Thursday, January 16, 2020

மாஎகழி திருப்பாவை அனுபவம் 5

பரம்பொருள் என்ற விஷயமே நமக்குப் புரிந்துகொள்ள மிகவும் கடினமானது. பகவத் விஷயம் என்பதைக் கவிதை வடிவிலும், ஐதிஹ்யம், சரித்திரம், விளக்கங்கள் போன்ற வடிவில் நமக்குப் பலபடியாக உணர்த்த ஆழ்வார்கள், ஆசாரியர்கள் எல்லாம் எடுத்துக் கொண்டுள்ள சிரமம் மிகப் பெரியது. நம்மிடம் இருக்க வேண்டியது முக்கியமாக விநயம். ‘வித்யா ததாதி விநயம்’ என்பார்கள். வித்யை என்பது விநயத்தைத் தரும் என்பதை விட விநயமே வித்யையைத்தரும் என்பது மிகவும் உண்மை. அதனால்தான் திருவள்ளுவரும் ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்’ என்று எப்படிக் கற்க வேண்டும் என்று சொல்லித் தருகிறார். தமக்கு ஒன்று தெரியவில்லை; தம்முடைய நிலை இன்னதுதான் என்ற உணர்த்தியில்தான் விநயம் அடங்கியிருக்கிறது. அத்தகைய விநயமே வித்யையை நம்முள் நிலைபெறச் செய்கிறது. பிரபத்தி என்னும் சரணாகதிக்கு அடிப்படையானது தன்னுடைய ஆத்மாவின் இயல்பைப் பற்றி உள்ளது உள்ளபடியான ஞானமேயாகும் என்கிறார்கள் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள்.

பரம்பொருள் அவதாரம் எடுத்துவந்து மனிதர்களில் பிறக்கிறது என்பதும், அதுகால் மனிதர்களில் உறவுமுறை பற்றிச் சார்ந்திருக்கும் தெய்வத் திருவிளையாடலில் பரம்பொருள் விரும்புகிறது என்பதும் ஒரு நாளும் புரிந்துகொள்ள மிகவும் அரிதான அம்சங்களாகும்.

பதினாறாம் பாட்டு திருப்பாவையில் ஆறாயிரப்படி வியாக்கியானத்தில் ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் கூறுகின்ற ஒரு கருத்து மிகவும் ஆழ்ந்து கருத வேண்டிய ஒன்றாகும்.

“க்ருஷ்ணனுகப்பது பாரதந்த்ர்யம் ஆகையாலே, ஸ்ரீவைகுண்டத்திழவுதீர ஸ்ரீநந்தகோபர்க்குப் பிள்ளையாய், ”நந்தகோபன்மகன்” என்று அவரையிட்டுத் தன்னைச் சொல்லும்படி தான் பரதந்த்ரனாய், க்ருதார்த்தனான இடமாகையாலே, அவர் அபிமாநத்திலே இவன் ஒதுங்கினான் என்னுமிடந் தோற்ற, “க்ருஷ்ணனுடைய கோயில்” என்னாதே “நந்தகோபனுடைய கோயில்” என்கிறது.”

***
அம்பரமே, தண்ணீரே, சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா - என்று பாடுவதன் தத்வார்த்தப் பொருள் என்ன? மக்கள் மத்தியில் பழக்கத்தில் இருந்த பாவை நோன்புக்கான பாடலில் எவ்வளவு கலைநயமும், தத்துவ நுட்பமும் விளங்க அருள்துறைக்கான உபதேசத்தை வழங்க முடியும் என்பதற்கு இந்த இடம் உதாரணம். இதை நமக்கு உபகரிப்பவர் ஸ்வாபதேச உரையில் சுத்த ஸத்வம் தொட்டாசாரியார்.

ஸ்ரீவைஷ்ணவத்தின் உயிர்நாடியான கருத்து ஆத்மாவின் இயல்பு பற்றிய தெளிந்த ஞானம் வாய்க்கப் பெற்று, அதன் அடிப்படையில் இயற்றப்படும் கைங்கரியம் என்னும் பேறு. கைங்கரியம் என்றால் தொண்டுதானே? அது பேறாகுமா? என்றால் ஆத்ம ஞானம் இல்லாத நிலையில் புறத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் செய்யும் தொண்டு இனிதாக இல்லாமல் பளுவாகவோ, வருத்தமாகவோ இருக்கலாம். அதுவே சில விஷயங்களில் அவ்வாறு இல்லை என்பதைப் பார்க்கிறோம். பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் செய்யும் பேணுதலைத் தமக்கு இன்பமாகக் கொள்கின்றனர். மகப்பேறு வாய்க்காது போனால் மிகுந்த துயரத்திற்கு ஆளாகின்றனர் என்பதையும் பார்க்கிறோம். ஆழ்ந்த காதல்வயப்பட்டவர்கள் தம் காதலம் அன்பர்க்காகச் செய்யும் உதவிகளைப் பளுவாக நினைப்பதில்லை. உணர்ச்சிகள், உடல் உறவுகள் என்பதிலேயே இப்படி என்றால் ஆத்மா என்ற உயிர் நிலையில் ஞானம் வாய்க்கப் பெற்ற நிலையில் கைங்கரியமே உயர்வற உயர்ந்த உறுதிப்பொருளாக இருக்க முடியும் என்று முடிவெடுத்தது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் சிறப்பு எனலாம்.

அத்தகைய கைங்கரியம் என்பது உண்மையில் ஸ்ரீவைகுண்டம் சென்று அங்கு பகவானுக்கு இயற்றப் படுவது. இங்கு கோவிலில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதாரத்தில் இயற்றப் படுவது. மேலும் தமக்கு உபதேசம், தெளிவுபடுத்துதல் முதலியவற்றால் தம்மை இந்த நிலைக்குப் பக்குவப் படுத்திய ஆசாரியனிடத்தில் இயற்றப் படுவது. இவ்வாறு பக்தியும், ஞானமும், வைராக்கியமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பகவானின் அடியார்களான பாகவத சமுதாயத்திற்கு இயற்றப்படுவது. ஞானம் நன்கு கனிந்த நிலையில் கைங்கரியமே கூட தனக்குப் பிடிக்கிறது, தான் விரும்புகிறோம் என்ற காரணத்தை விட தன் கைங்கரியத்தால் பகவானுக்கு உகப்பு என்ற எண்ணமே தனக்கு மிகவும் இனிமை தருவதாய் இருந்து இயற்றப்படும் கைங்கரியமானது மிகுந்த சிறப்புடையதாகும்.

அவனுடைய உகப்பே முக்கியம் என்று நினைக்கத் தடையாய் இருப்பது தான் முக்கியம், தன்னுடைய விருப்பம், மகிழ்ச்சி முக்கியம் என்று நினைக்கும் தனக்கு என்ற நோக்கம். அது தவிரும் போதுதான் கைங்கரியத்தின் உயர்நிலையான அவனுகப்புக்கே குற்றேவல் என்பது வாய்க்கிறது. இந்த உயர்நிலைகளை ஒரு ஜீவன் இதய வேட்கையுடன் பிரார்த்தித்தே பெற வேண்டும். அதைத்தான் இந்த வரிகளில் உள்ளமைத்துப் பாடுகிறார் மிகச்சிறந்த ஞானியும், பக்தருமான ஸ்ரீஆண்டாள். ஸ்வாபதேச உரை சொல்கிறது - ‘அம்பரம் இதியாதி -- ஆத்மஸ்வரூபமான ஈஸ்வரமுக விகாஸத்தையும், தத்வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும், தத் ஹேதுவான கைங்கரியத்தையும்..’ அம்பரம், தண்ணீர், சோறு என்னும் இவையெல்லாம் ஆழ்ந்த தத்வார்த்தங்களுக்கான குறியீடுகள் என்று உணரும் போது நாம் உணர்வது ஒன்றை - ஸ்ரீஆண்டாள் தமிழ்மொழியை மிக ஆழ்ந்த தத்துவ மொழியாகக் கையாண்டிருக்கிறார் என்பதையே. இந்த உயர்ந்த கைங்கரியப் பேறுகளை ஒருவர் தம் ஆசாரியரிடத்தில் வேண்டிப் பெற வேண்டும் என்னும் அர்த்தத்தைக் காட்டுவதே நந்தகோபாலா எழுந்திராய் என்னும் பகுதி என்கிறது ஸ்வாபதேச உரை. 

ஒரு முக்கியமான கருத்தை விளக்கிக் கொண்டிருந்தார் நரேந்திரர்க்கு ஸ்ரீராமகிருஷ்ணர். ’ஜீவ தயை, சிவ சேவை’. ஜீவர்களிடத்தில் ஒருவர் எப்பொழுதும் தயையுடன் இருக்க வேண்டும். சிவமாகிய பரம்பொருளுக்குச் சேவை புரிபவராய் ஒருவர் எப்பொழுதும் திகழ வேண்டும் என்னும் கருத்தை விளக்கியவர், சற்று நேரம் பேச்சின்றி ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பவராய்க் கூறுகிறார்: ‘ம்..ம்..ஜீவ தயையா... தயையா.. நீ யார் தயை புரிய? தயை இல்லை தயை இல்லை சேவை. ஜீவர்களை எல்லாம் சிவத்தின் வடிவாகக் கருதி நீ ஜீவ ரூபத்தில் இருக்கும் சிவத்திற்கு சேவை புரிய வேண்டும். அதுதான் சரி’.

இதை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்த நரேன் (விவேகாநந்தர்) தம் மனத்தில் ஒரு பெரும் எதிர்காலத் திறப்பே நிகழ்ந்தது போல் உணர்ந்தார். வெளியில் வந்து சிலரிடம் கூறினார்: ‘இன்று குருமஹராஜ் சொன்னதை நீங்கள் கவனித்தீர்களா தெரியவில்லை. என்ன கருத்து! என்ன கருத்து! ஆம் ஜீவர்களிடத்தில் சிவ சேவை. நிச்சயம் குரு அருளால் அதை நிறைவேற்றுவேன்.’

இதன் விளைவுதான் இன்று நாம் காணும் ஸ்ரீராமகிருஷ்ணா மடம் மிஷன் என்ற இயக்கம்.

***
’உந்துமத களிற்றன்’ என்பது எம்பெருமானார் விசேஷித்து உகந்த பாட்டு. எம்பெருமானாரின் ஆசாரியர்களில் பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி இருவரும் உண்டு. திருப்பாவையை மனத்தில் தியானித்தவாறே எழுந்தருளிய எம்பெருமானார் தம் ஆசாரியரின் திருமாளிகைக்கு வரும்பொழுது இந்தப் பாசுரம் அவருக்கு மனத்தில் அநுசந்தானமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அவருடைய ஆசாரியாரின் மகள் பந்தாடிக் கொண்டிருந்தவள் வந்து திறக்கும் போது ‘பந்தார்விரலி உன் மைத்துனன் பேர்பாட வந்து திறவாய்!’ என்னும் வரி மனத்தில் ஒலிக்கவும் பாசுரக் கருத்திற்கும் புற நிகழ்ச்சிக்கும் மெய்ப்பாடு யதேச்சையாக ஒத்திருப்பதைக் கண்டு கண் முன் நிற்பது பிராட்டியார் என்றே பக்தியுணர்ச்ச்சியில் விழுந்து சேவித்தார் என்பது நம்மை அந்த நிகழ்ச்சிக் களத்திற்கே கொண்டு சென்று நிறுத்தவல்லது. இந்த நிகழ்ச்சி எந்த ஆசாரியாரின் திருமாளிகை வாசலில் நடந்தது, பெரிய நம்பியா, திருக்கோஷ்டியூர் நம்பியா என்பதில் கிரந்தங்கள் வேறுபடுகின்றன என்றாலும் நமக்கு முக்கியமானது உணர்விலும், கருத்திலும் பக்தியும், ஞானமும் தோய்ந்த சூழலை ஸ்ரீவைஷ்ணவம் நம் உள்ளத்தில் ஊட்டுகின்றது என்பதுவேயாம்.

பக்தியின் கண்ணிற்குப் பார்ப்பதெல்லாம் பரந்தாமம். பக்தர் என்பவர் இவ்வுலகில் வாழ்பவரன்று. அவர் இங்கு உயிர்மூச்சு ஓடினாலும் வாழிடம் வைகுந்தம். விக்டர் ஹ்யூகோ ஓரிடத்தில் கூறுவார் - L'homme respire, mais l'artiste aspire என்று. அதன் பொருள் : மனிதரின் உயிர்வாழ்க்கை மூச்சுவிடுதல் ஆனால் கலை மேதைகளின் உயிர்வாழ்க்கையோ இலட்சியத்தைப் பராவியெழுதல் ஆகும். நமக்கும், பக்திக்கும் இடையில் பாலங்களாகச் சொற்கள் இருக்கின்றன. அந்தச் சொற்களை விநயத்தோடு பயின்று உள்வாங்கினால் நாமும் நம்மையறியாது உயர்கிறோம். ஆனால் அந்தச் சொற்களை நம்முடைய தாழ்நிலைக்கு இழுத்துத் தள்ளினோம் என்றால் நமக்காக விடப்பட்ட பாலத்தை உடைத்து என்றும் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.

எத்தனையோ அருஞ்சொற்கள், அரிய கருத்துகள் கொட்டிக் கிடக்கும் புதையல் வயல்தான் திருப்பாவையின் வியாக்கியான உலகம்! ‘இளிம்பு’ எது? ‘சதிர்’ எது? ‘மாசதிர்’ எது?

தன்னுடைய கர்மஜ்ஞாநாதி உபாயங்களாலே எம்பெருமானைப் பெற இருக்குமது இளிம்பு. அவற்றைவிட்டு எம்பெருமானுடைய கிருபையாலே பெறுகை சதிர்; அந்தக் கிருபைக்கு அடியான பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு பெறுகை மாசதிர்.

பகவானின் கைக்கும், பிராட்டியின் கைக்கும் என்ன வித்யாசம்? நாம் பண்ணின பாபங்களின் கனத்தைக் கண்டு நாமே நம்பிக்கை இழந்து கவலும் போது ‘அஞ்சாதே இருக்கிறேன்’ என்பது அவன் திருக்கை.

என்னதான் இருந்தாலும் பகவானாலுமே நம்மைப் பொறுத்துக் கொள்ள முடியுமா, அவனோ ஸர்வஸ்வதந்திரன் ஆயிற்றே! ஒருவேளை இப்படிப் பட்ட ஆளா நீ! என்று வெகுண்டு நம்மைக் கோபித்தால் என்ன பண்ணுவது என்று நடுங்கும் போது ‘அஞ்சாதே! நான் கூடவே இருக்கிறேன். அவனுடைய அருள் உன் மீது ஏற்படச் செய்கிறேன்’ என்று காட்டும் மாறாத அருட்கை பிராட்டியின் திருக்கை. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment