ஓங்கோலோ நெல்லூரோ அங்கிருந்து எந்தக் காலத்திலிருந்தோ வந்து ஸ்ரீபெரும்பூதூரே கதியெனத் தங்கிப் பல தலைமுறைகளைக் கண்ட கண்கள் இப்ப இப்பதான் டெலஸ்கோப் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அங்கு இருக்கும் ஸ்ரீராமானுஜரின் வழிவந்தவர்களான ஆசூரி ஸ்வாமி திருமாளிகையில் பெரிய ஆசூரி ஸ்வாமியிடம் அந்தக் காலத்தில் பல ஸ்ரீவைஷ்ணவ ரஹஸ்ய கிரந்தங்களைக் காலக்ஷேப முறையில் பாடம் கேட்டு அப்படியே மூலபாடம் வ்யாக்யானம், அதற்கு பத அர்த்தங்கள், நுட்பப் பொருட்கள் என்று நினைவில் வைத்தே சொல்லிக் கொண்டிருந்தார் மூதாட்டி. அந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் இந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் என்று authorwise catalogueம் போகிறவாக்கில் சொல்லிக்கொண்டு போகிறார். இத்தனைக்கும் தமிழ் எழுத படிக்கத் தெரியாது. தெலுங்குதான். தெலுங்கு லிபியில் போட்ட மணிப்ரவாள வ்யாக்யானங்களே மூதாட்டிக்கு ஜீவாது. மூதாட்டியின் பெயர் பத்தி யதிராஜம்மாள். அவருடைய அறை எது தெரியுமோ? வாசலில் நின்று பெல்லை அழுத்தினால் அதோ அந்தக் கடைசியில் நேர் ரேழி ஓடி கொல்லையில் முடிகிறதே அந்தக் கதவிற்கு முன்னால் போவோர் வருவோருக்கு வழிவிட்டு ஓரமாகக் கிடக்கை. வீட்டில் என்ன வண்டி வந்து போய்க்கொண்டிருக்கப் போகிறது? ஓரமாகத்தான் மூத்த தலைமுறைகளின் வாசம். நடுவில் அமர்ந்து நாம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறோம் என்று எனக்குப் புரிந்தபாடில்லை. முதலில்தான் தயக்கம். பிறகு பேசத் தொடங்கியதும், சேஷத்வ போக்த்ருத்வங்கள் அதற்கும் மேற்பட்டு பாரதந்த்ர்ய போக்யதைகள் என்று அகண்ட காவிரியாய் அரட்டை போய்க்கொண்டிருக்கிறது. எனக்கோ மிகவும் பிடித்த பேச்சு. திரும்பிப் பார்த்தால் அரைநாள் ஆகிவிட்டிருக்கிறது. வடமொழிப் பதங்கள், வ்யாகரண கோட்பாடுகள், அவற்றைப் பயன்கொண்டு நிர்வாஹங்கள் எல்லாம் படிக்காத அந்தக் காலத்துப் பெண்மணி தள்ளாத வயதில் தடுமாட்டம் இல்லாத நினைவோடு கூறுவது எப்படி முடிந்தது?
முதலில் மாதர்கல்வி என்பது என்ன ? இது என்ன? என்றோ ஆயிர வருஷங்களுக்கு முன்னால் ஒருவர் அகழ்ந்த ஊருண்கேணி. காலத்தின் ஒற்றை வழிப்பாதைகளில் வந்து வந்து மொள்ள கொடுத்துக் கொண்டே இருக்கும் வற்றாத ஏரி. ஸ்ரீராமானுஜரின் இந்தப் பிரபாவங்களுக்கு ஏது கல்வெட்டு? கல்வெட்டா? உயிர்க்கட்டாக காலம் தோறும் தொடர்கிறதே இந்த மாதிரி பெண்ணுலகத் திருவிளக்குகளான பாகவத அம்மாக்கள்தான். முன்னரே சொன்னேனே தெலுங்கு எழுத்தில் வந்த சுமார் ஐயாயிரத்துப் பக்க அட்லாஸ் சைஸ் நூற்தொகுதியில் 15 புத்தகங்கள் அடுக்கடுக்காக உரைகள் அரும்பதங்கள். ப்ரூஃப் பார்த்தவர்கள் பாகவத அம்மாக்கள். இன்று பார்த்தாலும் அந்த ஸெட்டில் பிழைகள் பத்து எண்ணிக்கைக்கு வராதாம்.
பல சமயம் சந்நிதிக்குக் கூடப் போகாமல் வந்திருக்கிறேன். ஆனால் போனவுடன் இந்த பாகவத ஆன்மாவைச் சந்திக்காமல் வந்ததில்லை. இன்று போனால் சந்நிதிக்கு மட்டும்தான் போகமுடியும். ஏனென்றால் அங்குதானே ஆசார்யன் திருவடியில் அந்த மூதாட்டியும் இருப்பார், ஓரமாக அன்று; ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி உரிமையோடு நடு ஓலக்கத்தில், உதிக்கும் உத்தமர்தம் சிந்தையுள் ஒண்கழலோன் யதிராஜன் உவப்புக்கு இலக்காகி. எனக்கு ஒரு நப்பாசை! எப்பொழுதாவது என்னைப்பற்றி 'அதோ அந்த வாயாடிப் பையன் வந்திருக்கிறான்' என்று சொல்லமாட்டாரா யதிகட்கிறைவன் திருச்செவி கேட்க என்று.
*
மகாபாரதம் 18 பர்வங்கள் தமிழில் கொண்டு வந்த பெரியவர் மணலூர் ஸ்ரீ வீரவல்லி ராமானுஜாசாரியார் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். பல வித்வான்களைக் கொண்டு 1906ல் தொடங்கி 30 வருடங்கள் விடாமல் முயன்று சாதித்த சாதனை. அதற்காக மனிதர் தம் வீடு வயல் எல்லாவற்றையும் விற்று கொண்டு வந்தார். அப்படிப்பட்டவருடைய மகள் தி நகரில் இருப்பதாகச் சேதி தெரியவே, விடாமல் தேடி அவரைச் சந்திக்கப் போனேன். இது 1990களின் கதை. அப்பொழுது ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தது. எங்கு வேண்டுமானாலும் சுற்றுவதற்கு. தேடி, அந்த மாமியைப் பார்க்கப் போனால் ஒரு வயதான பெண் வெளியே வந்தார். அவரிடம் கேட்டேன். ராமானுஜாசாரியார் பெயரைச் சொல்லி, அவருடைய மகள் இங்கு இருக்கிறாராமே என்று. 'தெரியல்லியே' என்ற பதில் வந்தது. சரி என்று திரும்பலாம் என்றால், நல்ல வேளை உள்ளே இருந்து, யார் வேண்டும்? எந்த ராமானுஜாசாரியார்? என்று கேட்ட படி ஒரு மாமி வெளியே வரவும் பிழைத்தேன். அங்கு பேசிக் கொண்டிருந்த பொழுதுதான் கல்யாணி மாமி என்ற ஒருவரைச் சந்தித்தேன். கல்யாணி மாமிக்குப் பாவம் காதுதான் கண்களும். ஆனால் குரலை வைத்தே, பேச்சை வைத்தே ஒருவருடைய படிப்பு எவ்வளவு அவருக்கு எவ்வளவு தெரியும் என்பதைத் துல்லியமாகக் கணக்கு போடும் சாமர்த்தியம் அவரிடம் இருந்தது. அது நான் கண்டு அதிசயித்த ஒன்று. பார்வை பிற்காலத்தில் போயிற்றோ தெரியவில்லை. ஆனால் மாமியிடம் ஏராளமான நோட்டுப் புத்தகங்கள்! எல்லாம் அவர் சிறுவயதிலிருந்து பல வித்வான்களிடம் காலக்ஷேபம் கேட்ட குறிப்புகள், எங்கு என்ன கதை பிரசங்கம் நடந்தாலும் அந்தக் காலத்தில் மாமியை நோட்டும் கையுமாய்ப் பார்க்கலாமாம். விடாமல் சிறந்த நூதன விஷயங்களைக் குறிப்பெடுத்து வைத்து அந்த நோட்டுக் கிடங்குகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் கல்யாணி மாமி. 'உனக்கே எல்லாம் தந்துட்றேன் நீ ஏதாவது செஞ்சுக்கோயேன்' என்று அழாக்குறையாக ஒரு நாள் மாமி என்னைக் கேட்ட பொழுது நான் கண் கலங்கிவிட்டேன். அந்த நோட்டுகளை வாங்கிக் காப்பாற்றியிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றி என்ன பயன்? அப்பொழுது என் மனத்தில் தோன்றிய எண்ணம். 'என்ன ஆனாலும் நாம் நம் வாழ்க்கையில் இந்த மாதிரி நோட்டுகளில் குறிப்பெடுக்கும் வேலை மட்டும் வைத்துக்கொள்ளக் கூடாது' என்று. ஆமாம் அப்புறம் அதைக் கட்டி மேய்த்து ஆள் தேட வேண்டும்.!
ஆனால் மாமியிடம் பேசும் போது என்ன ஞானம்! என்ன சம்ப்ரதாயமான விஷயங்களில் பரிச்சயம்! பெண் கல்வி என்பது ஏதோ ஒரு விதத்தில் மீறி வளர்ந்து கொண்டுதான் நின்றிருக்கிறது. ஆனால் அவரைக் கவனிக்க அவரது உற்றார் உறவினர்கள் யாரும் இல்லை போலும், அல்லது இருந்தும் இல்லையோ என்னவோ..! எங்கோ முதியோர் இல்லங்களில் புகல் தேடிக் கொண்டிருந்தார் அந்த மாமி. யார் யாரோ பெரியவர்களிடம் எல்லாம் கேட்டிருக்கிறார் மாமி. குறிப்புகள் அந்த விவரங்களைத் தந்தன. ஆனால் என்ன நோட்டில் என்ன குறிப்பு இருக்கிறது என்ற மாஸ்டர் நிரல் மாமியின் மூளைக்குள் இருந்தது ஆச்சரியம்! இத்தனையாவது நம்பர் போட்ட நோட்டை எடுங்கோ என்பார். அதில் இத்தனையாவது பக்கத்தில் நீங்க கேட்டதற்கான குறிப்புகள் இன்னார் சொன்னது இருக்கும் பாருங்கள் என்பார். அப்படியே இருக்கும். ஆனால் அவரால் பார்த்து எடுக்க முடியாத நிலை.
இப்படியெல்லாமும் நடந்த காலங்கள் உண்டு. அதுதான் நான் கல்யாணி மாமியைப் பற்றிக் கேள்விப் பட்டது. அப்புறம் நானும் கேள்விப் படவில்லை. என்னுடைய விசாரங்களும் பல திசைகளில் செல்லத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டின் பிராசீன கல்வி வாய்ந்த பெண் திலகங்கள் சிலரையாவது நான் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் பத்தி யதிராஜம்மா, கல்யாணி மாமி, இவர்களையெல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் ஏன் என்னை நாடி என் வழியில் வரவேண்டும்! தெரியவில்லை. காலமே சில காட்சிகளைச் சிலரிடம் பிரத்யேகமாகக் காட்டிவைக்கும் போலும்! இப்படி எவ்வளவு கல்யாணி மாமிகள் கேட்பாரற்று, சமுதாயம் என்ற மெத்தனம் தான் பாட்டுக்குப் போகும் போக்கில்...ம் .. ம் யாரையும் குற்றம் சொல்லத் தோன்றவில்லை. கல்யாணி மாமியின் பார்வையற்ற விழிகள் கொஞ்சும் முகம் மனத்தில் நன்கு நிழலாடுகிறது. ஜீவன்கள் சிலவும் பலவுமாய் உண்டு உயிர்த்து உரையாடிச் செல்லும் வாழ்வில் இப்படி உன்னத கணங்கள் நினைவில் குளப்படி நீராய்த் தேங்கி அதில் நம் முகம் பிரதிபலிக்கும் போது.....! எங்கோ ஒரு குழலோசை கேட்கத்தான் செய்கிறது. அது எங்கே என்று அறிந்துவிடும் ஆர்வத்தில்தான் உயிர்கள் சென்றவண்ணம் உள்ளனவோ! செல்லும் போது ஓர் உசாத்துணைதானே சத்சங்கம்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
No comments:
Post a Comment