Sunday, January 12, 2020

சடங்குகள்

சடங்குகள் அப்படி என்ன இடத்தை வகிக்கின்றன மனித வாழ்வில்? பிரியமான நண்பர் ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார். வாழ்த்தி வழியனுப்ப ஒரு கூட்டம். பலரும் பங்களித்து ஒரு நல்ல அழகான பொருளை வாங்கிப் பரிசளிக்கின்றனர். சடங்கு என்பது இந்த பரிசுப் பொருளிலேயே இருக்கிறது. ஏன் சடங்கு இல்லையெனில் அவர் ஓய்வு பெறுவது தெரியாதா? அந்தப் பரிசுப் பொருள் இல்லையெனில் அவருக்குப் பெரிய குறையா? ஆனால் உள்ளத்தின் அன்பையும், மதிப்பையும் தெரிவிக்க இந்தச் சடங்குபோல் வாய்ப்பானது எது? பக்தன் தான் வழிபடும் தெய்வத்திற்குச் செய்யும் தன் உடல் பொருள் சொல் மனம் என்ற அனைத்து த்ரவ்ய த்யாகத்தைத்தான் நமஸ்காரமாக வைத்தது. ந + ம: -- என்னுடையது இல்லை என்ற சொல் நம:, அவ்விதமாகச் சொல், மனம், செயலால் ஆன ஆசாரத்திற்குப் பெயர்தான் நமஸ்காரம். இவை அனைத்தும் பக்தி இருந்தால் பெரும் ஈடுபாட்டிற்கான ரசகனமான விஷயங்கள். சடங்குகளைப் போல் CREATIVE EXPRESSION வேறு ஒன்று இல்லை, நம்முள் பக்தி இருந்தால் அவை பெரும் ஆழங்கள். நாம் ஒத்துழைத்தால் அவை நமக்குள் பக்தியை வளர்க்கும் உபாயங்கள்.

உள்ளத்தில் கோயில் கட்டுகிறேன் என்று ஒவ்வொரு நாளும் செங்கல் செங்கல்லாகக் கட்டிக் கும்பாபிஷேகம் மனக்கோயிலுக்கு சிந்தையிலே செய்ய தமக்குள் ஒரு தேதி குறித்தார் பூசலார். அரசனின் புறக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு அரனார் வரவில்லை. பக்தியில் தோய்ந்த அரசன் அதுவே சரி என்று தானும் அந்தக் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தான். ஏதோ தெருத்திண்ணையில் தலைமாட்டுக்கு ஓரணையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த பஞ்சை மனிதர் பரமசிவத்திற்குப் பிரதானராய்ப் போனார். சடங்குகள் அவர்களுக்குள் நன்கு அர்த்தம் ஆயின. சடங்குகளின் தத்துவார்த்தமான ஓரிடம் வாழ்க்கையில் உண்டு என்பதுதான். மற்றபடி சடங்கு வடிவங்கள் என்றும் நிரந்தரமானவை என்றோ, அல்லது அவை கண்டிப்பாகத் தேவை என்பதோ அன்று. நாம் தேவை தேவையில்லை என்று கருதாமலேயே சடங்குகள் ஏதோ ஒருவிதத்தில் உருமாறி மனித வாழ்க்கையில் தொடர்ந்தவண்ணம்தான் உள்ளன. உள இயல், பண்பாட்டு உணர்வு, சமுதாய கூட்டுறவில் யதார்த்தத்திற்கும் உயர்ந்த ஓர் உணர்வின் மெய்மைத்தளம் இந்த வகையில்தான் சடங்குகள் இடம் பெறுகின்றன. நீடிக்கவும் செய்கின்றன.

பாரத பூமியில் அநாதிகாலமாக வரும் பல சடங்குகளை அவை போகும் போக்கிலேயே உயர்ந்த ஆன்மிக நெறிகளையும் உள் பொதிந்து வைத்ததுதான் ஹிந்து மதத்தின் மேதைமை. சடங்குகள் தொடரும் என்பதைப் புரிந்துகொண்ட முனிவர்கள் அவை மனித மனத்தை நிலைத்த ஆன்மிக தத்துவங்களின் பால் கொண்டு செலுத்தும் ஓடமாகவும் பயன்படக் கூடும் என்று கருதினர். சடங்குகள் என்றால் வேத நெறிச் சடங்குகள் என்று மட்டும் இல்லை. பல குழுக்களின் வழிவழியாக வரும் சடங்குகள், பல பிராந்தியச் சடங்குகள், பெண்களிடை மட்டும் வழிவழியாக வந்துகொண்டிருக்கும் சடங்குகள் என்று நூல்வழிப்பட்ட சடங்குகள், நூல்வழிப்படா சடங்குகள் எனப் பல சடங்குகள் உள்ளன. வழிவழியான சடங்குகள் எதையுமே அவை மனித வாழ்விற்கும், உயிரினத்திற்கும் தீயவை அல்லவெனின் சம்மதம் என்பதுவே ஹிந்து மதத்தின் நிலை. சடங்குகளுக்கு என்று மாய சக்தி இருக்கிறது என்ற ஆதிகால நம்பிக்கையைச் சிறிது சிறிதாக நகர்த்தி அவற்றைத் தத்துவ உணர்வுகளை நோக்கி இட்டுச் செல்லும் செயல் கோவைகளாய் ஆக்கி, பின்னர் பக்தி என்ற உன்னத உணர்வின் உருவகங்களாய் ஆக்கிவந்திருக்கிறது ஹிந்து மதம். ஆனால் எதையுமே பண்டைய வழக்கங்களை வெளிப்படையாகக் கண்டிக்காமலேயே, மேலும் மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டுதல் என்ற ஆக்க பூர்வமான கல்வி கற்பிக்கும் அணுகுமுறையோடு ஹிந்து மதம் சமுதாயத்தில் இயங்கி வந்திருப்பதை மிகச்சரியாக அடையாளம் காட்டுகிறார் விவேகாநந்தர்.

***

No comments:

Post a Comment