Sunday, January 19, 2020

கற்கும் கடன்

சுவாமி பரமாநந்தர் என்ற சந்நியாசி கூறுகிறார் -- நாம் கடன் வாங்கிய அறிவில் காலம் தள்ள முடியாது. கடன் வாங்காமல் எந்த அறிவுதான் இருக்கிறது? அரிச்சுவடி முதற்கொண்டு மனிதனுக்குக் கடன் சரக்குதானே. அவனுடையது என்றால் ஓசை, அழுகை, விளிஓலங்கள். அதற்கு மேல் ஒலி வடிவமோ, வரி வடிவமோ எழுத்தே அவனுக்குச் சூழலில் இருந்துதானே உள்ளே போகிறது. அப்பொழுது கடன் வாங்கிய அறிவு உதவாது என்றால் என்ன பொருள்? நாம் பெறுவது தகவலும், தரவும்தான். அவற்றை நம் சிந்தனை, அனுபவம் என்பவற்றோடு உறைத்துப் பார்த்து அறிவை நமதாக ஆக்கிக் கொண்டால் அப்புறம் நாம் கடன்காரர்களாக இருக்க மாட்டோம்.

அறிவிலே கடன்காரர்கள் அறிவுக்கான மற்றவர் உழைப்பை மதிக்க மாட்டார்கள். நாம் அறிவை நம்முடையதாக ஆக்கிக்கொண்டோம் என்பதற்கு அறிகுறியே, அறிவின் மதிப்பும், அறிவுக்கான அறிஞர்களின் உழைப்பின் மதிப்பும் நமக்கு நன்கு புரிகிறது என்பதுதான். இல்லாவிட்டால் மற்றவர் கூறியதை இடங்கண்ட இடத்தில் மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இடர்ப்படுவோம். ரிஷிகளுக்குப் பட்ட கடனை நாம் தீர்க்கும் வழியே அவர்கள் சொன்னவற்றைப் படித்தலும், அதனை நன்கு சிந்தித்துப் புரிந்து கொள்ளுதலும் ஆகும். வெறும் வார்த்தைக் கோப்புகளாக நினைவில் கொள்வது மட்டும் தன்னளவில் பயன் தருவதன்று. ஓரளவு அதில் உதவி உண்டு என்றாலும்.

ஸ்ரீதாயுமானவர் கூறுவதைச் சுவாமி சித்பவாநந்தர் எடுத்துக் காட்டுகிறார், அவரது தினசரி தியானத்தில்.

திடமுறவே நின்னருளைச்
சேர்த்தென்னைக் காத்தாளக்
கடன்உனக்கு என்றெண்ணிநின்னைக்
கைகுவித்தோன் நானலனோ?

***

No comments:

Post a Comment