தெருவிலே பெருமாள் வருகிறார் என்றால் அனைவரும் மிகுந்த நேம நிஷ்டையோடு நின்று வணங்குகிறோம். அங்கு வருவது பரமாத்மாதான் என்ற முழு ப்ரக்ஞை நமக்கு ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்த மாதிரியான விபரீத பரிக்ஷையெல்லாம் வேண்டாம் என்று தோன்றுகிறதோ? அதுவும் ஒரு விதத்தில் சரிதான். ஏதோ சராசரி சந்தடியில்லாமல், அங்கு கொஞ்சம் இங்கு ஒரு நொடி என்று போகிறது. ஆன்மிகம் ஆத்மார்த்தம், சத்யம் என்று ஆகிவிட்டால் அப்புறம் நம் கணக்குகள் அங்கு வேலை செய்யாது.
இப்படித்தான் ஒரு தடவை திருவல்லிக்கேணியில் தெருவில் ஸ்ரீகிருஷ்ணர் புறப்பாடு வந்துகொண்டிருக்கிறார். எல்லாரும் தெரு ஓரமாக நின்று சேவித்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி விவேகாநந்தரும் தம் சிஷ்யர்கள் அளசிங்கம், கிடி, ஜிஜி முதலிய பலருடன் நின்று சேவித்துக் கொண்டிருக்கிறார். இதில் கிடி கொஞ்சம் நாத்திகம். ஆனால் ஆத்மிகத் தேட்டம் உள்ளே கனலும் ஒருவர். அவர் பலசமயம் விவேகாநந்தரிடம் வாக்குவாதம் செய்திருப்பார் போலும் கடவுளின் ப்ரஸன்னம் பற்றி! திடீரென என்ன தோன்றியதோ தெரியவில்லை சுவாமிஜி கிடியைக் கையால் தொட்டு இடித்து ‘அங்கு பார் ஸ்ரீகிருஷ்ணர் வருகிறார்!’ என்று கூறியதும்தான் தாமதம், கிடி பார்க்கிறார், அங்கு விக்கிரகம் இல்லை. உயிர்ததும்பும் ஸ்ரீகிருஷ்ணனே வருவதைக் கண்டார். என்ன ஆயிற்றோ மனிதருக்கு, அதிலிருந்து பெரும் மாற்றம், பிற்காலத்தில் தனிமையில் பெரும் தவத்தில் மூழ்கியிருந்தார் என்று படித்த நினைவு.
அதே திருவல்லிக்கேணிதான். அதே வருடாவருடம் தெருவில் எழுந்தருளும் உற்சவங்கள்தாம். இப்பொழுதும் நாமும் போய் நிற்கலாம். சேவிக்கலாம். ஆனால் உண்மையாக சேவித்தல் என்றால் அன்று கிடிக்கு நடந்தது போல் நடந்தால்தான் உண்டு. சரி இந்த வருடம் நீங்கள் அங்கு போனால் இன்ன தேதிக்கு நடக்கும் என்று யாராவது சொன்னால் எத்தனை பேர் போவார்கள்? நமக்கு இஷ்டம் இல்லையா என்பதில்லை. நிச்சயம் நாம் மிகவும் விரும்பும் விஷயம்தான். ஆனால் எதையும் ஏற்கும் பக்குவம் என்று ஒன்று. அது வரும்வரையில் கஷ்டம்தான். அமுதமே கொண்டுவந்து வாயில் யாராவது ஊற்றினாலும் மிகுந்த கஷ்டப்பட்டு ஒரு சொட்டுகூட விடாமல் வெளியே துப்பி விடுவோம்.
இப்படித்தான் சிறுவயதில் ஸ்ரீபூர்வசிகை சபாவில் ஒரு முறை பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ உ வே அண்ணங்கராசாரியார் உபந்யாசத்தில் சொன்ன கதை ஒன்று என்றும் என் நினைவில் இருப்பது. ஒரு ரிடையர்ட் தாசில்தார் ஊரோடு வந்து கோயில் வழிபாடு, பூஜை என்று வெகு மும்முரமாகத் தம் வாழ்நாளைக் கழிக்கிறார். கோயிலுக்கு வந்தால் அவருக்குத் தெரிந்தது ஏதோ ஒரு பாட்டு இரண்டு பாட்டு, ‘கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ’ என்று முடியும். அவர் சந்நிதியில் வந்து சேவித்தவண்ணம் மணிக்கணக்கில் இவ்வாறு அந்தக் கடைசி வரியையே சொல்லிக் கொண்டு கண்ணீரும் கம்பலையுமாய் உருகி நிற்பார். ஒரு நாள் அவருக்கு என்ன மனநிலையோ, உள்ளிருந்து பெருமாள் தம்மை வா வா என்று கூப்பிடுவது போல் ஒரு பிரமை. திடீரென்று அவருக்கு பீதி வந்துவிட்டது. தம் பேரன் பேத்திகள் ஆகியோரின் சில விசேஷங்கள் எல்லாம் சமிபத்தில் வருவதாக இருந்த நினைவெல்லாம் ஒன்று சேர்ந்து, இதோ இதோ என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி விரைந்து சென்றவர் அப்புறம் நெடுநாள் கோயில்பக்கமே போகாமல் இருந்தார். - என்று ஒரு கதை. இதுதான் நம் மனப்பக்குவம். இந்த நிலையிலிருந்துதான் நாம் உண்மையான ஆத்மிக வாழ்விற்கே போக வேண்டும். எனவேதான் ஸ்ரீதாயுமானவர் கூறுவது, ‘நிராசையின்றேல் தெய்வம் உண்டோ’ என்பது.
ஆனால் உண்மையான பக்தி திகழும் மகான்களின் வாழ்வில் பார்த்தால் ஏதோ ஒரு சிறு பங்குதான் அவர்களை வாழ்வோடு பட்டும் படாமலும் கட்டியிருக்கும். பெரும்பாலும் அவர்களுடைய உள்ளமோ எதுதான் சாக்கு என்று தெய்வத்திடமே ஓடிக்கொண்டிருக்கும். அப்படி ஒரு நிலையை அடைந்து நின்றவர்தாம் திருமங்கைமன்னன் ஆகிய ஆலிநாடன். அவர் வாழ்க்கையைப் பார்த்தாலே வினோதம். காதல் வயப்பட்டார். ஆனால் அதன் விளைவாகக் கடவுள் சேவைக்கே ஆட்பட்டார். வழியில் வருகின்ற மணவாளரிடம் வழிப்பறி செய்தார். ஆனால் அழகியமணவாளனிடம் தம் எல்லாவற்றையும் பறிகொடுத்தார். ஆண்மிடுக்கு என்றால் அவரைச் சொல்லலாம் என்பதால் கலியன் என்று பேரெடுத்தார். ஆனால் பரகால நாயகி என்று தம் ஆத்மிக உணர்வில் முற்றும் பெண் தன்மை அடைந்து பரமாத்மாவிடம் ஈடுபட்டார். மதிலைக் கட்டினார். அதேநேரம் காலம் நெடுக வரக்கூடிய திருமால் வழியைப் பாதை போட்டார். கோவில் கோவிலாய்ப் போய் பாடினார். ஆனால் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை அரங்கன் மெய்நின்று கேட்டருளும் திருநாளைத் தொடங்கிவைத்தார். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு குளம், கயம். அதில் ஒரு வாளை அதுபாட்டுக்கு நீந்திக் கொண்டிருக்கிறது. திடீரென ஒரு முதலை வாயைத் திறந்துகொண்டு விழுங்க வருகிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு எம்பிக் குதிக்கிறது வாளை. பார்த்தால் உயரத்தில் இருக்கும் தெங்கம் பழத்தைப் போய் இடித்துத் தள்ளிவிட்டது தன் வேகத்தில். அந்த தெங்கமோ விழுந்த வேகத்தில் பாக்குமரக் குலைகளைச் சிதறச் செய்துவிட்டது. இப்படித்தான் காட்சி இருக்கிறது அவருடைய ஊரில் போய்ப் பார்த்தால். இந்தக் காட்சி அவருடைய வாழ்க்கையைக் குறிப்புணர்த்துகிறதா? அது என்னவோ அந்த திருமங்கையாழ்வாரின் தெரு உலா வரும் போது ஓர் உண்மை பக்தர் போய்ச் சேர்ந்தார். அவருடைய உள்ளமோ இந்த ஆழ்வாரிடம் ஈடுபாடு கொள்ளும் ஓர் இளம்பெண் என்ற நிலைக்கு வந்து விட்டது. தம் உள்ளம் பெண் ஆன நிலைமையை எந்தக் காலத்திலோ அவர் பாடியதைப் பழம் சுவடிகளில் இருந்ததைக் கொணர்ந்தார் வித்வான் ராகவையங்கார். ஆழ்வாரைக் கண்டதும் தம் உள்ளமாகிய பெண் ஏக்கத்தால் நிறைந்து வெறும் உயிர் மட்டும் மிஞ்சினவளாய்த் திரும்பி வருகிறாள் என்று நயமுற அமைத்துப் பாடுகிறார்.
“ கடியுண்ட நெடுவாளை
கராவில் தப்பிக்
கயத்துக்குள் அடங்காமல்
விசும்பில் பாய
அடியுண்ட உயர்தெங்கின்
பழத்தால் பூகம்
அலையுண்டு குலைசிதறும்
ஆலி நாடா
படியுண்ட பெருமானைப்
பறித்துப் பாடிப்
பதம்பெற்ற பெருமானே
தமியேன் பெற்ற
கொடியொன்று நின்பவனிக்
கெதிரே சென்று
கும்பிட்டாள் உயிரொன்றும்
கொடுவந் தாளே “
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
அருமை
ReplyDelete