Monday, December 30, 2019

கர்மமும் கிருபையும்

கடவுள் கைவிடுமா? கடவுள் என்று கண்ணுக்குத் தெரிந்தால் தொல்லை இல்லை. அல்லது நாமாவது கண்ணுக்குப் புலப்படாத அருவத்தைத் தெரியும் திறன் பெற்றாலும் பரவாயில்லை. இது எதுவும் இல்லாமல், 'நாம் சிந்திக்கும் வரையில் தான் சித் சபை' என்று இருந்தால் என்ன தெளிவு அடைந்தாலும் மீண்டும் பழைய குழப்பம் பழகிய வாஞ்சையோடு ஏறி உட்கார்ந்து கொள்கிறது. ஆனால் எதுதான் நம் கண்ணுக்குத் தெரிந்துவிடுகிறது? எல்லாம் நம் கர்ம பலன் என்கிறோம். கண்ணுக்குத் தெரிந்தா சொல்கிறோம். பூர்வ ஜன்மத்தை விடுவோம். இந்த ஜன்மத்திலேயே நாம் செய்தது பலன் உருவில் வந்து நிற்கும் போது அதைச் செய்தேன், அதனால் இது வந்தது என்று சில நேரம் நிச்சயமாகக் கண்ணுக்குத் தோற்றும் படி நிற்பதில்லை. ஆனாலும் உணர்கிறோம். அதனால் வந்த விளைவுதான் இது என்று. உணர்பவருக்கு அது அர்த்தமாகிறது. எனக்கு நிரூபித்துக் காட்டு என்பார்க்குத்தான் தலைக்குத்து எல்லாம். தனக்கு நிரூபித்துக் காட்டச் சொல்வாரும் தாம் உணருங்கால் தனிமையில்தான் உணர வேண்டியிருக்கிறது.

புற உலகில் இதோ என்று காட்டலாகாது கடவுளை என்கிறது வேதாந்தம். எனவேதான் அவன் வேத வேத்யன் எனப்படுகிறான். வேதத்தால் அறியப்படுபவன். வேதைக வேத்யன், வேதத்தால் மட்டுமே அறியப்படுபவன். வேதாந்த ப்ரதிபாத்யன். வேதாந்தத்தால் இன்னான் என்று காட்டப்படுபவன். இப்பொழுது வேதம் என்றால் என்ன? அவனைக் காட்டுவது வேதம். அவனை மட்டும் எது காட்டுமோ அது வேதம். அவனை இன்னான் என்று எது காட்டித் தருமோ அது வேதாந்தம்.

ஆனால் இந்த விசாரங்கள் ஒரு புறமிருக்க பக்தி அவனை நேரே சென்று வளைத்து வைத்து அவனாலேயே பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்கிறது. உனக்கும் எனக்கும் உறவு ஒரு நாளும் ஒழிக்க ஒழியாதது. உன்னொடு என் சம்பந்தம் நித்யம். அப்படி இருக்க இத்தனை நாள் நான் இழந்தேன் என்ற நிலை எனக்கு ஏன் சம்பவித்தது? நான் ஜீவன். உன்னை இழந்ததாய் மறந்து திரிந்தேன். நீ பரன் தானே? பொறுப்பே இன்றி நான் பவக் கடலில் விழுவதையும் பார்த்தும் வெறுமனே இருந்தாய் என்னில் என்னை நீயே தள்ளி விட்டாய் என்று சொன்னால் என்ன தவறு? குழந்தை கிணற்றின் ஒட்டில் நிற்கக் கண்டும், வாரி அள்ளிக் கொண்டு அகலாமல், அது என்ன பண்ணுகிறது என்று பார்த்துக் கொண்டு நின்றாள் ஒரு தாய் எனில் அவளைக் குழந்தையைப் போக்கியவள் என்றே சொன்னால் என்ன குற்றம்? முதலில் பகவான் என்று பரம்பொருள் ஒன்று இருக்கிறதா என்பதில் புரியாமல் நாம் கவன்றால், பக்திக்கோ முற்றிலும் வேறு பிரச்சனை.

நம் கண்ணுக்குத் தோன்றாத பரம்பொருள் பக்தியின் கண்ணி நுண் சிறுத்தாம்புக்குக் கட்டுண்டு நின்றதோடு மட்டுமன்றி, தாம்புத் தழும்பை இடுப்புத் துணியால் இழுத்து இழுத்து விட்டுக்கொண்டு மறைக்கிறதுமாய், நாணித் தலை கவிழ்கிறதுமாய் நிற்பதும் எவ்வாறு? அப்பொழுது நம் கண்ணுக்குத் தோற்றாத அவன் பக்தியின் கட்டுக்குப் பணிகிறான் என்றால் இந்த பக்தி என்பதாவது என்ன என்று தெரிந்து தொலைத்தால் பரவாயில்லை. பக்தி என்றால் என்ன என்று நாமும் ஏதேதோ மேற்கோள்கள், அனுஷ்டானம், மேலையார் செய்வனகள் எல்லாவற்றையும்தான் ஜாபிதா போடுகிறோம். ஆனால் பக்தியும் நமக்குப் புரிந்த பாடில்லை. பரம்பொருள் என்று நம் கண்ணுக்குத் தெரியுமோ அன்று நமக்கு பக்தி புரிந்தது என்று கொள்ளலாம். பக்தி என்று நமக்குப் புரியுமோ அன்று நம் கண்ணுக்கு என்ன, கட்டுக்கும் பரம்பொருள் அடங்கும்.

சிறியாச்சான் அனுஷ்டானத்தில் மிகச் சிறந்தவர் என்று சொல்லியிருக்கிறேன். அவரிடம் ஒரு பிராம்மணர் பேசிய வார்த்தையும் அதற்கு அவருடைய மறுமொழியும் என்ன என்று சொல்வது?

"ஒரு ப்ராஹ்மணன் இறப்பில் நின்றும் விழ, அவ்வளவிலே சிறியாச்சான் அங்கேற எழுந்தருள, ப்ராஹ்மணன், 'ஆச்சான்! பெருமாள் என்னைத் தள்ளினபடி கண்டீரே' என்ன,

"அங்ஙனன்று காண், 'கர்மத்தாலே நாம் விழுந்தோம், பெருமாளெடுத்தார்' என்று நினைத்திராய்" என்றருளினார்."

பிராம்மணர் பாவம் இறப்பாகிய கூறையிலிருந்து தாம் விழுந்துவிட்ட கடுப்பில் பெருமாளைக் காரணமாக இழுக்கிறார். ஆனால் சிறியாச்சானின் பதில் முதன்முதல் ஜீவன் பரம்பொருளைப் பிரிந்த அந்த ப்ரபஞ்ச கணத்திற்கே, அந்த cosmic event அதற்கே போய்விட்டது. விழுந்து அடிபடாமல் தப்பிய பிராம்மணன் புரிந்து கொண்டாரோ இல்லையோ சிறியாச்சானின் பதில் என்னைப் பிறவித் தொடரின் ஆதிக்கே கொண்டு சென்று உலுக்குகிறது.

***

No comments:

Post a Comment