உள இயல் என்பது வித்யாசமான துறை. பௌதிகம் போன்றோ, ரசாயனம் போன்றோ, உயிரியல் போன்றோ இல்லாமல் புறத்தே புலப்படும் பொருளை அன்றி உள்ளத்தைப் பற்றிப் படிக்கிற துறை. மனோ தத்துவம் என்பது நம் பழங்காலத்தில் இருப்பினும் உள இயல் என்னும் psychology மேலை நாட்டு விஞ்ஞானத்தால் ஊட்டம் பெற்று வளர்ந்த இயல் ஆகும். தன்னுடைய அடிப்படைக் கருத்துகளை மத நூல்கள், அருள் வெளிப்பாடுகள், ஆன்மிக தத்துவ ஆய்வுகள் என்பனவற்றின் அடிப்படையில் அமையப் பெறுவது மனோ தத்துவம் என்றால், முற்றிலும் விஞ்ஞான ஆய்வுகளின் பலன்களைத் தன் வளர்ச்சியின் அடிப்படையாகக் கொண்டு எழுந்தது உள இயல்.
இரண்டு விதங்களிலும் ஒப்புமை உடைய கருத்துகளும், ஒன்றித்துப் போகும் பார்வைகளும் இருக்கின்றன எனினும் ஒவ்வொன்றின் திசையும், நோக்கும் வேறு வேறானவை.
மனிதனும் யந்திரம் போன்றவனே என்ற கருத்தில்தான் உள இயலும் தொடங்கியது. எனினும் விஞ்ஞான கருத்தியல் தெளிவு கூடக்கூட மாற்றுப் பார்வைகளும், முன்னினும் சிறந்த அணுகுமுறைகளும் உள இயலில் செழிக்கத் தொடங்கின. சிக்மண்ட் ஃப்ராய்டின் உள இயல் அலசல் என்னும் psycho analysis ஒரு மைல் கல் வளர்ச்சி. Ego, Id என்ற கருத்துகளைக் கொண்டு மனித மனத்தின் உணர்வில்லா தளத்தின் உண்மைகளை விளக்கி மனிதன் தன்னைத்தானே எப்படிப் புரிந்து கொள்வது என்று வழிவகை செய்தது ஃப்ராய்டின் முயற்சி. காமம் என்பதும், மரணம் என்பதும் எப்படி ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் இருக்கின்றன என்பதை நன்கு காட்டியதும் ஃப்ராய்டின் சாதனை எனலாம். ஆனால் உள இயல் அலசல் என்பது வெறும் நாற்காலி உபந்யாசம் என்று ஆகிவிட்ட பொழுது அதன் அலசல்கள் உருமாறிக் கருத்து, பார்வைத் திணிப்புகளாய் ஆகிநின்றன. அலசிப் புரிய வைப்பதற்குப் பதில், ஏற்கனவே ஏன்று கொண்ட கருத்துச் சட்டத்திற்கேற்ப பிரச்சனைகளை விளக்கி ஒட்ட வைப்பது என்பது அதன் பாணி என்று ஆகிவிட்டது. இந்தச் சூழலில் Transactional Analysis என்று கொண்டு வந்தவர் Eric Berne என்பவர் ஆவார்.
ஒவ்வொருவர் உள்ளத்திலும் நான் என்னும் அஹ நிலை மூன்று விதமாய் உள்ளது. குழந்தைமை சார்ந்த நிலை Child என்றும், அறிவுசான்ற நிலை Adult என்றும், பெற்றோரின் வளர்ப்பு சார்ந்த நிலை Parent என்றும் PAC கட்டமைப்பு கொடுத்தவர் எரிக் பேர்ன். மனிதனுடைய சிக்கல்கள் எல்லாம், பிரச்சனைகள் எல்லாம் அவன் Adult Ego State என்பதில் நிலை நிற்காமல், Parent Child Conflicts என்னும் அஹநிலைகளின் பிணக்கங்களில் மாட்டிக் கொள்வதேயாகும் என்பது சாராம்சம். Adult Ego State என்னும் அறிவுசான்ற அஹநிலையில் நிற்கும் பொழுது மனிதன் முற்றிலும் சுற்றியுள்ள நிஜ உலகின் மெய்மையில் ஊன்றியவனாய்க் கருத்துடன் செயல் படுகிறான். அதனால் பிரச்சனைகளைத் தீர்ப்பவனாய் நடந்து கொள்கிறான்.
***
(Eric Berne அவர்களின் Traansactional Analysis பற்றி எங்களுக்கெல்லாம் அந்தக் காலத்தில் அறிமுகம் செய்து வைத்துத் தொடர்ந்து வகுப்புகள் நடத்திய Prof C S Kamalapathi அவர்களின் நினைவில்)
*
No comments:
Post a Comment