Friday, January 24, 2020

அடியேன் ராமாநுஜ தாசன்

அது ஒரு கூட்டமாய்க் கிளர்ந்து குடைந்து தேடிய பருவம். இந்தக் கூட்ட யத்தனம் எல்லாவற்றிற்கும் தூண்டுகோல் சிலபேர் அமைவது நியதி. இருந்தாற்போல் இருக்கும். திடீரென்று ஒருவர் சந்நதம் வந்ததுபோல் ஓர் உற்சாகத்தை வெளியிடுவார். ஒரு பெரும் பாட்டையே திறந்து நெடுகப் போய்க்கொண்டே இருக்கும். இப்படி அமைந்த சந்தர்ப்பம் ஒன்றுதான் யாங்கள் கிளர்ந்த கூட்டத் தேட்டம். நண்பர்கள் எனக்கு அறிமுகம் ஆகியது 1987, 1988 என்று நினைக்கிறேன். மேலைநாட்டுத் தத்துவ விசாரம் மும்முரமாகப் போய்க்கொண்டிருந்த நேரம். மாலை 6 மணிக்கு ஆரம்பித்த விவாதம் விசாரம் பல டீ கடைகளுக்குப் போய்வரும், காலாற நடக்கும், முக்கில் நின்று முக்கியமான கட்டத்தை முடிக்கும். அப்படி 12, 1 என்று நள்ளிரவுப் பொழுது நின்று வேடிக்கை பார்த்துச் செல்ல ஸ்கூட்டர்கள் ஒவ்வொன்றாய்க் கிளம்பும். கீழ் வீட்டுக்காரர் வீட்டின் சொந்தக்காரர். நாங்கள் இருந்தவரை கவலையே இல்லாமல் உறங்கினார். ஒரு சின்ன சத்தம் என்றாலும் அதான் இவ்வளவு பூத பிசாசங்கள் இருக்கின்றனவே!

அப்பொழுது அரிஸ்டாட்டிலின் தத்துவ மரபைப் பற்றி இயக்கவியலா மூலமுதலியக்கி என்ற கொள்கையை விவரித்துக் கொண்டிருந்தேன், நண்பர் திடீரென்று இவ்வாறு ஆணித்தரமாக இயற்கையின் சத்யத்துவத்தின் மீது எழுப்பப்பட்ட தத்துவ முறைகள் நம்மிடம் உண்டா? என்ற கேள்வியைப் போட்டார். ஏனில்லை என்று ஆரம்பித்து ஸத் க்யாதியின் அடிப்படையில் எழுந்த விசிஷ்டாத்வைதம் பற்றியும், ஸ்ரீராமானுஜரைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தேன். அவரது வாழ்க்கை, ஆழ்வார்களின் வாழ்வு கருத்து, அதற்கு முந்தைய நிலை, அதற்குப் பிந்திய நிலை என்று எங்கள் கூடியிருந்து குளிர்தல் (உண்மையிலேயே குளிர்தல் ஏனெனில் அதுகால் மார்கழி நெருக்கம்) போய்க்கொண்டிருந்தது. ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த மாதிரி மனிதர்கள் சமுதாயத்தில் முக்கிய திருப்பணியாளர்கள். சொல்ல ஆளிருந்தும், கேட்க ஆள் வந்தும், இரண்டு வித ஆள் சூழல்களை லிங்க் போடுவது அது தனி உற்சாகம் கைவந்த மனிதர்களுக்குத்தான் ஸ்வாபாவிகம்.

நண்பர் ஒருவர் வீட்டில் அவருடைய தந்தையைப் பெற்ற பாட்டி பாகவத அம்மாளாம். அதாவது பஞ்ச சம்ஸ்காரம் வாங்கிக்கொண்டு வீட்டு மனிதர்கள் சமைத்துக்கூட உண்ணாமல் தானே முடியுமட்டும் சமைத்து, படைத்து உண்ணும் ஒருவர். சென்னையிலேயே அப்படிப் பல பாகவத வாழ்நெறியினர் இருந்த அடையாளம்தான் இன்றும் 100 150 வருஷ பழமை வாய்ந்ததுவாய் இருக்கும் பல பஜனைக் கூடங்கள். நண்பரின் பாட்டி இவரோடு முதலிலெல்லாம் பேசுவதேயில்லையாம். எல்லாம் கெட்டுப்போய்ட்டதுங்க என்ற அலுப்பு சர்வ சாதாரணம். எங்களுடைய கூட்ட அரட்டையில் நண்பர் பல சிகரெட்டுகள், டீ எல்லாம் முடிந்தும் பேசாமலேயே ஓர வானைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன சார்? பேச்சே காணும். என்றதும். ஒரு கெட்ட வசவு பின்னர், 'எல்லாத்தையும் நாசம் பண்ணி வச்சிருக்காங்களே சார்! எங்க பாட்டி பழகவே பழகாது, நான் இங்க தெரிஞ்சுகிட்டத மெள்ள போய் அவங்ககிட்ட உட்கார்ந்து சொல்லி நம்ம பாரம்பரியம் என்ன தாத்தா காலத்துல நமது பண்பாடு எப்படி நம் குடும்பத்துலேயே பேணப்பட்டது? எல்லாத்தையும் சொல்ல ஆரம்பிச்சு விசாரிச்சேன். கிழவி அழுதுடுச்சு. அப்ப எங்க அப்பா அந்தப் பக்கமா க்ராஸ் பண்ணாரு. அவருக்கு வைச்சுது பாருங்க ஒரு திட்டு. 'மூதேவி கெட்டுக் குட்டிச் சுவரா போனீயேடா! பார்ரா! என் பேரன் வட்டியும் முதலுமா எங்கிட்ட கிடைச்சிட்டான்டா! அந்த உடையவர் கடாட்சம் எங்கடா போகும்? போயி அவனா யாருகிட்டயோ தெரிஞ்சுக்கிட்டு வந்திருக்கான் பாரு. உங்க அப்பன் பேரை கெடுத்தியேடா பாவி ஒன்னைக் கரையேத்துவான்டா என் பேரன்!'. எங்கள் கண்கள் குளமாகி விக்கித்துப் போய் நின்றோம். எந்தத் தலைமுறை எந்தத் தலைமுறையோடு சஹ்ருதயம் கொண்டாடுகிறது? இந்தத் தலைமுறைகளின் தொடர்ச்சியைத் துண்டித்தது யார்? அயல்நாட்டார் என்பது ஓரளவிற்கு. நாம்தான் நமக்கு ஒரு முன் தலைமுறைதான் அறியாமையை அறிவுபோல் சாயம் பூசி வைத்துக்கொண்டு துண்டித்தது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று புலனில் மக்கிபோகும் வாழ்க்கையைப் புரட்சி மனப்பான்மை போல் சித்திரித்து ஏன்று கொண்ட மடமைகளாய்ப் பஞ்ச பூதங்களும் நகும்படி அலைய வைத்தது நம் அறைகுறைத் தலைமுறை ஒன்றுதான். அதில் ஒன்றுதான் அந்தப் பக்கமாக க்ராஸ் ஆகி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கார்பன் ஆர்க் என்பார்களே அது தோற்றது போங்கள்.

பாட்டியும் பேரனுமாய் எம்பெருமானாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது, தந்தை பொதுக் கூட்டத்திற்கு நைஸாக நழுவுவது. பிள்ளைக்கு முன்னால் தகப்பன் தப்பு செய்தவன் போல் தயங்கியபடியே உள்ளே நுழைவது. வீட்டின் பண்பாடு முதல் தலைமுறையிடமிருந்து மூன்றாம் தலைமுறையிடம் அன்றோ பாய்கிறது. தள்ளி நிற்கும் நடுத் தலைமுறை எரியா பல்புதானே! யார் தொட்டாலும் சாப்பிடாத கிழவி பேரன் கொடுத்தா விசேஷமாம்! எதற்கும் ஓர் உடைபடு ரேகை உண்டல்லவா? 'அடியேன் ராமானுஜ தாசன்' என்று சொல்ல இந்த ஜன்மத்துல இந்த மூதேவிக்குக் கொடுத்துவச்சுருக்கா? போவுது பாரு சீவி சிங்காரிச்சு!. அவ்வளவுதான் ஒருகணம் நின்ற தகப்பன் முகத்தில் கோபம் வந்து மறைந்து சோகம் அப்பி, போட்ட மேக்கப் எல்லாம் வேஸ்ட் என்னும்படி, கண்ணில் கடைக்கோடி ஈரம் பூத்துக் கவிழ்ந்த தலை நிமிராமல் வெளியில் சென்றதைப் பார்த்த நண்பர் தம் தந்தைக்கு ஹிதம் எண்ணுபவராய்ப் பல சிகரெட்டுகள், டீக்கள் என்று முடிந்து மௌனம் கனத்து நடந்ததைக் கூறினார். பேரன் மாறவில்லை நடை உடை பாவனையில், பாட்டி கண்டிஷன் ஏதும் போடவில்லை, அப்படியே தன் பேரனை ஏற்று ரசிக்கிறாள். புற அடையாளங்கள் அங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாற்றம் எங்கு நிகழ்ந்தது? பண்பாட்டின் விளைநிலம் எங்கோ அங்கு நிகழ்ந்த மாற்றம் தலைமுறைகளை இணைத்துப் பண்பாட்டு மின்சாரம் பாய்ந்ததைப் பலமுறை கண்டிருக்கிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment