ஒரு காலும் தாண்டிவிட முடியாத
சுவர்களின் பின்னே நின்றபடிதான்
ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம்
கண்ணுக்குத் தெரியாத தடுப்புச் சுவர்கள்
அல்லது கண்களைத் தடை செய்யாது
வெட்ட வெளியாய் மறைந்து நிற்கும் தடைச்சுவர்.
மிகமிக நேரிடையான சுருக்கு வழியும்
சுற்றிவளைத்தச் சுழல்வழி எனச்
சார்புநிலைப் பொது விஞ்ஞானம் பகரினும்
இடித்துத் தள்ள மூர்க்கம் எழுந்தாலும்
இணையும் கைகளுக்கு நடுவிலும்
அந்த மறைந்து வெளியான தடுப்புச் சுவர்.
சுவர் சமயத்தில் பல உடுப்புகளும்
வேஷங்களும் போட்டு ஏமாற்றுவதும் உண்டு.
ஆண் பெண் கிழவர் குழந்தை
அந்நியள், நம்மவள், எவனோ, இவளோ
இவரோ, அதுவோ,
அவர்களோ, இவர்களோ, உவர்களோ
எனப்பல எனப்பல எனப்பல
நினைப்பினில், நடப்பினில்,
நனவினில் நடைமுறை நிஜத்தினில்
கனவுகள் ஓய்ந்த நிதர்சனப் பொழுதினில்
தடைச்சுவர் கண் மறைக்காமல்
எண் மறைக்காமல்
எங்கோ எப்படியோ எவ்விதமோ
தட்டுப்படும் தடைச்சுவர்
தோன்றாமல் தோன்றி.
நீயும் நானும் வேறிலாது நிற்க
நயந்தாலும் நளினமான விலகல்
பயமற்ற நெருக்கமாய்ப் பயின்ற தொலைவு
அயலாகிப் போகும் அணுக்க ப்ரதேசம்
கடக்க முனைந்த கால்
தூரப்பட்டுப் பின்னடையும் மாயம்
இத்தனைக்கும் நீயும் நானும்
பக்கத்தில் பக்கத்திலேயே அமர்ந்துள்ளோம்.
இன்னும் சொல்லப் போனால்
என்னுள் நீயும் உன்னுள் நானும்
உயிர்த்த கணங்களும் உண்டுதானே!
ஆயினும் தொலைவு இடையிட்ட
பாடுடைப் போலிகளோ நாம்?
போயினும் வருவோம்
என்ற நம்பிக்கையில்
விலகிச் சேயிடைப்படா நிற்கும்
ஓருயிரின் பல பிம்பங்களாய்
ஒரு பிம்பத்தின் பல்லுயிர்களாய்த்
தனித்தனி உயிர்களின்
பிம்பங்களே மெய்மைகளாய்
அம்புவியில் வளைய வரும்
நெருக்க விழைவின் முறிவுகளாய்
உருவு சுமந்த அந்நியங்களாய்
உருக்கரந்த அந்நியோந்நியமாய்
வெருவரத் திரிதரும்
உயிர்க்குலக் கரவறப்
பயிலொளி அன்பென நின்றதும்
எதுவென அறியா முனைப்பினில்
கதுவிடும் மோனம் முகிழ்த்திடும்
சதுரது சத்தியம் என்றிடும்
குதுகுலம் உளத்தினில் குமிழ்வதும்
யதுகுல முரளியின் பண்களோ?
ஆயினும்
உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னுடன்
என்னில் உள்ள ஏதோ ஒன்று உன்னுடன்
நம்முள் உள்ள ஏதோ ஒன்று நம்முடன்
நாமாய் நின்ற ஏதோ ஒன்று அவர்தம்முடன்
நம்மிலும் அவர்தம்மிலும் உள்ளதாம் ஒன்று
மற்றவர்தம்முளும் நின்ற ஏதோ ஒன்றுடன்
சுற்றமாய்க் கலந்து கலக்க
உற்றதும் உறுவதுமாய்
நிலவிடும் ஒரு பெரும் விழைவு
அகண்ட சத்சங்கமாய் விழைந்திடும் ஏகம்
அதுதானோ நீ நான் நாம் அவர் அனைத்துலகும்?
அத்வைத நிலையிலும் தீருமோ
இந்த அணுகலால் விலகும் மாயமும்
விலகிட அணுகிடும் விழைவும்?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment