பல ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடந்தவை நினைவில் நிழலாடுகின்றன. அது ஒரு காலத்தின் கனவுகள். காட்சியடங்கியும் கருத்தடங்காமல் நினைவில் பதிந்துவிட்ட ஊக்க உன்மத்த அனுபவங்கள். அவற்றில் தலைமுறைகளைத் தாண்டி வந்து கொண்டிருக்கும் பாரம்பரியச் செல்வங்கள் என்பதற்கு ஓர் உதாரணமாக இந்த நினைவு எழுகிறது. “உலக உண்மையை ஊற்றமுடன் ஸ்தாபித்தவர் மகாத்மா அரிஸ்டாடில். (Aristotle) உண்மை ஒரே நேரத்தில், ஒரே விதத்தில், ஒரே அம்சத்தில் உள்ளதும் இல்லதுமாய் இருத்தல் இயலாது என்ற முரண்பட இயலாக் கோட்பாட்டின்பால் உலக வாழ்வியல் தத்துவத்தையே எழுப்பிக் காட்டினார்” என்றேன். நண்பர் விடுவதாக இல்லை.
“இவ்வாறு உலக உண்மையை அடிப்படையில் வலிமையாக உரைத்தவர்கள் வேறு யார் யார் உலக தத்துவ இலக்கியங்களில் உண்டு?” என்று கேள்வியை விரிவாக்கினார்.
பேச ஆள் கிடைத்தால் நமக்கென்ன வந்தது? இருப்பதைச் சொல்வோம் என்று ஆரம்பித்து, பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில், அதுவும் திருவரங்கத்தில் வாழ்ந்த ஸ்ரீராமாநுஜர் போன்றவர்கள் எப்படி அறிபவன், அறிவு, அறியப்படு பொருள் ஆகியவற்றின் சத்யத்வத்தைச் சாதித்தார்கள் என்றெல்லாம் விளக்கி வந்தேன். ஸ்ரீராமாநுஜர் செய்த சாதனை எப்படி இன்னும் வரவாறாக, திருவரங்கத்தில் சமுதாயமும், சம்பிரதாயமும் பிணைந்த கலப்பாகத் தம்முள் தாங்கி நின்று ஓடிக்கொண்டிருக்கிறது என்று விவரித்தேன். நண்பர், “நமது பக்கத்திலேயே இப்படி ஒரு யுகம் நடந்திருக்கிறது என்றால், நாம் ஏன் நேரடியாக அங்கேயே போய் நீங்கள் விளக்கவும், நாம் பார்த்தவாறே கேட்கவும் செய்யக் கூடாது என்று சொல்லவே, ஒரு நேர் கற்றல் பயணமாகத் திருவரங்கம் சென்றோம். பல தலைமுறைகளைத் தாண்டி எங்கள் பயணம் சென்றது. தடமதில்கள் வரலாற்றின் தடவழியில் தடயங்கள் என்பதைக் கண்டோம். தத்துவத்தின் சமுக அமைப்பு வரலாற்றைச் சார்ந்த தடயங்களாகப் பல தலைமுறைகளைச் சந்தித்தோம். இப்படி இலக்கியம், மதம், நடனம், சங்கீதம், கைவினைப் பொருட்கள், சிற்பம் என்று எத்தனைத் துறைகளில் எத்தனை தலைமுறைகள்! இவர்கள் எல்லாம் இன்றும் சந்திப்பதற்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் ஒரு காலக் கப்பல் கட்டிக் கொள்ள வேண்டும். அத்தகையதொரு காலக் கப்பலைக் கட்டி, நண்பர்களை ஏற்றிக்கொண்டு பல துறைமுகங்கள் சென்று வந்த ஒரு யுலீஸஸாகத்தான் என்னை என் கடந்த கால நினைவுகள் சமயத்தில் நினைக்க வைக்கின்றன.
ஒரு தடவை வேடுபறி உற்சவம் திருவரங்கத்தில் அந்தத் தடவை ‘திருமங்கை மன்னனுடைய பங்களிப்பு ஸ்ரீவைஷ்ணவ தத்துவ மரபிற்கு’ என்ற தலைப்பில் எங்களுடைய நேர்கற்றல் பயணம் அமைந்திருந்தது. அதற்காக நண்பர்களை இரண்டு குழுவினராகப் பிரித்து, ஒரு குழு வேடுபறியின் போது திருமங்கை மன்னன் கோஷ்டியில் வர வேண்டும். மற்றொரு கோஷ்டி பெருமாளின் பக்கம் நிற்க வேண்டும். திருமங்கை மன்னன் கோஷ்டி தெப்பக் குளம் தெருவிலிருந்து ஆரம்பித்துத் கோவிலை நோக்கி வருவார்கள். இந்தக் காரணத்திற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும், கூட்டத்தினர் மிக உற்சாகமடைந்து, “வாருங்க சார்! இது முழுக்க நமது தினம்” என்று தங்களோடு அணைத்துப் பேசும் பொழுது எவ்வளவு தலைமுறைகளைத் தாண்டி இந்த உற்சாகம் இன்றும் வந்து அலையெறிகிறது என்ற வியப்புதான் எங்களுக்கு எழுந்தது.
தலைமுறைகளைத் தாண்டிக் குதித்து இன்றும் இனியும் சென்று கொண்டிருக்கும் இந்த உற்சாக ஆறுகள் ஏதோ என்றென்றும் கலங்கலில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது என்று சொல்லிவிட முடியாது.. ஆனாலும் அந்தக் கட்டங்களையும் தாண்டியும் இன்றும் அந்த ஆறு தெளிந்து ஓடி வருகிறதே, இது காலமென்னும் வடிகட்டியின் விந்தையோ! என்றோ, எப்பொழுதோ, எந்தத் தலைமுறையிலோ கண்ட விளக்கங்களும், அறிவுகளும், கலைப் படைப்புகளும் அந்தந்தக் காலக் கட்டங்களோடு போகட்டுமே. இன்று நமக்கு என்ன தேவை என்பதை நாம் கண்டு பயன் படுத்திப் போட்டுவிட்டுப் போய்விடுவோம். இனிவரும் காலம் தனக்கு என்ன தேவை என்பதைத் தானே பார்த்துக் கொள்ளட்டும். கடந்த காலமானது இன்று வழியை அடைத்த தடையாகவோ, தூக்கிச் சுமக்க வேண்டிய பாரமாகவோ ஏன் ஆக வேண்டும்? என்ற எண்ணங்கள் தலைமுறைகளைத் தாண்டி வரும் வரவாற்றை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் பிறக்கின்றன. இன்று விஞ்ஞானத் தொழில் நுட்பம் மிகுந்த ஆலைகளில் உருக்கி வார்க்கப்படும் இரும்பு நம் உலோகத் தேவையை மின்சார வேகத்தில் நிறைவேற்றும் பொழுது தலைமுறைகள் முன்னே தெருவில் குழி தோண்டி, துருத்தியை அடித்து இரும்புருக்கும் வழி என்ன பயன் தரும்? நல்ல கேள்விதான். ஆனால் எல்லாவற்றையும் பொதுச் சந்தையாக்கி, ஒரே தரத்தை ஊரெங்கும் பரவச் செய்கிறோம். பெருந் தேவைகளுக்கு வேண்டியவை இரும்பு ஆலைகளில் உருக்கப்பட்டால் நமக்கு வேண்டிய கரணையும், ஸ்பூனும், மம்முட்டியும், கடப்பாரையும் ஏன் அந்தந்தப் பகுதிகளில், கிராமங்களில் இந்த எளிய வழிகளில் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. பெருந்தேவைகளுக்குப் பெருக்கெடுத்தோடும் படைப்பாற்றின் பக்கக் கசிவுகளாய்ப் பிதிரும் பிசிர்களால்தான் சிறு தேவைகளும் பூர்த்தியாக வேண்டுமா?
