையாலே உணர்த்திக்கு பாதகம் இல்லை. ப்ரக்ருதியைச் செறியச் செறிய இருள் மிகும். எம்பெருமானைச் செறியச் செறிய உணர்த்தி மிகும்.”

இங்கு அறியாமையாகிய உறக்கம் விழித்து ஜீவன் உணர்வது ஏதோ தோன்றி மறையும் உலகப் பொருளை அன்று. மாற்றம் கடந்த பரம சேதனன் என்னும் உணர்வுமயமான பரம்பொருளை அன்றோ உணர்கிறது இந்த ஜீவன்! அதனால் அந்த உணர்த்திக்கு ஒரு முடிவு என்பது இல்லையே! பிரகிருதி எனப்படும் இந்த இயற்கை தோற்றம், நிலை, மறைவு என்னும் மாற்றத்திற்கு உட்பட்டது ஆகையாலே இந்த இயற்கையைச் சாரும் உணர்த்தியும் இருள்தன்மை கொண்டதாக ஆகிறது. ஆனால் மாற்றம், விகாரம் எதுவும் அற்ற சத்யம் ஆன உணர்வுமயமான பரம்பொருளை உணருங்கால் அந்த உணர்த்தி புதிதாக உண்டாவதில்லை. இயற்கையோடு மயங்கிக் கிடந்த ஜீவன், தன்னுடைய தொடர்பை விடுத்து பரம்பொருளிடம் திரும்புங்கால் தனக்கு இயல்பான உணர்வாம் இயல்பு விழித்து வெளிப்படுகிறது. இறைவனை உணரும் நிலைக்கு வந்தமையால் அது மீண்டும் உறக்கம் புகுவதில்லை.

***
திருப்பாவைக்கு சுத்த ஸத்வம் தொட்டாசார்யர் என்னும் மகான் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்கியானம் (ஆழ்ந்த உட்பொருள் உரை) விசேஷம் நிறைந்தது. ‘ஆயர்பாடிச் சிறுமீர்காள்’ என்பது ஜ்நாநத்தில் பிறந்தவர்களைக் குறிக்கும் குறியீடு என்பது இவ்வுரையில் நான் பெற்ற விளக்கம். To be born in Divine Knowledge என்பது எத்தகைய ஆழ்ந்த தத்வார்த்தமான கருத்து, அதைக் குறியீடாக உணர்த்தும் ஓர் தத்துவக் கலை நுட்பம் திருப்பாவையில் அடங்கியிருக்கிறது என்பது எத்தகைய சிறப்பு. அதைக் கோடிட்டுக் காட்டுகிறது தொட்டாசார்யாரின் ஸ்வாபதேசம் என்பது உரைவளத்தைக் காட்டுவது.

இன்னொன்று, இது மூவாயிரப்படி, ஆறாயிரப்படி, நாலாயிரப்படி ஆகிய வியாக்கியானங்களும் பிரமாணமாகக் காட்டுகின்றன. ஸ்வாபதேச உரையும் காட்டுகிறது. என்னவென்றால் ’மார்கழி நீராட’ என்று வருவதில் நீராட என்பது கடவுள் உணர்வில் தான் தனது ஆகிய அனைத்தையும் இழந்து தோய்வது என்ற பரவச நிலையின் குறியீடு என்பதற்குத் தக்க பிரமாணம் காட்டுகிறார்கள். எதுவுமே தக்க சாத்திரச் சான்றுகள் இல்லாமல் ஏதோ கற்பனையாகச் சொல்லிவிடுவது என்பது வியாக்கியான ஆசிரியர்களிடம் கிடையாது என்பதற்கு இது உதாரணம். ஸ்ரீமஹாபாரதத்தில் மோக்ஷதர்மம் என்ற பகுதியிலிருந்து ஒரு சுலோகம்:

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோSஸ்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம் |
சாம்யாமி பரிநிர்வாமி ஸுகம் மாமேதி கேவலம் ||

’கோடையில் குளிர்ந்த குளத்தில் குடைந்தாடுவது போல் இந்த பிரம்மத்தினுள் குடைந்தாடுகிறேன். அதனால் சாந்தனாகிறேன். தாபம் ஆறினவனாகிறேன். ஸுகத்தையே அடைகிறேன்.’

அப்படியென்றால் எத்தகைய ஒரு தத்வார்த்தமான யோகானுபவத்தைத் தமிழ் அகத்துறை இலக்கணம், பாவை நோன்பு என்ற சமுதாயச் சடங்கு ஆகியவற்றை ஸிம்பாலிக் மொழியாக ஆக்கி அழகுறத் தந்திருக்கிறார்கள் என்பது வியப்பிற்குரிய ஒன்று.

***
’வையத்து வாழ்வீர்காள்’ என்றால் இந்த உலகத்தில் பிறந்து வைத்தும் பகவத் குணங்களில் ஈடுபாடு கொண்டு அதில் ஊக்கத்தோடு வாழக்கூடிய பாக்கியம் உள்ளவர்களே என்று குறிப்பதாக வியாக்கியானங்கள் கூறுகின்றன. மண்ணும், பொருளும், இன்பமுமே யாத்திரை என்று இருக்கும் உலகம். அதில் இருந்து வைத்தும் கடவுள்தான் தேவை, பகவானே வேண்டும் என்ற எண்ணமும், ஏக்கமும் இந்த ஸம்ஸார மண்டல ஜீவனையே விண்ணுளாரிலும் சீரியர் என்னும்படி ஆக்கவல்லது.

’கேளீரோ!’ - இவருடைய தகப்பனார் பாவம், ‘வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்’ என்று தேடினார். ஆனால் திருமகளாரோ வாழ்வீர்காள் என்னும் கூட்டத்துள் நடுநாயகி. தான் என்ற பதமே மறந்துவிட்டது. ஆயர் சிறுமியரோமுக்கு இப்படித்தான் வார்த்தை. அந்தக் கூட்டத்தின் நடுவே ஒரு வார்த்தை சொன்னால் எல்லாரும் அனைவரும் திரண்டு பகவத் திரளாய் இருக்கும் இருப்புக்கு மனம் தோய்ந்து இருக்கிறார்கள். கேளுங்கள் என்று சொன்ன பிற்பாடுதான் சொல்லும் வார்த்தையே காதில் விழுகிறது. இவள் சொல்ல வேண்டும். அவர்கள் கேட்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொருத்தரும் பிறரும் என்ற பரஸ்பரம். இதற்கும் பிரமாணம் காட்டுகிறார்கள் நம் பெரியோர்கள். ஸ்ரீமஹாபாரதம் ஆரம்பித்து இலட்சக்கணக்கான வரிகளுக்கு மேல் சொல்லி முடித்தாய்விட்டது. ஜனமேஜயனை வைசம்பாயனர் கேட்கிறார் - இவ்வளவு சொன்னேனே அரசே! இதில் எது உங்களுக்கு மிக முக்கிய செய்தி என்று பட்டது எது? கூறுகிறான் ஜனமேஜயன் --

புருஷார்த்தோSயம் ஏவைகோ யத் கதாச்ரவணம் ஹரே:

’எது முக்கிய உறுதிப்பாடு என்றா கேட்கிறீர்? இப்படி நீர் மேலும் மேலும் சொல்லிக்கொண்டு, அதையெல்லாம் நான் கேட்டுக்கொண்டு இருந்தேனே, ஹரியின் கதைகளை, இந்தக் கேள்விச் செல்வமே எனக்குப் பெரும் புருஷார்த்தமாகத் தெரிகிறது.’

பகவத் குணங்களில் ஈடுபட்டவர்களின் மனப்பாங்கு எவ்விதம் என்பதற்கு இந்தப் பிரமாண வாக்கியம்.

***
நாம சித்தாந்தம் சொல்லும் பாட்டு ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ என்பது. பகவானின் நாமத்திற்கு அவ்வளவு மகிமை என்கிறார்கள் வியாக்கியான ஆசிரியர்கள். நாமம் வாசகம். நாமத்தால் குறிப்பிடப்படும் நாமி வாச்யன். வாச்யனாகிய பகவானைக் காட்டிலும் மகிமை மிக்கது அவனுடைய திருப்பேர் ஆகிய பகவந் நாமம் ஆகிய வாசகம். ‘வாச்ய ப்ரபாவம் போலன்று வாசக ப்ரபாவம்’ என்கிறார் ஸ்வாமி பிள்ளை லோகாசாரியார். அவன் எட்டாக் கையில் இருந்தாலும் அவனுடைய திருநாமம் நமக்குக் கிட்டி நின்று உதவுகிறது.

ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாச்யனைச் சொல்லிப் பிறகு பேர் பாடி என்று அவன் நாமத்தைச் சொல்கிறார்கள். ‘கட்டிப் பொன் போலே அவன்; பணிப்பொன் போலே திருநாமம்’. வாச்யன் ஆகிய பகவான் நம்மை உளராக ஆக்குகிறான். நமக்கு இருப்பு என்கிற ஸத்தையைத் தருகிறான். அவனன்றி நம்முடைய எக்ஸிஸ்டன்ஸ் என்பது இல்லை. அவனை ஸத் என்று அழைத்தன உபநிஷதங்கள். தானும் உளனாய், தான் உளனாவதாலே அனைத்தும் உளதாய் ஆக்கும் காரணத்தாலே அவனுக்கு ஸத் என்று பெயர். நமக்கு ஸத்தை - இருக்கும் தன்மை அவனிடமிருந்து உண்டாகிறது. ஆனால் அனுபவிப்பது எதனால்? நாம் உளோம் என்ற காரணத்தாலேயே பகவத் விஷயத்தை அனுபவிக்கத் தோன்றிவிடுகிறதா? அனுபவம் என்பது வேண்டும் என்றால் அதை அவனுடைய திருநாமமே தரும் என்கிறார்கள் திருமால் நெறியில் பழுத்த ஆசிரியர்கள்.

அவனுடைய திருநாமம் சொல்வதற்கு அனைவரும் உரியர். திருநாமம் சொல்வதற்கான தகுதியைத் திருநாமமே ஏற்படுத்திக் கொடுக்கும். கங்கையில் புண்ணிய ஸநானம் செய்யப் போகும் ஒருவர் முதலில் தன்னைக் குளித்துத் தூய்மை ஆக்கிக் கொண்டோ போகின்றனர்? கங்கையானது தன்னில் நீராடும் தூய்மைத் தகுதியைத் தானே ஏற்படுத்திக் கொடுத்து புண்ணிய நீராடிய பலனையும் தருவதைப் போல பகவானின் திருநாமம் தன்னைச் சொன்னார்க்கு அனைத்துவித நன்மைகளையும் எதையும் எதிர்பார்க்காமல் தானே தரவல்லது.

***
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து - மழையை வேண்டுகிறார்கள். நன்கு பெய்ய வேண்டும். நின்று பெய்ய வேண்டும். நாடு வாழப் பெய்ய வேண்டும். வேண்டியவர் வேண்டாதார் என்று பார்க்காது அனைவருக்குமாகப் பெய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். அவரவர் புண்ணிய பாபம் பொறுத்து மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் உண்டு என்றபடியான தெய்வ நியமங்களை எல்லாம் மனத்தில் கொள்ளாமல், ஆயர் சிறுமியரோமாகிய தாங்கள் எப்படி குறைந்தவர் நிறைந்தவர், பெரியர் சிறியர், வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் பார்க்காமல் அனைவருக்கும் பகவானின் கருணை உண்டாக வேண்டும் என்று பாகவத திருக்கூட்டமாக அனைவரும் ஒன்று சேர்ந்து நோன்பு நோற்கிறோமோ, இந்த நோன்புக்குப் பெய்யும் நீயும் எங்களைப் போன்ற நியமத்தையே கொள்ள வேண்டும்.

அனைவரையும் பொதுவாகப் பார். உன் கருணை அனைத்து மக்களுக்குமாக இருக்கட்டும். நீ எப்படி மெய் கறுக்க வேண்டும் தெரியுமா? முதல்வனைப் போலே மெய் கறுக்க வேண்டும். அதுவும் சிருஷ்டித்த பிற்பாடு அவரவர் புண்ணியம் பாபம் என்பதைப் பொறுத்து அவரவர் வினைக்கீடாகப் பலன் என்று நிர்வாஹம் செய்யும் சிருஷ்டிக்குப் பின்பான நிலையில் உள்ள முதல்வன் போல் அன்று. சிருஷ்டிக்கத் தொடங்கும் போது ஜீவர்களுக்கு எல்லாம் ஒக்க பெருங் கருணையினால், கரண களேபரங்களைக் கொடுத்து, அதனைப் பயன்படுத்தித் தன்னை வந்தடைவார்கள் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் அனைவரையும் பொதுவாகப் பார்த்து கர்மங்கள், புண்ணியபாபங்கள் என்ற கணக்கு வழக்கெல்லாம் உண்டாவத்ற்கு முன் ஒரே கருணை புரிவானே அந்த நிலையில் உள்ள - ஊழி முதல்வன், - சிருஷ்டிக்கத் தொடங்கும் போதான நிலையில் இருக்கும் முதல்வன் அவனைப் போல் மெய் கறுத்து நீ பெய்ய வேண்டும்.

வியாக்கியான ஆசிரியர்களுக்கு என்ன பார்வை! என்ன இரசனை! என்ன தோய்வு!

***
தெய்வம் என்றாலே முதலில் நம் உள்ளத்தில் ஒரு தகுதி ஏற்பட்டிருக்க வேண்டும். அதுதான் வைராக்கியம். உலக விஷயங்களிலிருந்து நீங்காத நெஞ்சில் கடவுள் உவப்பதில்லை. ஏன் நமக்கு நிராசை ஏற்படக் கூடாது? ஏன் நம்மிடம் வைராக்கியம் ஏற்படக் கூடாது? வினைகள், வாசனைகள் என்று காரணங்கள் சொல்கிறார்கள். சரிதான் நம் வினை ஓய்ந்து நமக்கு வைராக்கியம் ஏற்பட்டு... நம் நெஞ்சம் தளர்வதுதான் மிச்சம்.

நம் நிலை தெரியாதா ஸ்ரீஆண்டாளுக்கு? அப்படி நம்மை முடிந்தால் வா இல்லையேல் போ என்று விடக்கூடியவரா ஸ்ரீவில்லிபுத்தூர் பெண்பெருமாள்? ஐந்தாவது பாசுரம் திருப்பாவையில் இப்படி நெஞ்சு அழுங்கும் நமக்காகவே இட்டருளிச் செய்த அவள் கிருபைக்கு தலைக்கு மேல் இருகைக் கூப்பன்றி நான் செய்வது ஒன்றுமில்லை. அதைக் கண்டுபிடித்து எழுதுகின்ற பூர்வாசாரியர்களுக்கு எவ்வளவு ஆன்மிக தயை!

தோழிகளை ஒன்று சேர்த்து விட்டாள். எல்லாரும் கூடினர். மழைக்கண்ணன் தானும் ஏதாவது பாகவத திருக்கூட்டத்திற்குக் கைங்கரியம் செய்ய வேண்டுமே என்று வானில் கனைத்துக் காட்டினான். பெய்வதை இப்படிப் பெய்ய வேண்டும் என்று அவனுக்கே பாடம் படித்து விட்டுத் தோழிகளிடம் திரும்பினால் ஒரு தோழி கேட்கிறாள்.

‘அது சரி! நாம் எல்லாம் கூடிவிட்டோம். பகவத் சிந்தனையே நம்முள் நிறைந்து காணப்படுகிறது. அவனுக்காக வந்துள்ள ஒவ்வொருவரைப் பார்க்கும் போதும் கழிபேருவகை உள்ளத்தில் வெள்ளமிடுகிறது. ஆனால் ஒன்றை நாம் மறந்துவிட்டோமே! நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் பகவத் ப்ராப்தி என்பது நம் போல்வாருக்குக் கிடைக்கக் கூடிய ஒன்றா? நல்ல காரியத்திற்கு ஆயிரம் இடைஞ்சல் என்பார்கள். நம்முடைய கர்மங்களோ அப்பப்பா கடல் போல் ஓயா அலையாக அன்றோ வினை அடிக்கிறது. இப்பொழுதே வினைக்கடல் வெகுண்டு நம் நற்பேற்றை வெறும் கனவாக்க ஆனவெல்லாம் செய்ய முயன்று கொண்டிருக்கும். அதை நினைத்தால்...’ என்று சோக வயமானாள்.

அதற்குத் தலைவியின் தகுந்த பதில் --

மூவாயிரப்படியின் அவதாரிகை ஐந்தாம் பாட்டு ’மாயனை’ என்பதற்கு --

’பெண்பிள்ளைகளில் ஒருத்தி, “நாம் இப்படியே கனக்கப் பாரித்துக்கொண்டு இழியாநின்றோம்; நமக்குத்தான் இது தலைக்கட்டுகைக்கு விச்வாஸம் என்? அநாதிகால ஸஞ்சிதமான கர்மங்கள் இதுக்கு விரோதத்தைப் பண்ணாதோ? ’’ச்ரேயாம்ஸி பஹுவிக்நாநி’’ அன்றோ?’ என்று ப்ரச்நம் பண்ண; அவர்களிலே வேதாந்த ஜ்ஞானமுடையாளொருத்தி “நாம் நம்முடைய விரோதிகளைப் போக்கிக்கொண்டு வந்து இதிலேயிழிகை என்று ஒரு பொருளில்லை; நமக்கு அடைத்த பகவத் அநுபவத்தைப் பண்ணாநின்றால், சேர்பால் போகரூபமாகப் பருகுமவனுக்குத் தன்னடையே பித்தம் போமாபோலே, இவை தன்னடையே விட்டு ஓடிப்போம்; ஆனபின்பு, இனி அயோக்யதையைப் பார்த்து அகலவேண்டா” என்கிறாள்’

கர்மம் நமக்கு ஏகப்பட்டது இருக்கே? நம்மை அனுபவிக்க விடுமா? நாம் என்னவோ பெரிய எதிர்பார்ப்போடு இருப்பது கடைசியில் வினைக்குக் கொண்டாட்டமாய் ஆகப்போகிறது என்று ஒரு தோழி சொன்னதற்கு மற்றொரு தோழி வேதாந்த ஜ்ஞானம் உடையவள். அவள் கூறுகிறாள். இதோ பார்! ஒருவர் ஒருசேர் பால் ஆசைப்பட்டு இரசித்துக் குடிக்கிறார் என்றால் அவரிடம் உள்ள பித்தத்தை அந்தப் பாலே போக்கிவிடாதோ? கூடவே மதுரமாக அவருக்கு போக்கியமாக இருப்பதோடு சேர்த்து? அவர் பித்தம் போக முதலில் மருந்து தேட வேண்டுமா? இல்லையென்றால் ஐயோ பித்தம் இருக்கிறது நான் எப்படி இந்தப் பாலைக் குடிப்பது? என்றா கவலைப் படுவார்? அதுபோல் நாம் நம் உள்ளம் கொள்ளை கொள்ளும் பகவத் அநுபவத்தைப் பண்ண அந்த அநுபவமே நம் கர்மங்களாகிய அனைத்து விக்கினங்களையும் பொடியாக்கிவிடாதோ? நமக்கு என்ன அதைப் பற்றிக் கவலை? எனவே ஐயோ நம் அயோக்யதையை நீக்கி யோக்யதையை எப்படி சம்பாதிப்பது என்றெல்லாம் கவலையே படாதே என்று அந்த வேதாந்தத் தோழி உரைக்கிறாள்.

இதைப் பெருங்கருணையால் எழுதியும் வைத்து, நம்மையும் இரசிக்க வைத்த அந்த ஸ்ரீஆண்டாளோடு சேர்ந்து,

‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூயபெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போயபிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.’

***

No comments:

Post a Comment