Tuesday, January 14, 2020

கூரத்தாழ்வான்

ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் மிக உன்னத இடத்தை அலங்கரித்திருப்பவர் ஸ்ரீவத்ஸாங்க மிச்ரர் என்னும் கூரத்து ஆழ்வான். திருப்பாவையில் திருவே துயிலெழாய் என்ற இடத்துக்கு உரை எழுதுகின்ற ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உதார வாக்குகள் என்ற பட்டத்தால் நான்கு பேரைக் குறிக்கின்றார். 'உதார வாக்குகளாகிறார் திருமங்கையாழ்வாரும், ஆளவந்தாரும், ஆழ்வானும், பட்டரும்.' என்று. எம்பெருமானார்க்கே அற்றுத் தீர்ந்த பக்தி மிக்கவர் கூரேசர். எம்பெருமானார் யாதவத்ரியில் எழுந்தருளியிருந்த காலத்து ஒரு நாள் கூரத்தாழ்வான் நம்பெருமாளை ஸேவிப்பதற்காகத் தட்டித்தடவி கோவிலுக்குச் சென்றவரை நிறுத்தி 'யாரும் ஸ்ரீராமானுஜரைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை. ஆயினும் நீர் எவருக்கும் எதிரியல்லீர். உள்புக்கு ஸேவியும்' என்று வாசலைத் தகைப்பார் கூறினார்கள். கண்ணிழந்ததைவிட மிக வருந்தினார் அந்த வார்த்தையைக் கேட்டு கூரத்தாழ்வார். அனைவருக்கும் நல்லனாய் எவருக்கும் விரோதியாய் இல்லாதிருத்தல் ஆத்ம குணத்தோடு சேரும். ஐயோ எனக்கு ஆத்ம குணம் ஆசார்ய சம்பந்தத்தைக் கூட்டுவதற்குப் பதில் ஆசார்ய சம்பந்தத்தை விலக்குவதற்காகவா பயன்பட்டது? ஸ்ரீராமானுஜரைச் சார்ந்தவர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால் நீ அனைவருக்கும் நல்லவன். எனவே உனக்கு அனுமதி என்றால் அப்பொழுது நான் ஸ்ரீராமானுஜரைச் சார்ந்தவன் என்ற வகைப்பாட்டிலிருந்து விலக்கப்படுகிறேன் அன்றோ? நம்பெருமாள் சம்பந்தம் போனாலும் போகட்டும். எம்பெருமானார் சம்பந்தமே அமையும் -- என்று திரும்பி வந்துவிட்டார் கோவிலில் நுழையாமலேயே. முக்குறும்பு என்பது ஜாதி, வித்யா, தனச்செருக்குகளைக் குறிக்கும். ஜாதி கர்வம் இல்லாமல் இருக்கலாம், செல்வச் செருக்குக்கூட இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒரு வித்வான் அதுவும் கூரத்தாழ்வான் போல் எஞ்சுதல் அற அனைத்தும் கற்றுணர்ந்த மாமதியாளர் ஒருவர் கல்விச் செருக்கும் கூட இல்லாமல் இருப்பது அவரது பழுத்த ஆத்ம குண பூர்த்தியைக் காட்டுகிறது. வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் கூரேசரை மொழியைக் கடக்கும் பெரும் புகழான் என்று கூறுகிறது அமுதரின் வாக்கு.

அடையா நெடுங்கதவும், முகமலர்த்தி குன்றாத விருந்தோம்பலும் சிறக்க வாழ்ந்த கூரத்து நாதன் தம் செல்வம் அனைத்தும் தளை என்று உணர்ந்த மறுகணம் அனைத்தையும் துறந்தார். அவருக்கேற்ற நங்கை நல்லாள் ஆண்டாள் கானேகிய ஸ்ரீராமனுடன் தானேகிய மைதிலியாய் அனைத்து நகைகளையும் களைந்து நாதனுடன் கிளம்பினாள். காட்டின் வழி. கள்வர் பயம். கைப்பொருள் உண்டேல் உயிர் முதலா பொருள் முதலா துறப்பது என்ற நிச்சயம் இல்லை. மெதுவாக ஆண்டாள் இவ்வழியே கள்வர் பயம் உண்டோ என்று வினவினாள். கூரத்து ஈசன் என்ன கொண்டு வந்தாய் எடு என்றார். 'தாங்கள் அமுது செய்யும் பொன் வட்டில் ஒன்றைத்தான் கொணர்ந்தேன்' என்றாள் ஆண்டாள். போகிற வாக்கில் அதை வாங்கி புறமெறிந்து நடந்தார் பொன் வட்டில் பறித்தெறிந்த கூரேசன். 'இப்பொழுது உனக்கு மனத்தில் எந்த பயமும் இருக்காதே!' என்று சிரிப்பு வேறு ஆண்டாளை நோக்கி. இப்படியும் மனிதர் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அங்கும் இங்குமாய் அன்றும் இன்றுமாய். உலகம் சுழல்கிறதே உலுத்தர்களின் ஆட்டத்தையெல்லாம் மீறி, அதுவே சாட்சியல்லவா?

பெரிய நம்பிகள் திவ்ய தேச ரக்ஷையாக சில கிரமங்களைச் செய்ய நினைத்தார். அதற்கு விப்ரானுசாரமாகக் கூடப் பின்னால் வருவதற்கு ஒரு வித்வான் வேண்டும். ஒருவர் பின்னால் நாம் போகிறோமே என்ற எண்ணம் சிறிதும் மனத்தில் தட்டாத தூய நெஞ்சத்துத் தீதில் அந்தணராய் இருக்க வேண்டும். யாரை அழைத்துச் செல்வது? ஸ்ரீராமானுஜரிடம் கேட்டால் நீங்களே தேர்ந்தெடுங்கள் என்று கூறிவிட்டார். பெரிய நம்பிகள் தேர்ந்தெடுத்தது ஆழ்வானைத்தான். காரணம் தாம் எவ்வளவு பெரியவர். இன்னாருக்குப் பின்னால் உதவியாளனாகப் போகிறோமே என்ற எண்ணங்களே நிழலாடாத சிந்தை தூயவர் கூரத்தாழ்வான்.

யாரோ ஒருவர் ஒரு நூலை ஆழ்வானிடம் படித்துப் பொருளுணர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தான் ஆழ்வானிடம் படிப்பது வேறு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதாம். வெளியில் தானே படித்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பைத்தியங்கள் அப்பொழுதும் உண்டு போலும் ! கொஞ்சம் கூட கவலைப் படவில்லை ஆழ்வான். ஆஹா என்று பாடம் சொல்கிறார். எதிர்பாராதவிதமாக ஒருவர் அங்கு எல்லா காபந்தையும் மீறி அந்த வழியே வந்துவிட்டார். படிக்கிறவரின் மனநிலையைப் புரிந்துகொண்டார் ஆழ்வான். உடனே படிப்பவரின் கையில் இருந்து நூலைத் தான் வாங்கிக் கொண்டு தாம் ஏதோ இவரிடம் கேட்டுப் பாடம் படிப்பதாக நடிக்கத் தொடங்கிவிட்டார். அநேகமாக அந்த ஆசாமி இதைப் பார்த்தே திருந்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆழ்வான் இப்படி என்றால் அவருடைய தகப்பனார் கூரத்து ஆழ்வார் என்று பெயர். அவரும் ஒரு வினோதமான நபர். கூரத்தாழ்வானின் தாயார் காலமானார். தந்தையை மறுமணம் முடிக்க சுற்றத்தார் நிர்பந்தித்து கிட்டத்தட்ட முடிக்கும் கட்டம். தந்தையார் பார்த்தார். மகனோ முழு ஸ்ரீவைஷ்ணவனாக பரிணமித்துக்கொண்டு வருகிறான். இந்த நிலையில் மறுமணம் தான் புரிந்தால் வரும் இளையாள் எப்படி இருப்பாளோ தெரியாது. இளைய தாயார் என்ற காரணத்திற்காக ஸ்ரீவைஷ்ணவ பூர்த்தி உடைய தன் புத்திரனை அவளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும்படிச் செய்யும் துர்பாக்கியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஒருவன் அதற்குண்டான வயசு வரையில் கிருஹஸ்தனாக இருப்பதைத் தவிர்க்கலாகாது என்று ஸாமாந்ய சாஸ்திரம் சொன்னாலும் ஸ்ரீவைஷ்ணவன் ஒருவனுக்கு அனுஷ்டான சங்கடம் ஏற்படும்படி செய்யும் அபசாரம் தவிர்க்கப் பட வேண்டியது என்ற விசேஷ சாஸ்திரத்தையே பெரிதாக மதித்தார் தந்தை. மறுமணம் தவிர்த்தார்.

ஆழ்வானின் மகனார் என்பதால் பராசர பட்டருக்குப் பெருமையா? பராசர பட்டரின் தந்தை என்பதால் ஆழ்வானுக்குப் பெருமையா? என்று நினைப்பதே இருவரது சிறப்பையும் புலப்படுத்தும். இவர்கள் இப்படி என்றால் ஆழ்வானுக்கு வாய்த்த நல்லாள் ஆண்டாளின் சிறப்போ இன்னும் அபாரம். ஒருவருக்கொருவர் என்னும்படி குடும்பமே ஒரு பூரண ஸ்ரீவைஷ்ணவ குடும்பம். ஒருநாள் ஆழ்வானிடம் ஆண்டாள் ‘குழந்தைகள் விவாக வயது வந்துவிட்டனர். ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டாமோ?’ என்றாள். ‘பகவத் குடும்பத்துக்கு என்னை இருந்து என்ன கரையச் சொல்கிறாய்?’ என்று கேட்டார் ஆழ்வான். ஒரு சமயம் ஆழ்வான் கிருஹத்தில் ஏதோ காலக்கட்டம். ஆழ்வான் அமுது செய்யவும் எதுவுமில்லை. கூரத்தில் ஊருக்கு நாதனாக இருந்தவரின் வீட்டில், அடையா நெடுங்கதவும் அட்டும் சுவையுணவும் அண்டியவர் உவக்கும் முக மலர்த்தியும் கொண்டு வாழ்ந்த தம்பதியர் வீட்டில் ஔஷதம் ஜாஹ்னவீ தோயம் என்று ஒரு நிலமை போலும். ஆழ்வான் பரம திருபதராய்ப் படுத்து பகவத் சிந்தனையே பற்றுக்கோடாய் கண்வளர்கிறார். ஆண்டாளுக்குத் தாங்கவில்லை. அப்பொழுதுதான் அரங்கன் சந்நிதியில் பெருமாளுக்கு பிரஸாதம் தளிகை சமர்ப்பிக்கும் மேளம் கேட்கிறது. ஆண்டாள் ஒரு கணம் நினைத்திருப்பாள் போலும். ஆழ்வானின் நிலையையும், அரங்கனின் உணவு வேளையையும். சற்று நேரத்திற்கெல்லாம் வாசலில் பெரிய கோவில் பிரஸாதம் மேள தாளத்துடன் வந்து நிற்கிறது. அருளப்பாடு சந்நிதியில். கொடுத்து வரக் கட்டளை என்று. ஆழ்வானுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆண்டாளிடம் அவர் ஏதாவது நினைத்தாரா? என்றார். வெட்கப் பட்டுத் தலை கவிழ்ந்தாள் தாய். பகவத் குடும்பத்திற்கு யாரிருந்து கரைவது என்று ஆழ்வான் சொல்வது சரிதானே?

ஒரு சமயம் ‘ஒரு நல் சுற்றம் ஒண்பொருள்’ என்ற பாசுரத்திற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆழ்வான். பல சீடர்களும் பெரியோரும் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். பராசர பட்டரும் அவரது திருத்தம்பியாரும் அமர்ந்து சிறுவர்களாய்க் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். பாசுரமோ திருமந்திரமான திரு அஷ்டாக்ஷர அர்த்தத்தை விவரிப்பது. அதனை அவரவர் தம் தம் ஆசாரியனிடம் கேட்டலே அமைவுடையது. எனவே தம் குமாரர்களை அவர்களுடைய ஆசார்யரான எம்பாரிடம் சென்று கேட்டுக்கொள்ளும்படி பணித்தார் ஆழ்வான். பிள்ளைகளும் எழுந்து போகப் புக்கார்கள். அப்பொழுது ஆழ்வானுக்கு ஓர் எண்ணம். மனித வாழ்க்கையோ மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் படி நிலையற்றது. எவர் எப்பொழுது இருப்பர் எப்பொழுது போவர் என்பது யாரே அறிவர்? எனவே இங்கேயே அமர்ந்து கேளுங்கள் என்று பணித்தான் ஆழ்வான் என்கிறது வியாக்கியானம்.

நிகரிலாப் புலமை பெற்ற ஆழ்வானின் நெஞ்சோ மிக மிக மிருதுவானது. சாலையோடு போய்க்கொண்டிருந்தவர் ஏதோ பாம்பின் வாய்த் தவளையின் தீனக்குரல் கேட்டு ‘இது யார் கேட்கக் கதறுகிறதோ?’ என்று உணர்ச்சிவயப் பட்டு மயங்கி விழுந்தார். ‘கள்வன் கொல் யானறியேன் கரியான் ஒரு காளை வந்து’ என்ற பாசுரம். ஒரு பெண்பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது என்று பார்த்து அந்தப் பெண்பிள்ளையின் கணவன் அழைத்துப்போக வந்தான். பாசுரமும், அர்த்தமும், நிகழ்வின் மெய்ப்பாடும் ஒத்திருந்தது. அதாவது பாசுரம் தாய் புலம்புவதாக வரும் பாசுரம். தான் வளர்த்த தலைவி நேற்று வரை தன் மடியே கதி என்று இருந்தவள் இன்று கரிய நெடுமால் திருமால் அவன் காதலனாக வந்து கூப்பிட்டதும் திரும்பிப் பாராமல் போய்விட்டாளே என்ற பாவத்தில் பேசும் பாசுரம். பாடம் கேட்டுக்கொண்டிருந்த பெண்பிள்ளையும் அவளை அழைத்துப் போக வந்த கணவனும் பாசுரத்து நிகழ்வுக்கு நிகர் நிஜமாக அமைந்துவிட அந்தத் தாய்ப்பாசுரக் கூற்றில் தன்னை இழந்து மூர்ச்சையானான் ஆழ்வான் என்கின்றன வியாக்கியானங்கள்.

***

No comments:

Post a Comment