இசை என்பது என்ன? ஆத்மா என்னும் பறவை தன் சிறகுகளைக் கோதிவிட்டுக்கொண்டு அவ்வப்பொழுது பறந்து, நெட்டுகுத்த நேர்விண் புள்ளியில் குறியாய் விரைந்து, மடங்கி, சிறகுகளைக் கீழே போட்டு மல்லாக்க மண்ணை நோக்கி வீழ்வதைப் போல் வந்து பின் நிரந்து திசை பூசிச் செல்லும் பல் வேறு வேகத் திரை அபிநயங்களால் தன் மகிழ்வில் திளைக்கும் அற்புதமான தனிமைக் கணம். இவ்வாறு எந்த இசை நம்மை உணர வைக்குமோ அது இசை. உண்மையான இசைக்கு, உண்மையின் இசைக்குச் சொற்கள் வேண்டா. தடைப்படாத உள்ளத்தின் அவகாசம்தான் வேண்டும். அந்த உள்ளம் என்னும் உள்வானின் பல கதுப்புகளைத் தன்னுள் அமிழ்த்தித் திறக்கும் வல்லபம் இசையின் சுராவளிகளுக்கு இருக்க வேண்டும்.
பனியில் ஸ்கேட்டிங் விளையாடுவார்கள். தான் தான் என்று தன்னை நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கும் வரை தடுக்கி, விழுந்து, தட்டுக் கெட்டுக் கஷ்டம். ஆனால் அந்த பனிப்பாதைகளின் பல்வேறு நோக்குகளையும் வளைவுகளையும் மனத்தில் வாங்கிக் கொண்டு கொஞ்சம் தான் என்பதைக் கழட்டி கிளம்பும் முன் அந்த ஹாங்கரிலேயே விட்டுவிட்டால் போதும் அப்புறம் ஸிம்பனியின் இசைக் கோலமாகத்தான் இழைந்து குழைந்து விர்ரென்று எழுந்து மூவ்மெண்ட்ஸ் போய்க்கொண்டிருக்கும். கடல் நீர் ஸர்ஃபிங் கேட்கவே வேண்டாம். எனக்குப் பிடித்த இசைத் துறைகள் என்ன எனில் கான்ஸர்டோ, ஸிம்ஃபனி, ராப்ஸொடீஸ் என்னும் ரஷ்ய, ஜெர்மானிய பொதுவாக ஐரோப்பிய க்லாஸிகல் இசை. மொஸார்ட், விவால்டி, பிதோவன் கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் ரஷ்ய க்லாஸிகல் இசை என்பது ஆத்மாவின் இசைக்கான கண்வ ஆச்ரமம். ஒஸ்தியான சரக்கு மட்டுமே கிடைக்கும் என்று சொன்னால் அது ரஷ்ய க்லாஸிகல். 12 வருஷம் ஒருவர் அடைகாத்தால்தான் இசையின் குஞ்சு பொறிக்கும் அங்கே. அந்த அணியிலும் டாப் பிரம்மாக்கள் என்று சிலர் உண்டு. அவர்கள் இசையில் ஆத்மா என்பது தன்னிச்சையாக வந்து அமர்ந்து ஜலக்ரீடை செய்யும். ஏதோ அப்ஸரஸுகள் குளிக்கும் காட்சியைப் பார்க்க நேர்ந்த அச்சுபிச்சுகள் போல் நாம் கல்லாகி உறைந்து நிற்க வேண்டியதுதான். அப்படிப்பட்ட சிலர் ட்சைகோவ்ஸ்கி, செர்கே ரக்மனினோஃப்.
இசை என்பது பல மொழிகளை உடையது. பல இலக்கணங்கள் உடையது என்பதும் உண்மைதான். கர்நாடக இசையின் நுணுக்கங்கள் எனக்கும் மிகப் பிடித்ததுதான். அது மட்டுமின்றி ஹிந்துஸ்தானி இசை சட்டென்று ரசிப்பதற்கு மிகவும் கஷ்டம். கீழ்ஸ்தாயிலேயே பெரும்பாலான சஞ்சாரம் நடக்கும். இவர்கள் இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து எழுந்து எப்பொழுது வெளியில் வரப்போகிறார்களோ என்று கூடத் தோன்றும். ஆனால் அந்த இசையின் நுணுக்கம் என்று அறிந்து உள்ளே போகும் போது அதில் கிடைக்கும் சுகமும் அலாதியானதுதான். அனுபவிக்கும் ரசனை பிரதானமான விஷயங்களில் அவ்வப்பொழுது கருத்துகள் மாறிக்கொண்டிருக்கும். இதுதான் என்று பிடித்து வைத்தது போல் சொல்ல முடியாது.
***
No comments:
Post a Comment