ஒரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு முந்தைய நிகழ்வு. அப்பொழுது சிறுபையன். தந்தையோடு சேர்ந்து அமர்ந்திருக்கிறேன். பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ சபையில் பந்தல் போட்டுப் பெரும் விழா. சம்ப்ரதாய நூல்கள் பலவற்றையும் ஒருசேர அச்சிட்டு அந்த நூல்களின் பிரதிகளை மேடையில் வைத்திருக்கின்றனர். ஸ்ரீஸுதர்சனர் ஸ்வாமி பேசுகிறார். அப்பொழுது ஏதோ சொல்லும் பொழுது அந்த நூல் தொகுதியைக் காட்டி யாரேனும் இவற்றைப் படிக்கிறேன் என்று சொன்னால் இப்பொழுதே கொடுக்கிறேன் என்று சொன்னது போல் ஞாபகம். எனக்கு உள்ளே ஒரு குறுகுறுப்பு. எழுந்து நின்று நான் படிக்கிறேன் என்று சொல்லி வாங்கிக் கொள்ளலாமா என்று. ஆனால் பயம். சிறுவன். எல்லாரும் சிரித்தால் என்ன செய்வது? அப்பொழுது எல்லாம் அந்த நூல்களைத் திறந்து பார்த்தாலே மணிப்பிரவாள நடை ஒன்றும் புரியாது. ஏகப்பட்ட ஸம்ஸ்க்ருத பதங்களாக இருக்கும். ஆனால் மனத்தில் தோன்றும் ஒரு நாள் இவற்றைப் படிப்பேன் என்று. அது எனக்குள். ஆனால் பொதுவில் நின்று யார் ஹாஸ்யத்திற்கு இலக்காவது? பின்னாளில் ஸ்ரீஸுதர்சனர் ஸ்வாமியிடம் பேசும் பொழுது இந்தப் பழைய நிகழ்ச்சியைச் சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே ‘ஏன் அப்பொழுதே கேட்டிருக்கலாமே. தந்திருப்பேனே என்றார்.’
கோட்டுக்கால் கட்டில்மேல் என்றதும் புத்தூரில் அவருடைய அறைதான் நினைவிற்கு வருகிறது. ஆம் அந்தக் கட்டிலில் சாய்ந்தவாறே எவ்வளவு விஷயங்களை நிமிர்த்தி வைத்துவிட்டார் அவர்! ஒரு பெரும் தவம் போல் விடாமல் அவர் சம்ப்ரதாய நூல்களுக்கு எளிய விளக்கங்கள், பதிப்புக் குறிப்புகள், திருத்தங்கள், ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனத்திற்கு அடுத்தடுத்து பங்களிப்புகள், வாத விவாதங்கள் என்று பெரும் யக்ஞம் என்றுதான் சொல்ல வேண்டும். ஹரி: ஹரி:
குத்துவிளக்கெரிய என்பது ஜ்ஞானம் ப்ரஜ்வலிப்பது என்கிறார் ஸ்வாபதேசத்தில். கோட்டுக்கால் நான்கு உடைய கட்டில். அதுவும் நான்கு தந்தங்கள் கொண்ட குவலயாபீடம் என்ற யானையின் தந்தங்களை உருவி நான்கு கட்டில் கால்களாய்ச் செய்த கட்டில். அகங்காரம்தான் அந்த யானையாம். அகங்காரகார்யமான சதுர்வித கர்த்ருத்வங்கள்தாம் அந்த தந்தங்களாம். என்ன நான்கு கர்த்ருத்வங்கள்? சேஷத்வே கர்த்ருத்வம், ஞாத்ருத்வே கர்த்ருத்வம், கர்த்ருத்வே கர்த்ருத்வம், போக்த்ருத்வே கர்த்ருத்வம் என்னும் நான்கு. சேஷத்வம் முன்னிட்ட செயல் முனைப்பு, ஞானம் முன்னிட்ட செயல் முனைப்பு, செய்கை என்னும் நசையால் வந்த செயல் முனைப்பு, துய்த்தல் என்பதை முன்னிட்ட செயல் முனைப்பு என்று ஒருவாறு அர்த்தம் கொள்ளலாம். இந்த நான்கின் விளைவுகள்தாம் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் சதுர்வித புருஷார்த்தங்கள். இந்த நான்கு புருஷார்த்தங்கள் என்னும் பட்டையை உடைய கோட்டுக்கால் கட்டில். அந்த புருஷார்த்தங்களுக்குத் தக்கவாறு செய்யும் அனுஷ்டானத்தில் ஈடுபாடு என்னும் அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தான கட்டில். கட்டிலுக்கு இவ்வளவு தத்வார்த்தம்! அந்தக் கட்டில்மேல் இந்த கர்த்ருத்வங்கள் எதுவும் தலைகாட்டாத மெத்தென்ற பஞ்சசயனம். என்ன பஞ்ச என்றால்? அர்த்த பஞ்சக ஞானம் ஆகிற பஞ்ச சயனம். ‘மிக்க இறைநிலையும், மெய்யாம் உயிர்நிலையும், தக்க நெறியாகி, வாழ்வினையும், ஊழ்வினையும்’ ஆகிய ஐந்து அர்த்தங்கள் அர்த்த பஞ்சகம். அர்த்த பஞ்சக ஜ்ஞானம் ஆகிய சயனத்தில்தான் ஜீவனுடன் பரமாத்மா கூடும் பேரின்பம்.
