Friday, January 31, 2020

ஸென் கதைகளின் தனித்தன்மை

ஸென் கதைகளுக்கு என்று ஒரு தனி... தன்மை உண்டு.

அமைதியாய் இருக்கும். ஆனால் திடீரென்று முகத்தில் குத்து விழும். யார் குத்தினார் என்ன குத்தினார் என்று பார்ப்பதற்குள் ஒரு முக்கியமான யதார்த்தம் புரிய ஆரம்பிக்கும். அதுவும் அந்த திடீர் காரணமாகத்தான் புரியும். அந்த அதிர்ச்சியின் கணத்தில் நம் மனம் வழக்கப்படியான தற்காப்புகள் போட்டுக் கொள்வதைத்தாண்டி ஒரு முக்கிய கருத்தைக் கொண்டு வந்து நம் கவனத்தில் பதிவு பண்ணிவிடும்.

ஒரு யுனிவர்ஸிடி ப்ரொஃபஸர் ஸென் ஆசிரியர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். வந்தவருக்கு டீ வழங்கினார் ஆசிரியர். அப்பொழுது ப்ரொஃபஸர் கேட்டார்: ‘ஐயா! ஸென் பற்றிச் சொல்லுங்களேன்.’

ஸென் ஆசிரியர் டீ ஊற்றிக்கொண்டே இருந்தார்.

டீ கப் நிரம்பி வழிந்தது. அப்படியும் ஸென் ஆசிரியர் ஊற்றியவண்ணம்.... தாங்க முடியாமல் ப்ரொஃபஸர், ‘ஐயா! ஏற்கனவே நிரம்பி வழிகிறது. மேலும் எப்படி அதிலேயே ஊற்ற முடியும்?’

டீ ஜக்கை எடுத்துக்கொண்டு சிரித்தபடியே ஸென் ஆசிரியர் சென்று விட்டார். ப்ரொஃபஸர் அவர் வருவாரா மாட்டாரா என்று குழம்பியபடி அமர்ந்திருக்கிறார்.

*
ஒரு நல்ல விஷயம் என்னவெனில் ஸென் கதை எதுவும் ஐந்து ஆறு வரிகளுக்கு மேல் இருக்காது.

ஒரு ஸென் ஆசிரியரிடம் பலர் பயின்றனர். அவரோ புதிதாகச் சேர்ந்த ஒரு இளம் மாணவரைக் குறித்து அவர் ஞானம் பெற்று விட்டார் என்று அறிவித்து விட்டார். வயதான பழகிப் போன முதிய மாணவ ஸென் பிக்ஷுக்களுக்கெல்லாம் ஒரே மூளையில் குடைச்சல்! என்னது.... நாம் எத்தனை மாமாங்கம்.... ... எவ்வளவு நாளா நாமும் இருக்கோம். ஏதோ இப்ப வந்த பையன்.... கேட்டா ஞானம் அடைந்து விட்டார் என்று... !!! சரி என்று மிகவும் கரிசனத்துடன் போய்,

‘என்னப்பா.... ஞானம் அடைந்து விட்டாயாமே..... ?’

ஆமாம்

இப்பொழுது எப்படி உணர்கிறாய்?

‘பழையபடிதான் இருக்கிறது’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*** 

No comments:

Post a Comment