தெருவோரத்தில் மரத்தடியில் துருத்தியடித்து இரும்புருக்கும் முறை ஒரு பழங்காலக் கைத்தொழில் முறையாகத்தான் ஒதுக்கப்பட்டு விட்டது. ஜன சமூகத்தின் வாய் மொத்தத்திற்கும் எந்த அட்சய பாத்திரமும் அன்னம் பாலித்துவிட முடியாது. அங்கங்குள்ள தேவை, அதற்கேற்ற உற்பத்தி, அதற்கான நுகர்வு என்ற இத்தகைய ஆக்க பூர்வமான சுழல்களைப் பிரித்து ஒரே புரியாகக் கட்டிவிட்டால் வாழ்வில் பல ஊற்றுக் கால்கள் சுரப்பு விடக் கொழிக்கும் உயிர்ப்பும், வளமும் அங்கே திகழா. இதைச் சொன்னால் தொழிற்சாலை வேண்டாம் என்றோ, பின்னோக்கிப் போவோம் என்று பொருளில்லை. நாம் வாழுகின்ற சூழ்நிலை, உலகம், அங்குலவும் தேவைகள் இவற்றை உற்றுப் பார்ப்போம். அதற்கேற்ப நம் நடவடிக்கைகள் அமையட்டும் என்றுதானே பொருள். நாம் எங்கே இவற்றைக் கவனிக்கிறோம்? பதிலாக நம் தேவைகளை மறக்கடிக்கப் பொழுதுபோக்கு, கேளிக்கைச் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். பசி வந்தால், தாகம் எடுத்தால் சோறு தண்ணீருக்குப் பதில் போதை மருந்துகளைக் கொண்டு பசி தாகத்தை நினைவிலிருந்து அகற்றிவிடுவதைப் போல இவை நமக்குப் பயன்படுகின்றன. இந்தப் பொழுது போக்கு, கேளிக்கைகள் முன் தலைமுறைகளில் இருந்ததில்லையா? இப்பொழுதுதான் வந்ததா என்று கேட்கலாம். அப்பொழுதும் இருந்தது. ஆனால் கேளிக்கை ஒரு பொதுச் சந்தைக்குத் தீனி போடும் தொழில்மயமாக ஆனதில்லை. எனவே ’பொழுது போக்கு என்பது தேவைகளைப் பூர்த்தி செய்தபின்’ என்ற பாமர ஞானம் காவு கொடுக்கப்படவில்லை. அங்கங்கு ஏற்பட்ட உணர்வுத் தேவைகள், அறிவின் அலசல்கள், பொழுது போக்கு தரும் உணர்ச்சித் தீனிகளை உன்னிப்பாகச் சோதனையிட்டுக் கணிக்கத் தவறவில்லை. இது எப்படிச் சாத்யமாயிற்று?
எப்படி என்றால் அங்கங்கே இருந்த வட்டாரச் சந்தைகள், தொழிலோ, கலையோ, கைவினையோ, உழவோ, இலக்கியமோ எதிலும் சரி தங்கள் தேவைகளுக்குப் பூர்த்தியைத் தாங்களே தேடிக்கொண்டன. ஊட்டும் கரமொன்று கண்ணுக்குப் புலப்படாத வகையில் எங்கிருந்தோ வந்து வேளா வேளைக்கு ஊட்டிவிடும் என்ற தூளியில் தொங்கும் மனப்பான்மை ஏற்பட வழியில்லாமல் இருந்தது. ஊட்டும் கரம் உழைக்கும் கரம்தான் என்ற நிதர்சனம் பார்வைக்கு மறையவில்லை. உழைக்கும் கரங்களின் உடல் ஓய்விற்கும், உணர்வின் செழிப்பிற்கும், உயிர் ஊக்கத்திற்கும் தேவையான அளவுதான் உணர்ச்சிகளுக்குத் தீனியிட வேண்டும் என்ற இயல்பு வாழ்க்கையில் நேர்ந்துகொண்ட புரிதல் என்பது கிராமமாயினும் சரி, நகரமாயினும் சரி இயக்கத்தில் இருந்தது. இந்தப் புரிந்துகொள்ளுதல் அநாவசியம் என்ற விபரீத பிரமை எந்தப் பொதுச் சந்தையின் பூதாகாரமான யந்திர இயக்கக் கட்டடங்களாலும் ஏற்படுத்தப் பட்டுவிடவில்லை.
கலைகளையும், இலக்கியத்தையும் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவன் இரும்பு, தொழில், கிராமம் என்று காடுபாய்ந்து செல்கிறேன் என்பது அர்த்தமன்று. தலைமுறைகளைத் தாண்டி நமக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பல நன்மைகள் நமது பொது வாழ்வில், அது அமைந்திருக்கும் விதத்தினாலேயே, எழுந்துவிட்ட பல போதைப் போக்குகளினாலேயே மறுதலிக்கப்படுகின்றன என்பதை ஜீரணிக்க மிகவும் சிரமமாகத்தான் இருக்கிறது. பெண்கல்வி பற்றிப் பேசுகிறோம். பல திட்டங்கள் வகுத்து, சதவிகிதத்தை உயர்த்தியிருக்கிறோம். ஆனால் ஸ்ரீபெரும்பூதூரில் ஒரு பத்தி யதிராஜம்மா இருந்தது இன்னும் என் நினைவை விட்டு அகலமாட்டேன் என்கிறது. பார்ப்பதற்குக் கூன் விழுந்து, தொண்டு கிழமாய் எங்கோ கொல்லைப்புறத்தில் ரேழியில் அமர்ந்து ஏதோ தனக்குத்தானே பாடிக்கொண்டிருந்த ஒருவராகத்தான் வெளிப்பார்வைக்குத் தெரிந்த அவர் அணுகி அமர்ந்து பேச்சுக் கொடுத்தால் எவ்வளவு சாஸ்திரக் கருத்துகளை அந்தச் சொல் ப்ரயோகங்கள் கூடப் பிசகாமல் எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார் என்பது வியப்புக்குரியதுதான். பல பத்தாண்டுகளுக்கு முன்பு ஆந்திராவிலிருந்து வந்து ஸ்ரீபெரும்பூதூரிலேயே தங்கிவிட்டவர். பல பழங்கால வித்வான்கள் ஸ்ரீவைஷ்ணவ மதத்தைப் பற்றி வியாக்கியான நூல்களை வைத்துக்கொண்டு வரிவரியாகப் படித்து விளக்கம் சொல்லிச் செல்லும் கிரந்த காலக்ஷேப முறையில் பெற்ற அறிவை எவ்வளவு ஆர்வமாகச் சேமித்து வைத்திருந்திருக்கிறார்! சொல்லுக்குப் பொருள் நுணுக்கங்கள் காணும் முறைகள், நெருடலான பாட்டுகளின் உட்பொருட்கள், வடமொழித் தொடர்களின் விளக்கங்கள், கல்வியறிவில்லாத (பள்ளிக்கூடம் சென்றிருப்பாரா தெரியவில்லை) ஒரு பாகவத மூதாட்டியின் நினைவில் படிந்திருந்ததைப் பெண்கல்வி என்று சொல்வதா? அல்லது ஏதோ மதத்தில் ஏற்பட்ட மயக்கம் என்று கழித்துக்கட்டி விடுவதா? இது போன்று எத்தனை பத்தி யதிராஜம்மாக்கள், கல்வி யறிவில்லாத என்று நாம் சொல்லக்கூடிய கிராமத்தினர், வாய்மொழியாகக் கேட்டதை நினைவில்கொண்டு தங்களுக்கென்று ஓர் உலகின் ஓரத்தைப் புழக்கமாகக் கொண்டு...! இவர்கள் நமக்கு என்ன தந்துவிடுவதற்காக இருந்தார்கள்?
கும்பகோணத்தில் சிற்பங்கள், விக்கிரகங்கள் செய்யும் பழைய குடும்பம் ஒன்றை நாடிச் சென்றேன் பல வருடங்களுக்கு முன்பு. அவர்கள் உலோகத்தை எப்படி அணுகுகிறார்கள்... கல்லோ, பித்தளையோ, ஐம்பொன்னோ அவர்கள் உலகத்தில் அவையெல்லாம் கேந்திரமான விஷயங்கள். ஒவ்வொரு சிலையையும் முடிக்கும் போதும் ஏதோ அதற்குள் உயிரை ஊதி விடுவது போன்ற மூலப் படைப்பின் ஆயாசத்தை ஒரு திவலையேனும் உணராமல் இருப்பார்களா? தங்கள் கைவினையைக் கலைநுட்பத்தில் தலைக்கட்டிக் கொண்டுவந்து, கண் திறக்கும் அந்தக் கண நேரத்தில் அவர்களுடைய சிற்றுளியும் கூட ஒரு திமிறு திமிறியல்லவா அடங்குகிறது! ஆனால் அதே சிற்பியை, ஒரு கொல்லனைப் பழைய தலைமுறையில் ஒரு வட்டாரச் சந்தையின் பொழுது போக்கிற்கு அவன் தொழிலைப் படம் பிடித்து மேடையேற்றுகிறார்கள் பாருங்கள்! ஒரு வெண்பாவில் --
ஆழிப்படை கொண்ட திருமால் ‘எங்கே என் ஆழி? இன்று தருவதாகச் சொன்னாயே!’ என்பாராம். அயன் ஆகிய நான்முகன், ‘எழுத்தாணி மொண்ணையாகிவிட்டது. கூராக்கிக் கொடு என்றேன். இன்று தருவதாகச் சொன்னாய். எங்கே?’ என்பாராம். முருகன், ‘குன்றெறிய என் வேல் வேண்டும். இன்று வடித்துத் தருவதாகச் சொன்னாய். எங்கே?’ என்பாராம். சிவனோ, ‘என் கைவிட்டு மழு ஆயுதம் ஒரு நாளும் பிரிந்ததில்லை. இன்று தருவதாகச் சொன்னாயே! தயாரா?’ என்பாராம். யாரிடம்? ஒரு கருமானிடம். உலைக்களத்தில் உருக்கி வார்த்து அடிக்கும் கைவினைத் திறன் முற்றிய சிங்கன் என்னும் கருமான் உலைக்களத்தில், கடவுளரே தங்கள் ஆயுதங்களைச் சரி செய்துகொள்ள, வேறு எவரையும் நம்பாமல், சிங்கன் தொழில் நேர்த்தியின் காரணமாக வந்து நெருக்குகிறார்களாம்.
’ஆழியான் ஆழிஅயன் எழுத்தாணி என்பார்
கோழியான் குன்றெறிய வேல்என்பான் - பூழியான்
அங்கை மழுஎன்பான் அருள்பெரிய மாவண்டூர்ச்
சிங்கன் உலைக்களத்திற் சென்று.’
அந்தப் பழந்தலைமுறையின் பக்தி சார்ந்த மனப்பான்மைதான் அன்றாட வாழ்க்கையையும் பற்றி யோசிக்கிறது. கேட்பவருக்குக் கடைசியாக மனத்தில் என்ன படுகிறது? தொழில் நேர்த்தி என்பது துல்லியமாகத் திகழவில்லையா? பொழுதும் போகவில்லையா? இதை ஒரு மேடையில் கம்பர் பாடக் குழுமியிருந்த மக்கள் உணர்ந்து உணர்ந்து ரசித்திருப்பார்களே? பொழுது போக்குக் கேளிக்கைதானே? எது இன்றியமையாதது? எது அதைச் சார்ந்து அமைவது? என்ற விவேகம் அன்று மறையவில்லையே! ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் கண்மூடித் தனமாகப் பழமையை விரும்புபவன் அன்று. புதுமையின் எல்லைகளைப் புரிந்துகொள்ளும் போது பழமையில் உட்கரந்து நிற்கும் பல புதுமையின் கூறுபாடுகள் கண்ணுக்குப் புலப்படவே செய்யும். பழமை, புதுமை என்பதும் ஒரு சௌகரியமான பழகிப்போன எல்லைக் கோட்டிற்கு அப்பால் பொருளிழந்து எது உண்மை? எது வாழ்விற்கு உகந்தது? எது இப்பொழுது தேவை? என்ற வகைதொகைகளாக வடிவம் கொண்டு எழுகின்றன. என்றோ காவிய மீமாம்ஸை செய்த ராஜ சேகர பண்டிதன் இன்று (Roland Barthes) ரோலண்ட் பார்த்தைப் படிக்கும் பொழுது நினைவுக்கு வருகிறார். ஜேம்ஸ் ஜாய்ஸின் ஃபினிகன்ஸ் வேக் (James Joyce, Finnegans Wake), வக்ரோக்தி ஜீவிதம் கொள்கையை எனக்கு நினைவில் எழுப்புகிறது. 