Friday, January 31, 2020

எண்ணக் கதிர்கள்

புராணங்களிலேயே மிகவும் அழகானதும், கவிதை கொழிப்பதும், மிக தெய்விகமானதும் ஆன புராணம் ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம் என்பது. அத்தனை வேதாந்தக் கருத்துகளையும் தன்னகத்தே திகழும்படியாகக் கொண்டு, சுகர் என்னும் பரமஹம்ஸ மஹரிஷியால் சொல்லப்பட்ட பெருமை உடையது. ஸ்ரீமஹாபாரதம் முழுவதும் சண்டைகளையும், அரசர்களின் அகங்காரங்களையும் பற்றியே எழுத நேர்ந்ததனால் மனம் நிம்மதி இழந்து வாடிய ஸ்ரீவேத வியாசரின் உள்ளம் இந்த ஸ்ரீபாகவதம் இயற்றியதும்தான் குளிர்ந்து அமைதி அடைந்தது என்பர். முழுவதும் சச்சிதாநந்த பிரம்மமாகிய ஸ்ரீகிருஷ்ண தியானமாகவே புராணம் அமைந்ததால் கலியினுக்கு முடிவாகவும், கவிகளுக்கு அமுதாகவும், பக்தர்களுக்குப் பேரின்பமாகவும், ஞானிகளுக்குக் களிக்கும் நந்தவனமாகவும் அமைந்து விளங்குவது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கதாம்ருதம்.

***

சுவாமி சித்பவாநந்தரின் நூல்கள் தமிழில் நமக்குற்ற பெரும்பயனாகும். ஹிந்துமதச் சிந்தனைகளின் தெளிவு சுவாமிகளின் எழுத்து, உரை அனைத்திலும் காணலாம். சுவாமிகளின் மொழிநடை மிகவும் அமைதியானதும், ஆழ்ந்ததும் ஆன நடை. படிப்பவருடைய மனப்பாங்கை மிகக் கவனம் கொண்டு சுவாமி சித்பவாநந்தர் அருளியிருக்கும் எளிமையும், அழகும் காலத்தை வென்று நிலைப்பது. தர்ம சக்கரத்தில் பல ஆண்டுகளாகப் பல அன்பர்கள் பல நேரங்களில் எழுப்பிய வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் சுவாமிகள் மிகவும் பொறுமையாகவும், கனிவுடனும் அருளிய விளக்கங்களும், பதில்களும் தொகுத்து மூன்று பகுதிகளாக ‘ஐயம் தெளிதல்’ என்று ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை 1997ல் போட்டிருக்கிறது. இது ஓர் அத்யாவசியமான பொக்கிஷம் ஹிந்துமக்களாகிய நமக்கு. மேலும் பல வேறு தலைப்புகளில் சுவாமிகள் சிறு சிறு நூல்கள் வரைந்துள்ளார். அவை அனைத்தும் இன்றும் எவ்வளவு முக்கியமான சேகரங்கள் என்பது அவற்றைப் படித்தாலே புரியும்.

***

மொழி, எழுத்து என்பதை நினைத்தால் சில விஷயங்கள் புதிராக இருக்கின்றன. பொதுவாக நான் எழுதும் போது, மொழியைக் கையாளும் போது மிகவும் கடுகடு என்றெல்லாம் முகத்தை, மனநிலையை வைத்துக்கொண்டு எழுதுவதெல்லாம் கிடையாது. ஒரு சின்ன நகையுணர்வுடன்தான் என் எழுத்துக்களையே நான் பார்க்கிறேன் என்பதை என்னிடம் நேரில் பேசி அனுபவம் உள்ளவர்கள் அறிவார்கள். ஆனாலும் நேரில் பேசும் போதாவது ஒருவருடைய முகபாவங்கள் குரல் தெரிவதால் சரியான முறையில் மொழியை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் கண்ணால் கண்டு படித்து மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்றபடியான சூழ்ந்நிலையில், காகிதம் மூலமாகவோ, அல்லது ஸ்க்ரீனிலோ நாம் எழுதுவதைப் படித்து அறியும் சூழலில், நாம் கருதாத போதிலும், நம் மனநிலையில் அப்படி எதுவும் இல்லாத போதிலும், ஒரு கடுமை, எதிர்ப்பு குணம், தாக்கும் தொனி ஏன் அமைந்து விடுகிறது? இது எனக்கு மட்டும் என்று இல்லை. பலருடைய சூழலிலும் இப்படி நடைபெறுவதைக் கவனித்திருக்கிறேன். சில சமயம் பிறர் கடுமையாக, ஏதேதோ எதிர்ப்பு, உள்கோபம் ஆகியவற்றுடன் எழுதுகிறார்கள் என்று நினைத்தது அவர்களை நேரில் கண்டு உரையாடும் போது அது எழுத்தில் படிக்கும் போது தெரிந்த வெறும் மிராஷ் என்று புரிய வருகிறது.

***

No comments:

Post a Comment