Tuesday, January 14, 2020

உதார வாக்குகள்

ஸ்ரீவத்ஸ சிஹ்ந மிச்ரேப்யோ
நம உக்திம் அதீமஹே |
யதுக்தயஸ் த்ரயீகண்டே
யாந்தி மங்கள ஸூத்ரதாம் ||

எவரது வள்ளல் பெரும் வாக்குகளே
வேத நங்கையின் கண்டத்தில்
விளங்கும் தாலியாய்த் திகழ்வதுவோ
ஸ்ரீவத்ஸசிஹ்ந மிச்ரராம் அவரை
நம எனச் சொல்லொன்றாலே
வணங்குதும் என்றும் யாமே

என்று பராசர பட்டராலே நன்றிப்பெருக்குடன் தொழப்படாநின்றவர் கூரத்தாழ்வான். அவர் இயற்றிய வரதராஜஸ்தவம் வரதனையே பேச வைத்த பெருமை உடையது. கீர்வாணியின் கம்பீரத் துள்ளல் மிக்கு வரும் நடை வாய்ந்தது. முதல் ஸ்லோகமே ஏதோ புறப்பாட்டு மேளம் கேட்பது போன்ற ஒலிதந்து நிற்பது.

'ஸ்வஸ்தி ஹஸ்திகிரி மஸ்த சேகர:
ஸந்தநோது மயி ஸந்ததம் ஹரி: |
நிஸ்ஸமாப்யதிகமப்யதத்த யம்
தேவமௌபநிஷதீ ஸரஸ்வதீ ||'

இவருடைய குமாரர் பராசர பட்டர் வாக்கிலும் கோவில் மேளம் கேட்கும். உதாரணத்திற்கு ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் 13ஆவது ஸ்லோகம் முதல் இரண்டு பாதம்

அமதம் மதம் மதமதா மதம் ஸ்துதம்
பரிநிந் திதம் பவதி நிந்திதம் ஸ்துதம் --

இவர்கள் மனம் வாக்கு செயல் எல்லாவற்றாலும் கைங்கர்ய நிரதர்களாய் இருந்தமையை வாக்கே காட்டுகிறது.

'ஒப்பாரும் மிக்காரும்
இலையாய அரியென்றே
ஓதிவரும் புனல்வாணி
பரந்துமிகும் மறைநிலத்தே
அத்திமலைத் தலையணியாம்
அருளாளப் பெருமானாம்
நத்திநிதம் நாம் தொழவே
நலமிக்கு அருளுகவே'

இரண்டு தலைகளைப் பற்றி இங்கே பேச்சு. ஒன்று மறை முடி. அங்கே உபநிஷத குகைகளில் எல்லாம் புகுந்து புறப்படா நின்ற வாக்கு என்னும் நதியான ஸரஸ்வதீ ஒரே குரலில் முழங்கிப் பாய்கிறது. அவ்வாறு உபநிஷதங்கள் எங்கும் வாக்கு என்னும் தேவியானவள் மிக முயன்றும் ஸமமோ அதிகமோ காண இயலாத தனிப்பெரும் பரம்பொருள் எங்கே என்று கேட்டால் அந்த உபநிஷதங்களில் ஒலிக்கும் வாக்கு உதவிக்கு வருகிறதா என்று பார்த்தால் இல்லை. யாரது? எங்கே? என்று கேட்டால் மனத்திற்கும் சொல்லிற்கும் எட்டாத பரம்பொருள் என்று அவாங்மனஸ கோசர: என்று கையை விரித்துவிடுகின்றது. இப்படி நடுவழியில் விட்டு மறைந்து விடுவதனாலேயே உபநிஷத்தில் ஒலிக்கும் வாக்கை ஸரஸ்வதீ என்றார். ஸரஸ்வதீ நதி ஓடிப் பாதியில் மறைந்து பட்டதன்றோ!

ஒரு பக்தர் ஊரெல்லாம் தேடினார். தமது ராம்லாலா எங்கே என்று? காடு மலை நதி எல்லாம் பார்த்துவிட்டார். பக்தருக்கு திருஷ்டி அந்தர்முகமாகத் திரும்பியது. பார்த்தால் உள்ளே அங்குல பரிமாணனாய் திவ்ய ஸம்ஸ்தானத்தோடே தாம் தேடிய ராம்லாலா சிரித்துக் கொண்டிருக்கிறான். என்னப்பா! எவ்வளவு தேடினேன்? உள்ளேயே இருந்தாயே? ஒரு வார்த்தை இங்குதான் இருக்கிறேன் என்று சொல்லக் கூடாது என்று கடிந்துகொள்கிறார். கிட்டத்தட்ட இத்தகைய ஓர் அனுபவம் கூரத்தாழ்வானுக்கு என்று சொல்லலாம். எவ்வளவு படிப்பு, எத்துணை ஆராய்ச்சி, எவ்வளவு சாஸ்திர விசாரம், வேத மீமாம்ஸை வேதாந்த மனனம், சிந்தனம் நிதித்யாஸனம்? என்ன தேறுகிறது? யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ - எதை அடையாமல் மனத்தையும் அழைத்துக்கொண்டு வாக்கு திரும்பிவிடுகிறதோ --- இவ்வாறு தெரிந்துகொள்வதற்கு அவ்வளவு தேடணுமா? பேச்சிற்கு அரியன், எண்ணுதற்கு அரியன், கண்ணிற்கு அகப்படான் --- எல்லாம் அவனை அறப்பெரியவனாகக் காட்டத்தானே பயன்படும் . அவன் ஒப்பாரும் மிக்காரும் இலையாய பெரியோன் என்றால் நமக்கு என்ன? நம்மை அவன் முகத்தில் விழிக்கப்போகிறதில்லை. அவனைக் காண அறிய நம்மாலும் போகிறதில்லை. பின் என்ன செய்வது?

அது என்ன ஒரு குன்று? அந்த மலையின் மீது ஒரு சந்நிதாநம். மலையே தன் தலைக்கு அணியாகக் கொண்ட கொண்டைபோல் நிற்பது யார்? அடடா! எங்கோ மறைநிலங்களில் எல்லாம் தேடித் திரிந்தோமே! அந்தப் பரம்பொருள் யார்? அவனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் ஆகியவை எல்லாம் என்ன? என்று கேட்டு அலுத்தோமே, அந்தப் பரம்பொருள் இதோ அத்திகிரி மத்தகத்து அணியாக நிற்கும் அருளாளப் பெருமாளான வரதன் அன்றோ? கண்காண வந்து, கழல் வணங்க என்றும் நம் கைங்கர்யம் கொண்டு அத்தால் தான் உகப்பான் போல் நிற்கும் மாமாயன் வஞ்சக் கள்வன்! இவனன்றோ ஒப்பாரும் மிக்காரும் இலையாய மாமாயன்! தனக்குச் சமானமும், மிகையும் இன்றி நிற்பது பெரிதில்லையே! அவ்வளவு அறப்பெரியன் இவ்வளவு தன்னைத் தாழ விட்டுப் பரிமாறினான் என்னும் இதுவன்றோ மாமாயம். பரத்துவம் பரிமளிப்பது ஸௌலப்யத்திலன்றோ? அதனாலன்றோ 'யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம் பெருமான்!' என்று சொன்ன ஆழ்வார், சொன்ன சொல் உலருமுன்னே 'யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம் பெருமான்' என்று சொல்லி நின்றதும்? அந்தப் பண்டை நான்மறை பகர்ந்த பரம்பொருள் மனனம் சிந்தனம் நிதித்யாஸனம் இவற்றுக்குத் தானே இடம் கொடுக்கும்? ஆனால் வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து 'சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்தோம், குற்றேவல் எங்களை நீ கொள்ளாமல் போகாது' என்று நிர்பந்தித்து ஆளும் செய்வன் என்று கிட்டி நின்று அனுபவிப்பது ஸௌலப்யம் பூர்ணமாக வெளிப்படும் இந்த அத்திகிரியின் மேலன்றோ? இந்த வழிவழி ஆட்செய்யும் இந்த நன்மையை நமக்கு மேலும் மேலும் மிகுத்துத் தரவன்றோ யக்ஞ தீக்ஷிதனாய் சங்கல்பம் பூண்டு அயன் வேள்வியின் பயன் என்ன வந்த பெம்மான் நிற்பது? நமக்கு எது நன்மை என்று நாம் ஓர்ந்து அறுதியிடலாகும் நன்மை என்பதைக் காட்டிலும், நமக்கு எது நன்மை என்று அவன் ஓர்ந்து நமக்கு அளிக்கும் நன்மையை நாம் விலக்காமல் இருக்கும் அந்த மிகப்பெரிய நன்மையை அவன் நமக்குச் செய்தாலல்லது நாம் நமக்குச் செய்துகொள்ள ஆகாதே?

நிச்ஸமாப்யதிகம் அப்யதத்த யம்
தேவம் ஔபநிஷதீ ஸரஸ்வதீ?

அது

ஹஸ்திகிரி மஸ்த சேகர:
அந்தப் பரம்பொருள்
ஸ்வஸ்தி ஸந்தநோது மயி ஸந்ததம் ஹரி:

*
பழங்காலத்துப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கோ ஆழ்குகை மர்மத்தில் ஒரு பெரும் புதையல், ஆயிரமாண்டு வேட்டை. அந்த இடத்துக்கான சாவி ஒரு கோட்டுருவச் சித்திரம். அந்த காகிதம் மட்டும் கையில் கிடைத்துவிட்டால்....! யாரோ ஒருவர் கூட்டாளி அந்தக் காகிதத்தை எப்படியோ கைப்பற்றி விட்டார். கொண்டு வந்து கொடுத்து இந்த மனிதரும் அதை மேலே பார்க்கிறார். கீழே பார்க்கிறார். பின்பக்கம், முன்பக்கம் ம்ம் வெற்றுத்தாள். எங்கே கோட்டுருவம்? இதுதானா அது.? பிறகுதான் அங்கும் இங்கும் நம்பிக்கையான இடத்தில் விசாரித்ததில் தெரிய வருகிறது. வெறும் ஒளிக்குத் தெரியாதாம். ஆனால் UV வெளிச்சத்துக்குப் பளிச்சிடுமாம்.
யூவி வெளிச்சத்தில் பார்த்தால் ஆச்சரியம் தாங்கவில்லை. பெரும் புதையலை எழுதிக் கொடுத்த சாசனம் போல் உள்ளது. காகிதத்தில் இருப்பது உண்மை. காணமுடியும் என்பதும் உண்மை. ஆனால் எந்த வெளிச்சத்தில் என்பதுதான் பிரச்சனை.

சாதாரணப் பொருள் இந்த இந்திரியங்களுக்குப் புலனாகிறது. ஆனால் பரம்பொருள் அப்படி எந்தக் காலத்திலாவது இந்திரியங்களுக்குப் புலனாகுமா? இல்லை. இந்திரியங்களுக்குப் புலனாக வேண்டும் என்றால் அந்தப் பொருள் ஒன்று காலத்தால் எல்லைப்படுத்தப் படவேண்டும். இடத்தால் எல்லைப்படுத்தப்பட வேண்டும். பொருள் தன்மையால் எல்லைப்படுத்தப்பட வேண்டும். பரம்பொருள் எல்லாக் காலத்தும் இருப்பது; எல்லா இடத்தும் இருப்பது; அனைத்துப் பொருளின் உட் பொருளாகவும் இருப்பது. நித்யமாக இவ்வண்ணத்ததாய் இருப்பது. எனவே என்றென்றும் இந்திரியங்கள் பரம்பொருளைக் காண இயலா.

கூரத்தாழ்வான் கூறுகிறார் :-

நித்யம் இந்திரிய பத அதிகம்

சரி நம் கண்ணுக்கும் இந்திரியங்களுக்கும் புலப்படாமல் போகலாம். ஆனால் யோகிகளின் இந்திரியங்களுக்குப் புலனாகலாமே. யோகிகளின் பிரத்யக்ஷம் என்பது அஷ்ட சித்திகள் என்ற வகையில் தொலைவில் இருப்பதைக் காணுதல், தொலைவில் இருப்பதைக் கேட்டல் என்று சொல்கிறார்களே அதுபோல் அந்தப் பரம்பொருளைக் காணலாமே, கேட்கலாமே! இல்லை. யோகிகளின் இந்திரியங்களுக்கும் பரம்பொருள் புலப்படாதது. யோகிகளின் இந்திரியங்கள் இவ்வுலக அனுபவங்கள், அதன் நினைவுகள் இவற்றின் மீதுதான் தீவிர நிலையில் காரியப்படுவதே ஒழிய, மற்றபடி அதீந்திரியமான விஷயத்தில் காரியப்படும் ஒன்றன்று. 'யோகிகளின் அறிவுக்கும் எட்டாதது'

யோகினாம் திய: அபி ஸுதூரகம் - என்கிறார் கூரத்தாழ்வான்.

சரி. இந்திரியங்கள், யோகக் காட்சி ஆகியவற்றுக்கு எல்லாம் விஷயம் ஆகாதது பரம்பொருள் என்றால் வாய்மொழி, கேள்வி என்று சொல்லப்படும் வேதாந்தம் அந்தப் பரம்பொருளைப் பற்றி விவரிக்கிறதே. அப்பொழுது வேதாந்த வாக்யங்களை நன்கு அர்த்தம் பண்ணிக் கொண்டால் போகிறது பரம்பொருள் இன்னது என்று தெரிந்துவிடுகிறது. கோட்டுருவச் சித்திரம் தெரிந்தால் புதையல் கையகப்பட்டால் மாதிரிதானே! ஆனால் வேதாந்தம் இது இன்னதுதான் என்று பிடித்துப் பிடித்துக் காட்டினால் பரவாயில்லை. அதுவோ நேதி நேதி அந்தப் பரம்பொருள் இதுவன்று இதுவன்று என்று திருவிழாவில் குழந்தையைத் தொலைத்தவன் ஒவ்வொன்றாக இல்லை இல்லை என்று தள்ளித் தள்ளிக் காட்டுவதைப் போல தத்தளிக்கிறது.

வேதாந்தத்தையும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் முற்றிலும் இதுகால் மனிதன் அடைந்த அனுபவத்துக்கு எல்லாம் கடந்த ஒன்றைப் பற்றிச் சொல்ல வரும் போது வேதாந்தம் எதை வைத்து ஒப்புமை காட்டிச் சொல்லும்? ஏற்கனவே அடைந்த மனித அனுபவம் ஒப்பு சொல்லலாம்படியான அளவு இறந்தது பரம்பொருள். அதனைத் தான் சொல்ல முடியாமல் படும் சிரமத்தைக் கொண்டுதான் ஏதோ ஒன்று முற்றிலும் விலக்ஷணமான தன்மை கொண்டது என்பதையாவது புரிய வைக்கிறது.

வாய்மொழி வேதத்தின் மறைமுடிகளிலும் அளவிறந்தது அந்தப் பரம்பொருள் --

அநுச்ரவ சிரஸ்ஸு அபி துர்க்ரஹம் -- என்கிறார் கூரநாதன்.

பொருளைப் பார்த்துப் பழகிய நம் இந்திரியங்கள் அவற்றுக்கு அப்பாற்பட்டது அந்தப் பரம்பொருள். யோகிகளின் காட்சிக்கும் எட்டாதது. வாய்மொழி விளக்கங்களான வேதாந்தங்களுக்கும் அளவிறந்தது அந்தப் பரம்பொருள்.

புதையல் சீட்டை அப்படித்திருப்பிப் பார்க்கிறார். இப்படித்திருப்பிப் பார்க்கிறார். முன்னால் பார்க்கிறார். பின்னால் பார்க்கிறார் கூரேசன். ஆனால் அந்தக் கோட்டுச் சித்திரம் ஏதோ ஒரு கோணத்தில் கொஞ்சம் நிழலாடக் காண்பது அல்லால் ஒன்றும் புலப்படவில்லை. அப்பொழுதுதான் ஒரு சந்தேகம். ஒரு வேளை மாய மை கொண்டு எழுதப் பட்டிருந்தால் யூ வி விளக்கில்தானே தெரியும்? மாமாயன் வஞ்சக் கள்வன் மேல் மையல் என்ற பக்தி கொண்டு எழுதப் பட்டிருந்தால் அந்தப் பரம்பொருளை எந்த விளக்கில் எடுத்துப் பிடித்துப் பார்ப்பது? எங்கு இருக்கிறது அந்த புலன் தெரி விளக்கம்?

ஆனைக்குன்று என்று ஓரிடம் இருக்கிறதாம். அதன் உச்சியில் அத்தகைய அதிசய விளக்கு இருக்கிறதாம். அங்கு போய்த் தேட வேண்டுமோ? எங்காவது மறைவிடத்தில் சிலருக்கு மட்டும் அனுமதி என்று ஒளித்து வைத்திருக்குமோ என்றால் அதெல்லாம் ஒன்றும் இல்லை. காட்டில் திரியும் யானைகள் அலைந்த அலுப்பு தீர முதுகு தேய்த்துக் கொள்ளும் குன்றின் மேல் அனைவரும் காண, அக்கறை உள்ளவர்கள் பயன் கொள்ள திகழ்ந்த வண்ணம் சுடர் கொள் மூர்த்தியாய் விளங்குகிறது அந்த மஹத்தான விளக்கு.

கரி சைல மஸ்தகே ப்ராதுர் அஸ்தி -- என்பது ஆச்சரியத்தில் வெளிவரும் ஆழ்வானின் பாசுரம்.

நித்யம் இந்திரிய பதாதிகம் மஹ:
யோகிநாமபி ஸுதூரகம் திய: |
அப்யநுச்ரவ சிரஸ்ஸு துர்க்ரஹம்
ப்ராதுரஸ்தி கரிசைல மஸ்தகே ||

*
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

No comments:

Post a Comment