13, 14ஆம் நூற்றாண்டில் அழகியமணவாளப் பெருமாள் நாயனார் எழுதிய ஆசார்ய ஹ்ருதயம் என்ற நூலில், அந்தச் சூத்திரங்களை, அவர் அமைத்திருக்கும் முறைக்கு holographical hypertext syntax என்று புதுப்பெயர் சூட்டலாமா என்று தோன்றுகிறது. ஃப்ரட் ஹாயில்ஸ் (Fred Hoyle) என்ற இயற்பியல் விஞ்ஞானி கூறும் ஸ்திர நிலைக் கொள்கை, பாகவதத்தில் வரும் “ப்ரபஞ்சத்தில் பொருள் ஒரு பொழுதும் இல்லையாகப் போவதில்லை. ப்ரபஞ்சமாகிய இது இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியேதான் முன்னும் இருந்தது’ (3-10-13) என்ற சுலோகத்தை ஞாபகத்தில் கொண்டுவருகிறது. இவற்றிற்கெல்லாம் என்ன பொருள்?
பழங்காலத்தில் அவர்கள் சொன்னதையும், இப்பொழுது இவர்கள் கூறுவதையும் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருப்பதா அதுவன்று விஷயம். பழமை என்று காலத்தின் ஒரு பகுதியையும், புதுமை என்று காலத்தின் மற்றொரு பகுதியையும் நாம்தான் கோடு கிழித்துப் பாண்டி விளையாடுகிறோம். அணுகப்பட்ட ப்ரச்சனைகளோ, அணுகப்பட வேண்டிய ப்ரச்சனைகளோ ஒன்றும் பெரிதாக மாறிவிடுவதில்லை. அணுகும் நாம்தான் மாறியாக வேண்டும். ஒரு விதத்தில் பார்த்தால், தலைமுறைச் சங்கிலியில் ஊடாடி வரும் மனித அறிவு, சைதன்யம் என்பதோடு ஓர் ஒன்றிய உணர்வில் நாம் சொல்லப் போனால், நாமேதான் அந்தக் காலத்தில் அந்தப் பிரச்சனைகளை அந்த உருவத்தில் எதிர்கொண்டு அத்தகைய தீர்வுகளைக் கண்டோம்; நாமேதான் இன்று அதே பிரச்சனைகளை இந்த உருவத்தில் எதிர்கொண்டு தீர்வு கண்டும், காண வேண்டிய நிலையிலும் இருக்கிறோம் என்று சொல்லிவிட இயலும். கவிஞர் திருலோக சீதாராம் அவர்களை, அவருடைய கவிதைத் தெறிப்புகளைப் பார்த்த நண்பர் ஒருவர், ‘கவிஞரே! நீங்கள் இந்த வரியில் கூறியிருப்பது போல்தான் ஷெல்லி கூறியிருக்கிறார். இந்த வரிகள் அப்படியே வேர்ட்ஸ்வொர்த்தை நினைவூட்டுகின்றன. இதோ இந்த வரிகள் ஷேக்ஸ்பியர்தான்.’ என்று கூறினாராம். கவிஞர் அதற்கு, “உனக்குத் தெரியாதா? நானேதான் ஷெல்லியாக இருந்தேன். ஷேக்ஸ்பியராக இருந்தேன். வேர்ட்ஸ்வொர்த்தாக இருந்தேன். அப்பொழுதெல்லாம் அவ்வாறு சொன்னேன். இப்பொழுது இவ்வாறு சொல்கிறேன்.” என்றாராம். மனித சாதனை, தலைமுறைகளைத் தாண்டி வந்ததையும், தாண்டிச் சென்று நாம் பார்க்க வேண்டி இருப்பதையும், தாண்டி இனிமேல் சென்றடைய வேண்டியதையும் நோக்கும் பொழுது இப்படித்தான் சொல்ல நேர்ந்துவிடுகிறது.
தலைமுறைகளைத் தாண்டி நேர்கற்றல் பயணத்தில் ஒரு முக்கியமான வழிநடத்தும் கருத்தாக ஒன்றைக் கொண்டிருந்தேன். அதாவது ஒரு சித்தாந்தம், அதைக் கொள்கின்ற சமுதாயத்தினரால் எப்படி உள்வாங்கி, ஊடியங்கி, வெளியிலிருந்து அதற்கு அர்த்தமும், அதன் கோட்பாடுகளினால் தங்களுடைய வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு ஓர் அர்த்தமும் எப்படிக் காண முடிகிறது? அந்தக் கூட்டத்தினர் தங்கள் சாத்திரத்தைத் தங்களுக்கே எப்படி வியாக்கியானித்துக் கொள்கின்றனர்? வார்த்தைகளால் மட்டும் அன்று, தங்கள் வீட்டு, வெளி, கூட்டு, சமுதாய செய்கை ப்ரதிசெய்கைகளின் மொத்தத்தினாலுமே.? அதாவது நூலிலிருந்து அந்தச் சமுதாயச் சந்தைக்கும், அந்தச் சந்தையிலிருந்து அவர்தம் நூலுக்கும் போய் வந்துகொண்டிருக்கும் ஒன்றுக்கொன்றின் தொடர்புணர்த்தும் அம்புக் குறிகள் எந்தச் சமன்பாட்டில் சந்திக்கின்றன? (இந்த விஷயமாக எனக்கு நினைவுக்கு வருவது Stanley Fish என்பாருடைய Is there a Text in this class? என்னும் நூலில், சமுதாயமும், நூலும் ஒன்றுக்கொன்று பொருள் காணும் அம்சத்தை விவரித்திருப்பதுதான்.) இது நான் கொண்ட வழிநடத்தும் கருத்துக்கோவைகளில் ஒன்று.
மைசூர் பக்கத்தில் இருக்கும் மேல்கோட்டைக்கு (திருநாராயணபுரம்) சென்றபொழுது அங்கு கோவிலைச் சுற்றித் தங்கிவிட்ட மக்கள் தங்களை வைணவம் என்ற ஒரு பெருநூலின் சில அத்தியாயங்களாகத்தான், தங்களின் பல்லாண்டு கால சமுதாய வாழ்க்கையையே கருதுவதுபோல் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க ஒரு கணம் அதிசயமாக இருந்தது. ஆனால் தலைமுறைகளைத் தாண்டியும் சமுதாய வாழ்க்கை அனுபவங்கள் நிலைகொள்ள முடியும் என்பதை எனக்கு நன்கு புரியவும் வைத்தது.
காலத்தின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும் அனைத்தில் உள்ளடங்கிய ஒன்றுதான் நாமும், நம் உலகமும், சாதனைகளும் என்ற யதார்த்தம் மனத்தில் அடக்கமுடைமையை விளைவிக்கிறது. ஆயினும் காலத்தையும் வெற்றிகொண்டு நிலைக்கும் ஓர் ஊக்கம் நம் இதயத்துள் எழுகிறது என்பதை இல்லை செய்ய முடியுமா? அதற்குப் போக்குவீடுதானே கலைகளும், இலக்கியமும், நூல்களும் எழுத்தும், கட்டிடங்களும், வழிவழியான வரவாறுகளும். தலைமுறைகளைத் தாண்டி நாம் கொடுக்க நினைக்கும் சேமிப்பு நிலைத்த தத்துவங்களைப் பற்றிய தெளிவாக்கம் மட்டுமன்று, அன்றாடச் சூழல்களில் நாம் பெற்ற படிப்பினைகளும், சாதனைகளும் பற்றிய நிதானங்களையும் அல்லவா?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment