Friday, December 27, 2019

பக்தியின் உலகம் கோயில்

கோயில் என்றாலும், பெரிய கோயில் என்றாலும் ஸ்ரீரங்கம். மதிள் திருவரங்கம் என்பதுதான் பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதன் மற்ற இடத்தில் எல்லாம் படைவீடாக எழுந்தருளியிருந்தாலும் தன் சொந்த யதாஸ்தானமாகக் கொண்டு 'மருவியிருக்கும்' பெரிய கோயில். பெரிய கோயில் என்று சொல்ல வேண்டாம். ஸ்ரீரங்கம் என்று சொல்லத் தோன்ற வேண்டாம். பூலோக ஸ்ரீவைகுண்டம் என்றெல்லாம் சொல்ல நா எழ வேண்டாம்.

பக்தி இல்லை. தோய்வு இல்லை. வெளிப்படையாக நாஸ்திகர் என்று இல்லை அவ்வளவுதான். ஆனால் கோயில் கட்டடக் கலை, சிற்பம், இந்த மதிள் எப்பொழுது கட்டினது, அந்தச் சிற்பம் எப்பொழுது வடித்தது, இது எந்த நாட்டுக் கலைப்பாணி என்றெல்லாம் ஓர் ஆர்வமாவது இருக்குமே சிலருக்கு. அது போல, 'அதான் அந்தப் பெரிய மதிள் இருக்குமே சார்' என்றாவது ஒரு பிரகிருதி சொல்லாதோ?

'மதிள் திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர்!' என்கிறார் ஆழ்வார்.

கோயிலாழ்வாரிலே அமர்ந்து ஒருவன் கண்ணை மூடிக்கொண்டு ஜபம் செய்தானாம். 'அந்தோ பாபம்!' என்று பரிதாபப்பட்டுப் போனார்கள் ஆசார்யவர்யர்கள். பராசர பட்டரும் இன்னும் சில ஆசார்யர்களும் ஸ்ரீரங்கத்தில் தெரு ப்ரதக்ஷிணம் போனார்கள் என்றால், பராசர பட்டர் கோபுரம், மதிள், வீதிகள், என்று ஒன்று விடாமல் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, வியந்து வியந்து பார்த்துக்கொண்டு செல்வாராம். அவர் பார்வையில் அஃது சாக்ஷாத் ஸ்ரீவைகுண்டம். 'நீணிலா முற்றத்து நின்றவள் நோக்கினாள். காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்' என்றால் காணும் கண் காணாதோ? என்ன! நின்றவளின் நோக்கு நமக்கும் பிரதிஷ்டையாக வேண்டும். அவ்வளவே.

கோயிலாழ்வார் என்றால் என்ன? ஸ்ரீரங்க விமானத்திற்குக் கோயிலாழ்வார் என்று பெயர். வீட்டில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் பூஜை அறைக்கும் கோயிலாழ்வார் என்பதே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய பரிபாஷை. ஏன்? தானும் தன்னதும் அவனுக்கே என்று சொல்லலும் மிகை என்னலாம்படி அகங்கார மமகாரங்கள் அற்றால் பின் இருப்பிடம் வைகுந்தம் அல்லவா? பெருமாள் எழுந்தருளியிருக்கும் அறை ஸ்ரீரங்க விமானமாகிய கோயிலாழ்வாராகத்தானே இருக்க வேண்டும். கோயிலாழ்வார் என்பது இன்னும் சொல்லப் போனால் சின்ன மண்டபம் போன்று அமைந்த பீடம், மண்டபம். மரத்தாலோ, மற்ற பொருளாலோ ஆனதுதானே, ஏன் அதற்கு இப்படி ஆழ்வார் என்ற பெயர் ஒட்டு? அங்குதான் ஸ்ரீவைஷ்ணவத்தின் சூக்ஷ்மங்களில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் உலகம் எல்லாம் எதனால் ஆகியது? அங்கு ஜட வஸ்துவே கிடையாது. சுத்த சத்வமே இருக்கும் இடம் ஸ்ரீவைகுண்டம். அந்த சுத்த சத்வம் அஜடம். அங்கிருக்கும் நித்ய ஸூரிகள் தாமே எவ்வடிவும் பகவானின் கைங்கர்யத்திற்காகக் கொள்ளும் தன்மையர். எனவேதான் விமானமாக ஆகியிருப்பதும் அஜடமான ஒரு பெரும் தத்துவமே என்னும் பொருளில் ஆழ்வார் என்ற பிரயோகம் வருகிறது.

அர்ச்சை என்பது ஓர் அவதாரம் என்றே ஸ்ரீவைஷ்ணவம் கூறுகிறது. அங்கிருக்கும் சுத்த சத்வ மயமான நித்ய விபூதியே அர்ச்சாவதாரமாகிய கோயிலிலும், கோயிலாழ்வாரிலும் உண்டு என்றும், 'தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே' என்பதற்கேற்ப அங்கு நித்ய விபூதியில் எத்தகைய உகப்புடன் பகவான் எழுந்தருளி இருக்கிறானோ அதே உகப்புடன் தன் பக்தர்கள் விரும்பும் எந்தப் பொருளிலும் நித்ய விபூதியோடு (திவ்ய சிறப்போடு) ஒக்க எழுந்தருளி உள்ளான் -- என்றும் கருதுகின்றனர்.

பக்தியற்ற கண்ணுக்கு எல்லாம் கல் மண் கட்டடம் உலோகம் சிற்பம் கோபுரம் என்ற பொதுவான பார்வை. பக்தியின் கண்ணுக்குத் தெரியும் உலகங்களோ முற்றிலும் வேறானவை. பக்தியின் உலகத்தை வெளியுலகத்தவர் ஒரு நாளும் தீண்டிவிட முடியாது. என்ன வேண்டுமானால் இது கல் இது மண் இது வெறும் கட்டடம். இது வெறும் சிலை என்று தொட்டுத் தொட்டுப் பார்க்கலாம். இது பரம்பொருள் என்று தொட்டுப் பார்ப்பதற்குத்தானே மனித குலம் இவ்வளவு தூரம் பரிணாமத்தில் நீண்ட பயணம் வந்திருக்கிறது. இது கல் இது மண் என்றறிய ஓரறிவுயிர் ஈரறிவுயிர் போதுமே.

நீணிலா முற்றத்து நின்றவள் நோக்க, அந்நோக்கோடு ஊன்றிய நோக்கமே நம் நோக்கம் ஆனால் அன்றோ, காணுமே கண்ணபுரம் என்று காட்டுங்கால் காணலாவது! அன்றேல் கோயிலாழ்வாரில் என்ன குவலயம் எங்கணுமே கண் செம்பளித்து, காணாத கண்ணிற்கு இருட்டு மாத்திரமே அன்றோ மிஞ்சும். இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி நமக்காகவும் கொஞ்சம் சுருங்கட்டும்.

*

No comments:

Post a Comment