Thursday, January 30, 2020

தோடகாசாரியரும், இரண்டு சுப்பைய தேசிகரும்

ஸ்ரீஆதிசங்கரரின் சிஷ்யர்களில் ஒருவர் ஆனந்தகிரி. குருவின் சேவையே அன்றி வேறெதுவும் அறியாராய் இருந்தவர். சமயத்தில் அவர் தமது கடமைகளை முடித்துவிட்டு வருமளவும் பாட வகுப்புகளைக் காத்திருக்கும்படிச் செய்வார் ஸ்ரீஆதிசங்கரர். பொறுத்திருந்து பார்த்த பத்மபாதர் ஒரு நாள் சாஸ்திர ஞானம் பெரிதும் இல்லாத ஆனந்தகிரிக்காக ஏன் அனைவரும் காத்திருக்க வேண்டும். அவர் வந்த பின் ஆரம்பிப்போம் என்று ஆணையிடுவதன் உட்கருத்து என்ன என்று கேட்டு விட்டார் குருவை. முறுவல் தவழ குருவும் போகப் போகத் தெரியும் என்று இருந்து விட்டார். ஆனந்தகிரி அவர்களுக்கு குருவின் அருளால் சாத்திரங்களின் உட்பொருள் அனைத்தும் உள்ளே நன்கு புரிந்தது. சாத்திரங்களின் சாரமான கருத்துகளைத் தோடகம் என்னும் வேதசார சமுத்தரணம் என்ற சிறு நூலாக இயற்றி குருவினிடம் சமர்ப்பித்தார். அதை நன்கு பார்வையிடுமாறு பத்மாதரிடம் பணித்தார் குரு. அதைக் கண்ணுற்ற பத்மபாதருக்கு மிகுந்த வெட்கமாக ஆகிவிட்டது. சாத்திரங்களின் கருத்துப் பிழிவாய் ஒரு சிறிய நூலில் அடக்கி இயற்றும் ஆனந்தகிரியின் அறிவுக் கூர்மையும், மொழித் தேர்ச்சியும் அவருக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.

அந்த தோடகம் என்னும் வேதசார சமுத்தரணம் என்னும் வடமொழி நூலை ஸ்ரீசுப்பய்ய ஞானதேசிகேந்திர சுவாமிகள் என்பவர் தமிழ்ச் செய்யுள் வடிவமாக இயற்றினார். அந்தச் செய்யுள்களும் உரையின்றிப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்பதைக் கண்ட ஸ்ரீசிதம்பரம் பொன்னம்பல ஞானதேசிகர் மடாலயம் ஸ்ரீசுப்பய்ய சுவாமிகள் என்பவர் அதற்கு ஓர் உரையும் வரைந்து, செய்யுளும் உரையுமாக திரு நா முனிசாமி முதலியார் என்பவர் சென்னை ஆனந்த போதினி பவர்பிரஸ்ஸில் 1921 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். 171 சொச்சம் பக்கங்கள். அந்தக் காலத்தில் 8அணா.

ஏன் இதனைத் தமிழ்ச் செய்யுள் வடிவமாக இயற்றினார்?

இவ்வெழில் அமுத நூலை
இருசதத்து ஒருபத்தின்றாம்
செவ்விய செய்யுளாலே
சிறியனும் செப்பல் தானும்
எவ்விதத்தினும் என்சிந்தை
இன்பு அறிவுருவில் வாழ
அவ்விதம் அலது வேறோர்
ஆசையைப் பற்றியன்றால்.

ஆனந்தகிரியின் வாக்கை அருமைத் தமிழால் சுப்பைய தேசிகர் உரைக்கும் திறம் -

விடமமாம் விடயம் தனின்
வேட்கையை விடுத்தே
உடலை யான் எனும் உளம் ஒழித்து
உயர்பர ஒளியில்
திடமதாய் நிட்டை அடைந்து
அனுதினம் பரமான்ம
நெடுவிஞ்ஞானம் கொண்டு
அவித்தை காரிய மயல் நீப்பாய்.

இரண்டு சுப்பைய தேசிகர்களும் தமிழில் அத்வைத வேதாந்தம் தழைக்கச் செய்திருக்கும் உபகாரம் மிகவும் பெரிது. வாழியவர் புகழ்! வாழ்த்துக நம் நன்றியறி நெஞ்சம்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*

No comments:

Post a Comment