காலை வேளையில் இளங்கதிர் தடவும் வேளையில் நடத்தல் என்பது தேன்பாகு மதுரமாக இருக்கிறது. அது போழ்து சேருகின்ற நடைத் தோழர்களுக்கு என்று ஓர் சுமுகமான சுகமான மனப்பான்மை அமைந்து விடுகிறது. கண் விழித்த புத்துணர்ச்சி, ஒளியும், காற்றும் கலந்துறவாடும் உதய காலம், அதில் துயிலுணர்ந்த பல் வேறு உயிரினங்களின் சப்தங்கள், மாந்தர்தம் அன்றாடக் கவலைகள் எழுந்திருக்கும் முன்னர் நிலவும் ஓர் தெய்விகம் - எனக்கு இந்த நேரமும், அந்த நேரத்து வெளியுலாவும் காட்சியும், பேச்சும் மிகவும் ரசனைக்குரியனவாய் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏதேனும் தாம் படித்த நினைவுகளை, ரசித்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வது என்பது மிக இயல்பாய் நடக்கின்றது. வாக்குவாதம், பதில் மறுபதில் என்ற கடபுடா எதுவும் இன்றி, எல்லோரும் தம்மில் நிறைவுற்று, கூட நடக்கும் நபர்களோடு இனிமையாகப் பேசி ரசிக்கும் அந்த ஒலிகள் இனியவை.
ஒருவர் ஒரு சுலோகம் சொல்லி அதன் அர்த்தம் சொல்வார். சின்ன கருத்துதான். ஆனால் அழுத்தமாக மனத்தில் பதியும். மனம் ரசனையில் தோய்ந்து வரும் போதே இன்னொருவர் வேறு ஒரு நிகழ்ச்சியை ஞாபகம் வந்தவராய், ‘அதுல பாருஙக’ என்று ஆரம்பிப்பார். அது ஓர் உலகம், அந்த உலகத்தின் ஜன்னல் திறக்கும். அப்படி எட்டிப் பார்த்தபடியே நடை தொடரும். ஒன்றும் யாருக்கும் உள்நோக்கம், திட்டம், கோபம் தாபம் எதுவுமின்றி மிக இயல்பாக மனிதர்கள் சுதந்திரமாகத் தங்கள் மனங்களை ரசனையுடன் பேச விடும் பொழுதுகள் இந்த காலை இளங்கதிரில் நடக்கும் பொழுதுகள்.
பெண் ஆண், முதியோர் இளையோர், தெரிந்தோர் தெரியாதோர் என்ற எந்தப் பிரிவினைகளும் எல்லாம் அர்த்தம் இழந்து விடியல் காலம் மட்டுமே ஆட்சி புரியும் அற்புதமான நேரம்!
அவரவர் தமதமது அறிவறி வகைவகை, அன்பும் இன்பும் மட்டுமே நம் மொழியின் பண்புகளாய் இருக்கட்டுமே. எப்படி உரையாட வேண்டும் என்பதை அந்தச் சிட்டுகுருவிகளின் பேச்சுகள் உணர்த்தும். ‘விட்டுவிடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியைப் போலே’ என்கிறார் பாரதியார்.
சிட்டுக்குருவிகளைத்தான் விரட்டிவிட்டது நம் நாகரிகம். சிட்டுக்குருவிகளின் நாகரிகத்தையாவது நாம் இங்கு கைக்கொள்வோமே! உதய காலத்தில் சூரியனே இவ்வாறு புவியுடன் இனிய கதைகள், அரட்டைகள் பேசி மகிழத்தான் வருகின்றதாகக் கூறுகிறார் திருலோக சீதாராம்.
’எழுதரிய வண்ணம் அவை
எண்ணரிய வாகும்
தொழுதுவல மாகிவரு
கோடிபல கோளம்
முழுதுமொளி தடவிபுவி
மொய்த்துவரு கின்றாய்
கெழுதகைய அன்பினொடு
கேண்மை கொளவென்றோ?’
(கந்தர்வகானம்)
நூல்களை எல்லாம் போக்கிவிட்ட நிலையில் ஒரு வித நிரக்ஷர குக்ஷியாக இருக்கிறேன். எனவே குறிப்புகளுக்கு உதவிகள் இல்லை. நினைவில் நின்றவை; போக டைரியில் குறித்து வைத்த சிலது அவ்வளவே. அவரது ’இலக்கியப்படகு’ என்னும் கட்டுரை நூலில் தொடக்கத்தில் கவிஞர் பெருமான் திருலோக சீதாராம் எழுதியுள்ள இவ்வரிகள் மறக்கற்பாற்றதன்று.
“ வெளியுலகை ஒரு கனவாகக் கொண்டு மன உலகின் நனவில் நிலைத்து வாழும் சூழ்ச்சியே இலக்கியம். உலகம் விழித்திருக்கும் போது ஞானி தூங்குகிறான். உலகம் உறங்கும் போது அவன் விழித்திருக்கிறான் என்று கூறக் கேட்டதுண்டு. இலக்கிய உலகிலும் இதுதான் உண்மை. இலக்கிய மாணவனும் ஆன்ம சாதகனும் ஒருவரே.
”கழிந்து போகின்ற ஒவ்வொரு கணமும் நம்மைத் தொடராமல் தூர விலகிப் போய்விடுவது போல வேறு பெரிய சித்தி ஒன்றுமில்லை. ஒவ்வொரு கணமும் தூங்கி விழித்தது போலப் புத்துணர்ச்சி வேண்டும். சென்ற வினைப் பயன்கள் நமைத் தீண்டாமலும், நாளைத் தொல்லைகள் நம்முள் நின்று அச்சுறுத்தாமலும் ஒவ்வொரு கணமும் நம்முடையதாக ஆகிவிட்டால் அல்லவோ, நாம் வாழ்ந்ததாக ஆகும்.
“கணந்தொறும் தோற்றும் நிகழ்ச்சிகள் யாவும் உடனுக்குடன் கனவுபோல் கழிந்து அவ்வக்கணமும் புது விழிப்புத் தருகின்ற சக்திதான் இலக்கியம். கனவுக் காட்சிகள் நனவில் நம்மைத் தொடுவதில்லை; அதுபோல் வாழ்வின் தொல்லைகள் நம்மைத் தொடாமல் விலகி நிற்கச் செய்யும் தந்திரம்தான் இலக்கியம். உணர்ச்சி உலகு ஒன்றுதான் சத்தியமென்பதையும் புற உலகு வெறும் கனவென்பதையும் புரிந்துகொள்ள இலக்கியப்படகு மிகவும் பயன்படும்.
“வாழ்வென்னும் பெருங்கடல் நீந்த வாய்த்த சிறு படகுதான் இலக்கியம். இந்தப் படகு வலித்துச் சென்றால் இன்பக்கரை ஏறலாம். மனித்தப் பிறவிதான் வேண்டுமென்று அடித்துக்கூறும் ஆற்றலும்கூட இலக்கியப்படகில் மிதக்கும் போதே தோற்றும்.”
(இலக்கியப்படகு, திருலோக சீதாராம், கலைஞன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை தியாகராயநகர். சென்னை 600017)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment