Friday, January 24, 2020

ஹெரால்ட் ப்ளூமும் (Harold Bloom) பாரதியும்

ஹெரால்ட் ப்ளூம் (Harold Bloom) என்பவர் Anxiety of Influence ’தாக்கத்தை விஞ்ச ஆர்வத் துடிப்பு’ என்றபடியான ஒரு திறனாய்வுக் கொள்கையைத் தந்தவர். தமக்கு முன்னே ஒரு மகத்தான அறிஞர், படைப்பாளி என்பவரின் தாக்கம் பின்வரும் எழுத்தாளரிடம் ஒரு விஞ்சும் ஆர்வத்தை உண்டாக்கும். அதன் காரணமாகத் தாம் இரசித்ததை விஞ்சக் கூடிய விதத்தில் படைக்க வேண்டும் என்ற ஊக்கம் தொடர்ந்து படைப்பு நிகழ ஓர் உந்து சக்தியாக இருக்கும் என்கிறார் ஹெரால்ட் ப்ளூம். இந்தக் கொள்கையை பாரதியார், கம்பர் என்றா இருவரின் பாடல் வரிகளை எடுத்துக்கொண்டு பொருத்திப் பார்க்க முனைந்தால் என்ன நயம் வெளிப்படுகிறது என்று பார்ப்போம்.

‘சொல்லையும் கள்ளையும், நெஞ்சையும் சேர்த்திங்கு 

வெண்ணிலாவே -- நின்றன்
சோதிமயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே ....

கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள்ளொன்று
வெண்ணிலாவே -- வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு..’

சொல்லாம், கள்ளாம். நெஞ்சாம் - மூன்றையும் மயக்கும் சோதி வெண்ணிலாவின் சோதியாம். அமிழ்து - நித்ய வாழ்வைத் தரும். ஆனால் கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள் ! அப்படிப்பட்ட கள் வெண்ணிலாவின் சோதியோடு கலந்து உள்ளதாம். ஏனிந்த விசித்திரச் சேர்க்கை?
பாரதியாரிடம் பொதுவாகக் காணக் கிடைப்பது இவ்வாறு வினோத ப்ரயோகங்கள், விசித்திரமான கருத்துச் சேர்க்கைகள் வருமிடத்தே, அவர் அநேகமாக வேறு ஒருவருடைய நூலில் தாம் தோய்ந்ததைத் தம் உற்சாகத்தால் வெளிப்படுத்தி விஞ்சக் கூடும் என்பதே. அந்த ரசனையே அவருக்குச் சில சமயம் சவாலாக அமைந்து விடுவதும் உண்டு. தாம் ரசித்ததற்கும், ரசித்ததை உள்வாங்கித் தாம் தம் வழியில் சொல்ல வருவதற்கும் இடையில் ஒரு விஞ்சு துடிப்பு உண்டு. இந்த அம்சத்தை ஆக்கநலத்தின் ஒரு கட்டுமானத் தன்மை என்கிறார் ஹெரால்ட் ப்ளூம். A structural aspect of creativity. The anxiety of Influence என்பது அவருடைய திறனாய்வுக் கொள்கை. நமது பாரதியார் விஷயத்தில் யார் இங்கே ‘தாக்கத்தின் ஆர்வத் துடிப்பை’த் தந்தது பாரதியாருக்கு?
வேற யாரு,? கம்பர்தான்.

கம்பரை நன்கு கற்றவர் என்று நினைத்தால் இந்த அளவிற்குத் தோய்ந்தவர் என்பது வியப்பாக இருக்கிறது. விஷயம் என்னவென்றால் நிலவு காய்கிறது. நிலவொளி நிலம், நீர், காடு, வானம் என்று எங்கும் பரந்து பரவி நிரவிக் கிடக்கிறது. கம்பர் சொல்கிறார் --

நிலவு ஒருவருக்குக் கள்ளாக இருக்கிறதாம். யாருக்கு? காதலில் கலந்தவர்க்கு mood-setter ஆக வேலை செய்கிறதாம் நிலவு.

கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய் --

ஆனால் அதே நிலவு கடு நஞ்சாகவும் வேலை காட்டுகிறது. யாருக்கு? காதலில் பிரிந்தவர்க்கு, அவ்வாறு பிரிந்து உள்ளம் கவல்பவர்க்கு, காதலின் இனிய நாட்களை நினைத்து ஏங்குபவர்க்குக் கடு நஞ்சாக ஆகிறது நிலவு.

பிரிந்து உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய்

அது மட்டுமா? ஊடலில் புலந்தவர்க்கு இடையில் தூதாக வேலை செய்கிறதும் இந்த இதே நிலவுதான்.

உடன் புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்

இந்த ட்ரிபிள் ஆக்ஷன் செய்யும் படி இந்த நிலாவை, மூன்று குணச்சித்திர நடிப்பு செய்யும்படி வேண்டியது யார்? மதனன்.

மலர்ந்தது நெடு நிலா -- மதனன் வேண்டவே.

நெடு நிலா -- வார்த்தையைக் கவனியுங்கள். அது என்ன நெடு நிலா? நிலாவுக்கு என்ன நெடுமை? நெடு நெடு என்றால் உயரம் என்று மட்டும் பொருள் இல்லை. ஆழமான, நிலவுகின்ற, தாழ்த்த, இடைவிடாத என்று பல பொருள்கள். காதலில் கலந்தவர்க்கு அணுக்கமாய் இணக்கமான கள்ளாக இருப்பதால் நெடு நிலா. பிரிந்து உலந்தவர்க்கு உயிர் சுடு விடமாக இருப்பதால் ஒரு கணம் ஓர் ஊழியாக ஆகி நெடு நிலா. உடன் புலந்தவர்க்கு இடையில் சென்று நிலவி ஊடல் தீர்ப்பதால் நெடு நிலா.

கம்பர் பாட்டு -- பால காண்டம் -- உண்டாட்டுப் படலம் --

’கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய், பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய், உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்,
மலர்ந்தது நெடு நிலா -- மதனன் வேண்டவே.’

சரி. பாரதியார் அமிழ்தம் என்ற அம்சத்தைப் பற்றிப் பேசினாரே? அதற்குக் கம்பர் என்ன சொல்கிறார்? கம்பர் சொன்னத்துக்கு பாரதியார் என்ன சொல்கிறார் என்று கேட்கலாமே ஒழிய பாரதியார் சொன்னத்துக்குக் கமபர் என்ன சொல்கிறார் என்றா கேட்பது? இலக்கிய உலகில் ரசிக உள்ளங்களின் மோதல்களில் காலம் இப்படி ரிவர்ஸ் கியர் போடுவதும் உண்டு. அதாவது பாரதியார் இப்படிப் பாடியதற்குக் கம்பரிடம் உண்டான இன்ஸ்பிரேஷன் என்ன என்பதை அப்படிக் கேட்கலாம். கம்பர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தேவர்களின் அமிழ்தம் என்ன செய்யும்? இறவாமையைத் தரும். அதாவது மிக மிக நீண்ட வாழ்க்கையைத் தரும். practically eternal. அது மட்டுமா? சாதாரணப் பொருளைச் சிறப்பான பொருளாக ஆக்கிவிடும். வயோதிகன் தள்ளாடிக் கொண்டே குடித்தால் நவ யுவனாக ஆக்கிவிடும். குரூரமான பெண், தன் அவலட்சணத்தைத் துணியைப் போட்டு மூடிக்கொண்டு வந்து குடித்தால், அடுத்த கணம் அவள் அழகில் உலகமே மயங்கி விழுந்து விடாமல் இருக்கச் சலாகை போர்த்தித்தான் நடத்திச் செல்ல வேண்டியிருக்கும். அதாவது சிறுமை உள்ளதைப் பெருமை பெற்றதாக ஆக்கிவிடும். பெருமை உள்ளதைச் சிறந்ததாக ஆக்கிவிடும். அப்படிப்பட்ட சாகஸங்களைச் செய்தால் நிலவை அமிழ்தம் என்று அழைக்கலாம் அல்லவா?

கம்பர் கூறுகிறார் -- வெறுமனே பெயர் தெரியாத ஒரு காட்டாறு ஓடினால் அதை நிலவு கங்கையாக ஆக்கிவிடுகிறது. விரிந்து பரந்த கடலைப் பாற்கடலாக ஆக்கிவிடுகிறது நிலவு. உயர்ந்து விளங்கும் குன்று ஒன்றைப் பார்த்தால் நிலவொளியில் ஈசனின் கயிலை மலை போல் ஆக்கிவிடுகிறது. ஆக நிலவு அமிழ்தத்தின் தன்மை கொண்டதாக இருக்கிறது.

’ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்,
கூறு பாற்கடலையே ஒத்த; குன்று எலாம்
ஈறு இலான் கயிலையே இயைந்த; என் இனி
வேறு நாம் புகல்வது, நிலவின் வீக்கமே?’

இப்பொழுது பாரதியார் பாட்டிற்கு வருவோம்.

’கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள்ளொன்று
வெண்ணிலாவே -- வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு..’

பாரதியார் எங்கு தாம் ரசித்த கம்பனின் தாக்கத்தை வென்று வெளிப்பட்டார் என்று பாருங்கள் -- கம்பரின் இரண்டு பாடல்கள் உரைத்த செய்தியைத் தாம் இரண்டு வரிகளில் குறிப்புணர்த்திய திறமையால் விஞ்ச முயல்கிறார். ஆனாலும் பின்வந்த புலவனின் சாகஸத்தை உள்ளபடி உணர வேண்டுமானால் அவன் ஆட்பட்ட முன்னவனின் தாக்கம் என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் அன்றோ.!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment