Friday, January 24, 2020

மனத்தில் கள்ளம் 2

நண்பரைப் பார்த்து நாளாயிற்று. அடிக்கடிப் பார்த்துக் கொண்டிருந்தோம் ஒரு காலத்தில். ஆனால் ஏன் விட்டுப் போயிற்று? ஏன் விட்டுப் போகிறது? ஒன்றும் சமயத்தில் புரிவதில்லை. வாழ்க்கையின் வரிக்கோடுகள் அப்ப்டித்தான் ஓடுகின்றன. ஒக்க ஓடு என்னும்படிதான் நாளும் உருள்கிறது.

என்னய்யா! தெரிகிறதா?

என்னும் கேள்விதான் நினைவு இருந்தும் எங்கோ தடைப்பட்ட முழு ஞாபகத்தைக் கிளறிவிட்டது.

ஆஹா எவ்வளவு நாளாயிற்று! (ஆனாலும் நண்பர்களைப் பார்த்ததும் ஏற்படும் மனத்துள்ளல் முழுமையாக ஏற்பட மறுக்கிறது.)

பேசும் பொழுது என் சம்பந்தப்பட்ட பலதையும் ஒரு நையாண்டி கலந்தே கேள்வியாகவும், அபிப்ராயங்களாகவும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். மேம்போக்கான பேச்சு என்பதாலும், ஒவ்வொரு விஷயத்தையும் நிறுத்தி நிதானமாகப் பேசப் போனால் அது நெடுநாள் கழித்துப் பார்க்கும் அந்த நெகிழ் கணத்திற்குச் சுவைக் கேடு என்பதாலும் சிரித்துக்கொண்டிருந்தேன்.

சரி பார்ப்போம் என்று ஒரு முறை இருவரும் கிளம்பியிருப்போம். ஆனாலும் திடுதிப்பென்று ஒரு பேச்சு கிளம்பியது.

அது அவர் சம்பந்தப்பட்ட பேச்சு. அதுவரை எள்ளல் தொனியில் இருந்தவர் மிகவும் சீரியஸாகப் பேச ஆரம்பித்தார். அப்பொழுதே எக்ஸ்க்யூஸ் கேட்டபடிக் கிளம்பிவிடலாம் என்று ஓர் உள் உந்துதல். கிளம்பப் போனால் மனிதர் உரிமையோடு செல்லமாக அதட்டுகிறார்.

‘இரப்பா. உன் கருத்து கேட்கத்தானே இந்தப் பேச்சை ஆரம்பித்தேன். அப்புறம் நீ போகிறேன் என்றால்...’

அடடா! இவ்வளவு உரிமைப் பாசம் உடையவரா இவர்! ஏன் இவ்வளவு நாள் இவர் தொடர்பை இழந்தோம்!’ என்னும் சுய கண்டிப்பில் உட்கார்ந்துவிட்டேன். அது சுத்த மடத்தனம் என்பது கஷ்டப்படுத்தி... எனக்குப் புரியவேண்டுமா?

ஒன்றும் உப்புச் சப்பு இல்லாத விஷயம். ஆனால் ‘உன் கருத்து என்ன?’ என்று கேட்டதும் ஒருவர் தன் கருத்தைக் கூறுவது போல மடத்தனம் சில நேரங்களில் இல்லை என்பது புத்திக்குப் புரிந்தாலும் அனுஷ்டானத்தில் எனக்கு வந்தபாடில்லை. சரி. சில ஜன்மங்கள் இப்படித்தான் கஷ்டப்படும்.

அவர் முதலில் மிகவும் சகிப்புத் தன்மையுடன் எனக்கு மீண்டும் தன் நிலைப்பாட்டை விளக்கினார். அதாவது சொன்னதையே மீண்டும் சொன்னார். நானும் கேட்டுவிட்டுப் பேசாமல்தான் இருந்தேன், அதான் முதலிலேயே கருத்தைச் சொல்லிவிட்டோமே என்று.

ஆனால் அவர் ஏதோ இந்த விஷயங்களில் கறாரான நெறிப்பாடுகள் வைத்திருப்பதுபோல் கனமான குரலில் கேட்டார், ‘இப்பொழுது உங்கள் கருத்து என்ன சொல்லுங்கள்’.

எனக்குப் புரியவில்லை. முதலில் நான் சொன்னது தமிழ், ஆங்கிலம் கலந்து மக்கள் பேசும் மொழியில்தானே, அதாவது அவர் என்னிடம் பேசிய பாஷையில்தானே நானும் கூறினேன் என்று நினைத்துப் பார்த்தேன்.

‘அதான் சொன்னேனே!’

‘என்ன சொன்னீங்க?’

அப்படியே திருப்பிச் சொன்னால் ஒரு வேளை அவருக்குப் புரியும்படியாக நான் சொல்லியிருக்காத ப்ரச்சனை தொடருமோ என்று விளக்கி நிரல்பட என் கருத்தைக் கூறினேன்.

திடீரென்று வாய்த்துப்பாக்கியால் சுட ஆரமித்துவிட்டார்.

‘உன்னைப் போல் திமிர் பிடித்தவனும், தான் என்ற அகங்காரம் பிடித்தவனும் நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. மத்தவன் எல்லாம் உனக்குத் துச்சம். பிறர் மனம் வருந்துவார்களே என்ற தயை சிறிதும் இல்லாத ஆள் நீ. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் நீ உன் மனதில்? இதற்கெல்லாம் சேர்த்துவச்சி வாழ்க்கையில் நீ சரியாகப் படுவாய்.’

‘இல்லப்பா. நீ என் கருத்து என்ன என்று வேண்டிக் கேட்கும்போது நான் என்ன நினைக்கிறேன்....’

‘நினைச்சே...புடுங்கின.... இல்ல கொஞ்சமாவது மத்தவங்க பேர்ல ஒரு கன்ஸிடரேஷன் இருக்கணும்.... என்ன நீ தப்பே செய்யாத பெரிய புடுங்கியா....’

‘இல்ல.. இதுல தப்பு சரின்னும் என்ன இருக்கு.... ஜஸ்ட் ஒரு ஒப்பீனியன்...’

‘இல்ல... ஒன்று சொல்லும் போது மனிதாபிமானம் கொஞ்சமாவது வேண்டும். மத்தவங்க மனசு புண்படும்படியா சொல்லாம ஒரு தன்மையா...’

‘சரிப்பா... நீ வந்ததுலேந்து என்னப் பேசினதை எல்லாம் நினைச்சுப் பாரு... நையாண்டி... கேலி... நான் உயர்வாகக் கருதும் அவற்றையெல்லாம் சிரிப்பு ஒன்று கலந்து வெறும் பழித்தல்... நான் அதை ஒன்றும் பிரமாதமாக எடுத்துக்கொல்ளவில்லையே...... ‘

‘அதான்...அதை நீ மனதில் வைத்துக்கொண்டு என்னைப் பழிக்கு பழி என்று... உன் பழி வாங்கும் ஆங்காரம் இருக்கே... நான் ஏதோ ஒரு ஃப்ரெண்ட்ஷிப்ல சொன்னேன்.... ‘

‘ஏன் இதையும் ஃப்ரெண்ட்ஷிப்ல நீ.....’

‘வேண்டாம்ப்பா... உன் சகவாசமே வேண்டாம்... நீ பெரிய புடுங்கிதான்... உன்னைச் சொன்னது தப்பு தப்பு மஹா தப்பு.... அதுக்கு எனக்கு இதுவும் போதும் இன்னமும் போதும்.... சரி பார்ப்போம்’ என்று விருட்டென்று போனவர்தான்.

அவருடைய சின்ன பை ஒன்றை வைத்துவிட்டுப் போகிறார் என்று பார்த்ததும் நண்பரைக் கூப்பிட்டு, ‘ உங்க பை... ‘

வந்தவர் அதை நான் கொடுத்ததாக இருக்கக் கூடாது தான் பிடுங்கியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னமோ.... 'It was my mistake..' என்று பைக்காகவோ அல்லது பொதுவாகவோ முணுமுணுத்துக்கொண்டு விருட்ட்ட்டினார்.

அப்பொழுதுதான் நன்றாக ஞாபகம் வந்தது முன்னொரு தடவை இப்படியே ஒரு சம்பவம் நடந்து இப்படித்தான் விருட்ட்டிப் பிரிந்தது. அது பல வருஷங்கள் ஆயிற்று. உள் உணர்வு சில சமயம் சரியாகத்தன் மணி அடிக்கிறது. ஆனால் எகப்பட்ட ட்ராஃபிக் சத்தம்... நான் தான் உற்றுக் கேட்பதில்லை. 

***

No comments:

Post a Comment