பக்தி என்றால் என்ன என்ற கேள்வி ஒரு பக்கம்;
சாக்ஷாத்காரம் என்றால் என்ன என்ற கேள்வி ஒரு பக்கம். இது இருக்கட்டும் என்று அனுஷ்டானம் என்று போனால், வெறுமனே இயல்புக்குப் போக்குவீடு விடுதல்தான் அனுஷ்டானம் என்று முடித்துவிடுகிறார் சிறியாச்சான். இதெல்லாம் இருக்கட்டும். எல்லாவற்றுக்கும் முதலில் ஒருவனுக்கு வீடுபேறு அடைய வேண்டும் என்ற ஆசை வேண்டுமே. மோக்ஷம் அடைய இச்சை கொண்டவன் யார்? அந்த மோக்ஷ இச்சை உடையவனைத்தான் முமுக்ஷு என்று அழைக்கின்றன சாத்திரங்கள்.
போகத்தில் ஆசை கொண்டவன் புபுக்ஷு. புபுக்ஷுவும் இல்லை; முமுக்ஷுவும் இல்லை; இப்படி இருக்கும் நிலை மிகவும் சிரமம். முமுக்ஷுவுக்குத்தான் மோக்ஷ சாத்திரம். மோக்ஷ சாத்திரம் எனக்குப் புரியவில்லையே என்று கத்தினால் அதற்கு எனன பண்ணுவது? முதலில் முமுக்ஷுவாக ஆகிவிட்டோமா என்று பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் ஒருவன் எப்படி முமுக்ஷுவாக ஆகிறான்? அதாவது மோக்ஷ இச்சை எப்பொழுது ஒருவனுக்கு ஏற்படுகிறது? இந்த உலக அனுபவங்களில் சலித்துப் போய் யார் நிலைத்த தத்துவம் எது என்று சிந்திக்கத் தொடங்குகிறாரோ அப்பொழுதுதான் மோக்ஷ இச்சை ஏற்படுகிறது. எனவே மீண்டும் முதல் கட்டத்திற்கே. முமுக்ஷு மட்டுமன்று, முமுக்ஷுவாக ஆக நினைப்பவனும் மோக்ஷ சாத்திரம் படித்துத்தான் ஆகவேண்டும். எனவே முமுக்ஷுவாக ஆகு. பின்னர்தான் உன் கேள்விகள் என்று சொல்ல முடியாது.
ஆனால் முமுக்ஷுவாக ஒருவன் ஆனால் அதை என்ன தடயம் வைத்துக் கண்டுகொள்வது? பராசர பட்டர் ஒரு சின்ன பரிசோதனையைச் சொல்கிறார். அதைச் செய்து பார்த்தாலே தெரிந்துவிடும், நாம் முமுக்ஷுவா அல்லவா என்று. ஒருவன் அதிருஷ்டத்தை த்ருஷ்டமாக அநுஸந்திக்க வேண்டும். த்ருஷ்டத்தை அதிருஷ்டமாக அநுஸந்திக்க வேண்டும். இந்தப் பரிசோதனையில் தெரிந்துவிடும். அநுஸந்தானம் என்றால் தொடர்ந்து மனத்தால் கருதுவது.
அதிருஷ்டம் என்பது பரமபதம், பாரமார்த்திக நிலை போன்றவற்றைப் பற்றிய ஆசார்ய உபதேசத்தை, தன்னுடைய விச்வாசம் காரணமாகப் பிரத்யக்ஷம் போலக் கருதுதல். த்ருஷ்டம் என்பது இவ்வுலக சுக துக்கங்கள். மற்றபடி உலக வாழ்க்கை. இவை அல்பமானது, அஸ்திரம், என்று உணர்ந்து, வைராக்கியத்தினால் பற்று அற்று, அதனால் இவை இல்லாதது போலவே கருதும் மனநிலை ஏற்பட்டு, இவ்வுலக வாழ்வை ’அதிருஷ்டம்’ - உள்ளபடிக் கண்டால் நிலையென்று எதுவும் மிஞ்சாதது - என்று கண்டுகொள்ளாமல் இருப்பது.
எனவே எவன் ஒருவன் அதிருஷ்டத்தை த்ருஷ்டமாக அநுஸந்திக்கின்றானோ, த்ருஷ்டத்தை அதிருஷ்டம் போல் அநுஸந்திக்கிறானோ அவன் முமுக்ஷு.
***
No comments:
Post a Comment