நமக்குத் தத்துவமும் இல்லை; தகவும் இல்லை. நமக்கு இவற்றைக் கருணையினால் தந்தருளிய ஞானிகளை நன்றிக்கடனுடன் போற்றுவதுதான் உயர்வற உயர்ந்த ஞானியும் பக்தருமான ஸ்ரீஆண்டாளின் அருளுக்கு நாம் செலுத்தும் நன்றி.
***
பகவத் விஷய அனுபவத்தில் பெரும் பேறெல்லாம் ‘அகலகில்லேன் இறையும்’ என்று அவனோடே ஸ்வரூப நிரூபக தர்மமாக இருந்து நமக்குப் பரிந்துரைக்கும் அருளாய் உதவும் பெரிய பிராட்டியாரின் கருணையால் பெற வேண்டும். மிகப்பெரும் பேறு கைங்கரியம். அதிலும் அஹங்கார மமகாரங்கள் நிவிருத்தி செய்து தருவதும், உள்ளபடியே ஆன ஸ்வரூப ஜ்ஞானமும் அவளைப் பிரார்த்தித்துப் பெற வேண்டும் என்பதைக் காட்டுகிறது உக்கமும், தட்டொளியும் தந்துன் மணாளனை இப்பொழுதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் என்பது குறிக்கிறது என்று ஸ்வாபதேசம் அருளுகிறார் சுத்த சத்வம் தொட்டாசாரியார் ஸ்வாமி. உக்கம் - ஆலவட்டம்; தட்டொளி - கண்ணாடி.
***
ஊற்றமுடையாய், பெரியாய் - என்பதற்குத்தான் என்ன வியாக்கியானங்கள்!
ஊற்றமுடையாய் - பிரமாணம் நிர்தோஷமான பிரமாணம் என்பதாலே அறியப்படும் பிரமேயத்திற்கு எவ்வித ஸ்திரத்தன்மைக் குறைவும் இல்லை. புருஷ புத்தியால், தர்க்கத்தால் தீர்மானிக்கப்பட்டதாய் இருந்தால் மாறும், மறுக்கப்படும், ஆனால் நித்யமான நிர்தோஷமான, அபௌருஷேயமான பிரமாண பலத்தால் திரமான பிரமேயத்திற்கு ஒரு மாற்றமும் இல்லையே. அதனால் அன்றோ அனுமானப் பிரமாணத்தின் உதவியும் வேண்டாம் என்று முழுக்கவும் சுருதிப் பிரமாணத்தாலே நிச்சயம்பண்ணுவது. ‘அனைத்து வேதங்களும் எந்தப் பதத்தை ஆமோதிக்கின்றனவோ’ ஸர்வே வேதா யத்பதம் ஆமனந்தி.
பெரியாய் - அந்த திடமான பிரமாணமான வேதங்களாலும் இவ்வளவுதான் என்று அறுதியிடலாகா பெருமை உடையவன். யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ, எதிலிருந்து வாக்கானது திரும்பிவிடுகிறதோ அடையாமல் மனத்தையும் கூட்டிக்கொண்டு.
ஊற்றமுடையாய் - கைக்கொண்ட ஜீவனை யார் சொன்னாலும், பிராட்டியே சொன்னாலும் கைவிடாத திடம்.
பெரியாய் - அடியடைந்தார்க்கு எல்லாம் தந்தாலும் தான் ஒன்றுமே தரவில்லையே என்று நினைக்கையும், தான் தருவதைத் தன்பேறாகத் தருகையும்.
தோற்றமாய் நின்ற சுடர் - எல்லாருக்கும் அடியார்களுக்குப் பக்ஷபாதி என்பது நன்கு தெரியும்படி இருப்பவன். சுடர் - அடியார்களிடத்தில் தான் முற்றும் சார்ந்து இருக்கும் இருப்பால் வந்த ஔஜ்ஜ்வல்யம்.
***
மிகவும் அற்புதமான அர்த்தம் ‘அங்கண்’ என்ற ஒரு சொல்லை வைத்துக் கொண்டு. ‘அங்கண்மாஞாலத்தரசர்’ பாசுரம்.. அப்படி என்னதான் அர்த்தம் சொல்லிவிட முடியும் அங்கண் என்பதற்கு? அம் கண் - அழகிய இடம், அதாவது போதிய இடம். யாருக்குப் போதிய இடம்? இந்த இடத்தில்தான் வியாக்கியாதா நம்மை நெடுக அழைத்துக் கொண்டு போகிறார். கடவுள் விஷயத்திற்கு அப்புறம் வருவோம். தமிழ்க் கவிதை என்று படித்தால் இவர்களிடம்தான் படிக்க வேண்டும். நாம் ஆமாம் என்று ஒப்புக்கொள்வதற்கு முன்னர் நம் தலை அனுமதி ஆட ஆரம்பித்துவிடுகிறது அவர்கள் சொல்லும் பொருளிற்கு.
போதிய இடம் - அங்கண். யாருக்குப் போதிய இடம்? பிரம்மாவே வந்தாலும் அவருக்கும் போதிய இடம். ஓர் எறும்பு, இன்னும் சொல்லப் போனால் சிற்றெறும்பு அது வந்தால் அதற்குப் போதுமான இடம். அதாவது சிருஷ்டியில் என்ன பண்ணி வைத்திருக்கிறது என்றால் எந்த உயிருக்கும் அதற்கென்று உடல், கருவி கரணங்கள், அவற்றால் அது அது பெறும் போகங்கள் எல்லாம் கச்சிதமாக அளந்து போதிய அளவு பொருத்தமாக வைத்திருக்கிறதா, பிறந்த ஒவ்வொன்றும் கேட்டால் தனக்காகத்தான் தன்னுடையதுதான் இந்த ப்ரக்ருதியே என்ற அபிமாநத்தில்தான் அடுத்த அடியே எடுத்து வைக்கிறது. எறும்பைக் கேளுங்கள். ‘நான்’ என்று சொல்லும். கர்வத்துடன் சொல்லும். அதுவே பிரம்மாவையும் கேளுங்கள். அவரும் சொல்வார். ‘நான்’ என்று. அதே கர்வத்துடன். இவர் பிரம்மா சொல்லலாம். அது எறும்பு அதற்குத் தகுந்தால் போல் பர்சண்டேஜ் போட்டுக் கழிச்சு இத்துனூண்டுதான் ‘நான்’ என்று சொல்லணும் என்று சொல்ல முடியாது. அதே அபிமாநம் இம்மி குறையாது. ’‘போக்ய போகோபகரண போகஸ்தாநங்களை ப்ரஹ்மாதி பிபீலிகாந்தமாகத் தந்தாமளவுகளிலே அபிமாநம் பண்ணியிருப்பது. இனி ப்ரஹ்மா ‘அஹம்’ என்றால் அவனளவிலே நிற்குமாப்போலே, சிற்றெறும்பு ‘அஹம்’ என்றால் அது தன்னளவிலே நிற்கும்; அவன் ‘நான்’ என்றத்தோடு இது ‘நான்’ என்றத்தோடு வாசியில்லை.” (ஆறாயிரப்படி)
ப்ரஹ்மா என்று சொன்னவுடனே வியாக்கியான ஆசிரியருக்கு ஒரு ஐதிஹ்யம் நினைவுக்கு வந்துவிட்டது. அதையும் இங்கே சொல்கிறாரா அப்புறம் ஆழத்திற்கும் அற்புதத்திற்கும் கேட்பானேன்! பராசர பட்டரை யாரோ கேட்டிருக்கிறார்கள்: பிரஹ்மாதிகளும் கூட பல பிறவிகள் பிறந்து பெரும் சாதன அனுஷ்டானங்கள் எல்லாம் செய்து பிறகுதான் பகவத்ப்ராப்தி என்னுமதான புருஷார்த்தத்தை அடையப் பெற்றார்கள். இங்கே பாகவத கோஷ்டியில் எவ்வளவும் சாதாரணமாயிருப்பார் கூட இந்தச் சரீரம் விழுந்தபின்னர் மோக்ஷந்தான் என்று நிச்சயம் ஏற்பட்டு கடைசியில் கிளம்புவதற்கு உரிய பொதிசோறு கட்டிக்கொண்டு நிம்மதியாகக் காத்திருக்கிறார்கள். இது இரண்டும் எப்படிச் சேரும்? என்று யாரோ கேட்டிருக்கிறார்கள். பராசர பட்டர் சொன்னாராம் - இதில் ஒரு குறையும் இல்லையே. அவன் பிரஹ்மா. இந்தப் பரப்பெல்லாம் தன்னுடையது என்று அபிமாநம் அவனுக்கு. எனவே தன்னுடையது என்பதையெல்லாம் ஒன்றும் விடாமல் அத்தனையும் கொடுத்து பகவானுக்கு வேண்டிய சாதன அனுஷ்டானம் எல்லாம் பண்ணித்தான் பெற வேண்டும் என்பது அவனுடைய தீர்மானம். அதன்படியே நடந்து கொள்கிறான். அப்படியே விரும்புகிறான். எப்படி உபாஸிக்கிறானோ அப்படித்தான் பலமும் - என்ற நியாயத்தின்படியே பகவானும் அவன் விரும்பிய படியே அவனுக்கு அளிக்கிறான். இவனோ இங்கிருக்கும் வைணவனோ தன்னிடம் எதுவுமில்லை. தானும் எதுவுமில்லை என்று நன்கு தெரிந்தவன். எனவே முதலிலேயே பகவானிடம் ‘அப்பா! என்னை நான் ரக்ஷிக்க முடியாது. என்னிடம் எதுவுமில்லை. அனைத்தும் நீதான். அளிப்பதும் நீ. அடைவிப்பதும் நீ. அடையப்படுவதும் நீ. என்று அவன் காலைப் பிடித்துக்கொண்டு விடுகிறான். அவனும் இவனுடைய பாரத்தையெல்லாம் தன் தலையில் போட்டுக் கொண்டு காரியம் செய்து தருகிறான். - என்று சொன்னாராம்.
அங்கண் என்பதற்குப் பொருள் சொல்லப் போய், பிரஹ்மாவிற்கும், எறும்பிற்கும் போதிய இடம் என்று சொல்லி, அவரவர் அபிமாநம் அவரவர் இடத்தில் பொருந்தி இருக்கிறது என்று சொன்னவுடன், பிரஹ்மாவின் சாதனைக்குப் பலம், வைணவனின் சரணாகதிக்குப் பலன் என்பதைச் சொல்லி விடுகிறார்கள்!
***
’செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?’ - இது என்னது? அவனுடைய விழி நம்மேல் விழித்தல் என்றால் என்ன பொருள்? ஸ்வாபதேச உரை சொல்வதைக் கேட்டால் நம் கதி!
முதலில் தேக ஆத்ம அபிமாநம் நீங்க வேண்டும். அதாவது ‘நான் இந்த உடல்தான்’ என்ற அபிமாநம்.
நீங்க வேண்டும் என்றால் அது தானாக நீங்காது. இல்லையென்றால் அவனும் வலுக்கட்டாயமாக நீக்க மாட்டான். நாம் இசையவேண்டும்.
அவ்வாறு இசைந்தவாறே, ஸ்வஸ்வாதந்த்ரிய அபிமாநத்தை நீக்கி,
அதற்கும் இசைந்தவாறே சேஷத்வத்தை அறிவித்து,
அதற்கும் இசைந்தவாறே அந்ய சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாம்படி பண்ணி, இன்னொன்றுக்கு சேஷத்வம் பூண்பதை இல்லையாம்படி பண்ணி,
அதற்கும் இசைந்தவாறே (எல்லாம் நாம் இசைந்தால்தான் மேல வேலை நடக்கும்) ஜ்ஞாத்ருத்வ ப்ரயுக்தமான ஸ்வஸ்மின் ஸ்வசேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி,
அதற்கும் இசைந்தவாறே, ஸ்வரக்ஷணே ஸ்வ அந்வயத்தை நிவர்த்திப்பித்து, தன்னுடைய ரக்ஷணத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டால்தான் மேல பேச்சு,
அதற்கும் இசைந்தவாறே உபாயாந்தரங்களை விடுவித்து,
அதற்கும் இசைந்தவாறே தத் ஏக உபாயனாம்படி பண்ணி, அதாவது அவனையே தனக்கு ஒரே உபாயமாகக் கொள்ளும் பக்குவம்
அதுக்கும் இசைந்தவாறே ஸ்வவ்யாபாரத்தில் ஸ்வாதீந கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணி,
அதற்கும் இசைந்தவாறே பாரதந்த்ரிய ப்ரதிபத்தியைப் பிறப்பித்து, அதாவது பாரதந்த்ரியம் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடும் தெளிவும் உண்டாக்கி,
அதற்கும் இசைந்தவாறே ஸமஸ்தகல்யாணகுண பரிபூர்ணனான தன்னை அநுபவிப்பித்து, அவன் தன்னை அநுபவிக்கும்படி நம்மைப் பண்ணுகிறான் என்றால் அதற்கும் நாம் இசைய வேண்டும்,
அப்பொழுது அநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கரியத்தை உண்டாக்கி, அந்தக் கைங்கரியத்தில் ஸ்வபோக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை.
ஜீவனுடைய இசைவு பார்த்துதான் கடைசிவரைக்கும் பகவான் காத்திருப்பது.
முழுநோக்கு பெறும் அளவு ஆனவாறு என்பது இவ்வளவான பாகம் (பரிபக்குவம்) பிறந்தவாறு என்பது.
இப்படியல்லது தேஹாத்மாபிமாநிக்குப் பரமபக்தியை உண்டாக்கிலும் உண்டாகாதிறே - என்கிறார் சுத்த ஸத்வம் தொட்டாசாரியார் ஸ்வாமி.
நிலைமை இப்படி! நான் எங்கே நிற்கிறேன். அது எங்கே இருக்கிறது! ஆனால் மிகச்சுலபமாகச் சொல்லி விடுகிறோம்.
‘செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ’
***
’கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து’ அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு முடிவு சொல்வார்கள் போலும். அப்பொழுது ராஜ காரியங்களைப் பற்றிய விவஸ்தை அறிந்தவர்கள் கேட்பார்கள் போலும்! எந்த ஆஸனத்திருந்து, எந்த வீற்றிருக்கையில் இருந்து ராஜா சொன்னார் என்று பார்த்து இன்ன ஆஸனத்திலிருந்து சொன்ன வார்த்தை மாறாது. நேரடியாக ஆணையாகக் கொள்ள வேண்டியதுதான் என்று இருந்தது போலும். அதை த்ருஷ்டாந்தமாக்கி இங்கு உரை வரைகிறார்கள். ராஜாக்கள் விஷயமே இப்படியென்றால் பரமாத்மாவின் விஷயம் சொல்லவேண்டுமோ! அதற்குத்தான் தாயார் சந்நிதிக்குப் போகும் பொழுது நான் பங்குனி சேர்த்தி மண்டபத்துக்கு ஒரு ப்ரத்யேக நமஸ்காரம் செய்துவிட்டு வருவது வழக்கம். கோப்புடைய சீரிய சிங்காசனம் அன்றோ! திவ்யதம்பதிகளாய் எழுந்தருளும் இடம் அன்றோ!
***
’அன்றிவ்வுலகம் அளந்தாய்’
பிரகிருதியால் அதன் தொடர்பால் உருவான இந்த அகங்காரம் ஜகத்தை ஆக்கிரமித்துத் தனது என்று ஆக்கின போது அதிலிருந்து மீட்டுத் தன் தாளின் கீழ் இருத்துதல்தான் ஜீவனுக்கு வாழ்ச்சி. ஜீவனே அகங்காரத்தின் மயக்கில் ஒன்றிப் போய் இருக்கும் போது யார் கேட்க இந்தக் காப்பாற்றுதலை பகவான் செய்கிறான்? எந்தக் காரணமும் இல்லாத தன் கிருபை மட்டுமே அன்றோ! பத்து முகமாகப் பணைக்கும் அகங்காரத்தை அழித்து ஜீவனை மீட்கிறான். ஜீவனுக்கு நலிகின்ற தீமைகளான காமம், லுரோதம் லோபம் போன்றவற்றைத் துடைத்து ஜீவனின் பகவத் விஷயத்தை நோக்கிய பயணத்தை நடத்தி வைக்கிறான். அப்படிப்பட்டவனை ஏற்றிப் பாடுகைதானே ஸ்வயம் புருஷார்த்தமாக இருக்கும். அன்று இவ்வுலகம் அளந்தது என்பது என்றும் நடக்கின்ற ஒன்று என்பது புரிந்ததால் இன்று யாம் வந்தோம். உன் இரக்கம்தான் உபாயம். யாம் வந்தது எங்களுடைய ருசியின் காரணமாய்.
இன்று யாம் வந்தோம் இரங்கு.
***
ஒருத்தி மகனாய்ப் பிறந்து - என்ன என்ன கருத்துகள்! யார் பிறந்தார்கள்? ஏன் பிறக்கவேண்டும்? காரண வாக்யங்கள் யாரை ’ஊழிமுதல்வன் ஒருவனே’ என்று சொல்லுமோ, ஜகத்துக்கு சேஷியாய், ஸர்வவ்யாபகனுமாய், நித்யனுமாய் இருக்கின்றவன் யாரோ அவன் பிறக்கிறான். ஜீவனுக்காகப் பிறக்கிறான். தனக்காக அன்று. கர்மம் அவன் பிறப்புக்குக் காரணம் அன்று. கிருபை. ஆனால் அவனைக் கண்டால் ஆகாது என்கிறது ஜீவன். பிறந்ததும் ஒளித்து வளர வேண்டும். அதுவும் அந்த ராத்திரியிலேயே தன்னை முழுதும் காட்டுவதினின்று மறைத்து, அப்படி மறைக்கும்படிப் பெற்றவளே சொல்லும்படி ஒரு குழந்தை. அவனுடைய பிறப்பு நம்மைப் பிறவிச் சுழலிலிருந்து காப்பாற்ற வந்தது. பரமபதநாதனை நம்மால் காண முடியாது. அவதார புருஷனை நாம் காண சகிக்க மாட்டோம். அந்தர்யாமி நமக்குள்ளேயே சதாசர்வகாலமும் இருக்கிறது. ஆனால் ஒன்றும் இல்லை. எங்கே காட்டு! என்று ஆபரேஷன் செய்து தேடுவோம். அப்படித் தேடவும், ஒன்றுமில்லை என்று ரிப்போர்ட் வாசிக்கவும், அதை மேதாவிகள் சங்கமிருந்து ஆமோதிக்கவும் எல்லார் உள்ளேயும் அந்தர்யாமியாய் அவன் இருந்து ஆத்மாவைச் சரீரமாகக் கொண்டு நிற்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் அவன் இல்லை. சரி. நீ இருக்கிறாயா? அது அறிவார்ந்த சமூகத்தில் கேட்கக் கூடாத கேள்வி. இருந்தாலும் உள்ளே ஒளித்து வளரும் உணர்வின் மூர்த்தியாய் அவன் காத்திருந்து என்றோ இந்த ஜீவன் அகமுகமாகப் பார்வை திரும்பியதும், ‘எங்கே எங்கே’ என்று தேடும் போதும், முகம் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறது. நம்முடைய கர்மம் அவன் இங்கு வந்தால் அவனும் நம்மைப் போலத்தானே என்று அலட்சியம் செய்ய வைக்கிறது. உள்ளே இருக்கும் அந்தர்யாமியை இல்லவே இல்லை என்று மறுக்க வைக்கிறது. அவதாரம் எடுத்து வந்தால் எதிர்க்கத் தூண்டுகிறது.
ஆனால் அவன் கிருபையோ நாம் அங்கு பரமபதம் போனால் தனக்குச் சரிசமானமாக அமர்த்தி அழகு பார்க்கிறது. தன் சிறப்பையெல்லாம் இந்த ஜீவனுக்குத் தந்து தான் பெற்றது பெரும்பேறு போன்று ஆனந்தம் கொள்கிறது.
ஸ்வாபதேசம் கூறும் அர்த்தமோ மிகவும் சீரியது. தன் ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம் நன்கு விசதமாக விளங்கும் அஷ்டாக்ஷரியாகப் பிறந்தான். ஆனால் அதே இரவில் ரூப குண விபூதிகளையெல்லாம் மறைத்துக் கொண்டு தன் ஸ்வரூபத்துக்கு மட்டும் வாசகமான த்வாதசாக்ஷரியான வாசுதேவனாகத் தன்னை ஓளித்து வளர்ந்தான். இந்தப் பொருளுக்குப் பிறகு எதை எழுதுவது!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
***
No comments:
Post a Comment