Wednesday, January 29, 2020

சம்ஸ்க்ருத சுலோகங்கள் சிலவற்றின் மொழியாக்கங்கள்

மிருத்யுவின் நாவுகள் மூன்றும்
மித மிஞ்சிய ஆசையில் சுழன்றே
மூவுலகும் ஒருவாயில் உண்டு களிக்க
வெளிப்பட்டுப் போந்தனதாமோ?
நீர்மூன்று கலந்திழி கங்கை
கிருஷ்ணனின் பதகமலச் செம்மையில்
தானும் கன்றிச் சிவந்தனள்கொல்லோ?
அந்திமூன்று தம்முள் முயங்கிச் சிவந்து
காமத்தை எரிப்பவன் முன்னர்
கூடிக் கலங்குவதாமோ?
மும்முனைச் சூலத்தால் மகிடனைச்
சண்டி வதைத்த கணத்தினில்
மண்டிப் பாய்ந்திடும் குருதியைக் கண்டு
எண்டிசை குழுமிய தேவர்கள்
எண்ணி அயர்ந்தனர் இவ்விதம்.

(பாணரின் சண்டி சதக நூலில் நான்காவது பாடல் இது. வடமொழி சுலோகத்திற்கான மொழியாக்கம் என்னுடையது)

*
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரரின் பாஷ்யத்தில் தொடக்கத்தில் வரும் ஸ்ரீகிருஷ்ண ஸ்துதியும், வியாசருக்கு வணக்கமும், தாம் பாஷ்யம் செய்த காரணத்தை சுலோகமாக உரைப்பதும் மிகவும் அர்த்தம் நிறைந்ததுவாய் இருக்கிறது.

சத்சிதாநந்த உருவினரும்
கிலேசங்களினின்றும் நிவிருத்தி செய்பவரும்
வேதாந்தங்களால் அறியப்படுபவரும்
குருவும்
புத்தியின் சாட்சியாய் விளங்குபவரும்
ஆன ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.

சச்சிதாநந்த ரூபாய கிருஷ்ணாய அக்லிஷ்ட காரிணே|
நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே||

அனைத்து உலகங்களின் நன்மையில்
ஊக்கம் உள்ளவர்
வேதங்கள் என்னும் தாமரைகளுக்குச்
சூரியன் ஆனவர்
சாந்தி முதலாம் குணங்களுக்கு
இருப்பிடம் ஆயவர்
ஆன முனிவர் கிருஷ்ணத்வைபாயநரை
வணங்குகிறேன்

கிருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் ஸர்வபூதஹிதே ரதம்|
வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே சமாதிநிலயம் முநிம்||

ஆயிரம் உருவும் கண்கள் ஆயிரமும்
ஆயிரம் கால்களும் கைகளும் தோள்களும்
பரப்பிப் பரந்த புருஷோத்தமரின்
ஆயிரம் நாமங்கள் புகன்றநற்புகழும்
பிறவியும் மூப்பும் பொன்றிட விளக்குவாம்.

ஸஹஸ்ர மூர்த்தே: புருஷோத்தமஸ்ய
ஸஹஸ்ர நேத்ராநந பாத பாஹோ:|
ஸஹஸ்ர நாம்நாம் ஸ்தவநம் ப்ரசஸ்தம்
த்ருச்யதே ஜந்மஜராதி சாந்த்யை||

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment