’த்வதீய கம்பீர மநோநுஸாரிண:’ என்று ஸ்ரீஆளவந்தார் ஸ்தோத்திர ரத்னத்தில் சொல்லியிருப்பது எவ்வளவு சத்யம் என்பதற்கு ஓர் உதாரணம். பகவானே! நின்னுடையவர்கள் என்று சொல்லவேண்டும் அளவிற்கு நின்னிலே தோய்ந்து, நின் நினைவாகவே, உண்ணும் சோறு முதலான எல்லாம் கண்ணனே என்று ஆனவர்களின் கம்பீரமான வாக்குகளை வேதங்கள்தாம் மிகக் கவனமாகப் பின்தொடர்கிறது போல் இருக்கிறது!
நம்மாழ்வார் பாடுகிறார்.
‘உய்வுபாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்
செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம்மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.’
நம்மாழ்வாரின் பொய்யில் பாடல் ஆயிரத்துள் இந்தப் பத்துப் பாசுரங்களை வல்லவர்களுக்கு உண்டாகும் சிறப்பு என்ன? அவர்கள் வையத்தில் எம்பெருமானாரைப் போலே ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயோடே நெடுங்காலம் பொருந்தி, இங்கிருந்தவாறே ஸ்ரீவைகுண்டத்தில் தங்கள் சிறுமுறியும் செல்லும்படி நிலைபெற்று, பெரும்பேறும் பெறுவர்கள் என்பது பொருள் வியக்கியானங்களின் படி.
நம்மாழ்வாரும், அவர் சொன்னதை நன்கு விவரித்து வியாக்கியான ஆசிரியர்களும் எப்படி இவ்வண்ணம் சொல்கின்றனர்?. இந்த உலக வாழ்வு என்பது ஸம்ஸாரம் அன்றோ! இங்கிருந்தபடியே திருநாட்டில், அவ்வுலகில் செல்வாக்கு எப்படிப் பெற முடியும்? இங்கு எப்படி என்ற கேள்விக்கு நாம் வேதச் சான்று இருக்கிறதா என்றுதான் கேட்கமுடியும்? அதாவது இவர்கள் சொன்னதை வேதமும் தொடர்ந்து ஆமோதிக்கிறதா என்பதுதான் நமக்கு மிகவும் ஆர்வம் தரக் கூடியது.
அதர்வ வேதத்தில் ஓரிடம் -
யார்ணவேதி ஸலிலம் அக்ர ஆஸீத்
யாம் மாயாபி: அந்வசரந் மநீஷிண: |
யஸ்யா ஹ்ருதயம் பரமே வ்யோமந்த்
ஸத்யேநாவ்ருதம் அம்ருதம் ப்ருதிவ்யா: ||
இந்த ஸூக்தம் பூமியைக் குறித்து அதர்வ வேதத்தில் வரும் மந்திரம். பூமியின் தன்மையைப் பேசுகிறது. பெரும் சமுத்திரத்தில் ஸலிலமாக இருந்த நிலை, பின்பு மதிநலம் மிக்கார் பல புத்தி பூர்வ பிரயாசைகள் புரியவே அதற்கிணங்கி வந்த நிலைமை எல்லாம் சொல்லிவிட்டு பூமியின் ஹ்ருதயம் எப்படிப் பட்டது? எங்கு அது இருக்கிறது என்பதைப் பேசும் போது வரும் வேத மந்திரப்பகுதி அடிக்கழஞ்சு பெரும் பகுதியாகும்.
யஸ்யா ஹ்ருதயம் பரமே வ்யோமந்த்
பூமியின் இதயம் உண்மையில் பரம வியோமம் என்னும் பிரம்மத்திடம் நிலைபெற்றிருக்கிறது. எனவே பூமியில் அவள் இதயத்திற்கு ஏற்ப ஞானத்திலும் பக்தியிலும் வைராக்கியத்திலும் பூர்ணர்களாய் வாழும் அடியார்கள் இங்கு இருந்தாலும் அவர்கள் நிலவுகின்ற ஸ்தாநம் ஸ்ரீவைகுண்டம் ஆகிவிடுகிறது என்பதை அன்றோ வெளிப்படையாக உடைத்துச் சொல்கிறது அதர்வ வேதம்! அது மட்டுமின்றி ‘அந்த பூமி நமக்கு ஸத்யம், அம்ருதம், பெரும் ஆட்சி ஆகியவை அருளுகிறாள் என்றல்லவோ சொல்கிறது! ஸத்யேந ஆவ்ருதம் அம்ருதம் ப்ருதிவ்யா; சடகோபன் வாக்கும், அதர்வ வேதமும் ஒன்றோடொன்று ஒருமித்து ஒலிக்கும் உண்மை அன்றோ நாம் காண்பது!
ஸ்ரீஆளவந்தார் சொன்னது சரிதானே! - விதயச்ச வைதிகா: த்வதீய கம்பீர மநோநுஸாரிண:
***
No comments:
Post a Comment