Friday, January 17, 2020

சங்கப் புலவர்களும் நம்மாழ்வாரும்

'பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்' என்று பாடியது நம்மாழ்வார் மட்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்னொருவரையும் அந்த அணியில் சேர்க்க வேண்டும் போல் இருக்கிறது. அவர்தான் பரிபாடலின் முதற்பாடலைப் பாடிய பெருமகனார். திருமாலைப் பாடுகிறார் புலவர் முதல் பரிபாடலில். ஏதோ கோவிந்தா கிருஷ்ணா திருமாலே என்று தனக்குத் தோன்றியதைப் பாடக்கூடாதோ? அது என்ன? வேதம் எப்படி எப்படியெல்லாம் திருமாலைத் துதித்ததோ அப்படியே சாயை பிடித்தாற் போல் பாடுகிறார். ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், திருமாலைப் பற்றி மறை கண்ட முடிவு, அவன் அன்றலர்ந்த செந்தாமரை அன்ன கண்ணினன், 'தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ' (அந்தப் பரமபுருஷனுக்கு சூரியனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள) - காயாவின் மலர்ந்த பூவை ஒத்தக் கருநிறம் உடையவன்; அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்ற படி திரு விரும்பி வாழும் மார்பினை உடையவன்; மார்பில் கௌஸ்துபம் என்ற மணியினைப் பூண்டவன்; நீலமலை ஒன்றைச் செந்நெருப்புச் சூழ்ந்துகொண்டிருப்பது போன்ற பொன்னாலான பீதாம்பரத்தை உடையவன்; அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய் நிறைந்து அனைத்துப் பொருட்களையும் நியமிப்பவனாய் இருப்பவன்; என்று இவையெல்லாம் வேதங்கள் திருமாலைப் பற்றி உரைக்கும் புகழ். இப்பொழுது சங்கப் புலவரிடம் வருவோம்:

எரிமலர் சினைஇய கண்ணை!
பூவை விரிமலர் புரையும் மேனியை!
மேனித் திரு ஞெமர்ந்து அமர்ந்த மார்பினை!!
மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை!!
மால்வரை எரி திரிந்தன்ன பொன்புனை உடுக்கையை!!
(ஞெமர்ந்து - பரந்து, விரும்பி, நிறைந்து)

தாம் எந்தப் பிரமாணத்தால் இவ்வாறு பாடுகிறோம் என்பதையும் உடனேயே கூறுகிறார்,

சேவல் அம் கொடியோய் !
நின் வலவயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

இவர் என்ன ஆழ்வாரா அன்றேல் சங்கப் புலவரா என்று வேறுபாடு தெரியாத அளவிற்கு அவருடைய வரிகள் சுழலிடுகின்றன. புலவரின் பொற்குரல் தொடர்கிறது:

'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து,
செருமேம்பட்ட செயிர் தீர் அண்ணல் !
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே!

'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்' என்றாள் சங்கத் தமிழ்மாலை முப்பதும் தந்த கோதை. அது என்ன இருவர் தாதை? 'நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே' (நாராயணோபநிஷத்) என்ற மறைமுடியான உபநிஷத வாக்கியத்தை எதிரொலித்தது போல் 'இருவர் தாதை'. சரி அவ்வாறு சொன்னவுடன் அது என்ன 'இலங்கு பூண் மா அல்' ? சாந்தோக்கியம் கூறுகிறது, 'ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:' 'நகத்திலிருந்து எல்லாம் பொன்மயமானவன்'. அடுத்த வரிதான் மிக அருமை.

'தெருள நின் வரவு அறிதல்
மருளறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே'.

'வரவு அறிதல்' என்றால்? அவதாரக் கொள்கை என்னும் பாஞ்சராத்திர ஆகமக் கருத்து. உயர்வற உயர்நலம் கொண்டவன், ஒத்தாரை மிக்காரை இலையாய மாமாயன் எப்படி எந்நின்ற நீர்மையுமாய்ப் பிறக்கிறான்? என்பது ஞானிகளுக்கும் பெரும் புதிர் என்கிறது திருமால் நெறி. இனிவருவது சங்கப் புலவர் உரைக்கும் திருமால் நெறி:

அருமை நற்கு ஆயினும்
ஆர்வம் நின்வயின் பெருமையின்,
வல்லாய்! யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது
அல்லி அம் திரு மறு மார்ப!
நீ அருளல் வேண்டும்

பகவத் விஷயத்திற்குத் தனிமை ஏற்றதன்று; சுற்றம் புடை சூழ, உற்றார் நட்டார் அனைவரையும் சேர்த்துத்தானே சங்க காலத்திலிருந்து கோதை உரைத்த மறைத்தமிழ் வரையில் பழக்கம். கூட்டு சேர்த்துக் கொண்டுதானே கோவிந்தனை வழிபடச் சொல்லுகிறாள் கோதை. சங்கப் புலவரும்

ஆங்கு,
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு
வைகலும் பொலிக' என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் ---
வாய்மொழிப் புலவ!
நின் தாள் நிழல் தொழுதே.

கடல்வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்து உழிதரக் கண்டேன் என்று இறும்பூது எய்திய நம்மாழ்வாரின் குரலும், சங்க காலப் புலவரின் குரலும் ஒன்று போல் ஒலிக்கிறது அன்றோ!
'பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச் சாபம்'

*

No comments:

Post a Comment