கேள்வி கேட்டால் சிலருக்குச் சங்கடமாக இருக்கிறது. கேள்வி கேட்பவர் மீதே ஒரு வெறுப்பு வருகிறது. அப்படி வெறுக்கும் படியாகக் கேட்கப் படும் கேள்வி வெறுத்த கேள்வியா? இப்படிச் சொல்வதைப் பார்த்தால் சங்க காலப் புலவர்களுக்கு அடக்க முடியாமல் சிரிப்புதான் வரும். வெறுத்த கேள்வி என்றால் பொருள் வேறு. கேள்வி என்றால் அந்தக் காலத்தில் படிப்பறிவுக்குப் பெயர். வடமொழியில் சுருதி என்பதும் காதால் கேட்டுப் பெறும் அறிவான வேதத்திற்குப் பெயர். காதால் கேட்கப் படுவது என்னும் பொருளை உடைய சொல் சுருதி என்பது. வீணையில் சுருதியை மீட்டினார் என்னும் பொழுது இசையின் லயம் என்னும் பொருள். படிப்பு வட்டாரங்களில் சுருதி என்றால் வேறு பொருள். பொதுவாக வேதம். பரிபாடலும் ஓரிடத்தில் வேதத்தை கேள்வி என்ற சொல்லை இட்டுக் குறிப்பிடுகிறது. ஆனால் வெறுத்த கேள்வி என்றால் என்ன அர்த்தம்?
பாரதியார் ஓரிடத்தில் பாடுகிறார், ‘வேதமும் வெறுப்புறச் சோர்மதியும் இந்த வாதனை பொறுக்கவில்லை’ என்று வறுமையின் கொடுமையை நினைந்து லக்ஷ்மி தேவியைச் சரண் புகுவார். அப்படி ஏதும் வெறுத்த கேள்வி என்ற பொருளா என்றால் அதுவும் இல்லை. இந்தத் தொடர் புறநானூற்றில் பொருந்தில் இளங்கீரனார் பாடும் பாட்டில் வருகிறது.
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை, கடு மான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது
செறுத்த செய்யுள் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப,
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே.
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது. விளங்கில் என்னும் நகரத்தை ஆண்ட சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையனைப் பாடுகிறார். பகைவரால் விளங்கிலுக்கு வந்த கேட்டை நீக்கக் களம் புக்கான் மன்னன். விளங்கில் எப்படிப் பட்டது என்பதற்கு இளங்கீரனார் பாடுகிறார். நன்கு முதிர்ந்த சிப்பியில் விளைந்த முத்துகள் இறைந்து கிடந்தால் போன்று வெள்ளையான மணல். அதற்கு நடுவில் மணிகளால் ஆகிய மாடம் கண்ணைப் பறிக்கிறது. அந்த மாடத்தில் மகளிர் சூழ இருந்து தெற்றி என்னும் விளையாட்டு விளையாடுகின்றனர். தெற்றி என்றால் அமர்ந்து விளையாடும் விளையாட்டு, கைகோத்தாடும் குரவை என்று பொருட்கள் உண்டு. எதைக் கொள்ளினும் சரியே.
போர்க்களத்தில் பகைவரின் அணிவரிசையை அவர்கள் உணர்வதற்கு முன்னர் மிகவும் வேகத்தில் கடந்து களத்தையே நினதாக்கிக் கொண்டு நீ அடைந்த வெற்றியை எப்படிப் பாடுவது. நீ செய்த போர் ஆற்றல், யானை, குதிரை ஆகியனவற்றை நீ அணிவகுத்துச் செய்த போர் எப்படிப் பட்டது! விரித்துச் சொன்னால் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும். தொகுத்துச் சொன்னால் சொல்ல வேண்டியது விடப்பட்டு எஞ்சிக் கொண்டே இருக்கும். உன் வெற்றியால் மயங்கிய நெஞ்சத்தை உடைய எம் போன்றவர்க்கு ஒரு வழியாலும் உன்னுடைய பெருமை சொல்லி நிறைவு பெறாது. பின் ஏன் முடியாததைச் செய்கின்றீர்கள் என்றால் புலவர்களுக்கு வாழ்க்கை என்பதே பெருமை கண்ட இடத்தில் பாடாமல் இருக்க முடியாது. அப்படிப் பாடாமல் இருப்பதும் வாழாமல் இருப்பதும் ஒன்றுதான். இவ்வாறு பாட முடியாமலும், பாடாமல் இருக்கவும் முடியாத இடர்ப்பாட்டில் நாங்கள் தவிக்கும் போது மன்னா! தாங்கள் சொன்ன வார்த்தை நினைவுக்கு வருகிறது.
“ இத்தனை நேரத்திற்குச் சிறிதும் தாமதிக்காமல் செறிவான செய்யுட்களைப் பாடக் கூடிய செவ்விய நாவைக் கொண்டவரான, வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்” என்று கூறினீர்களே அந்த உம்முடைய பெருமையை, பகைவர்களை வென்றி கொண்ட பெருமையை நாங்கள் பாடிவிட முடியுமா என்றுதான் பாடுகிறோம்.
இதில் பொறையன் நினைத்துப் பார்க்கும் சொல்லில் வருகின்ற கபிலரைப் பற்றிய நினைவுக் குறிப்பாக வருகிறது வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் என்ற சொற்றொடர். அது என்ன வெறுத்த கேள்வி? புறநானூறு பழைய உரை கூறும் பொருள் - செறிந்த, மிகுந்த கேள்வி என்பது. ஆக வெறுப்பு என்னும் உரிச்சொல் செறிவு என்னும் பொருளது என்பது தொல்காப்பிய இலக்கணம். வேறொரு புலவரும் கபிலரை வாய்மொழிக் கபிலன் என்று பாடுவார். கபிலர் அந்தணர் என்பது தெரிகிறது. நன்கு வேதங்கள் கற்ற, தம் காலத்தில் செறிவான கல்வி கேள்விகளை உடைய புலவர் கபிலர். தமிழிலும் செறிவாக நுட்பங்களையும், பொருட்களையும் வைத்துச் செய்யுள் இயற்றுவதில் மிக்க புகழ் பெற்றவர். இப்படிப் பட்டவர்களை பஹுச்ருதன் என்கிறது கௌதம தர்ம சாத்திரம் போன்ற அறநூல்கள். பஹுச்ருதன் என்றாலும் வெறுத்த கேள்வி என்றாலும் பொருள் ஒன்றுதான். பஹு - அதிகமான மிகவும் செறிந்த ச்ருதன் - கல்வி கேள்விகளை உடையவர். பஹுச்ருதன் என்பவர் யார் என்பதை விவரிக்கிறது கௌதம தர்ம ஸூத்திரமும், ஸ்ரீஹரதத்தர் உரையும்.
யார் பஹுச்ருதன் என்றால்,
லோக வேத வேதாங்கவித் (1.8.5)
உலக வியவஹாரங்களை அறிந்தவனாயிருக்க வேண்டும். அதாவது தேசத்தில் சமூக லௌகிக ராஜ்ய நடவடிக்கைகளை அறிந்தவன். அதோடு வேதம், அதன் அர்த்தம், வேதாங்கங்களான மீமாம்ஸா சாத்திரங்களையும் அறிந்திருக்க வேண்டும். அவனையே பஹுச்ருதன் என்று சொல்லப் படுகிறது -- இது ஸ்ரீஹரதத்தரின் உரை.
மேலும் பஹுச்ருதன் என்பவன்,
வாகோவாக்ய இதிஹாஸ புராண குசல: (1.8.6)
வேத சம்பந்தமான வாகோவாக்யம் என்னும் தர்க்கம், இதிஹாஸ புராணங்கள் இவற்றையும் அறிந்து சமர்த்தனாய் இருப்பவனே பஹுச்ருதன். அப்படியென்றால் கபிலர் என்னும் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலர் எத்தகைய கல்விமானாக இருந்தார் அவர் காலத்தில் என்பதற்கான கூடுதல் விவரங்கள் கௌதம தர்ம ஸூத்திரங்களின் மூலமாகக் கிடைக்கின்றதன்றோ !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
*
No comments:
Post a Comment