Friday, January 24, 2020

சடகோபனைப் பாட நாவலவன் கம்பன்

தன் கவி பாடும் திறமை அனைத்தையும், தன்னையும், தன் உள்ளம், உரை, செயல் என்னும் அனைத்தையும் தனக்கேயாகக் கொண்டு, தானே அவற்றில் நிறைந்து, இவர் உள்ளத்தால் அவனே தன்னை உள்ளி, நாவால் தன்னைத் தழும்பேற உரைத்து, யார் பார்த்தாலும் சடகோபன் நாவா? அது நாராயணனுக்கே ஆனது அன்றோ என்னும் படியும், நாராயணனைக் கண்டவர்கள், சடகோபன் நாவால் நவிலப்பட்ட நாரணன் என்று கொண்டாடும்படியும் அமைந்தது நம்மாழ்வாரின் அகமேயான புறவாழ்வு. எனவே நாவிற் சிறந்தது எது ? நாக்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் என்ற உறுதி திகழ எண் பெருக்கந்நலத்து வண்புகழ் நாரணன் திண்கழலையே பாடிய நம்மாழ்வார் நாவை விடச் சிறந்த நா எது?

தான் மட்டும் உலக நடையினின்றும் மாறுபட்டவராய் இன்றி, தன்னைக் கற்றாரையும், ‘பேயரே எனக்கு யாவரும், யானும் ஓர் பேயனே’ என்னும்படி உலக நடைக்கு முற்றிலும் மாறுபட்டவராய் ஆக்கி, கடல்வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்து பாடி ஆடி உழிதரக் கண்டோம் என்று அந்த உலகியலினின்றும் மாறுபட்ட நாரணன்தன் அடியார்கள் மலிந்த பொலிந்த உலகத்திற்கு முன்னமேயே மங்களாசாஸனமும் செய்து போந்தவர் ஆகையாலே அவர் மாறன் என்னும் பெயர் பொருள் பொதிந்தது அன்றோ ! தாமும் உலக நடைக்கு மாறானவர்; தம்மை அடைந்தாரையும் உலகியலுக்கு மாறாக்கி ஆன்மிகச் செறிவே ஊட்டுபவர்; உலகையும் ஆன்மிகம் செழிக்கும் தாமமாக ஆக்கும் வல்லமை மிக்கவர்; இம்மூன்று காரணங்களால் அவர் மாறன் சடகோபன். அத்தகைய நாவிற் சிறந்த மாறனைப் பாட ஏற்ற நாவலவன் யார்?

மதுரகவியாழ்வாரை விட்டால் இன்னொருவரைச் சொல்ல முடியுமா? ஆனால் அந்த மதுரகவியாழ்வாரும் ஒரே ஒரு பதிகம் அன்றோ பாடிப் போந்தார் ! நிறைஞானத்து ஓர் சேயை ஒரே பதிகமா? கூடாது. பத்துக்கு நூறாய் நான் பாடினால்தான் எனக்கு மனம் அமைதியுறும் என்று எழுந்த ஆர்வத்தால் சடகோபரைப் பத்துப் பத்தாய் நூற்றந்தாதியாகப் பாடிய கம்ப நாட்டாழ்வானை விட்டால் வேறு யார் அத்தகைய நாவலவன் இருக்க முடியும்? மதுர கவியாழ்வாரின் பதிகம் ரிக்கு என்றால் அதையே சாமகானமாக விரித்துப் பாடியது அன்றோ சடகோபரந்தாதி. அதாவது கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு விளக்க ப்ரபந்தமாக இருப்பது சடகோபரந்தாதி என்றபடி. இதை நாம் சொன்னால் ஆயிற்றா? கம்பரே அல்லவா சொல்லவேண்டும் !

“மன்றே புகழும் திருவழுந்தூர்வள்ளல்
மாறனைமுன்
சென்றே மதுரகவிப் பெருமாள்
தென்தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்து அவன்
பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகமதாக
இசைத்தனனே”

என்று நூலின் இறுதியில் தானே சிறப்புப் பாயிரமாக உரைத்தது கம்பர் வாக்கல்லவா!

எனவே,

நாவிற் சிறந்த அம் மாறற்குத்
தக்க நன்நாவலவன்
பூவிற் சிறந்த ஆழ்வான்
கம்பநாட்டுப் புலமையனே.

*
’தேவிற் சிறந்த திருமாற்குத்
தக்கதெய்வக் கவிஞன்
பாவிற் சிறந்த திருவாய்மொழி
பகர்பண்டிதனே
நாவிற் சிறந்த அம் மாறற்குத்
தக்கநன் நாவலவன்
பூவிற் சிறந்த ஆழ்வான்
கம்ப நாட்டுப் புலமையனே.’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment