மாது மார்விடத்தன் நாவிலே
ஓது வேதமவை போற்றும் இந்திரனும்
தீது போகவிங்கு சாற்றியே
ஏது நல்லுரைகள் என்ன தாம்சொலினும்
வாதம் செய்துபல வாய்மையே
போதம் ஏந்திவரு புந்தி மாந்திவர
பேதம் போயகலும் பாரிலே.
நீதம் கூடிவரும் நித்தம் நாடிவரும்
நன்மை தேடிவரும் நம்மையே
சேதம் ஏதிருக்கும் சத்யம் தானிருக்கும்
வேதம் ஓதிவரும் தூய்மையே
நாத மாகியவன் பிந்து தானுமதாய்
ஊது கின்றபுடை பாரிலே
ஆதி யாகியதும் அந்த மேகியதும்
பேத மற்றதொரு வஸ்துவே.
*
வாதியல் மனத்தள வாவது வன்றாம்
போதலர் பொழுதினில் பூத்திடும் கதிராய்க்
கோதுள மகற்றிடு கோலமா யெழுந்தே
தீதெலாந் தீர்ந்திட திகழ்வுணர் வொன்றே.
ஒன்றே யாமே ஒன்றென் றக்கால்
நன்றே பலவே பலவென் றக்கால்
ஒன்றும் பலவும் ஒன்றப் புரியும்
குன்றா முறுவல் கொளுமா தவனே.
தவமுடை நன்னெறி தாந்த முனைப்பினால்
நவநவ மாய்ப்பல வினைகள் மாயுமோ
அவமெனப் பன்னெறிப் பாடு விடுத்தபின்
திவம்தரும் திருவருள் திருமா லாகுமே.
ஆகும் தவமும் அவனே அவனால்
போகும் வினையும் படர்ந்த விருளும்
ஏகும் நெறியும் முடிவும் மகிழ்வும்
ஏக னனேகன் இயல்வா மருளே.
*
அவன் தந்த வாக்கிது;
அரன் தந்த வாயிது
ஆலகாலம் தனையுண்ட
அகங்கார நானிது
போனகாலம் எல்லாமும்
பொல்லாத வினையது
போக்கிடப் படையலாய்ப்
புன்மொழீ யிதானது.
அவன் தந்த வாக்கிது
அரி தந்த வாயிது
ஆயிரம் தலை கொண்ட
அகங்கார நான் இது
போனகாலம் எல்லாமும்
போகாத வினையதும்
போக்கிடும் புரிநகைப்
பதம்பணீயும் மொழியிது.
ஒன்றாகி நின்றவன்
உளத்தினில் ஒளிந்தவன்
மன்றினில் ஆடுகின்ற
மானிடங்கொள் மாநடன்
வானிடத்தும் மண்ணிடத்தும்
வளர்ந்ததாள் இரண்டினால்
ஊனுருக்கி உணர்விலாடும்
உத்தமன் தான் காண்மினே.
***
No comments:
Post a Comment