Saturday, January 25, 2020

நிர்மலமாய் வைகறையில்

தூணின் உச்சியில் புரையில்
தனித்த குஞ்சின் அச்சம்
பனியின் நிருத்தியத்திற்குப்
பதம் சொல்கிறது.
பார்த்துப் பழகிய கண்ணின் அலட்சியம்
பனி மீது படரும் நிலவாகியது.
தூர்த்த வானமாகித்
திரிந்தது பனியின் படலம்.
துரியநிலை ஒன்றை நோக்கித்
துழாவியது தழலின் கரம்.
பிரிவின் ஏக்கமாகிப் படர்ந்தது
தனிமையின் நெடுஞ்சாலை.
அரைகுறை ஞானம் போல்
மூட்டத்துள் பரிதி புலரும்வரை
எம்பாவாய் ஆட எத்தடையும் இல்லை.

அறைபறை மாயன் மணிவண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தாலும்
இன்றும் மாறலாம்
என்று கருத்தது திசை.
குறை முடித்த கோவிந்தன்
ஊதிய குழலாய் ஒலித்தது
ஓர் ஆன்மாவின் விசும்பல்.

தரை தொட்ட தெய்விகமாய்த்
தழல் காலும் அக்னி
துயர் தீர்க்கத் துணிந்த
சாட்சியாய்ச் சுடரும்.
சொல்லுங்கள் தோழர்களே!
சமுதாய நதியைத்தான்
பாற்கடலாய் ஆக்கிவைத்துப்
பரமனையே பள்ளிகொள்ளப் பழகவிட்டு
மாய மணாள நம்பி மாதவத்துத்
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும்
ஓலக்கம் இருக்க
உயர்ந்தீரோ சொல்லுங்கள்.
ஓங்கி உலகளக்கும் ஓரடியை
நாம் வைத்தால்
தாங்கித் தவமிருக்கும்
தத்துவம்தான் சுடராதோ?
ஏங்கும் மனிதகுலம்
ஏற்றம் பெறுகவென்றே
எம்பெருமானார் ஏற்றி வைத்த
தீபத்தை ஏந்திப் புறப்படுங்கள்!
நீங்கும் விஷப்பனியும்.
நிர்மலமாய் வைகறையில்
நின்றெரிக்கும் கதிர் புலரும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment