நல்ல குளிர்! நடுங்குகிறது.
பச்சைத் தண்ணீர் பகை.
பகலின் வெய்யில் இதம்.
பார்க்கும் இடமெல்லாம்
பனியின் அசடு வழிதல்.
நடுக்காடு.
நடுங்கி ஆடும் நடை.
நயனில் சினம் போல் நெறி கட்டும் பனி.
மூட்டுங்கள் தீ!
மூண்ட வெப்பில் மனங்கள்
குழுமிக் குலாவட்டும்.
மனித வாழ்க்கை ஒரு பனிக்காலம்.
மரணம் என்பது துனி நெருப்பு.
அக்கினி நடுவில் அமரட்டும்.
அவன் தழல்கள் கதைகள் கூறட்டும்.
புவனப் பனிக்கு அவன் மருந்து.
பொழுது போக அரும் விருந்து.
கவனம் கொள்க
அவனால், அவளால், அதுவால்,
அவற்றால், அவர்களால்,
ஆம் ஆண் பெண் ஒருமை பன்மை
அனைத்தும் அக்னி.
கவனம் கொள்க
அக்னியால் பேச முடியும்.
உங்கள் நாவை அவனுக்குக் கடன் தாருங்கள்.
உங்கள் வாக்கில் வரும் உபநிஷத உன்னதங்கள்
உங்கள் சொற்கள் என்னும் சுள்ளிகளை
அக்னியில் ஆஹுதி இடுங்கள்.
அக்னி அவற்றைப் பொன்னாய் மாற்றி
நினைவுப் பரணில் ஏற்றிவிடுவான்.
உங்கள் சிந்தை என்னும் நெய்யை
அக்னியில் ஊற்றுங்கள்.
அதற்கு அவன் தரும் பரிசு அமரத்வம்.
கூடியிருந்து அக்னி முன் குலாவி
நீங்கள் நீக்கிய குளிர்
காட்டின் புதர்களுக்குள் பதுங்கப் போகும்.
நாடியிருந்து நெருப்பின் முன்
உலாவரும் உங்கள் பேச்சு
நாரணன் தன் அன்னை நரகம் புகாள்
என்ற நிச்சயம் ஆகும்.
வாடியிருந்த வாழ்வு மலரும்
விந்தையான ஒரு பனிக்காலம்.
கூடியிருந்து குளிர் நீக்கக்
கவி கோப்பையில் ஊற்றுங்கள் தோழர்களே!
ஆடிவருகின்ற தைவருமுன்
அக்னி சந்தானம் ஆகட்டும்.
தேடித் திரியும் வேட்கையில் தீ
எழுந்தது பாரீர் திகழ் கண்ணாய்!
வாருங்கள் கூடிப் பார்மகிழ
வேதங்கள் ஆகி உங்கள் வாய் மலர!
கூறுங்கள் தோழரே! உங்கள் கொள்கைகளை
ஊறும் கவிச்சுவை உங்கள் வாய்புலர.
சொல்லொன்று வேண்டிச்
சுடர் எழுந்தது காணீர்!
பல்லாண்டென்று பவித்திரனைப்
பரமேட்டியைச் சார்ங்கம் எனும்
வில்லாண்டான் தன்னைக்
கூப்பிடுங்கள் ஒரு பேச்சுத் துணைக்காய்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment